மிழகத்தின் மக்கள் தொகையில் 19 முதல் 21 சதவீதம் உள்ள பட்டியலின மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களாவர். இந்த மக்களின் மீது கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்க சாதி வெறியர்களின் தாக்குதல்களும், போலீசு குண்டர்களின் தாக்குதலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலித்துகள் அதிகமாக வசிக்கின்றனர் என்ற போதிலும் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் மாவட்டங்களில் திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது என்பதால் தலித்துகள் மீது வன்கொடுமை நடத்தப்படும் மாவட்டங்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று தலித் உரிமைகளுக்காக போராடுகின்ற குடிமை சமூக அமைப்புகள் கோரிக்கை வைக்கின்றனர்.

திமுக ஆட்சியில் தலித்துகளின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எடுத்துக்காட்டாக தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2020 – 1274 குற்றங்கள், 2021 – 1377 குற்றங்கள், 2022 – 1761 குற்றங்கள் என 2022 ஆம் ஆண்டுவரை ஆண்டுக்கு 1700 வழக்குகள் பதிவானது, 2023 ஆம் ஆண்டு 2000 வழக்குகள் என்று பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் 57,582 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன என்று தமிழகத்தின் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் இந்த கள எதார்த்த நிலையையே தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையும் பிரதிபலிக்கிறது.

கடந்த சனிக்கிழமை (18-05-2024) அன்று மதுரையில் உள்ள ஸ்டெர்லிங் வி கிராண்ட் ஹோட்டலில் 30 குடும்பங்கள் ஒன்றுகூடி, எவிடன்ஸ் நிர்வாக இயக்குநர் கதிரிடம் நடவடிக்கை மற்றும் நீதி கோரி மனுக்களை அளித்தனர்.

‘தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சாதிக் கொடுமைகள்’ என்ற தலைப்பின் கீழ் நிகழ்ந்த இந்த சந்திப்பில், எவிடனஸ் அமைப்பின் உறுப்பினர்கள் கதிர், வழக்கறிஞர்கள் பிபி மோகன் மற்றும் ஜெயானா கோத்தாரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எழில் கரோலின், மனித உரிமைகள் வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குநர் எட்வின் ஆகியோர் முன்னிலையில் சுமார் 30 வழக்குகள் விவாதிக்கப்பட்டன. LAAS இயக்குனர் வழக்கறிஞர் ஏ.சந்தனம் மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர் செம்மலர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களில் முக்கியமானது வேங்கை வயல் குடும்பம். தமிழகத்தில் சமகாலத்தில் நிகழ்ந்த கொடூரமான ஆதிக்க சாதி வெறியாட்டத்தின் துலக்கமான உதாரணமாகும். தன் வாழ்நாள் முழுவதும் மலம் கலந்த தண்ணீரை குடித்து விட்டோமே என்று மனதில் நினைக்கும் போதெல்லாம் குடலை புரட்டிக் கொண்டு வெளிவரும் ஒவ்வொரு வாந்தியும் வழித்து ஆதிக்க சாதியின் முகத்தில் வீசி எறியப்பட வேண்டியதாகும். ஆனால் இன்றுவரை வேங்கை வயலில் குற்றம் இழைத்தவர்கள் எண்ணிக்கை, தொட்டியில் மலம் கலந்த கிரிமினல்கள் யார் என்பதை ’சமூக நீதி’ அரசு கண்டுபிடிக்கவில்லை என்பதை விமர்சித்து வேங்கை வயல் மக்கள் அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

அதேபோல தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக இணைந்து மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்த பண்ருட்டி பாபுகுளம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், மருத்துவ கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர்கள், விடுதிக்காப்பாளர்கள் போன்றவர்களின் ஆதிக்க சாதி வெறியாட்டங்களால் மனம் உடைந்து தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அது பற்றிய வழக்கு பதிவு செய்து இரண்டு மாத காலமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மாணவர் அஜித்குமார் குடும்பத்தினர் அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

அதேபோல இந்தக் கூட்டத்தில் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி ரம்யா, தென்காசி ராஜேஷ் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டனர். ”அரசு அறிவித்த நிவாரணம் மட்டுமே போதுமானதாக இல்லை என்றும், வீடு, நிரந்தர வேலை, விவசாய நிலம், அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி போன்றவையும் வழங்க வேண்டும்” என மனித உரிமைகள் வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குநர் எட்வின் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் நடக்கின்ற ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடுகின்ற ஜனநாயக அமைப்புகள் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இன்று வரை அந்த கோரிக்கையின் மீது எந்த விதமான பதிலும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி மனு கொடுத்தனர்.

பட்டியலின மக்கள் அறிவுஜீவிகள் கூட்டமைப்பு சார்பில், அதன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி லட்சுமணன், ஒரு அறிக்கையில், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான “தடுக்கப்படாத அட்டூழியங்கள்” வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, “சாதி இந்துக்களின் வெறுப்பு அரசியலும்” என்று கூறியுள்ளார்.

”பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் இயல்பாக்கப்பட்டு, இப்போது தமிழ்நாட்டின் “அரசியல் கலாச்சாரத்தின்” ஒரு பகுதியாக உருவாகியுள்ளது, இதன் காரணமாக சாதிவெறிக் கொடுமைகளுக்கு எந்தத் தீர்வும் அரசியலாகவும் இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.

”தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகள் மீது சட்டப்படி வழக்கு பதியப்பட்டாலும், அதன் கீழ் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 21.1 சதவீதம் மட்டுமேயாகும். இது தேசிய சராசரியான 34 சதவீதத்தை விட மிக மிக குறைவாகும்” என்று வருத்தப்படுகிறார் விடுதலை சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு.

தமிழகத்தை ஆளும் திமுக ’சமூக நீதி’ பேசுகிறது என்பதும், ’திராவிட மாடல்’ கொள்கையை முன் வைக்கிறது என்பதெல்லாம் வெளித்தோற்றத்திற்கு மேம்பட்டதாக தெரிந்தாலும், உள்ளுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்கம் புரிகின்ற சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் மாவட்ட செயலாளராகவே வர முடியும் என்பது திமுகவில் எழுதப்படாத விதியாக உள்ளது.

ஒரு சில மாவட்டங்களில் இந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பட்டியலின மக்களை நடத்துகின்ற கேவலமான அணுகுமுறை, தங்களை பண்ணையார்களை போலவும், ஆண்டை எஜமானர்களை போலவும் கருதிக் கொண்டு நடந்துக் கொள்கின்றனர் என்பதும், அதே கட்சியில் உள்ள பட்டியலின மக்களுக்கு சமமான அங்கீகாரத்தை தருவதில்லை என்பதெல்லாம் சமூக வலைதளங்களில் சந்தி சிரித்துக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆதிக்க சாதியினர் பட்டியலின மக்களுக்கு கோவில் வழிபாட்டு உரிமையை தடுத்து வெறியாட்டம் போட்டு வருகின்றனர். சமீபத்தில் சேலம் தீவட்டிப்பட்டி அதற்கு முன்பு திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி என்று வரிசையாக பல்வேறு மாவட்டங்களில் பட்டியலின மக்களுக்கு கோவில் நுழைவு மற்றும் வழிபடும் உரிமை தடுக்கப்படுகிறது.

இதன் மீது, ”சட்டம் தனது கடமையை செய்யும்” என்று கலைஞர் கருணாநிதி பாணியில் மு.க. ஸ்டாலினும் பார்க்கின்றாரே ஒழிய, இவை தமிழினத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது என்ற கோணத்திலோ அல்லது ஆர்எஸ்எஸ் உருவாக்க துடிக்கின்ற இந்து ராஷ்டிரத்தின் அடிப்படையை உருவாக்குகிறது என்ற கோணத்திலோ உணர்ந்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

தமிழகத்தை ஆளும் திமுகவின் மீது விமர்சனங்களை வைத்தால் அது பாஜகவை பலப்படுத்திவிடும் என்பது அபத்தமானவாதமாகும். கார்ப்பரேட்டுகளின் கட்சியான திமுகவுடன் பாசிச எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டும் தான் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமே ஒழிய, அவர்களின் இதர பிற்போக்கு மற்றும் தமிழினத்திற்கு எதிரான அனைத்து அம்சங்களிலும் விமர்சனமேயின்றி ஒன்றுபட முடியாது என்பதே எமது அணுகுமுறையாகும்.

படிக்க:

♦ சேலம் கோவில் நுழைவு பிரச்சனை: அதிகார வர்க்கம் சாதி வெறியர்கள் பக்கம்!

புத்தாண்டில் புதுக்கணக்கைத் துவங்கியுள்ள சாதி ஆணவப்படுகொலை!

’தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என்று பாடப்புத்தகத்தில் எழுதி வைத்திருப்பதாலேயே சமூகத்தில் உள்ள அனைவரும் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக ஆதிக்க சாதியில் பிறந்த அனைவரும் பிறப்பால் பட்டியலின மக்கள் மீது சாதி ரீதியான இழிவான பார்வை பார்ப்பதும், அவர்கள் பிறப்பின் அடிப்படையில் தமக்கு சமம் இல்லை என்று கருதுவதும் ஒருவகையான மனநோயே ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர், இது பற்றி பல கட்டுரைகள் பக்கம், பக்கமாக எழுதியுள்ள போதிலும், இன்று வரை அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி கவலைப்படுகின்ற அரசியல் கட்சிகள் பட்டியலின மக்கள் மீது ஏவப்படும் சாதி தீண்டாமை வன்கொடுமைகள், சாதி ஆணவப்படுகொலைகள் பற்றி பேசாமல் இரட்டை வேடம் போடுகின்றனர்.

எனவே அதிகரித்து வரும் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு நிரந்தரமாக முடிவுகட்ட, ’தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்!, ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! ஆதிக்க சாதிகளை ஒன்று திரட்டும் ஆர்எஸ்எஸ் பாஜகவை புறக்கணித்து துரத்தியடி!” என்ற முழக்கத்தின் கீழ் போராடுவோம். பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் முற்றாக ஒழியும் வரை தொடர்ந்து போராடுவோம்!

  • ஆல்பர்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here