புதிய ஜனநாயகம் (டிசம்பர் 2025) தலையங்க கட்டுரை
இந்திய ஒன்றியத்தை ஆண்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங் பரிவார கும்பலின் சித்தாந்த ரீதியான எதிரியான மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கங்களின் மீது இயல்பாகவே வெறுப்புணர்ச்சியும், ஆத்திரமும் கொண்டுள்ளது.
இதனை வெளிப்படுத்துகின்ற விதமாக மார்ச் 2026-க்குள் இந்தியாவிலிருந்து நக்சல்பாரி அரசியலை முற்றாக துடைத்தெறியப் போவதாக இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரான திருவாளர் அமித்ஷா தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய உளவு நிறுவனங்களான ரா மற்றும் ஐபி புதிதாக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலால் கொண்டுவரப்பட்டுள்ள என்ஐஏ மற்றும் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப்புற ராணுவப் படை, சிறப்பு அதிரடிப் படைகள் ஆகியவை அனைத்தும் ஒன்று குவிக்கப்பட்டு மாவோயிஸ்டுகள் செயல்பட்டு வந்த தண்டகாருண்யா மற்றும் பஸ்தார் பகுதிகளில் கடுமையான அடக்கு முறையை ஏவி விட்டனர்.
நாட்டின் மத்திய இந்தியப் பகுதியில் உள்ள ஏராளமான கனிம வளங்களை குறிவைத்து அவற்றின் அரணாக, பழங்குடி மக்களின் பாதுகாவலனாக செயல்பட்டு வந்த மாவோயிஸ்டு அமைப்பை முற்றாக துடைத்தெறிவதன் மூலம் நக்சல்பாரி இயக்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்.
70-களில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யிலிருந்து வெளியேறி தனியாக புரட்சிகர பாதை ஒன்றை அமைத்துக் கொண்டு செயல்பட துவங்கிய நக்சல்பாரி இயக்கங்களின் மீது அடக்குமுறைகள் மற்றும் அரசு பயங்கரவாத ஒடுக்குமுறை, ராணுவத் தாக்குதல்கள், ஆகியவையும் உளவுப் படையின் கொடூரமான சித்திரவதைகள் உள்ளடங்கிய அடக்குமுறைகளும் புதியது அல்ல.
இந்தியாவில் நிலவுகின்ற அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ அரசு கட்டமைப்பை விவசாயிகளின் விவசாயப் புரட்சியின் மூலம் தூக்கியெறிவதற்கு திட்டத்தை வைத்து செயல்படுகிறது நக்சல்பாரி இயக்கம்.
நாடாளுமன்ற சரணடைவு பாதைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய எழுச்சியின் மூலமாகவே அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பதை முன்வைத்து போராடத் துவங்கிய நக்சல் பாரி இயக்கங்களின் மீது தொடர்ச்சியான அடக்குமுறைகள்; தேடுதல் வேட்டைகள்; முன்னணியாளர்களை தேடிப் படுகொலை செய்வது என்று ரத்தக்களரியாக்கியது இந்திய ஆளும் வர்க்கங்களும், அதன் ஏவல் நாய்களான இந்திரா காங்கிரஸ் அரசாங்கமும். நக்சல்பாரி அரசியலின் எழுச்சியைக் கண்டு அஞ்சிய பாசிச இந்திரா கும்பல் புதிதாக வளர்ந்துவந்த ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் துணையுடன் அவசரநிலை பாசிசத்தை ஏவி புரட்சியாளர்களை வேட்டையாடியது.
நாடாளுமன்ற சரணடைவுப் பாதைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய மாவோயிஸ்ட் அமைப்பினரின் முன்னோடிகளான மக்கள் யுத்தக்குழுவின் ஸ்ரீகாக்குளம் போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்ட தோழர் அதிபட்ல கைலாசம், வேம்படப்பு சத்தியம் உள்ளிட்ட புரட்சியாளர்கள் கடுமையாக நர வேட்டையாடப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் வீரம் செறிந்த தெலுங்கானா போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தோழர் கிஸ்தா கெளடா மற்றும் பூமைய்யா ஆகியோர் அடிலதாபாத் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலப்பிரபுவான பட்டேலுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி தூக்கிலிடப்பட்டனர்.
இந்த கால கட்டத்தில் ஸ்ரீகாக்குளத்தில் நக்சல்பாரி கொரில்லா இயக்கம் உச்ச நிலையில் இருந்தது; சிவப்பு அதிகாரம் பல கிராமங்களில் கருவடிவில் உண்மையில் உருவாகியிருந்தது. ஸ்ரீகாக்குளத்தின் பெரும்பகுதியில் அரசாங்கத்தின் நிர்வாக கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. இத்தகைய எழுச்சிகளுக்கு மாபெரும் உந்து சக்தியாக செயல்பட்ட தோழர்கள் கிஸ்தா கெளடா மற்றும் பூமைய்யா தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்ட பிறகும் புரட்சிகர இயக்கங்கள் பின்னடைந்து விடவில்லை.
இத்தகைய வேட்டையாடுதல்களுக்குப் பின்னரும் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்ட அரசியலை முன்னெடுத்துச் சென்ற மக்கள் யுத்தக்குழு மற்று,ம் மாவோயிச கமயூனிச மையம் ஆகிய அமைப்புகள் 2004 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்து இ.பொ.க (மாவோயிஸ்ட்) என செயல்படத் துவங்கியது.
அது முதற்கொண்டு இந்திய அரசுக்கு எதிரான போர் என்று அறிவித்து செயல்பட்டு வருகிறது. அதன் முன்னனியாளர்கள் மீதும், மக்கள் திரள் அமைப்புகள் என்று செயல்படுகின்ற முற்போக்கு மாணவர் அணி, முற்போக்கு இளைஞர் அணி, ரயத்து கூலி சங்கம் மற்றும் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவற்றின் மீது தடைவிதித்து அடக்கு முறையை மேற்கொண்டது.
ஆப்ரேஷன் கிரீன் ஹண்ட் என்ற பெயரில் மத்திய இந்தியாவிலிருக்கும் பழங்குடி மக்கள் மீதும் அவர்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்த மாவோயிஸ்ட்டுகள் மீதும் கொடூரமான தாக்குதலில் நடத்தியது காங்கிரஸ் அரசு. இத்தகைய அடக்குமுறைகள் தேடுதல் வேட்டைகள் முன்னணியாளர்கள் மீதான படுகொலைகள் ஆகியவற்றினால் இயக்கம் பின்னடையவில்லை.
தெலுங்கானாவில் கொடூரமான நிலப்பிரபுக்களுக்கு எதிராக போராடி நிலப்பறி இயக்கம் நடத்தியது முதல் தண்டகாரண்யா மற்றும் பஸ்தார் பகுதிகளில் பழங்குடி மக்களுக்கு நிலங்களை விநியோகித்தது வரை மாவோயிஸ்டுகள் இந்தியப் புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் முக்கியமான பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்பதை மறுக்க இயலாது.
மாவோயிச கம்யூனிச இயக்கத்திற்கும், புதிய ஜனநாயகம் முன்வைக்கின்ற மக்கள் திரள் வழியிலான புரட்சிகர அரசியலுக்கும் நடைமுறையில் பாரிய வேறுபாடுகள் உள்ளது என்ற போதிலும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான புரட்சிகர அரசியலை கொண்டு செல்வதில் இரு வேறுபட்ட வழிகளில் இத்தகைய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
“ஒரு கட்சியின் பால் என்ன அணுகு முறையை கையாள வேண்டும் என்பது அக்கட்சியை பற்றி என்ன கணிக்கிறோம் என்பதிலிருந்து பிறக்கிறது. கணிப்பு பிரதானமானது; அணுகுமுறை இரண்டாம் பட்சமானது. புரட்சிகர கட்சி என கணித்தால் சகோதர, தோழமை உறவு. புரட்டல்வாத கட்சியாக மாறிவிட்டது என்று கணித்தால் அதை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி முறியடிப்பது. திரிபுவாதப் பாதையில் செல்கிறது, திருத்தி விடலாம் என்று நம்பிக்கை கொண்டால் மகத்தான மார்க்சிய லெனினிய நிலைப்பாடுகளுடன் அக்கட்சியுடன் பரஸ்பரம் (பகிரங்கமாக அல்ல) சித்தாந்த போராட்டம்” என்பதுதான் எமது அணுகு முறையாகும்.
படிக்க:
♦ மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற அறிவிப்பை எப்படி பார்ப்பது?
♦ சத்தீஸ்கர் வனக்காடுகள் அதானிக்கு! உயிர்பலி பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு!
மேற்க்கண்ட கண்ணோட்டத்தில் தான் மாவோயிஸ்டு கட்சியை அணுகுகிறோம். நாடு முழுவதும் ஒன்றுபட்ட கட்சி இல்லாத சூழலிலேயே தனக்குத் தெரிந்த வழிமுறை என்று தென் அமெரிக்க “சேகுவாரேவின் ஃபுக்கோயிசக் கொரில்லா முறை”யைக் கையாண்டு தளப் பிரதேசம் கட்டுவது; அதிலிருந்து ஆயுதப் போராட்டத்தை நடத்துவது என்றெல்லாம் முன் வைத்த மாவோயிஸ்டு அமைப்பின் அரசியல் மற்றும் ராணுவப் பாதைகள் தோல்வியை தழுவியுள்ளன.
அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் பசவராஜ் என்கிற நம்பல கேசவராவ் படுகொலை செய்யப்பட்ட பிறகு முன்னணியாக செயல்பட்டு வந்த ராணுவ தளபதியான தோழர் ஹிட்மா படுகொலை செய்யப்பட்ட பிறகு, தலைமைக் கமிட்டியில் இருந்த பூபதி என்கிற வேணுகோபால் உள்ளிட்ட வேறு சிலரும் சரணாகதிப் பாதையை தேர்வு செய்துள்ளனர். இயக்கத்தின் சில முன்னணியாளர்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், உயிர் பயத்தில் எதிரிகளிடம் சரணடைந்து இயக்கத்தை காட்டி கொடுக்கின்ற துரோகத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் பத்திரிகைச் செய்திகள் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடகச் செய்திகள் வாயிலாக வெளி வருகிறது.
அரசியல் போராட்டத்தை கைவிட்டு ராணுவ போராட்ட வழிமுறைகள் மற்றும் சாகச வழிமுறைகளையே ஆயுதப் போராட்டம் என்று பிரச்சாரம் செய்து அமுல்படுத்தி வந்த மாவோயிஸ்டுகளின் மீதான ஒடுக்குமுறையை முன்வைத்து இந்தியப் புரட்சிகர இயக்கம் பின்னடைவை சந்தித்து விட்டது என்று ஆளும் வர்க்க அறிவுஜீவிகளும், கம்யூனிச இயக்கங்களில் தாக்குப் பிடிக்க முடியாமல் சொந்த வாழ்க்கைக்கு ஓடிப்போன, ஓடுகாலிகளாக சீரழிந்துள்ள குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் பிதற்றி வருகின்றனர்.
புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் அரசியல் போராட்டத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கு உள்ள உறவை சரியாக பிரயோகிக்கின்ற இயக்கங்கள் தான் தொடர்ச்சியாக முன்னேறிச் செல்லும் என்பதுதான் ரசியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்சு போன்ற நாடுகளின் புரட்சிகர இயங்கியல் போராட்ட வழிமுறை கற்றுக் கொடுத்துள்ள பாடமாகும்.
“நக்சல்பாரி அரசியலையும், அந்த இயக்கங்களையும் மார்ச்-2026-க்குள் ஒழித்து விடுவோம்” என வெறி கொண்டலையும் ஆளும் வர்க்கத்தின் இரத்தவெறி பிடித்த கொடூரமான அடக்குமுறைகளால் தற்காலிகமாக சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும், மக்களின் மீதான கொடூரமான மறுகாலனியாதிக்க தாக்குதல்களும், சுரண்டல்களும் நீடிக்கின்ற வரை விவசாயிகளின் விவசாயப் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சியில் நக்சல்பாரி இயக்கங்கள் முன்னேறிச் செல்வதை அடக்குமுறைகள், படுகொலைகள் மூலமாக தடுக்க முடியாது.
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025
தலையங்க கட்டுரை







