பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR)
மோசடிகளை எண்ணற்ற எதிர்ப்புக்கள், போராட்டங்கள் இருந்தும், அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு தேர்தல் ஆணையம், பாஜக அரவணைப்போடு தாம் நினைத்தபடி ‘வெற்றிகரமாக’
வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலையும் நவம்பர் 6-ல் முடித்திருந்தது .

இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11 -ல் நடைபெற உள்ளது. இதற்கிடையில் முதற்கட்ட தேர்தல் முடிந்த மறுநாளே சமஷ்திபூர் மாவட்டம், சரைரஞ்சன் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் ஒரு கல்லூரிக்குள் வைக்கப்பட்டிருந்தன.

அந்தக் கல்லூரிக்கு அருகே நவம்பர் 6-ல் நடந்து முடிந்த மேற்படி தொகுதியின் VVPAT ஒப்புகை வாக்குச்சீட்டுக்கள் – அதாவது வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் (எந்தச் சின்னத்திற்கு வாக்களிக்கப்பட்டது) என்பதை உறுதிப்படுத்தும் சீட்டுகள் ஏராளமாக சாலைகளில் விசிறி அடிக்கப்பட்டு சிதறிக் கிடந்துள்ளன.

இந்த விவிபேட் (VVPAT)-ன் முக்கியத்துவம் யாதெனில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபேட்(VVPAT)டில் பதிவான வாக்குகளும் சோதித்தறியப்படும் சீட்டுகளே இப்படிச் சிதறிக் கிடந்துள்ளன. அவை (வீடியோக்கள்)ஊடகங்களில் –
இணையதளங்களில் – அச்சு ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பீகார் தேர்தல்: அதற்குள் தேர்தல் திருட்டு! என்ன செய்யப் போகிறோம்?
ரோட்டில் சிதறிக் கிடந்த VVPAT ஒப்புகை சீட்டு

இதனைத் தொடர்ந்து சமஷ்திபூர் மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி தற்காலிகப் பணிநீக்கம் (suspension) செய்யப்பட்டுள்ளாராம். அவர் மீது வழக்குப் பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறதாம்.

மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியோ, மாவட்ட ஆட்சியரை சம்பவ இடத்தில் தணிக்கை செய்து விசாரணை முடித்து அறிக்கை கோரியுள்ளாராம்.

சந்தடி சாக்கில் இவை போலி விவிபேட்(VVPAT) என்றும், எவரும் சந்தேகப்படத் தேவை இல்லை என்றும், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தகவல் பகிரப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

நமது கேள்வி என்னவெனில், அவை போலி விவிபேட்(VVPAT) என்றால் எதற்காக மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்? எதற்காக மாவட்ட ஆட்சியர் தணிக்கை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்? விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் ஏன் கூறிக் கொள்கிறது. மாவட்ட ஆட்சியரிடம் கோரப்பட்ட விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பே அவை போலி விவிபேட்
என்பதை தேர்தல் ஆணையம் எப்படிக் கூற முடியும்? வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்கு இயந்திரங்களும் ஆவணங்களும் சீல் வைக்கப்பட்டு ஐந்து அடுக்கு காவல்துறை கட்டுப்பாட்டில் கல்லூரி கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த அதி முக்கியமான ஆவணங்கள் எப்படி தெருவில் கிடக்க முடியும்?

‘பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று ஐந்து நாட்கள் கடந்த பின்பும் இதுவரை தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய ஒவ்வொரு தொகுதியிலும் மொத்த வாக்குகள் எவ்வளவு? பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு என்ற
முக்கிய தகவல்களை விளம்பரம் செய்யாமல் இருக்கிறார்கள்.
சட்டப்படி தேர்தல் நாளுக்கு மறுநாளே மேற்கண்ட விவரங்கள் விளம்பரப்படுத்தப்படல் வேண்டும். தேர்தல் ஆணையம் தாமதம் செய்வதற்குக் காரணமே, தில்லுமுல்லு மோசடிகளை உருவாக்கிக் கொள்வதற்கே என்பது தெளிவாகத் தெரிகிறது’.

இதுதான் தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம் குறித்தும், பாஜக – ஆர்.எஸ்.எஸ் குறித்தும் எவ்வளவு கேடான மோசடி வேலைகளை செய்கிறார்கள் என்பது குறித்தும் அம்பலப்படுத்துகின்ற பொழுது,
அவற்றுக்கு அக்மார்க் முத்திரை குத்தி பாதுகாக்க துடிப்பவர்கள் இவற்றுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

படிக்க: 

 ஆர்.எஸ்.எஸ்க்குக் கட்டுப்பாடா? கர்நாடக அரசை மிரட்டும் சங்கிகள்!

 பாஜக வெற்றிக்காக உழைக்கும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம்! தடுக்காத உச்சநீதிமன்றம்!

ஆனால் அகில இந்திய அளவில் ஒரே நேரத்தில் – நீண்டகால அவகாசம் எடுத்து நடத்தப்பட வேண்டிய SIR எனும் பணியை, சதித் திட்டத்தோடு பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் வழிகாட்டுதலோடு தேர்தல் ஆணையம் பகுதி பகுதியாக மோசடி வேலைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை கொள்ளை புறம் வழியாக (சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தல் பட்டியல் தயாரிப்பு என்ற பெயரில்) சிறுபான்மையினரை மட்டுமல்ல; காவிக் கூட்டத்திற்கு எதிரான பெரும்பான்மை மக்களையும் குடியுரிமை அற்றவர்களாக வாக்குரிமை அற்றவர்களாக மாற்றுவதே தேர்தல் ஆணையத்தின் SIR – பணி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது SIR பணி துவங்கியுள்ள 12 மாநிலங்களிலும், ராகுல் காந்தி அண்மையில் அம்பலப்படுத்தியுள்ள அரியானாவில் 25 லட்சம் கோடி போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட தேர்தல் திருட்டு மோசடி, பிரேசில் பெண் ஒருவரின் பெயர் அரியானா மாநிலத்தில் 22 இடங்களில் இடம் பெற்று இருக்கும் கொடுமை, மகாராஷ்டிரா தேர்தல் மோசடி, கர்நாடகா மகாதேவ்புரா தொகுதி போலி வாக்காளர் சேர்ப்பு மோசடி… என அன்றாடம் நிமிடத்திற்கு நிமிடம் வருகின்ற தேர்தல் தொடர்பான சகிக்கவொண்ணாச் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.

தேர்தல் திருட்டை அம்பலப்படுத்தினால் மோடி – அமித்ஷா கும்பலோ குடியுரிமை பெற்ற மக்களை ஊடுருவல்காரர்கள் என முத்திரை குத்தி, பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊடுருவல்காரர்கள்; அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் முழக்கமிடுகின்றனர் என காவி கூட்டம் கொக்கரிக்கிறது; மோசடி தேர்தல் ஆணையத்திற்கு அரணாக நிற்கிறது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தற்போது நாக்பூரில் நடைபெற்ற RSS மாநாட்டில், வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே இந்தியா என்பது ஏக இந்தியாவாக இருந்த நாடு என்றும், கிறித்தவர்கள் இஸ்லாமியர்கள் உட்பட வேற்று மதத்தினர் அனைவருமே இந்துக்கள் தான் என்றும், இந்தியாவில் இந்துக்களை தவிர்த்து வேற்று மதத்தினர் எவரும் வாழவில்லை என்றும் அறுதியிட்டுக் கொக்கரிக்கிறார்.

தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்தோருக்கும் சில பகுதிகளில் வாக்காளர் படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டதை பற்றி அறிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர், அவர்களுக்கு பீகாரில் வாக்குரிமை இல்லை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டதா? இரண்டு மாநிலங்களில் வாக்குரிமை பெறுதல் கூடாது என்ற தன்மையில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு, கலெக்டர் விசாரணையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆக, தமிழர்கள் அல்லாதோர் லட்சக்கணக்கில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட போவதும், இஸ்லாமியர் உட்பட சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், காவிக் கூட்டத்திற்கு வாக்களிக்க மறுக்கும் பகுதியினர் என வரையறுக்கப்பட்டோர் என பல லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட இருக்கின்றனர்.

BLOs எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கணக்கீட்டுப் படிவத்தினை நவம்பர் 4 துவங்கி வீடு வீடாகச் சென்று வழங்குவார்கள் என்றும், மூன்று முறை வீடுகளுக்கு வருகை தந்து ‘வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு’ உதவி புரிவர் என்றும் தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊளையிட்டார்கள். ஆனால் ஒரு வாரம் முடியப்போகிறது தமிழ்நாட்டில் இன்னும் அறுதிப் பெரும்பான்மை மக்களுக்கு படிவமே போய்ச் சேரவில்லை.

சேர்ந்தாலும், வழங்கப்படும் படிவத்தின் அரைப் பக்கத்தை மட்டுமே மக்களால் ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். மீதம் அரைப் பக்கம் வினாக்கள் 2002 இறுதி வாக்காளர் திருத்தப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டது. அதாவது 23 ஆண்டுகளுக்கு முந்தையது.
இக்காலக்கட்டத்தில் பல லட்சம் குடும்பத்தினர் வெவ்வேறு இடங்களுக்கு மாறிச் சென்றுள்ளனர்.
அவற்றையெல்லாம் எப்படி கண்டறிந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

டிசம்பர் 4 தேதியுடன் படிவம் மக்களால் பூர்த்தி செய்து வாக்குப்பதிவு அலுவலருக்கு ஒப்படைக்க வேண்டும். நான்கே நாட்களில் டிசம்பர் 9 அன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விடுவார்கள்.

ஏற்பு மறுப்பிற்கு ஒரு மாத கால அவகாசம். ஏற்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? என்பது வாக்குப்பதிவு அலுவலர்களுக்கே வெளிச்சம். பிப்ரவரி 7 வாக்குப்பதிவு அலுவலர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடப் போகிறார்கள்.

படிக்க: 

 மோடி ஆட்சியை நீட்டிக்கவே இந்திய தேர்தல் ஆணையர்!

 ஓட்டுத் திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!

2026 ஏப்ரல் மத்தியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் டிசம்பர் வடகிழக்கு பருவத்தை யொட்டிய பெருமழைக்
காலம். எனில், தற்போது வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் SSR என்ற ஆண்டிற்கொரு முறை மேற்கொள்ளப்படும் சேர்த்தல் நீக்கல் எனும் Special Summery Revision மட்டுமே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

எனவே தேர்தல் ஆணையம், ஓராண்டு முதல் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் வரை நீடித்து நடத்தப்பட வேண்டிய SIR எனும் பெரும் பணியை 12 மாநிலங்களிலும் உடனடியாக நிறுத்த வேண்டும். மாறாக SSR பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த இரண்டே கோரிக்கைகளுக்காக அனைத்து அரசியல் இயக்கங்களும் வெகு மக்களை திரளாக திரட்டி களம் இறங்கிப் போராட வேண்டும் ‌

ஆனால் இவ்வளவு கொடும் செயல்கள் காவி கூட்டத்தாலும், தேர்தல் ஆணையத்தாலும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்
கின்றன. எதிர்க்கட்சிகள் சவடால்களாக பேசுவதும், சில அம்பலப்படுத்தல்களை மேற்கொள்வதாக மட்டுமே இருக்கிறார்கள்.
கொதிநிலைக்கு வரவேண்டிய மக்களின் உணர்வு மட்டமோ அடி பாதாளத்தில் கிடக்கின்றன.
இன்றைய பாராளுமன்ற ஜனநாயக தேர்தல் மூலமாக உழைக்கும் மக்களுக்கு விடியல் எதனையும் பெற்றுத்தர முடியாது என்பது உண்மைதான்.

ஆனாலும் இருக்கக்கூடிய குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையும் முற்றாக பறித்துக் கொண்டு ஒற்றைச் சர்வாதிகாரத்தை – பாசிசத்தை நிலை நாட்டவும், சனாதான பார்ப்பனீயத்தைக் கோலோச்ச செய்யவும், அதானி அம்பானி உட்பட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் தாரை வார்த்துக் கொடுத்து சேவகம் செய்வதையும் எவ்வளவு காலம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

எனவே, எதிர்க்கட்சிகள், இடதுசாரி முற்போக்கு மற்றும் புரட்சிகர இயக்கங்கள் களமிறங்கி மக்களை அணிதிரட்டி இந்த போலித் தனமான SIR-ஐ நிறுத்தச் செய்வதற்கான பெரும் கலகங்களை வீதியில் இறங்கி நடத்தி ஆக வேண்டும். அது தவிர, வேறு வழி இல்லை.

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here