நாட்டு நடப்பை சீர்தூக்கிப் பார்ப்பவர்களுக்கு இந்த தீபாவளியை ஒட்டி சில கேள்விகள் எழக்கூடும். நமக்கும் எழத்தான் செய்கிறது. அது குறித்து பரிசீலிப்போம்.

  • தீபாவளி போன்ற பண்டிகைகள் வரும்பொழுது யார் கொண்டாட்டத்தில் குதூகலிக்கின்றார்கள்?

பொதுவாக பார்க்கையில், சிறுவர்களும் முதியவர்களும் தான். அவர்கள் கொண்டாடுவதற்கு புராண காரணங்கள் எதுவும் இல்லை. நரகாசுரன் கதையெல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு குறைவு தான்.  சிறுவர்களைப் பொறுத்தவரை புதிய டிரஸ் கிடைக்கிறது. பட்டாசுகள் வாங்கித் தருகிறார்கள். இனிப்புகள் வாங்கித் தருகிறார்கள். தாத்தா பாட்டி வீட்டுக்கு, சொந்த ஊருக்கு போகிறோம் போன்றவை தான் குதூகலத்தை தருகின்றன.

முதியோர்களை பொருத்தவரை பிழைப்பு தேடி வெளியூருக்கு சென்று விட்ட தனது மகனோ, மகளோ குடும்பத்தோடு திருவிழாவிற்கும், பண்டிகைக்கும், தீபாவளிக்கும் தான் ஊருக்கு வருகிறார்கள். முக்கியமாக பேரப்பிள்ளைகளோடு வருகிறார்கள்.

அனாதைகளை போல தனிமையில் வாடும் இவர்களுக்கு பண்டிகை காலங்களில் வரும் பேரன், பேத்திகள் தான் வாழ்க்கையில் ஓர் பிடிப்பையும், அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறார்கள். அதனால் முதியோர்களும் பண்டிகைகளை எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கிறார்கள்.

  • யாருக்கு தீபாவளி திண்டாட்டம் ஆகிறது?

உழைக்கும் மக்களுக்குத்தான், குடும்பத் தலைவன், தலைவிக்கு தான் திண்டாட்டமாக ஆகிறது. ஐடி நிறுவனங்களிலோ கார்ப்பரேட் கம்பெனிகளிலோ வேலை செய்பவர்கள், நிரந்தர வேலையில் இருப்பவர்கள், அரசு ஊழியர்கள் ஓரளவு கொண்டாட்டத்தை அனுபவிக்கிறார்கள்தான்.

ஆனால், ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வாங்கும் ஊதியம் என்பது அவர்களின் மாதாந்திர அத்தியாவசிய தேவைகளுக்கு குடும்பம் நடத்துவதற்கே போதுமானதாக இருப்பதில்லை.

எனவே, சாதாரண காலங்களிலேயே படிப்பு செலவு, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு  கடன்களை வாங்கி நெருக்கடிக்குள்ளாவது பெரும்பாலான குடும்பங்களில் காணக் கிடைக்கிறது.

குடும்பத்தை நடத்தவே ஓவர்டைம் பார்த்தும் முடியாமல், ஞாயிற்றுக்கிழமையும் கூட வேலைக்கு செல்லும் நிலையில் இருக்கும் குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் ஒரு திருவிழாவையோ, பண்டிகையையோ, தீபாவளியையோ மேற்கொண்டு கடன் வாங்காமல் அல்லது வட்டிக்கு வாங்காமல் கடக்க முடியாது.

தொழில் நகரங்களில் குடும்பத்தோடு வசிப்பவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு போக்குவரத்து கட்டணமே கணிசமாக ஆகும்.

கோவை, ஓசூர், சென்னை போன்ற ஊர்களில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற  தென் மாவட்டங்களுக்கு சென்று வருவதென்றால், ஒவ்வொரு குடும்பமும் நான்காயிரம் அல்லது ஐந்தாயிரத்துக்கு குறைவில்லாமல் செலவிட வேண்டி வரும். இதுவே வடமாநிலத்தவர் என்றால் இன்னும் கூடுதலான செலவாகும்.

  •  உழைப்பவர்களுக்கு எதுவும் மிஞ்சவில்லை என்றால் உழைப்பின் பலனை யார் அனுபவிக்கிறார்கள்?

கார்ப்பரேட் முதலாளிகள் ஆண்டு முழுவதும் நடந்த உற்பத்தியின் மூலமாக, உற்பத்தி பொருட்களை விற்று கணிசமான தொகையை லாபமாக சுருட்டி கொள்வதன் விளைவாக, உலக சுற்றுலாவிற்கு சென்று வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள்.

ஆனால்,  வியர்வை சிந்தி மட்டுமல்ல; சில நேரங்களில்  தொடர்ந்து இரண்டு ஷிப்ட்கள் பார்க்க வைப்பதால்  விபத்தில் ரத்தத்தை சிந்தியும், உடல் உறுப்புகளை சேதப்படுத்திக் கொண்டும் கூட உழைத்தவர்கள் கொண்டாட கையில், சட்டை பையில்  எதுவும் இருப்பதில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்து உயர்த்தி வரும் NAPS, கான்ட்ராக்ட்  தொழிலாளிகளோ வயிற்றில் அடிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு சொற்ப தொகையையே ஊக்கத்தொகை  (இன்சென்டிவ்) அல்லது கிப்ட் வடிவில்  பெறுகிறார்கள்.  அதாவது மோடியின் குரலில் சொல்வதென்றால் வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தில் உழைக்கும் மக்கள் கொண்டாட்டங்களுக்கு தகுதியற்றவர்களாக புறக்கணிக்கப்பட்டு விடுகிறார்கள். ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள்.

இவர்களின் பாடு திண்டாட்டம்தான். குறிப்பாக கான்ட்ராக்ட் தொழிலாளர்களில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்று கடுமையாக உழைத்து கிடைத்த சொற்ப தொகையை கொண்டு, இங்கிருந்து பீகார், ஒரிசா, அசாம் என்று மிக நீண்ட தொலைவு குடும்பத்தோடு பயணம் செய்து சென்று தசராவை ‘கொண்டாடியாக ‘ வேண்டும். இந்த இந்துவுக்காக ஆர் எஸ் எஸ் சும், பாஜக வும் கூந்தல் அளவுக்கு கூட கவலைப்படுவது கிடையாது.

  • எதற்காக முந்தி அடித்துக்கொண்டு ஊருக்கு செல்கிறார்கள்?

இவர்கள் தமது சொந்த ஊருக்கு சென்று அங்கு தங்கியிருக்க போகும் பத்து நாட்கள் தான் ஓர் ஆண்டில் அவர்கள் தமக்காக வாழும் மகிழ்ச்சி மிக்க நாட்களாக அமைகின்றன. எனவே எப்பாடுபட்டாவது ரயிலில் மூச்சு விட கூட முடியாதபடி அல்லது கழிவறைக்குள் அடைத்து கொண்டு நின்றபடி எப்படியாவது சொந்த ஊருக்கு போய்விட வேண்டும் என்று தவிக்கிறார்கள்.

பண்டிகை கால போக்குவரத்து நெரிசல்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் பயணம் என்பது, அது பேருந்தாகவோ அல்லது ட்ரெய்ன் ஆகவோ அல்லது பத்து பேர் சேர்ந்து வாடகைக்கு வண்டி எடுத்துக்கொண்டு செல்வதாகவோ, எதுவாக இருந்தாலும் அது மகிழ்ச்சியூட்டுவதாக இருப்பதில்லை. செலவும் பல மடங்கு அதிகமானதாக இருந்து, அவஸ்தையும் பல மடங்கு அதிகமானதாக இருந்து, தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களை திண்டாடவே வைக்கிறது.

உழைக்கும் மக்களுக்கு கொண்டாடுவதற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய பண்டிகைகளையே மதங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. முதலாளித்துவமும் இத்தகைய பண்டிகைகளை ஒட்டியே போனஸ், கிப்ட் என ஏதாவது ஒரு வகையில் சொற்பத்தொகையை தந்து விடுமுறையும் தந்து அனுப்பி வைக்கின்றன.

அரசும் குறிப்பிட்ட பண்டிகை நாட்களை ஒட்டி அரசு விடுமுறையாக அறிவித்தும், சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் என இயக்கியும்  வஞ்சிக்கப்படும் உழைக்கும் மக்களை  இந்தியாவின் மூலை முடுக்குகள் எல்லாம்  போக தூண்டுகிறது. பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் குழந்தைகளும் சொந்த ஊர் சென்று வரவும், தாத்தா பாட்டி பார்த்து வர வாய்ப்பாகவும் அமைகிறது. இதற்காக ஆண்டு முழுவதும் ஏங்கிக் கிடப்பவர்கள் தான் பெருங்கூட்டம், நெரிசல் என்றாலும் கூட முந்திஅடித்துக் கொண்டு செல்கிறார்கள்.

  • உழைக்கும் மக்களின் வாழ்நாள் என்பது கார்ப்பரேட்டுகளின் தொண்டு ஊழியத்திற்கானதா?

அதில் என்ன சந்தேகம். 20, 30 ஆண்டுகளாக தொழிலாளியாக இருக்கும் நபர்களை நேரில் பார்த்து கேளுங்கள்! உண்மை உங்களுக்கு புரியும் .

படிக்க: 

நவம்பர் தினமும், நரகாசுரன்களும் தீபாவளி கணக்கு தீர்ப்போம்!

♦ கசக்கும் தீபாவளி! கையேந்தும் உழைக்கும் வர்க்கம்!

இப்படி உழைத்து வாழும் மக்களுக்கு அவர்களுக்காக, அவர்களின் சந்தோஷத்திற்காக, நண்பர்களை உறவினர்களை பெற்றோர்களை பார்த்து வருவதற்காக என்று ஒதுக்கப்படும் நாட்கள் மிக மிக சொற்பமே. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியூர் சென்ற அனைவரும் சொந்த ஊருக்கு வந்து குவிக்கிறார்கள். அப்பொழுது மட்டுமே அனைவரையும் சந்திக்கவும், பேசவும், மகிழ்ந்திருக்கவும் முடியும். அடுத்த ஒரு ஆண்டுக்கு இதை மனதில் நினைத்துப் பார்த்து மட்டுமே காலத்தை கடத்துவார்கள்.

கார்ப்ரேட் முதலாளிகளோ, அதிகார வர்க்கத்தினரோ, பிறந்தநாள் திருமண நாள் அந்த நாள் இந்த நாள் என்று வாரம் தோறும் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் குதூகளிக்கவும், கூத்தடிக்கும் போதிய வருவாயுடன் இருப்பவர்கள். வார இறுதி கொண்டாட்டங்களை அனுபவித்தும் வருகிறார்கள்.  அவர்கள் தீபாவளிக்கு தான் வெளியூர் போக வேண்டும்; பொங்கலுக்கு தான் சொந்த ஊர் போக வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், தாங்கள் விரும்பும் போதெல்லாம் வெளிநாடுகள் வரை சுற்றுலா சென்று திரும்புபவர்கள். எனவே அவர்களுக்கு பண்டிகை ஒரு பொருட்டு அல்லவே அல்ல.

இந்த தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் புத்தாண்டு, ரம்ஜான் போன்றவை   சாமானிய மக்களுக்கு திண்டாட்டம் தான். என்றாலும்,  இதைத் தவிர அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, தனக்காக வாழ்வதற்கு வேறு வழி ஏதும் இல்லை.

  • தீபாவளி போன்ற பண்டிகைகளை பயன்படுத்தி  கல்லாக்கட்டும் முதலாளிகள் உள்ளனரா?

ஆம்னி பேருந்து முதலாளிகளும், டிராவல் ஏஜென்சிகளும், வாடகை பேருந்துகள் வைத்து ஓட்டுபவர்களும், ஹைவேஸ்களில் உணவகங்கள் வைத்திருப்பவர்களும், துணிக்கடை, நகை கடை வைத்திருப்பவர்களும் இந்த தீபாவளியில் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். இதையெல்லாம் தாண்டி கார்ப்பரேட் முதலாளிகள் இந்த பண்டிகை காலங்களை தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கின்றனர். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி கார், டூவிலர் வரை தேங்கி கிடக்கும் அனைத்தையும் தள்ளி விடும் காலமாகவே பார்க்கின்றனர். ஆண்டு முழுவதும் உழைத்ததற்காக கிடைத்த தொகையை ஒரே வாரத்தில் மீண்டும் முதலாளிகளே பறித்துக் கொண்டு விடுகிறார்கள்.

ஆலை முதலாளியிடமிருந்து பெற்றதை, கடை முதலாளியிடம் தந்து விடுகிறார்கள். வட்டிக்காரனிடம் வாங்கி குடும்பங்களுக்காக கடைத் தெருக்களில் செலவிட்டு விடுகிறார்கள்.

பெருந்தன்மையோடு ஒன்று, இரண்டு நாள் கூடுதலாக விடுமுறை அறிவித்து விட்ட கார்ப்பரேட் முதலாளிகள் பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காம்பன்சேஷன் செய்யுங்கள் என்று பிழிந்து எடுத்து விடுகிறார்கள்.

  • மக்களின் வாழ்வை  தீண்டாட்டத்துக்கு உள்ளாக்குபவர்கள் யார் ?

வேறு யார் கார்ப்பரேட் முதலாளிகள் தான். அதாவது உழைக்கும் மக்கள் திண்டாட்டத்தில் தீபாவளியை அனுபவிக்கும் பொழுது, சுரண்டும் வர்க்கத்தினரும் கார்ப்பரேட் முதலாளிகளும் அதிகார வர்க்கத்தினரும் ஆண்டு முழுவதும் கூட கொண்டாட்டத்தில் திளைத்து வருகிறார்கள். இந்த வர்க்க ஏற்றத்தாழ்வுக்கு முடிவு கட்ட, இந்த ஏற்றத்தாழ்வுக்கு காரணமானவர்களை வதம் செய்ய எந்த கடவுளும் அவதாரம் எடுப்பதில்லை. வேறு யாரை வதம் செய்ததற்காக  நாம் தீபாவளியை கொண்டாடுகிறோம்?

  •  இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here