![]()
தலையங்க கட்டுரை
உலக அளவில் 2008 ஆம் ஆண்டு உருவான நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்திய நிதி மூலதனமானது மீள முடியாத, மீண்டு எழவே முடியாத நெருக்கடியில் சிக்கியது. உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயக, தாராளவாத ஜனநாயக, போலி ஜனநாயக அரசமைப்புகளை கேள்விக்குள்ளாக்கியது. இந்தியாவில் 1947 முதல் 2008 வரை நிலவிய போலி ஜனநாயக அரசு கட்டமைப்பானது அதன் தோல்வியை தழுவியது.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம் தோல்வியடைந்ததைப் போலவே, இந்தியா போன்ற அரைக்காலனிய நாடுகளிலும் சொல்லிக் கொள்ளப்படும் போலி ஜனநாயகம் தோல்வியடைந்தது. இவை அனைத்திற்கும் மாற்றாக பாசிச சர்வாதிகாரம் மட்டும்தான் தீர்வு என்று முன்வைக்கப்பட்டது.
முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்வைக்கின்ற கட்சிகளிலேயே ஒரு பிரிவினர் பாசிச சர்வாதிகாரத்தை முன்வைத்து ஆட்சி நடத்துவது தான் தீர்வு என்ற கடைக்கோடி நிலையை எடுத்துக்கொள்கின்றனர். அதுதான் இன்றைய இந்தியாவிலும் உள்ள நிலைமையாகும்.
ஏற்கனவே இந்தியாவில் நடந்து வந்த போலி ஜனநாயக அரசு கட்டமைப்பானது மக்களின் புரட்சியினால் தகர்த்தெறியப்படவில்லை. அது பாட்டாளி வர்க்கத்தின் பலவீனத்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது அதே சமயத்தில் மக்களின் நெருக்கடிகளையும், பொருளாதார ரீதியிலான சிக்கல்களின் மீது மக்களின் கோபாவேசங்களையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆர்எஸ்எஸ்,பாஜக பாசிச சர்வாதிகாரிகள் 2014 முதல் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
”பாசிசத்தின் வெற்றியின் குணாம்சம் என்ன? இந்த வெற்றி ஒரு பக்கம் பாட்டாளி வர்க்கத்தின் பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவ வர்க்கத்துடன் வர்க்க சமரசம் செய்து அதனுடன் கூட்டாளியாக நிற்கும் சமூக ஜனநாயகத்தின் சீர்குலைவுக் கொள்கையின் காரணமாய் அமைப்பு ரீதியில் வலுவிழந்து பாட்டாளி வர்க்கம் சிந்தி சிதறி சின்னாபின்னமாகி கிடப்பதை காட்டுகிறது” என்கிறார் டிமிட்ரோவ்.
பாசிசம் தோன்றுவதற்கான அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளை அவதானித்து ஏகாதிபத்திய நிதி மூலதனத்துடன் அதற்குள்ள உறவு; சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற பாசிச கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி பருண்மையான ஆய்வு முடிவுகள் இன்றி எதேச்சதிகாரம், நவ பாசிசம் என்று வரையறுக்கின்ற போலி இடதுசாரிகள் எவ்வாறு பாசிசம் வளர்வதற்கு துணை போகிறார்களோ, அதே போல பாசிச பயங்கரவாத ஆட்சியின் கீழ் பெரும்பான்மை மக்களின் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகளையும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் மக்களின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளையும், சமப்படுத்தி பார்ப்பது அரசியல் ரீதியிலாக பாமரத்தனமானது மட்டுமின்றி தற்குறித்தனமான பார்வையாகும்.
இன்றையச் சூழலில் பல்வேறு மாநிலங்களில் நடக்கின்ற பாசிச பாஜகவின் ஆட்சியின் கீழ் பாசிச பயங்கரவாத அடக்குமுறைகளும், பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நடைபெறுகின்ற அரசு ஒடுக்குமுறைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது, இதன் எதிர் விளைவாக அரசு ஒடுக்குமுறைகளையும், பாசிச பயங்கரவாத அடக்குமுறைகளையும் ஒன்றுபடுத்தி பேசுகின்ற போக்குகளும் அதிகரித்துள்ளது.
”ஜெர்மனிய பாசிஸ்டுகள் பெண்களுக்கு முன்னால் அவர்களுடைய கணவன்மார்களை நிறுத்தி அடித்து ரத்தம் சொட்ட சொட்ட வதை செய்தார்கள். தாய்மார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை கொன்று பொசுக்கிய சாம்பலை பார்சல் செய்து அனுப்பி வைத்தார்கள். கருத்தடை அறுவைகளை ஓர் அரசியல் தண்டனையாக நிறைவேற்றினார்கள். சித்திரவதைக்கூடங்களில் பிடிபட்ட பாசிஸ்ட் எதிர்ப்பாளர்களுக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றார்கள். சிலரை கை, கால்களை முறித்தும், கண்களை தோண்டி எடுத்தும், கட்டிப்போட்டு குளிர்ந்த தண்ணீரை மேலே இறைத்தும், பாசிஸ்ட் ஸ்வஸ்திக் சின்னத்தை போல் உடம்பில் சூடு போட்டும் பல வகையான கொடுமையான சித்திரவதைகளை செய்தார்கள்.” என்கிறது இரண்டாம் அகிலத்தின் அறிக்கை.
படிக்க: மக்களைப் பிளக்கும் காவிப்பாசிசம் வீழ்த்துவோம்! கலை இலக்கியத்தையும் ஆயுதம் ஆக்குவோம்!
பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய போக்குகள் அதிகரித்துள்ளன. ’மாவோயிசத்தை 2026 மார்சுக்குள் அழித்து விடுவோம்’ என கொக்கரிக்கும் அமித்ஷா-மோடி கூட்டணி தோழர் நம்பள கேசவராவ் போன்ற மாவோயிச தலைவர்களின் சாம்பலை அவர்களின் குடும்பத்திற்க்கு கொடுத்து பாசிச எதிர்ப்பாளர்களை எச்சரிக்கின்றனர்.
இத்தகைய பாசிச அடக்குமுறைகளை வேறுபடுத்தி பார்க்க திராணியில்லாத சிலர், பாஜக அல்லாத மாநிலங்களில் போலீசு- அதிகாரவர்க்கம்- அரசியல்வாதிகள் ஆகிய முக்கூட்டு நடத்தும் அரசு ஒடுக்குமுறைகளையே பாசிசம் என சித்தரித்து பேசுகின்றனர். ஒரு எடுத்துக்காட்டாக காவி பாசிசம் என்ற வரையறைப்புக்கு நேர் எதிராக திராவிட பாசிசம்,, திமுக பாசிசம் என்றெல்லாம் அபத்தமாகவும், அரைவேக்காட்டுத்தனமாகவும் வரையறை செய்து முன் வைக்கப்படுகின்றன. போலீசு, ராணுவம், நீதித்துறை அடங்கிய அரசு கட்டமைப்பானது பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராக தாக்குதலை தொடுக்கின்ற அம்சங்களை பாசிச பயங்கரவாதத்துடன் இணை வைத்து பேசுவது இறுதியில் பாசிஸ்டுகளுக்கே சாதகமானதாக முடிகிறது.
இத்தகைய வரையறுப்புகள் தங்களது அகநிலை விருப்பங்களில் இருந்து முன்வைக்கப்படுகிறதேயொழிய புறநிலையில் உள்ள யதார்த்தத்தில் இருந்து முன் வைக்கப்படுவதில்லை. இதனால் இத்தகைய இயக்கங்களில் செயல்படுகின்ற அணிகளுக்கும், எதிரிகளுக்கும், நண்பர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிந்துக் கொள்ள முடியாமல் போகிறது என்பது மட்டுமின்றி எதிரிகளையும், நண்பர்களையும் இணை வைத்து ஒரே நேரத்தில் சமமாக தாக்குதல் தொடுப்பதன் மூலம் பெரும்பான்மை மக்களை நிர்கதியாக்குகின்றனர். இத்தகைய போக்குகள் அனைத்தும் பாட்டாளி வர்க்க அணுகுமுறைகளுக்கு எதிரானது.
சர்வதேச அளவில் தலைவிரித்தாடிய பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய கண்டத்து நாடுகளிலும் நடந்த பாசிச எதிர்ப்பு போராட்டங்களின் அனுபவங்களை நிராகரிக்கின்ற அகநிலைவாத, தற்குறித்தனமான போக்குகளேயாகும்
”கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்தை அங்கீகரிக்கட்டும். அதை பாதுகாக்க நாங்கள் தயார் என்று அவர்கள் முன் வரட்டும். நாங்கள் அவர்களுடன் ஐக்கிய முன்னணிக்கு தயார் என்றும் அவர்களின் சிலர் கூறுகிறார்கள். இதற்கு நாம் பதில் அளிக்கிறோம். நாங்கள் சோவியத் ஜனநாயகத்தை அனுசரிக்க கூடியவர்கள். அது உழைக்கும் மக்களுடைய ஜனநாயகம் ஆகும் ஆனால் முதலாளித்துவ நாடுகளில் பாசிசமும், பிற்போக்கு சக்திகளும் தாக்குகின்ற பூர்ஷுவா ஜனநாயக சுதந்திரங்களை ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம். தொடர்ந்து போராடிக் கொண்டிருப்போம். காரணம் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க போராட்டத்தின் நல உரிமைகள் இதை வலியுறுத்துகின்றன”. என்கிறார் டிமிட்ரோவ்.
எனவே அரசு பயங்கரவாத அடக்குமுறைகளையும், பாசிச ஒடுக்கு முறையையும் ஒன்று படுத்தி பேசுவதை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். பாசிச எதிர்ப்பு எண்ணம் கொண்ட ஜனநாயக அமைப்புகள், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர், சமூக இயக்கங்கள், தனி நபர்கள் ஆகியவர்களை ஒன்றிணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி உடனடியாக கட்டப்பட வேண்டும்.
பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி பற்றி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே முன்வைத்த இரண்டாம் அகிலத்தின் வழிகாட்டுதல்கள் குறிப்பாக தோழர் டிமிட்ரோவ் முன் வைத்துள்ள வழிகாட்டுதல்களை கடைபிடித்து பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேற வேண்டும்.
புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
ஆகஸ்ட் இதழ்







