மாய்ந்து, மாய்ந்து அரசியல், பொருளாதாரக் கட்டுரைகளை எழுதி குவிப்பதன் மூலமாக பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக கசாமுசா சினிமா முதல் கல்லாக்கட்டும் சினிமா வரை சமூக வலைதளத்தில் எழுதுவதன் மூலம் இளைஞர் பட்டாளத்தை சென்றடைய முடியும் என்று இளைஞர்களின் மன ஓட்டம் பற்றி ஆய்வு செய்த ‘மெய்ப்பொருள் நாயனார்’ முன்பு ஒருநாள் அறிவுறுத்தியது காதில்  ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

இந்த 2000 கிட்ஸ் பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்களைப் புரிந்து கொள்ள ஏதேனும் வழி ஒன்று இருந்தால் சொல்லுங்கள் என்று தோழமையுடன் கேட்டுக் கொண்டார் நண்பர் ஒருவர்.

2000 கிட்ஸ்களை எப்படி புரிந்து கொள்வது? ‘ வாரிசு’ திரைப்படம் விஜயின் 66 வது படமாக வெளி வருகிறது. அதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா கெத்து காட்டுகிறார். ரஞ்சிதமே ரஞ்சிதமே என்று இசையமைப்பாளர் தமன் இசையில் பாடல் ஒலிக்கிறது தியேட்டரில் இளைஞர்கள் எழுந்து நடனமாடுகிறார்கள்.

ஹைடெக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை இளைய வாரிசு எப்படி தீர்த்து வைக்கிறார் என்ற ஒரு வரி கதையை மூன்று மணி நேரம் நம் தலையில் கட்டுகிறார்கள் என்று புலம்புகிறது நக்கீரன்.

மணி ஹெயிட்ஸ் என்று அழைக்கப்படும் வங்கிக் கொள்ளை துணிச்சலை பற்றி, நாகரீகமாக படம் எடுத்துள்ள துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கிறது என்று வியந்து தியேட்டர்கள் அதகளம் ஆகிறது. மஞ்சுவாரியாருடன் அஜித் நடித்த திரைப்படம் ஹெச். வினோத் இயக்கத்தில் இளைஞர்களை திரைப்படத் தியேட்டருக்கு முன்னர் குத்தாட்டம் போட வைக்கிறது. அரங்கத்திற்குள் சில்லா சில்லா என்று ஜிப்ரான் இசையில் குதியாட்டம் போட வைக்கிறது.

இதையும் படியுங்கள்: சச்சின்முதல் ஷாருக்கான் வரை; விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சமூக பொறுப்பு உள்ளதா?

திரைப்பட போதை தலைக்கேறி கண்டெய்னர் மீது நின்று ஆடிய இளைஞர், போட்ட குத்தாட்டத்தில் ஸ்டெப் தவறி மேலிருந்து விழுந்து முதுகெலும்பு உடைந்து மரணம் அடைந்தார்.

வீட்டு வேலை செய்து மகனை படிக்க வைத்து, எதிர்காலத்தில் தன்னை பாதுகாப்பான் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்த தாய், தந்தையரின் நம்பிக்கையில் மண்ணள்ளி போட்டுவிட்டு மண்ணில் புதைந்து போனான் பரத் குமார்.

துணிவு படம் வெளியான முதல் தினத்தன்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி, ஒரே நாளில் 24.59 கோடி ரூபாயை சம்பாதித்து உள்ளது. அதேபோல வாரிசு திரைப்படம் ரசிகர் பட்டாளங்களால் அரங்கு நிறைக்கப்பட்டு ஒரே நாளில் 19.43 கோடி வசூல் செய்துள்ளது.

சென்ற தீபாவளி பண்டிகையின் போது, தமிழகத்தில் மூன்று நாட்களில் மட்டும் டாஸ்மாக் விற்பனை 720 கோடி என்று கணக்கு காட்டுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

நடிகரின் நடிப்பை ரசிப்பது வேறு! அதற்காக தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்வது வேறு. கடந்த ஒரு மாத காலமாக சின்னத்திரை, யூ டியூப் சேனல்களில் வாரிசு திரைப்படம் வசூலை அள்ளுமா? அது அரைத்த மாவை அரைக்குமா அல்லது புதிய மசாலாவை நம் தலையில் அரைக்குமா? என்று பல்வேறு ஆருடங்களும், அதற்கு பதிலடியாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் வசூலை அள்ளி குவிக்குமா? இரண்டு திரைப்படத்தில் எது முன்னிலையில் வரும் என்ற ரசிகர்களை கிளுகிளுப்பூட்டும், வெறியூட்டுகின்ற வகையிலான விவாதங்கள் பல கோணங்களில் பிரித்து மேயப்பட்டது.

ஜனவரி 11 திரைப்படம் வெளியான தினத்தில் தமிழகம் முழுவதும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களால் ஒருவரை ஒருவர் வசைப்பாடி கட்டவுட்டுகளும், சவால் விடும் பஞ்ச் டயலாக் ஏந்திய பதாகைகளும்;  சாலைகளையும், மக்கள் கூடும் இடங்களையும் நிரப்பி வழிந்தது.

விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் வைத்த பேனரை கிழிப்பதும் ,அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் வைத்த பேனரை கிழிப்பதும், சில இடங்களில் இரண்டு ரசிகர்களும் சேர்ந்து இரண்டு நடிகர்களுக்கு பேனர் வைப்பதும் என்று பல்வேறு மசாலா திரைப்படத்தைப் போல காட்சிகள் ஊடகங்களில் நிரம்பி வழிந்தன.

சமகாலத்தில் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் இன உணர்வுக்கு எதிராகவும், தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் தமிழ்நாடு உருவாக்கம் போன்ற அனைத்தின் மீதும், பார்ப்பன இந்திய தேசிய கண்ணோட்டத்தில், காவி பாசிஸ்டுகளின் வெறித்தனத்தைக் கக்கிக் கொண்டிருந்தார்.

வழக்கம்போல சமகால அரசியல் நிகழ்வுகளின் மீது எந்த எதிர்வினையையும் ஆற்றாத, தக்கை மனிதர்களை உருவாக்குகின்ற கைங்கரியத்தை, திரைப்பட புரமோஷனை முன் வைக்கின்ற திரைப்பட நிறுவனங்கள் செய்து முடித்தது.

நுகர்வு கலாச்சார மோகத்தில் சினிமா கதாநாயகர்களின் வாழ்க்கையை ஒத்த நடை, உடை, பாவனை, சிகை அலங்காரம், அங்க அசைவுகள், ஸ்டைல் என்று ஏதோ ஒரு இழவு ஆகிய அனைத்தும் இளைஞர்களின் மீது குறி வைத்து கொத்து குண்டுகளைப் போல வீசப்படுகிறது.

நாளை என்பதே கிடையாது! இன்றே, இப்பொழுதே  அனைத்தையும் அனுபவிக்கத் துணியும் வெறித்தனமான, அனார்கிச கலாச்சாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இளைஞர்களின் துள்ளல், வேகம், புதிய வகையான ரசனைகள் ஆகியவை அனைத்தும் திட்டமிட்டு திரைப்பட நடிகர்களின் பின்னால் ஓட வைக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆடு,ரம்மி ஆடு! என்று சீட்டாட்ட கலாச்சாரத்தில் துவங்கி குடிவெறியில் போதை தலைக்கேற, சாலையில் திரைப்படம் ரிலீஸ் ஆகின்ற அன்று டிஜிட்டல் பேனர், கட்டவுட் வைப்பது வரை அனைத்தையும் கொண்டாட்ட மனநிலையில் திருவிழாக்களைப் போல இறங்கி செய்கிறார்கள்.

நடிகர்களுக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், ஆனந்த கண்ணீர் அபிஷேகம் மற்றும் கடவுளை வழிபடுவது போல அனைத்தையும் கொண்டு ஆராதிக்கின்றார்கள் இளைய தலைமுறையினர்.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. படிக்கின்ற கல்விக்கட்டணத்திற்கான கடனை கட்டுவதற்கு, கல்லூரி முடித்தவுடன் ஏதேனும் ஒரு தொழிலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் இளைஞர் பட்டாளத்தின் வாழ்க்கை சூனியம் ஆகிக்கொண்டிருக்கிறது.

இவை எது ஒன்றையும் கவனிக்க விடாமல், ராஷ்மிகா மந்தனாவுடன் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்று விஜய் குத்தாட்டம் போட்டவுடன் ரசிகர்களுக்கு உணர்ச்சி கொந்தளிக்கிறது.

தான் சேர்த்து வைத்த பணத்தை மட்டுமின்றி, தனது பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று சேகரித்து வைத்த அற்ப சொற்ப பணத்தையும் அடித்துப் பிடுங்கி, இந்த திரைப்படங்கள் எனும் போதைக்கு செலிபிரிட்டி மனப்பான்மையில் அள்ளி வீசுகின்றனர் இளைஞர்கள்.

இத்தகைய மனநிலை பாசிசத்தை எதிர்த்துப் போராடுகின்ற அறிவைப் பெறுவதற்கோ, ஆற்றலை உருவாக்குவதற்கோ கடுகளவும் பயன்படப் போவதில்லை. நிழல் உலகில் அட்டை கத்தி நாயகர்களின் சண்டைக் காட்சிகளையும், டூப்புகளின் தயவில் அவர்கள் போடும் பொய் சண்டைகளையும், நிஜம் என்று நம்பி தனது வருவாயையும் வாழ்க்கைக்கான எதிர்காலக்கனவுகளையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்.

இத்தகைய இளைஞர்களை, மசால் வடை வைத்து எலியை பிடிப்பதை போல ஆர் எஸ் எஸ் பாஜக பாசிச கும்பல் எளிதாக கைப்பற்றுவதற்கான மனநிலையை உழுது தயார் செய்கிறது, கதாநாயக பிம்பங்களை உருவாக்குகின்ற திரைப்படங்கள்!

ஒரு நாள் மட்டும் துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வசூல் செய்த தொகை இந்திய அளவில் அதிகமானது என்று புள்ளி விவரங்கள் நமக்கு அறிவிக்கின்றது. வடநாட்டில் ரிலீஸ் ஆகின்ற திரைப்படங்கள், மக்களிடம் காசு பணப்புழக்கம் இல்லாததால் பெரிய அளவில் ஓடுவதில்லை என்று புலம்பித் தீர்க்கிறார் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்.

ஆனால் தமிழகத்திலோ திரைப்படங்களுக்கு ஒரே நாளில் 50, 60 கோடி ரூபாயும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரே நாளில் இருநூறு, முன்னூறு கோடி ரூபாயும் கொட்டி அழிவதற்கு இளைஞர்களின் மனநிலை தயாராக உள்ளது என்பதுதான் நாம் கவலையுடன் சரி செய்ய வேண்டிய அம்சம். இதில் ஜெயிக்கப் போவது யாரு என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

  • திருச்செங்கோடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here