பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு தென்னிந்தியாவிலிருந்து இயங்கும் இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனம், ஆண்டுக்கு 14.2 பில்லியன் மொத்த வருவாயுடன் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் தகவல் தொழில் நுட்ப துறையில் முதல் 10 கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது. உலகின் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது டிஜிட்டல் சேவையை வழங்கி வருகிறது. இன்ஃபோசிஸ் என்கின்ற இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை “நக்சலைட்டுகளின் கைக்கூலிகள் என்றும், கடந்த காலத்தில் நக்சலைட்டுகள், இடதுசாரிகள், மற்றும் துக்டே-துக்டே கும்பல்களுக்கு உதவியது என்றும் இந்த நிறுவனத்தின் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்” என்று ஆர்.எஸ்.எஸ் -சின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையான ’பஞ்சஜன்யா’ கட்டுரை கூறுகிறது. பஞ்சஜன்யா அதிகாரபூர்வ ஏடு இல்லை! ஆர்கனைசர் தான் அதிகார பூர்வ ஏடு என்று அக்கப்போர் நடக்கிறது. நாம் அதற்குள் செல்லவில்லை.

இக்கட்டுரையை எழுதிய ’பஞ்சஜன்யா’ ஏட்டின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர் என்பவர் ”தான் எழுதிய கட்டுரையில் உறுதியாக இருப்பதாகவும், இந்த கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி சிலர் தனிப்பட்ட ஆதாயம் தேடி ஆர்எஸ்எஸ் பெயரை பயன்படுத்துகின்றனர்! நான் வெளியிட்டுள்ள இந்த கட்டுரை ஆர்எஸ்எஸ் சங்கத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் திறமையின்மை பற்றியது. மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை பற்றிய உண்மைகளைத் தான் நான் வெளியிடுகிறேன்“ என்கிறார் சங்கர்.

மேலும் இக்கட்டுரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனித ஆற்றல் துறை (Human Resources) இந்தியாவில் உள்ள மார்க்சிஸ்டுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக குற்றம் சுமத்துகிறது. அது மட்டுமல்ல மோடி அரசு கண்டுபிடித்து முன் வைத்துள்ள ’ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ என்ற சுயசார்பு இந்தியா இயக்கத்தை இன்ஃபோசிஸ் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறது.

மோடியின் ஆட்சி காலத்தில் முக்கியமான துறைகளான வருமான வரி கணக்கிடும் துறை (Income tax) மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு (GST) பற்றிய விவகாரங்களை கையாளும் இணைய தளத்தை உருவாக்கும் பொறுப்பு ஆகியவை இன்ஃபோசிஸ்-க்கு வழங்கப்பட்டதாகவும் இதனை முறையாகவும், திறனாகவும் இன்ஃபோசிஸ் கையாளவில்லை என்பதை இக்கட்டுரையின் சாரமாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த தளத்தின் மூலமாக இந்தியாவிற்கு எதிரான தேச விரோதிகள் இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழிக்க முயல்வதாகவும் அதற்கு இன்போசிஸ் துணை போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததால் கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டதாகவும், அதனால் பெட்ரோல், டீசல் விலையேறி விட்டதாகவும் கதையளக்கும் பா.ஜக அமைச்சர்களின் பிதற்றலும் இதுவும் ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ளவும்.

பஞ்சஜன்யா-வில் இந்தக் கட்டுரை வெளிவந்த உடன் ஆர்.எஸ்.எஸ்-சின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள சுனில் அம்பேகர் என்பவர், இது ஆசிரியர் சங்கரின் தனிப்பட்ட கருத்து என்றும், ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் மழுப்பினார். இந்த விவகாரத்தை பஞ்சஜன்யா ஆசிரியர் ஹிதேஷ் சங்கரின் தனிப்பட்ட கருத்து என்று ஆர்எஸ்எஸ் இதனை மட்டையை கட்டப் பார்க்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ்-சின் இணைச் செயலாளரான மன்மோகன் வைத்யா பஞ்சஜன்யா கட்டுரையில் தான் உடன்படுவதாகவும், ”அது தர்ம யுத்தத்திற்கான போரில் முன்னணியில் நிற்கிறது“ என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

ஆம், உண்மைதான்! அது என்ன தர்ம யுத்தம்? கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவில் உள்ள அதாவது அரபிக்கடல் கடற்கரையோர – வடமேற்கு பகுதி மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சார்ந்த பார்ப்பனர்கள், சிந்தி, பார்சி, மார்வாரிகள், சேட்டுகள் உள்ளிட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இந்தியாவின் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சுருக்கமாக கூறினால் பார்ப்பன-பனியா கும்பலின் ஆதிக்கத்தில் தான் இந்தியா சிக்குண்டு கிடக்கிறது. ஒரு எடுத்துக்காட்டை கூறினால் இப்பகுதி பார்ப்பனர்களான கிர்லோஸ்கர், கார்வார், ஒகலே, மைசுகர் ஆகியோர் பெரிய உற்பத்தி மற்றும் கட்டுமான வணிகங்களை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளனர்.

இந்தியாவில் உள்ள பிரபலமான தேசங்கடந்த தரகுமுதலாளிகளில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் இந்த மாநிலங்களை சார்ந்தவர்கள் தான். இவர்கள் எப்போதும் தமக்கு வெளியில் உள்ள பிற பகுதிகளை சார்ந்த முதலாளிகள் வளர்வதற்கு அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்திய முதலாளிகளின் நலனை அடிப்படையாக கொண்டு, தேசங்கடந்த தரகு முதலாளிகளின் நலனை மட்டுமே முன் வைத்து ஆட்சியை நடத்தி வருகின்றனர்..

பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது, இந்தியாவில் சுய சார்பாக இயங்குகின்ற தேசிய வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றை கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுப்பது தொலைத்தொடர்பு, எரிசக்தித்துறை, நிலக்கரித் துறை, மின்சார உற்பத்தி, விளையாட்டுத்துறை, உணவு உற்பத்தி உட்பட இராணுவ உற்பத்தி வரை அனைத்தையும் இந்த சலுகை பெற்ற தேசங்கடந்த தரகு முதலாளிகள் பிடியிலேயே உள்ளது. 2014 முதல் 2020 வரை 108 வெளிநாடுகளுக்கு சென்று மோடி போட்டு வந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களினால் கிடைத்த 14 லட்சம் கோடி (அரசு கணக்கின் படி) பலன் பெற்றவர்களும் அம்பானி, அதானி, மிட்டல் வகையாறாக்கள்தான்.

இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ஆதார் திட்டத்தை உருவாக்குவதில் முன்னிலை வகித்த நந்தன் நீலேகணி காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதை ஒரு எடுத்துக்காட்டாக முன் வைத்து பஞ்சஜன்யா கட்டுரை எழுதுகிறது. இதன் உள்நோக்கம் என்ன இன்ஃபோசிஸ் உள்ளிட்ட தென்னிந்திய முதலாளிகள் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்பதுதான். எனவே தொழிலிலும் சரி, அரசியலிலும் சரி இவர்கள் வளர்வதை மார்வாரிகள், சேட்டுகள் விரும்புவதில்லை என்பதே அந்த உண்மையாகும்.

தேசங்கடந்த தரகு முதலாளிகள் அனைவரும் உழைக்கும் வர்க்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் எதிரானவர்கள், கார்ப்பரேட்டுகள் உடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவில் காவி பாசிசத்தை கொண்டுவருவதற்கு முன்னணியில் நிற்கிறார்கள் என்று பரிசீலிக்கும் போதே அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டையும் நாம் சரியாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. இந்த சிக்கல் பெரிதாகிவிட போகிறது என்ற அச்சத்தில் வட இந்திய ஊடகங்கள் அனைத்தும் இந்தியில் விவாதங்களை நடத்துகின்றனர். உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இன்ஃப்போசிஸ் நாராயணமூர்த்தி மட்டுமல்ல, பார்மா சூட்டிகல் துறையில் உள்ள தென்னிந்திய முதலாளிகளுக்கும் திடீரென்று தற்போது ஆதிக்கம் செலுத்துகின்ற சன்பார்மா குழுமத்தின் திலிப் சாங்வி நிறுவனம், கொரானா தடுப்பூசிக் கொள்ளையால் 5 வது பணக்காரன் இடத்திற்கு உயர்ந்துள்ள சைரஸ் பூனவாலாவின் சீரம் இன்ஸ்டியூட்டுக்கும் உள்ள முரண்பாடும் இதேபோலத்தான் வளர்ந்து வருகிறது.

பாசிச இந்திரா ஆட்சிக்கு பிறகு வெகு நீண்ட காலமாக இந்திய முதலாளிகளுக்குள் விரிசல் ஏற்படாமல் கூட்டு சேர்ந்து கொண்டு இந்திய உழைப்பாளிகளை கொடூரமாக சுரண்டி வருகின்றனர். ஆனால் ஒரு பொருளுக்குள் இருக்கும் ஆதிக்கம் செலுத்தும் அம்சமே அல்லது வளரும் தன்மையே அந்த பொருளின் சாரத்தை தீர்மானிக்கும் என்பதே இயங்கியல் உண்மை. எனவே மேலும் பலர் ’அர்பன் நக்சல்’ ஆகும் தருணத்தை எதிர்நோக்கி, அதாவது மன்மோகன் வைத்யா பாணியில் கூறினால் ’கெட்டவர்களின் பக்கமுள்ள நல்லவர்களின்’ வருகைக்காக காத்திருப்போம்.
இரா. கபிலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here