ந்திய மக்களை பெரிதும் வாட்டி வதைத்து கொண்டிருந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு பல்வேறு அரசியல் பொருளாதார காரணங்களுக்காக சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் பொருளாதாரம் எழுச்சி பெற்றுள்ளதாகவும் வர்த்தகம் சிறகு கட்டி பறக்கத் துவங்கியுள்ளதாகவும் நுகர்வு பொருள் சந்தையை ஆக்கிரமித்துள்ள தரகு முதலாளிகள் மற்றும் தேசக்கடந்த தரகு முதலாளிகள் கொண்டாடத் துவங்கிவிட்டனர்.

“ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை சுமார் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைய உள்ளது” என்று ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவாளர்கள் சாமியாட துவங்கி விட்டனர்.

குடிக்க தண்ணீர் இல்லை!
கொப்பளிக்க கொக்கோகோலா!

ஜிஎஸ்டி வரி குறைப்பை பயன்படுத்திக் கொண்டுள்ள கார் முதலாளிகள் கல்லா கட்டுவதற்கு வழியை தேடி உள்ளனர் ₹2.5 லட்சத்தில் 38 கிமீ மைலேஜ் மற்றும் 250 கிமீ டாப் ஸ்பீடு கொண்ட புதிய மாருதி ஆல்டோ 800 மாடல் 2025 என்று மாருதி கார் நிறுவனம் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

“நீங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மற்றும் மலிவு விலையில் ஒரு காரைத் தேடுகிறீர்களானால், மாருதி ஆல்டோ 800 ஒரு சிறந்த தேர்வாகும். இந்த கார் பண்டைய காலத்திலிருந்தே இந்திய உலகமயமாக்கலில் உச்சத்தை எட்டியுள்ளது. இப்போது, அதன் புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, ஸ்மார்ட் தோற்றம், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வீடியோ பார்ப்பதற்கான தனித்துவமான தொடுதிரை ஆகியவற்றைப் பெருமைப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் விலை நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு எட்டக்கூடிய அளவில் உள்ளது” என்கிறது மாருதி கார் நிறுவனம்.

நவராத்திரி முதல் நாளான கடந்த 22-ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலானது. இதனால் கார்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து, புதிய கார்கள் வாங்குவோர் உற்சாகமடைந்தனர். வரி குறைப்பு அமலான நேற்று முன்தினம் மட்டும் 30,000 மாருதி கார்கள் விற்பனையாகின. அதேபோல, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்றது.

அதேபோல, ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நேற்று முன்தினம் ஏ.சி. மற்றும் டி.வி. விற்பனையும் அதிகரித்தன. ஏ.சி மற்றும் டி.வி.களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஷோ ரூம்களிலும், இ-வர்த்தக தளங்களிலும் அதிகளவில் ஏ.சி. மற்றும் டி.வி.க்களை வாங்கினர். இதனால் இவற்றின் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்ததாக Haier இந்தியா நிறுவனத்தின் தலைவர் சதீஷ் கூறியுள்ளார்.

இவ்வாறு வாங்கும் சக்தி கொண்ட நடுத்தர பணக்கார குடும்பத்தினரின் சிறுசேமிப்புகளை கொள்ளையடிப்பதற்கு பொருத்தமாக ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ள அதே வேளையில் உணவுப் பொருட்கள் மீதான வரி விகித குறைப்பின் மூலம் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களின் பெயர்களை பாருங்கள்!

  • 18 சதவீதம் இருந்த ரெடிமேட் பரோட்டா, 5 சதவீதத்தில் இருந்த சப்பாத்தி போன்ற உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கலாம்.
  • பன்னீருக்கு முன்பிருந்த 5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோ பன்னீர் ரூ.300க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.15 வரை குறைந்து ரூ.258க்கு விற்கப்படும்.
  • நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறைகிறது. உதாரணமாக ஒரு கிலோ நெய்-வெண்ணெய் ரூ.600 விற்பனை செய்யப்பட்டால் ரூ.40 வரை குறைந்து இனிமேல் ரூ.560க்கு விற்பனையாகும். 100 கிராம் வெண்ணெய் வாங்கினால் ரூ.4 வரை விலை குறையும்.
  • 1 லிட்டர் மிக்ஸ்டுப்ரூட் ஜூஸ் விலை ரூ.8 வரை குறையும்.

ஜி எஸ் டி விலை குறைந்துள்ளதால் இனி காலையில் எழுந்தவுடன் பன்னீர் பட்டர் மசாலா வைத்து தின்றுவிட்டு சத்தாக வேலைக்கு செல்லலாம். ஏற்கனவே ஓபிசிட்டி பிரச்சனை உள்ளவர்கள் இனிமேல் கவலை இல்லாமல் காலையில் பட்டர் டீ குடிக்கலாம்.

படிக்க:

♦ ஜிஎஸ்டி வரி பயங்கரவாதத்தின் மூலம் மக்களை கொள்ளையடிக்கும் பாசிச பாஜக.

சப்பாத்தி, பரோட்டா மாவு வாங்கி பிசைந்து நேரத்தை விரையம் ஆக்குவதற்கு பதிலாக ரெடிமேடு பரோட்டா சப்பாத்திகளை வாங்கி தின்று பசியாறலாம். கூடவே அதன் உப விளைவுகளாக வருகின்ற வயிறு சம்பந்தப்பட்ட நோய்களையும் பெறலாம்.

ஜிஎஸ்டி வரி வசூல் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த இந்திய தரகு முதலாளிகள் மற்றும் தேசங்கடந்த தரகு முதலாளிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. வரிகொள்ளையின் லாபத்தை தனிப்பட்ட முதலாளிகள் சூறையாடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது வரி குறைந்துள்ளதால் மத்திய அரசுக்கு ஏறத்தாழ ரூ.44,000 கோடி வருவாய் இழப்பும், அனைத்து மாநில அரசுகளுக்கும் ரூ.44,000 கோடி வருவாய் இழப்பும் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி கொள்ளையால் தனது உழைப்பு சக்தியை விற்று அற்ப கூலியை பெற்ற தொழிலாளி வர்க்கம் முதல் அன்றாட தின கூலிகளாக பணியாற்றிய கிக் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள் வரை கோடிக்கணக்கான மக்கள் துன்ப துயரத்தில் ஆழ்ந்து கொண்டு விலைவாசி உயர்ந்ததால் பட்டினி சாவுக்கும் கடும் துன்பங்களுக்கும் ஆளாகினர்.

அவர்களின் உழைப்பு சக்தியை சக்கையாக பிழிந்து உறிஞ்சி கொழுத்த தேசங்கடந்த தரகு முதலாளிகள் இன்று உலகம் முதலாளிகள் பட்டியலில் முன்னேறி கொண்டுள்ளார்கள்.. பாரம்பரியமிக்க டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகள் அவர்களை கண்டு ஏக்க பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலமாக இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடத் துவங்கி விட்டதாக ஆர்எஸ்எஸ், பாஜக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு இணையாக ஊடக நரிகள், பார்ப்பன கழிசடை கும்பல், “இனிமேல் நாடு நாலு கால் பாய்ச்சலில்” முன்னேற்றத்தில் கொடி கட்டி பறக்க போவதாக குதூகலித்துக் கொண்டுள்ளனர்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக ஏற்பட்டுள்ள உண்மையான விலை குறைப்பு எந்த வர்க்கத்திற்கு அதிகமாக சேவை செய்கிறது என்பதை அம்பலப்படுத்தி மேலும் பல கட்டுரைகளை கொண்டு வருவதன் மூலம் இத்தகைய மாயையிலிருந்தும், புகை மூட்டத்தில் இருந்தும் பாட்டாளி வர்க்கத்தை விடுவிப்போம்.

பார்த்தசாரதி.

நன்றி புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. கடந்த எட்டு ஆண்டுகளாக மக்களிடம் மாநில உரிமையை பறித்து ஜிஎஸ்டி என்ற பெயரில் 58 லட்சம் கோடி கொள்ளை அடித்து விட்டு மோடி! தற்போது எள் அளவு வரி குறைத்து மீண்டும் உழைக்கும் மக்களிடம் வசூல் வேட்டையை தொடங்கி இருக்கிறார். மாநில உரிமையை மீட்க, மக்களை காக்க பாசிச கும்பலை வீழ்த்துவோம் !ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here