அனுமார் வாலாக நீளும் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகள்!
எல்கர் பரிஷத் வழக்கில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டனர். மாவோயிஸ்ட் கட்சிக்கும், இவர்களுக்கும் உறவு உள்ளது என்பதை நிரூபிப்பதற்கு போலியான பல ஆவணங்களை அவர்களது கம்ப்யூட்டருக்குள் சொருகினார்கள் என்பதெல்லாம் அம்பலமாகி உளவுத்துறை அமைப்பான என்ஐஏ மற்றும் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலின் யோக்கியதை நாறியது.
இந்த வழக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான ஹனிபாபு கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறையில் வாடிய பிறகு அவர் மீது “சுமத்தப்பட்ட குற்றங்கள் எதுவும் விசாரணைக்கு கொண்டு வரப்படவில்லை” என்ற நிலையில் எரிச்சல் அடைந்த நீதிபதிகள் அஜே எஸ் கட்கரி மற்றும் ரஞ்சித்சின்ஹா ஆர் போன்சாலே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இனிமேலும் அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்று டிசம்பர் நான்காம் தேதி ஜாமீன் வழங்கியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று கைது செய்யப்பட்ட பாபு, பின்னர் மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்தபோது, பாபு பல முறை கொடுமையான நோய்வாய்ப்பட்டார். மேலும், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அவருக்கு கடுமையான கண் தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடிய பாதர் ஸ்டேன் சுவாமி தனது தள்ளாத வயதில் சிறைக்குள்ளேயே இருந்து பலவிதமான நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்தார். மரணம் அடைந்தார் என்று சொல்வதைக் காட்டிலும் சிறைக்குள்ளையே அடைத்து வைத்து கொலை செய்யப்பட்டார் என்பதுதான் பொருத்தமான வார்த்தையாகும்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 பேரில் இதுவரை வரவர ராவ், சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்ப்டே, வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரீரா, ஷோமா சென், கவுதம் நவ்லகா, சுதிர் தவாலே, மற்றும் ரோனா வில்சன் உள்ளிட்ட மொத்தம் 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டது.
கடந்த மாதம், ஜோதி ஜக்தாப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் ரவுத்துக்கும் உச்ச நீதிமன்றம் ஆறு வார மருத்துவ ஜாமீன் வழங்கியது, பின்னர் அது நீட்டிக்கப்பட்டது. தற்போது ஹனிபாபு ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.
வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் மற்றும் கலாச்சார கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் சாகர் கோர்கே மற்றும் ரமேஷ் கெய்ச்சோர் ஆகியோருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நாடு ஒரு சுதந்திரம் பெற்ற நாடு என்றும், இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும், ஆளும் வர்க்கங்களும், அவர்களின் எடுபுடிகளான முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் ஓயாமல் கூச்சலிட்டுக் கொண்டே உள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, சட்டரீதியாக போராடி விடுதலையை பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளுங்கள் என்று ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போதே ஆர்எஸ்எஸ் – பாஜக உள்ளிட்ட பாசிச குண்டர் படையானது அரசியலமைப்புச் சட்டத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சோசலிச கருத்துகளை, மதச்சார்பற்ற உரிமைகளை முன்வைக்கின்ற முகப்புரையை நீக்க வேண்டும் என்று வெறித்தனமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒரு பக்கம் பிரச்சாரம் செய்தாலும் மறுபக்கம் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கீழமை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை நீதிபதிகளை நியமித்து சட்டரீதியாகவே போராடுகின்ற விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பழங்குடி மக்களின் பிரதிநிதிகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்ற பல்வேறு வகையான அமைப்புகளை சார்ந்தவர்கள் மீது கொடூரமான வழக்குகளை விசாரணை செய்து தண்டனை வழங்குகிறார்கள் அல்லது நீண்ட காலம் விசாரணை இல்லாமலேயே சிறைக்குள் அடைத்து சித்திரவதை செய்து அணு அணுவாக கொல்கிறார்கள்.
இவ்வாறு செய்வதற்கு நியாய உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது என்பதுதான் இங்கே நாம் கவனிக்கத்தக்கது. புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு அரசியல் சட்டத்தின் மீது விமர்சனங்கள் என்னவென்றால், அது கொண்டுவரப்பட்ட காலம் முதல் இன்று வரை பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தான் பல்வேறு வழக்குகள் மற்றும் அதன் தீர்ப்புகள் அம்பலப்படுத்துகின்றன என்பதை தொடர்ச்சியாக முன்வைக்கிறது.
விதிவிலக்காக சில இடங்களில் கிடைக்கின்ற நீதிகளை மட்டும் வைத்துக்கொண்டு இதுவும் அரசியலமைப்பு சட்டம் கொடுப்பதுதானே என்று வாதம் செய்வதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வர்க்க வாழ்க்கையில் நடத்தப்படுகின்ற மேற்கண்ட அடக்குமுறைகளை தடுப்பதில் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதரவாளர்கள் தவறிழைத்து வருகின்றனர்.
படிக்க:
♦ எல்கர் பரிஷத் வழக்கு: ரோனா வில்சன், சுதிர் தவாலே ஜாமீனில் விடுதலை!
♦ 2017-பீமா கோரேகான் வன்முறையும், எல்கர் பரிஷத் வழக்கும்! நடந்தது என்ன?
இத்தகைய அநீதிகளுக்கு சமீபத்திய உதாரணம் மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணிபுரிகின்ற ஜி ஆர் சுவாமிநாதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்க முடிகிறது என்பதும், மாநில அரசின் போலீசுக்கு எதிராக மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஏவ முடிகிறது என்பதும், சாதாரண எல்லைக்கல்லை, இதுதான் தீபம் ஏற்றும் கல் என்று வாதம் புரிவதற்கு முடிகிறது என்பதும், இதனை எதிர்த்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் கூட டெல்லியில் சென்று நாடாளுமன்றத்தில் இம்பிச்மென்ட் கொண்டு வருவதன் மூலம் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதும்தான் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகபட்ச ‘ஜனநாயக உரிமை’.
இதனால்தான் நாட்டின் செல்வங்களையும், கனிம வளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும் சட்டபூர்வமாக கொள்ளையடிக்கின்ற முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அவர்களின் இடைத்தரகர்கள், அவர்களை ஆதரிக்கின்ற அரசியல் கட்சிகள் நேர்மையான நபர்கள் என்பதைப் போலவும், மக்களின் உரிமைக்காக போராடுகிறவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள், அவதூறுகள் குற்றச்சாட்டுகளாக சுமத்தப்படுகிறது.
மக்கள் மத்தியில் மாற்று அரசியலை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்ற கம்யூனிச அமைப்புகளை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தி ஒடுக்குவதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக மற்றும் அதன் உளவுப் படையான என்ஐஏ முன்னிலை வகிக்கிறது.
தாமதமாகின்ற நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று ஓயாமல் நீதித்துறை கோமான்கள் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் எந்த விசாரணையும் இன்றி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்பது மட்டுமின்றி இன்னமும் பல நூற்றுக்கணக்கான சிறை கைதிகள் இதுபோன்று பல்வேறு வழக்குகளில் விசாரணையின்றி சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் பிறந்து பார்ப்பன (இந்து) மதத்தை தவிர பிற மதங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் மதம் சாராத நாத்திகர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்துவதில் நீதித்துறையும் தற்போது இணைந்து கொண்டுள்ளது என்பது தான் நாடு முழுவதும் உள்ள நிலைமையாகும்.
◾ பார்த்தசாரதி.






