பாரதியார் பிறந்த நாள் மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு விழாவை ஒட்டி விஜில் என்ற சங்கீ கூட்டம் நடத்திய கூட்டத்தில்,, “எந்த பிராமண எதிர்ப்பைக் காட்டி நீ திராவிடன் இருப்பைக் கட்டினியோ அந்த பிராமணக் கடப்பாரையை கொண்டு இந்த பாழடைந்த கட்டிடத்தை இடிக்கப் போவதாக” சூளுரை எடுத்தார் திருவாளர் சீமான்.
அப்போதும் அவர்களது எஜமானர்களான ஷிவ் நாடார் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் புரவலர்கள், துக்ளக் குருமூர்த்தி போன்ற பார்ப்பன ஆலோசகர்கள் திருப்தி அடையாத காரணத்தினால் அடுத்த சுற்றில் பெரியாரைப் பற்றி விமர்சனம் என்ற பெயரில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக பார்ப்பனக் கும்பல் எழுதி வெளியிட்ட புத்தகங்களிலிருந்தும், பார்ப்பனக் கும்பல் பேசி வருகின்ற அல்லது வாந்தி எடுத்த பல விஷயங்களை வாரிக் குடித்துவிட்டு மேடைகளில் உளறத் தொடங்கியுள்ளார் திருவாளர் சீமான்.
அவர் பேசுவது மட்டுமின்றி அவரால் வளர்க்கப்பட்ட சில தற்குறிப்பேச்சாளர்களும் பெரியாரைப் பற்றி விமர்சிப்பதன் மூலமாக தாங்கள் பிரபலம் அடைய முடியும் என்ற கண்ணோட்டத்தில் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக்கொண்டு திரிகின்றனர்.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் மீது இன்னமும் சூத்திர, பஞ்சம சாதி அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; சாதி ரீதியான பாகுபாடுகள்; பெண்களின் மீதான ஆணாதிக்க வெறியாட்டங்கள்; அரசு பதவி முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிமன்ற நீதிபதிகள் பதவி வரை அனைத்தையும் ஆக்கிரமித்துள்ள பார்ப்பனக் கும்பலின் மேலாதிக்கம் ஆகியவை அனைத்தும் பெரியார் போராடிய அரை நூற்றாண்டுக்குப் பிறகும் நீடிக்கின்றது.
பெரியார் இருந்த காலத்திலும், பெரியாருக்கு பின்னரும் அவருக்கு எதிராக போராடி, போராடித் தோற்றது பார்ப்பனக் கும்பல். ஆனால் மீண்டும் மீண்டும் பல்வேறு பெயர்களில் புதிது புதிதாக தோன்றி சனாதன தர்மத்தையும், வர்ணாசிரமக் கொடுங்கோன்மையும், சாதி தீண்டாமை அடக்குமுறைகளையும் நியாயப்படுத்துவதற்காகவே அவதாரம் எடுக்கின்றனர். அந்த அவதாரங்களில் ஒன்றுதான் திருவாளர் சீமான் உருவாக்கி வைத்துள்ள நாம் தமிழர் இயக்கம்.
நாம் தமிழர் இயக்கத்தின் பிறப்பே இந்திய உளவுத்துறையின் கைவரிசையில் உருவானது தான். 2010 ஆம் ஆண்டு மதுரையில் முதன்முதலாக நாம் தமிழர் பெயரை முன் வைத்த ஜெகத் கஸ்பர் ஈழத்தில் புலிகளின் பின்னடைவுக்கும், குறிப்பாக தமிழ்ச் செல்வன் மரணத்துக்கு காரணமான சிங்கள உளவாளி. முள்ளிவாய்க்கால் இன அழிப்பு படுகொலைகள் வரை இவரது கைவரிசை நீண்டது பலருக்கும் தெரியும். தமிழ்ச் செல்வன் ஜிபிஎஸ் முறையில் கொல்லப்பட்ட பிறகு இவரை புலிகள் இயக்கம் விலக்கி வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த காலக்கட்டத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பாக்கியராசன் சேதுராமலிங்கம் என்பவர் 90-களில் ’வீர திராவிடன்’ என்ற பத்திரிக்கை நடத்திய இந்திய உளவுப்படையின் கைக்கூலியான நகைமுகன் என்பவரின் அக்கா மகன். இவரின் நியமனமே சந்தேகமானதுதான் என்று சீமான் உடனிருந்தவர்களே முன் வைக்கின்றனர்.
காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை சீர்குலைத்த இந்திய உளவு நிறுவனமான ரா-வின் சூழ்ச்சிக்கு பலியாகி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சிதைத்து, “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற பிழைப்புவாத அரசியலை முன்னெடுத்த யாசின் மாலிக் கடலூரில் 2013 ஆம் ஆண்டில் கலந்து கொண்ட தமிழர் எழுச்சிக் கூட்டத்திலிருந்து சீமானின் யோக்கியதை அம்பலமாகத் துவங்கியது.
பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவில் தேசிய இனத்தின் பெயரால் எழுகின்ற எழுச்சியை நசுக்குவதற்காகவே அல்லது காயடிப்பதற்காகவே இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட கைக்கூலி அமைப்புகளில் ஒன்றுதான் நாம் தமிழர் சீமான் அமைப்பு என்பதுதான் உண்மை.
முழு உண்மைகளை காட்டிலும் ஆபத்தானது முக்கால் பொய் என்பார்கள். அதுபோல கால்வாசி உண்மைகளையும், முக்கால்வாசி பொய்யையும் கலந்துக் கட்டி அடிக்கும் வாய்ச்சவடால் பேர்வழியான சீமான் ஹிட்லர் மற்றும் முசோலினி போன்றவர்களின் உடல் மொழி கொண்ட ஒரு தமிழ் பாசிச கும்பல் தலைவன் என்பதுதான் நிதர்சனம். சீமானுக்கும், ஹிட்லருக்கும் உள்ள ஒற்றுமைகளை அம்பலப்படுத்தி தோழர் கலையரசன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் சில எமது இணையத்திலும் பிரசுரமானது.
தமிழ் தேசிய இனத்தின் மீதான பார்ப்பன பனியாக் கும்பலின் தாக்குதலை எதிர்த்து போராட வேண்டும் என்று சுயமரியாதை மற்றும் தன்மான உணர்வுடன் செயல்படுகின்ற இளைஞர்களை தன் பக்கம் திரட்டிக் கொள்ள வேண்டும்; அவர்களை காயடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்திய உளவு நிறுவனம் உருவாக்கியுள்ள கைக்கூலி அமைப்பான நாம் தமிழர் அமைப்பு அதன் ’திசைவழியில்’ முன்னேறி வருகிறது. ஆர்எஸ்எஸ் பாசிசக் கும்பலின் கையாட்களான தந்தி, புதிய தலைமுறை போன்ற ஊடகத்தினரின் துணையுடன் செயல்படுகிறது. இந்த தமிழ் பாசிசக் கும்பல் தற்போது பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணியாக நிற்கும் தமிழகத்தை அசைத்துப் பார்ப்பதற்கு பெரியாரின் மீதான தாக்குதல்கள் மூலம் மூர்க்கமாக கிளம்பியுள்ளது.
படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ் கூடாரத்தில் சீமான். ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை
♦ ‘மரத்தமிழர்களை’ உருவாக்கும் சீமான்!
டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றவர்கள் பார்ப்பன (இந்து) மதத்தை அம்பலப்படுத்தி திரை கிழித்தது போல் கம்யூனிச இயக்கத்தின் முன்னோடிகள் கூட திரை கிழித்து அம்பலப்படுத்தியது இல்லை என்பதுதான் உண்மை. இந்து மதம் என்பதே பார்ப்பன மேலாதிக்கமும், சனாதன தர்மம் எனப்படும் சாதி தீண்டாமைக் கொடுமைகளையும் உள்ளடக்கியதுதான் என்பதை புதிய ஜனநாயகம் உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள் கடந்த 85 முதல் தமிழகத்தில் பிரச்சாரமாக கொண்டு சென்று வருகிறது. இந்த அடிப்படையிலேயே இந்தியாவின் மிகப்பெரிய அபாயமாக உள்ள காவி பாசிசத்தை அதாவது பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறது.
ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்க இருக்கின்ற இந்து ராஷ்டிரம் என்கின்ற பார்ப்பன கொடுங்கோன்மை பிற்போக்குத்தனமான சாதிய அடக்குமுறைகள்; வர்ணாசிரம வெறித்தனம் மற்றும் சாதி தீண்டாமைக் கொடுமைகளைக் கொண்டது, ஆணாதிக்கத்தின் உச்சகட்டத்தில் நின்று செயல்படுவது பெண்களை சமத்துவமாக நடத்த ஒரு போதும் துணியாதது என்பதை எதிர்த்து போராடுகின்ற காலகட்டத்தில் சீமான் போன்றவர்கள் ஏற்கனவே தமிழ் மண்ணில் பார்ப்பனியத்துக்கு எதிராக போராடி வீழ்த்தியவர்களை இழிவுபடுத்துவதை ஒருக்காலும் நாம் அனுமதிக்க கூடாது.
இந்து மதவெறி பாசிச குண்டர்களை வீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுப்பதைப் போலவே தமிழ் பாசிசக் கும்பலையும், குண்டர்களையும் எதிர்த்து நேருக்கு நேர் போராடுவதற்கு தயாராக வேண்டும். பாசிசத்தை வீழ்த்துவதற்கு ஒரு பெரிய மரத்தை அடியோடு சாய்ப்பதற்கு முன்பாக பக்கவாட்டில் உள்ள கிளைகளை படிப்படியாக வெட்டிக் கழித்துவிட்டு பெரிய மரத்தை நோக்கி செல்வதை போன்ற ஒரு அணுகுமுறையில் இவர்களையும் அணுக வேண்டும்.
பார்ப்பன பாசிசத்தின் கிளைகளாக பல்வேறு மாநிலங்களிலும் முளைத்துள்ள சாதிய மதவாத, இனவெறி, பிழைப்புவாத மற்றும் இளைய பாசிச அமைப்புகளை ஒவ்வொன்றாக துடைத்தெறிவதன் மூலமே அதன் தாய்க் கழகமான ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங்கீ கும்பலை நோக்கி நேருக்கு நேர் எதிர்த்து நின்று சமர் புரிய முடியும் என்பதை பிரகடனமாக அறிவிப்போம்.
பெரியார் மீதான அவதூறுகள் பரப்புவதை எதிர்த்து பார்ப்பனியத்துக்கு எதிரான அவரது வெளியீடுகள் அனைத்தையும் மறுபதிப்பு செய்து கொண்டு வர திராவிடர் கழகத்தை அணுகுவோம். மலிவு விலையில் லட்சக்கணக்கான புத்தகங்களை போட்டு தமிழகம் முழுவதும் மீண்டும் கொண்டுச் செல்வோம். இதன் மூலம் பார்ப்பன எதிர்ப்பு மரபை பெரியார் வழியில் நின்று மீட்போம். பொருள் முதல்வாதப் பாரம்பரியம் என்பதே கருத்துமுதல் வாதத்திற்கு எதிராக போராடிய அனைவரின் பங்களிப்புடன் தான் முன்னேறிச் செல்ல முடியும் என்பதை புதிய தலைமுறைக்கு கற்றுக் கொடுப்போம்.
- பார்த்தசாரதி
புதிய ஜனநாயகம் தினசரி






