மார்ச் 5, பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஸ்டாலின் அவர்களின் நினைவு நாள். பாசிச ஹிட்லரின் நாஜிப் படைகளைச் செம்படை கொண்டு வீழ்த்தி, உலகையே பாசிசப் பிடியிலிருந்து காப்பாற்றிய அந்தப் மாபெரும் தலைவரின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றை இன்றைய உலகச் சூழலில் நாம் நினைவுகூர்வது மிகவும் அவசியமாகும்.
ஹிட்லரை வீழ்த்திய மாவீரன்: ஸ்டாலினின் அறைகூவல்!
1941-இல் ஹிட்லரின் ஜெர்மனி சோவியத் யூனியன் மீது வஞ்சகமாகத் தாக்குதல் நடத்தியபோது, அதனைத் தடுத்து நிறுத்த ஸ்டாலின் ஆற்றிய உரைகள் இன்றும் போராட்ட உணர்வைத் தூண்டுபவை. அவர் சோவியத் மக்களுக்கு விடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பில், “எதிரி இரக்கமற்றவன், பிடிவாதமானவன். நம்முடைய உழைப்பால் உருவான நிலங்களையும், தானியங்களையும், எண்ணெயையும் கைப்பற்ற அவன் துடிக்கிறான்… இது சோவியத் அரசின் வாழ்வா சாவா என்ற போராட்டம்” என்று எச்சரித்தார்.
தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், “நமது லட்சியம் நியாயமானது – வெற்றி நமதே!” என்ற ஸ்டாலினின் முழக்கம் சோவியத் மக்களை ஒன்றிணைத்தது. அவர் வெறும் ராணுவத் தலைவராக மட்டும் இல்லாமல், போரின் போக்கை மாற்றும் “நிரந்தரமான காரணிகளை” (Permanently operating factors) அதாவது பின்னணியின் உறுதித்தன்மை, ராணுவத்தின் மன உறுதி மற்றும் ஆயுதங்களின் தரம் ஆகியவற்றைச் சரியாகக் கணித்துச் செம்படையை வழிநடத்தினார். இதன் விளைவாகவே, பெர்லினின் மீது வெற்றிக் கொடி ஏற்றப்பட்டது.

மோடி அரசாங்கத்தின் பாசிசமும் பொருளாதார அடிப்படையும்!
மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில், பாசிசம் என்பது ஏதோ ஒரு மதவெறிப் பிரச்சாரம் மட்டுமல்ல. அது “நிதி மூலதனத்தின் ஆகப் படுமோசமான, ஆக பிற்போக்கான, ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கரத் தன்மை கொண்ட சர்வாதிகாரம்” ஆகும். உலக அளவில் நிதி மூலதனத்தின் அடியாட்களாக இருக்கும் பாசிச ட்ரம்ப்- நெதன்யாகு கும்பலின் மேலாதிக்க போர்வெறி பல்வேறு நாடுகளைச் சின்னாபின்னமாக்கி வருகிறது. இந்தியாவில் தற்போது மோடி அரசாங்கம் அமல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் இந்த நிதி மூலதனத்தின் இலாபவெறிக்காகவே கொண்டு வரப்படுகின்றன.
விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலுக்கு வழிவகை செய்கின்றன. 2008-ஆம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாத நிதிமூலதனம், அந்த நெருக்கடியை மக்கள் மீது சுமத்துவதற்காகவே பாசிஸ்டுகளை அதிகாரத்தில் அமர்த்தி சுரண்டலை தீவிரப்படுத்தியுள்ளது.
அரசு நிறுவனங்களின் பாசிசமயம் மற்றும் அடக்குமுறை
பாசிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஜனநாயக அமைப்புகளாகச் சொல்லப்படும் நீதித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம், ஊடகம், கல்வி மற்றும் ராணுவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். இந்தியாவில் தற்போது சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதும், ஜனநாயகக் குரல்கள் ஒடுக்கப்படுவதும் இதன் ஒரு பகுதியே ஆகும்.
அமித்ஷா-மோடி கூட்டணி “மாவோயிசத்தை அழிப்போம்” என்று கொக்கரிப்பது, உண்மையில் பாசிச எதிர்ப்பாளர்களை அதாவது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையிடும் கார்ப்பரேட்டுகளுக்கு, நாட்டை கூறுபோடுவதை எதிர்த்து போராடும் மக்களை அச்சுறுத்தும் ஒரு செயலாகவே பார்க்கப்பட வேண்டும். பாசிசம் என்பது வெறும் அரசு ஒடுக்குமுறை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் கொண்டு உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் ஒரு போர்.
பாசிசத்தை வீழ்த்த அணிதிரள்வோம்!
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பாசிசத்தை வீழ்த்தியவர்கள் கம்யூனிஸ்டுகளே. இன்றையச் சூழலில் பாசிசத்தை வீழ்த்துவதற்குத் தோழர் ஸ்டாலின் காட்டிய பாதையில் பின்வரும் செயல்பாடுகள் அவசியமானவை:
பாசிசத்தின் ஆணிவேரான நிதி மூலதனத்தையும் அதன் சுரண்டல் அமைப்பையும் வீழ்த்தாமல் பாசிசத்தை முழுமையாக ஒழிக்க முடியாது. பாசிச எதிர்ப்பு எண்ணம் கொண்ட ஜனநாயக அமைப்புகள், உழைக்கும் மக்கள் மற்றும் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து ஒரு “பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி” உருவாக்கப்பட வேண்டும்.
படிக்க:
♦ இந்தியப் பொதுவுடமை இயக்கமும், சூறாவளிகளும்! தோழர் லெனின் வழியில் எதிர்கொள்வோம்!
♦ செப்டம்பர் 2: வியட்நாம் விடுதலை தினம் மற்றும் தோழர் ஹோ சி மின் நினைவு தினம்.
மோடி ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறுகுறு வணிகர்கள் மற்றும் மாணவர்கள் பாசிஸ்டுகள் அமல்படுத்தும் கார்ப்பரேட் நலக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்கள் மாற்றப்பட்டு, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வர்க்க நலன்களைப் புரிந்து கொண்டு, குறுகிய அடையாளங்களைத் தாண்டி மூலதனத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும்.
நிதிமூலதனக் கொள்ளையின் விளைவால் உழைக்கும் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நாடோடிகளாக நாட்டுக்குள்ளேயே அழைந்து திரியும் புலம்பெயர் தொழிலாளர்களாக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் அம்பானி, அதானி, மிட்டல், அகர்வால் உள்ளிட்ட தேசங்கடந்த தரகுமுதலாளிகளின் சொத்துக்கள் பன்மடங்கு உயர்ந்து இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை மோடி இந்தியாவின் வளர்ச்சி என்கிறார்.
மறுபுறம் காவிக் கும்பல் மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி சிறுபான்மை மக்களை வேட்டையாடுகிறது. அதிகார மையங்களை கேடாக பயன்படுத்தி இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமையும், குடியுரிமையையும் பறிக்கிறது. ஆகக்கேடான இந்த காவிபாசிசம் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையின மக்களை அகதிகளாக்கியுள்ளது.
வேலையின்மை, சமூக ஏற்றத்தாழ்வு, மதவெறி தாக்குதல், மதவெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தாக்குவது, போராடுகின்ற சமூக செயற்பாட்டாளர்களை பொய்வழக்கில் சிறை வைப்பது, அதிகார மையங்களை கேடாக பயன்படுத்தி எதிர்கட்சிகளை இல்லாமல் செய்வது, மாநில உரிமைகளை பறிப்பது, ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை கேள்விக் குறியாக்கியது என பாஜக – ஆர்எஸ்எஸ் பாசிச கும்பல் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீது எழ முடியாத அளவிற்கு தாக்குதல் தொடுத்து வருகிறது.
இதற்கு எதிராக, தோழர் ஸ்டாலின் செம்படை கொண்டு ஹிட்லரை வீழ்த்தியதைப் போல, அவரது அறிவாயுதத்தை பயன்படுத்தி உழைக்கும் மக்களை அரசியல் படுத்துவதும், அதன் மூலம் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதும் நம்முன் உள்ள அதிமுக்கிய பணி என்பதே உணர்ந்து செயல்படுவோம்.
பாசிசம் வீழும்! பாட்டாளி வர்க்கம் ஒருநாள் வெல்லும்!
- நலன்






