ந்தியா ஒன்றிய அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் பாஜக கைப்பற்றியது முதல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது தற்போது உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது.

பார்ப்பன (இந்து) மதம் இயல்பிலேயே அந்த மதத்தை ஏற்றுக் கொண்ட பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவு படுத்தி வருவது குறித்த விவாதங்கள் அதற்கு எதிரான கருத்துகள் தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு மரபை உருவாக்கியுள்ளது என்பதை நாம் அறிவோம்.

தமிழகத்தைத் தவிர பெரும்பான்மையான மாநிலங்களில் பார்ப்பன (இந்து) மதத்திற்கு எதிரான கருத்து ரீதியான பிரச்சாரங்கள் இந்து மதத்தின் கொடூரங்களை உணர்த்தவில்லை என்ற காரணத்தினால் தீண்டாமை உள்ளிட்ட கொடூரமான வன்கொடுமைகள், மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் தாங்களும் இந்துக்கள் தான் என்ற மனப்பான்மை ஒவ்வொருவரிடமும் குடிகொண்டு உள்ளதால் அதனை அங்கீகரிக்கிறார்கள் அல்லது மௌனமாக கடந்து செல்கிறார்கள்.

பொதுவாக இந்து மத கண்ணோட்டம் உடையவர்களை அதாவது வெளிப்படையாக சொன்னால் இந்து மதம் உருவாக்கியுள்ள சாதியப் படிநிலைகளை, சாதியக் கண்ணோட்டத்தை கொண்டவர்கள் இந்து மத வெறியர்களாக மாறுவதற்கு மிகப்பெரிய காலம் பிடிக்காது.

இதனால்தான் பிற நாடுகளில் மதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்ற நிலைப்பாடு கொண்ட கம்யூனிஸ்டுகள் இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன (இந்து) மதத்திற்கு எதிராக போர் குணமிக்க போராட்டங்களே வேண்டும், பார்ப்பன மதத்திற்கு எதிரான போர் பிரகடனத்தை அறிவித்து செயல்பட வேண்டும். மதம் என்ற அடிப்படையில் கூட தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அடக்குமுறை நிறுவனமான பார்ப்பன இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று போராடுகிறார்கள்.

இதனை கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் செயல்படுகின்ற புதிய ஜனநாயகம் உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள் அனைத்தும் பிரச்சாரமாக செய்து வருகின்றன என்ற போதிலும் தற்போதைய கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத அடக்குமுறைகள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் இந்த முழக்கங்கள் மேலும் முன்னிலை பெறுகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி நாடு முழுவதும் நடந்துள்ள மதச் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த முழக்கத்தின் அவசியத்தை மேலும் முக்கியமாக்கியுள்ளது.

மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, டெல்லி,அஸ்ஸாம், ஹரியானா, ஒடிசா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பரவலாக தாகுதல்கள் நடந்தேறியுள்ளது. 2025 ஜனவரி முதல் இந்த டிசம்பர் வரை நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது 700 க்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அவை உச்சகட்டம் பெற்று நேற்றைய கிறிஸ்தவ தின கொண்டாட்டங்களின் மீது கொடூரமான தாக்குதல்களை பாசிச இந்து மத வெறி குண்டர்கள் நடத்தியுள்ளனர் என்பது தான் நாடு முழுவதும் ஒரு விவாத பொருளாக மாறி உள்ளது.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான சாண்டா உடை அணிந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்ற கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்களை தாக்குவது தொடங்கி, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், சர்ச்சுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ தின கொண்டாட்டங்கள் அனைத்தின் மீதும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கண்ட மாநிலங்களில் ஆர் எஸ் எஸ் பாஜகவின் பாசிச குண்டார் படை தாக்குதலை நடத்தியுள்ளது.

தாங்களும் இந்துக்கள் தான் என்று வெறியேற்றப்பட்ட பார்ப்பனரல்லாத பிற சாதிகளை சேர்ந்த அதுவும் குறிப்பாக பார்ப்பனரல்லாத மேல் சாதி இந்துக்கள் இந்த குண்டர் படையில் முன்னிலை வகிக்கின்றனர். இந்த குண்டர் படையில் படித்தவர்கள் × படிக்காதவர்கள் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. அரசு ஊழியர்கள்; ஆசிரியர்கள் என்ற ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. போலீசு, ராணுவம் என்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. பார்ப்பன (இந்து) மத வெறியூட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் முன்வைக்கின்ற இந்து ராஷ்டிரத்தை ஏற்றுக் கொண்ட பாசிச குண்டர் படையானது இத்தகைய கொடூரமான தாக்குதல்களில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த தாக்குதல்கள் குறித்து நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிரான கருத்து உடையவர்கள் மற்றும் பாசிசத்திற்கு எதிராக போராடுபவர்கள் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கண்டன குரல்களை எழுப்பிக் கொண்டுள்ளார்கள் என்றாலும் இவையெல்லாம் பாசிச குண்டர் படைகளுக்கு எதிராக பெரிதாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினர் மத்தியிலும் அந்த நாட்டின் அரசாங்கங்கள் மத்தியிலும் இந்தியாவிற்கு சிக்கலை உருவாக்கும் என்றெல்லாம் ஆய்வு செய்து சிலர் எழுதுகின்றனர். கிறிஸ்தவ மதத்திலேயே கூட வர்க்கம் என்ற அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக செயல்படுகின்ற பிரிவினரும், உழைக்கும் கிறிஸ்தவர்கள் என்று இரண்டு வகை உள்ளனர். இந்த ஆதிக்க மனோபாவம் கொண்ட அல்லது ஆதிக்கம் புரிகின்ற கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் இயல்பிலேயே ஏகாதிபத்திய நிதி மூலதனத்துடன் இணக்கமான உறவு கொண்டுள்ளனர்.

இந்த நிதி மூலதனத்தின் விரிவாக்கப்பட்ட எல்லை மற்றும் நாடுகளை மீண்டும் காலனியாக்குகின்ற போக்குகள் ஆகியவற்றிற்கு எதிராக இந்த ஆதிக்க கிறிஸ்தவர்கள் ஒருபோதும் முரண்பட மாட்டார்கள் என்பது மட்டுமின்றி நிதி மூலதனத்தின் பங்காளிகளாக அதனை ஆதரித்தே நிற்பார்கள்.

படிக்க: 

 கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டங்களைக் குறிவைத்துத் தாக்கும் இந்துத்துவக் கும்பல்!

 மத நல்லிணக்கத்திற்கு துணை நிற்போம்! பார்ப்பன மதவெறி க்கு கொள்ளி வைப்போம்!

இதனால்தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த அதிபர்கள் இந்தியாவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்புவார்கள். ஐநா இதனை கண்டிக்கும் என்றெல்லாம் பேசுவது வர்க்க கண்ணோட்டம் அற்ற பார்வையாகும். ஒருவேளை அப்படி கண்டனம் தெரிவித்தாலும் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக சேதாரம் இல்லாமல் ஒப்புக்கு சில கண்டனங்களை தெரிவிப்பார்கள்.

பிற நாடுகளில் உள்ளவர்கள் இதை கண்டிப்பது இருக்கட்டும். இந்தியாவில் பெரும்பான்மை மதம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய பார்ப்பன (இந்து) மதத்தில் உள்ள பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பதை விவாத பொருளாக மாற்றுவோம்.

கேரளாவின் முதல்வரான பினராய் விஜயன் முதல் இடதுசாரிகள் மற்றும் பெரியாரிய, அம்பேத்காரிய வாதிகள் பார்ப்பன இந்து மதம் கார்ப்பரேட் பாசிசத்துடன் கைகோர்த்துக்கொண்டு எப்படி பயங்கரவாத பாசிசமாக உருவெடுத்துள்ளது என்பதை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதையும் உணர்த்த வேண்டியுள்ளது.

இந்த புரிதலில் உள்ள குறைபாடு காரணமாகத்தான் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை வேதனையான சம்பவமாக பார்க்கிறார் பினராய் விஜயன்.

இந்து என்ற அடிப்படையில் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற சூழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கு தயாராக வேண்டும்.சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தப்படுவதற்கு எதிராக பார்ப்பன (இந்து) மதத்தில் இருந்து வெளியேறுவது என்ற நிலைப்பாட்டை எடுத்து பார்ப்பன கும்பலுக்கும், அதனை ஆதரிக்கின்ற கருப்பு பார்ப்பனர்கள் மற்றும் பதிலி பார்ப்பனர்களுக்கும் பதிலடி கொடுப்பது என்ற வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

மதச் சிறுபான்மையினர் மற்றும் சொல்லிக் கொள்ளப்படும் இந்து மதத்திலேயே உள்ள பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற தாக்குதலை எதிர்த்து எதிர்த்தாக்குதல் கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்பதுதான் 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ தினமானது நமக்கு விடுத்துள்ள செய்தியாகும்.

மருது பாண்டியன்.

1 COMMENT

  1. தோழர் மருது பாண்டியன் கட்டுரை கிறிஸ்தவர்களை தாக்குவது குறித்து எழுதப்பட்டுள்ளது இந்த தாக்குதல் சிறுபான்மையின மக்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இந்துக்கள் என்ற தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை சேர்த்து எப்படி வர்க்க ரீதியாக இந்த சம்பவத்தை பார்க்க வேண்டும் இதே சமூகத்தில் உள்ள ஆதிக்க கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதி சேர்ந்த இந்துக்கள் ஆதிக்க சாதி சேர்ந்த பார்ப்பனர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தான் செயல்படுவார்கள் ஆகவே வர்க்க ஒற்றுமையோடு ஒடுக்கப்படும் மக்கள் ஒன்றாக சேரந்து பாசிஸ்டுகளின் தாக்குதற்கு எதிர் தாக்குதல் தொடுக்க தயாராகுவோம் என இந்த கட்டுரை உணர்த்துகிறது தோழருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here