அரசியல் கூட்டங்கள் நடத்த முன்வைப்பீட்டுத் தொகை! அநீதியான உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம் விஜய்யின் சாலை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்த மனுவில் காவல் துறையினர் அரசியல் அமைப்புக்கள் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்தும் போது முன்னதாக அந்த கட்சி கூட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்ட குறிப்பிட்ட தொகையை முன்பே கட்டி வைப்பீடு செய்து அனுமதி பெறுவது தொடர்பாக வழி வகுக்கும் வழிகாட்டி அரசு உருவாக்க உத்திர விட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் அதிகார எல்லையை தாண்டிய நடவடிக்கை ஆக இருக்கும் என கருதுகின்றேன்.
நிர்வாக நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நீதிமன்றம் நின்று கொள்வது நலம் பயக்கும். அரசியல் செயல்பாடுகள் சில சாதகமாகவும்,சில இடையூறாக உள்ளது. ஆனால் அரசியல் செயல்பாடுகளை முழுக்க தடுக்கும் நோக்கில் நீதிமன்றம் உத்தரவு இருக்க கூடாது. ஏற்கனவே ஊர்வலங்கள் பொதுக்கூட்டம் போன்றவற்றில் பொது சொத்து சேதாரம் விளைவிக்கும் போது அரசு இழப்பீடு கோரி தமிழ்நாடு பொது சொத்து சேதாரம் தடுப்பு சட்டம் உள்ளது.
ஆனால் பணம் கட்டிவிட்டு கூட்டம் நடத்துதல் என்பது அரசியல் ரீதியாக சனநாயக செயல்பாடுகள் முழுமையாக பின்னடைவை சந்திக்கும்.
ஏற்கனவே அரசியல் கட்சிகள் பற்றி பொதுப்புத்தியில் ஊழல்வாதிகள், வன்முறையாளர்கள் என ஏற்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பது நல்லவர்களின் செயல் என ஒரு தவறான புரிதல் ஓடிக் கொண்டு உள்ளது.
இதன் வெளிப்பாடாக வந்ததுதான் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள். ஆனால் அதில் ஒரு அரசியல் இருந்ததை சமூகம் பின்னர் அறிந்தது. உயர் நீதிமன்றம் சாலையில் கட்சிக் கொடி கம்பம் இருக்கக் கூடாது என்று வழங்கிய உத்திரவு. அதே போல் சாலைகளில் தலைவர் சிலைகள் இருக்கக் கூடாது என்ற உத்தரவுகள் நியாயமற்றது. உச்சநீதிமன்றம் மனித உரிமை மக்கள் நலன், சனநாயக உரிமை சார்ந்த பல தீர்ப்புகள் குறித்து பல நீதிபதிகள் கரிசனம் கொள்வதில்லை. ஆனால் சமூகத்தை அரசியல் செயல்பாடுகள் இல்லாமல் செய்யும் Depoliticise செய்யும் தீர்ப்புகள் கண்டு நாம் அச்சமடைய வேண்டும்.அவைகள் ஒரு வலதுசாரி அரசியல் வெளிப்பாடு.
மேலும் படிக்க:
சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் – அநீதி இழைக்கும் நீதிமன்றங்கள்!
பணபலம் மற்றும் அதிகார பலம் கொண்ட அரசியல் கட்சிகள் ஊர்வலம் நடத்துவதை விட இவை இரண்டும் இல்லாத சனநாயக இயக்கங்கள் , இடதுசாரி அரசியல் அமைப்புக்கள் நடத்தும் போராட்டங்கள் ஏராளம். சனநாயகத்தை காப்பதில் இது போன்ற இயக்கங்கள் முன்னணி வகிப்பது மட்டுமல்ல மக்கள் கருத்தையும் இவை உருவாக்குகிறது. சல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, விவசாய உரிமை, பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு நீதி கோரி வீதியில் கூட்டம் போடுவது இந்த எளிய மக்கள் இயக்கங்கள்.
இந்த இயக்கங்களின் மீது ஏற்கனவே காவல் துறை அனுமதி மறுப்பு என்பதை வழக்கமாக்கி வந்துள்ளனர். பல இடங்களில் அறைக் கூட்டம் நடத்துவதே விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்த அனுபவம் கொடுக்கிறது. பல இடதுசாரி ஜனநாயக அமைப்புக்கள் கூட்டம் நடப்பதற்கு முந்தைய நாள் அல்லது கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி மறுப்பை எதிர் கொண்டு வருகிறது. சாதாரண பொதுக் கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் போய் அனுமதி வாங்குவது இயல்பாகி வருகிறது. அரங்கு கூட்டம் சாதாரணமாக அரங்க உரிமையாளரை மிரட்டி கூட்டத்தை இரத்து செய்வது காவல் துறை வாடிக்கையாகி உள்ளது. ஒரு கூட்டம் போட அரங்கம் தேடுவதே கடினம் என்ற நிலை பல நகரங்களில் உண்டு.ஒரு போலீஸ் ஸ்டேட் என உணரும் கள எதார்த்தம் இங்கு உள்ளது.
இது போன்ற சூழலில் மீண்டும் இந்த கருத்துரிமையை நிராகரிக்கும் நிலையை முழுமையாக்க ,நீதிமன்றத்தின் இது போன்ற உத்தரவுகள் காவல் துறைக்கு ஆயுதமாக சனநாயக குரல்களை நசுக்க உதவும்.
நீதிமன்றம் விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்கள் கூட போடாத உத்தரவுகளை, சனநாயக சமூகத்தில் அதன் பின் விளைவுகளை அறியாமல் கட்டளையாக இடுவது அநீதி.
ச. பாலமுருகன்
வழக்கறிஞர், எழுத்தாளர்
உழைக்கும் மக்கள் குரல் வளையை நசுக்கும் சட்டமே உயர் நீதிமன்றத்தின் இந்த சட்டமாகும் என்பதை கட்டுரையாளர் சுருக்கமாக இருந்தாலும் நறுக்குத் தெரிந்தாற் போல பதிவிட்டுள்ளார். வாழ்த்துக்கள். நாம் எது எதற்குத் தான்
போராட்டங்களைத் தொடர்வது என்பது கணக்கில் அடங்காததாக உருவெடுத்து வருகின்றது. நினைத்தாலே கண்ணைக் கட்டுகிறது; தூக்கத்தை தொலைக்கிறது! அனைத்தையும் மீறி களமாட வேண்டிய கடமையும் பொறுப்பும் இடதுசாரி புரட்சிகர இயக்கங்களுக்கு மிகுதியாகவே இருக்கிறது.