தாய்ப்பாலில் கலந்த யுரேனியம்!பீகாரில் நடக்கும் கொடூரம்!
யுரேனியமானது அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கு கொடுக்கின்ற தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது என்பது தான் அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட காலத்திற்கு தாய்ப்பால் மூலமே ஊட்டச்சத்தை பெறுகிறது என்பதுதான் எதார்த்த உண்மையாகும்.

குறிப்பிட்ட வயது வரை தாய்ப்பால் குடிக்கின்ற குழந்தைகள் அது வளர்கின்ற காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு ஆளாவது இல்லை. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்களில் தாய்ப்பால் கலந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடுகிறது.

இந்த அளவிற்கு உயிராதாரமான தாய்ப்பாலில் கூட பூச்சிக்கொல்லிகள் அதாவது டிடிடி எனப்படும் பூச்சிக்கொல்லி கலந்துள்ளதால் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு மரபணு ரீதியிலான பாதிப்புகளும், உடலியல் ரீதியிலான நோய்களும் ஏற்படுவதாக ஒரு தசாப்த காலமாகவே பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வானது சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளியிட்டுள்ளன.

திடீரென்று குழந்தைகள் பல்வேறு விதமான சொல்ல முடியாத நோய்களுக்கு உள்ளாவதை கண்டவுடன் அதற்கு என்ன காரணம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கழகம் மற்றும் பீகாரில் உள்ள உயர் மருத்துவ நிபுணர்களும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்ற தாய்ப்பாலை ஆய்வு செய்ததிலிருந்து சில உண்மைகள் வெளியாகின.

பிற மாநிலங்களில் நிலவுவதைப் போலவே பீகாரிலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் பிரதான உணவாக இருக்கிறது. தாய்ப்பாலில் அனைத்து வகையாக சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது என்பதால் ஏழை மக்களுக்கு அதுதான் சத்துள்ள உணவு.

அந்த தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அனைத்து தாய்ப்பாலிலும், கதிர்வீச்சை உண்டுபண்ணும் யுரேனியம் கலந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த யுரேனியம் சுரங்கம், நிலக்கரி எரித்தல், அணுசக்தி வெளிப்பாடு மற்றும் பாஸ்பேட் உரங்களின் பயன்பாடு போன்ற இயற்கை செயல்முறைகள் மற்றும் மனித நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. அந்த நிலத்தடி நீரை பயன்படுத்துகின்ற தாய்மார்களுக்கு உடல் முழுவதும் யுரேனியம் பரவுகிறது.

அந்த யுரேனியமானது அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கு கொடுக்கின்ற தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது என்பது தான் அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

முந்தைய ஆராய்ச்சிகளில் ஏற்கனவே தாய்ப்பாலில் ஆர்சனிக், ஈயம் மற்றும் பாதரசம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயத்தை நன்கு புரிந்துகொள்ள, தாய்ப்பாலில் உள்ள பூச்சிக்கொல்லிகள் போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடுகள் உட்பட நச்சு மாசுபடுத்திகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பீகாரில் உள்ள டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

“நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி” என்கிறார் வள்ளுவர். குழந்தைகளுக்கு சொல்ல முடியாத நோய்கள் வருவதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்தால் யுரேனியம் அதிகம் கலந்துள்ளது என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

ஆனால் யுரேனியம் எப்படி நிலத்தடி நீரை பாழாக்குகிறது என்கின்ற ஆராய்ச்சியில் இறங்கி அதனை தடுப்பதற்கான முயற்சியில் அரசு இறங்கவில்லை. மாறாக தாய்ப்பாலில் கலந்துள்ள யுரேனியத்தின் அளவு எச்சரிக்கும் அபாயத்தை விட அதிகமாக இல்லை என்று பெருமூச்சு விடுகின்றனர்.

இது போலவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரசேத்தின் மஹராஜ்கன்ஜ் நகரில், கடந்த 10 மாதங்களில் 111 மழலைகள் – அதாவது, பிறந்து ஒரு வயதைத் தாண்டாத குழந்தைகள் – இறந்துள்ளன.

ஒரே மாதிரியாக நிகழ்ந்த இந்த மரணங்களின் பின்னணி என எதையும் உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, குழந்தைகளின் உணவுக் குடலில் நஞ்சு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நஞ்சானது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தாய்ப்பால் மூலமே அவர்களுக்கு பரவியது என்றும், அந்த தாய்மார்கள் கொடுத்த தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி மருந்தான டிடிடி அளவுக்கதிகமாக கலந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை பற்றி எழுத்தாளர் பாமயன் விளக்குகிறார் “அறிவியலில் உயிரியக்குமிப்பு (Bioaccumulation) என்ற ஒரு முறை உள்ளது. அதாவது, நம் உடல் எடுத்துக்கொள்ளும் வேதிப்பொருள் – குறிப்பாக பூச்சிக்கொல்லி போன்ற வேதிகள் – மென்மேலும் சேர்ந்து குவிந்துகொண்டே வரும்.

இது உடலில் பெருக்கமடையவும் செய்யும். எடுத்துக்காட்டாக டிடிடி என்ற வேதிப்பொருள், ஒரு பங்கு அளவாகப் புற்களில் இருக்கும் என்று கொண்டால், அதை உண்ணும் மாட்டின் வயிற்றுக்குள் சென்று இரண்டு மடங்காகப் பெருகும். பின்னர், அந்த மாட்டுப் பாலை அருந்தும் மனிதரின் உடலில் நான்கு மடங்காகப் பெருகும். இந்தப் பெருக்கம் வடிவியல் பெருக்கல் முறையில் அமையும்.”என்கிறார் அவர்.

இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமல்ல. தமிழகத்திலும் கூட இதன் பாதிப்புகள் விரிவடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயற்கையாக வேளாண்மை நடத்திய காலம் கைவிடப்பட்டு பசுமை புரட்சி திட்டத்தின் பிறகு செயற்கையான உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மூலம் விவசாயத்தை நடத்தி வந்ததன் விளைவு தற்போது உணவு தானியங்களிலும் உணவு பயிர்களான நெல், கோதுமை மற்றும் காய்கறிகள் தாய்மார்களின் தாய்ப்பால் வரை டிடிடி பரவி உள்ளது என்பதும் மற்றொருபுறம் சுரங்கங்கள் மற்றும் ரசாயன ஆலைகள் வெளியேற்றுகின்ற கழிவு நிலத்தடியில் அப்படியே எந்தவிதமான சுத்திகரிப்பும் இல்லாமல் கலக்கப்படுவதால் அவை நிலத்தடி நீரை பாழாக்குகிறது என்பதும் எதார்த்த உண்மையாக மாறி உள்ளது.

தனது லாபவெறிக்காக எந்த விதமான சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் நிகழ்த்த தயாராக உள்ள முதலாளித்துவ பயங்கரவாதிகளும் கொடுமையான விஷத்தை நேரடியாக மக்களுக்கு கொடுப்பதை காட்டிலும் தாய்ப்பால் மூலமாக மக்களுக்கு கொடுத்து செயற்கையாக பல்வேறு நோய்களை வரவழைப்பதில் இத்தகைய உயிரை வதைத்து காசாக்குகின்ற கிரிமினல் கும்பலும் ஒன்று சேர்ந்து இளைய தலைமுறையினர் மீதும், குழந்தைகள் மீதும் ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

மனித குலத்திற்கு விரோதமான டிடிடி பூச்சிக்கொல்லிகளை உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் அவை சகஜமாக புழங்குகிறது என்பதும் இந்தியாவில் இயங்குகின்ற கார்ப்பரேட் தொழிற்சாலைகள் அனைத்தும் சூழலியல் பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதை கண்டுபிடித்தாலும் அதனை ஆய்வு செய்கின்ற தொழிற்சாலை ஆய்வாளர்கள் முதல் அனுமதி கொடுக்கின்ற தொழில்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வரை இவற்றை கண்டு கொள்வதில்லை.

“பிணத்தை எரித்து வெளிச்சத்தை காண்பவர்களைப்” போல பிணக்குவியல்களின் மீது ஏறி பணம் சம்பாதிக்க துடித்துக் கொண்டுள்ள இப்படிப்பட்ட கேடுகெட்ட மனித குலத்தின் விரோதிகள், பாசிச பாஜகவின் ஆட்சியில் அதிகரித்துள்ளனர் என்பது தான் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

“அரசியலமைப்புச் சட்டம் வாழ்க!” என்று கூறிக்கொண்டு எந்த விதமான கிரிமினல் குற்ற செயல்களையும் செய்தால் அவர்கள் எல்லாம் ‘ சட்டத்தின் படி’ தண்டிக்கப்படுவார்கள். தவிர வேற எந்த விதமான நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படுவதில்லை. சட்ட ரீதியான தண்டனை ஒரு வர்க்க சார்பாகவே இருக்கிறது என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

அரசியல் சட்டத்தை கேள்விக்கு உள்ளாக்கினாலோ அல்லது வேறு புதிய அரசியல் சட்டத்தின் படி தான் இந்தியா இந்த நாடு முன்னேற முடியும் என்று மாற்றுத்திட்டத்தை முன்வைத்து போராடினால் அவர்கள் மீது பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சட்டவிரோதமான எந்த விதமான நடவடிக்கைகளையும் செய்வதற்கு அரச பயங்கரவாதிகள் தயங்குவதில்லை.

அரச பயங்கரவாதிகளே மிஞ்சுகின்ற வகையில் செயல்படுகின்ற பாசிச பயங்கரவாதிகள் பிறக்கும் குழந்தைகளின் உணவான தாய்ப்பாலிலும் விஷத்தை கலக்கின்ற அளவிற்கு கொடூரமானவர்களாகிவிட்டார்கள்.

இனியும் இத்தகைய பயங்கரவாதிகளை நாட்டை ஆள அனுமதிப்பது மிகக் கேடான விளைவுகளையே உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. தாய்ப்பாலில் கலந்த( டிடிடி) யுரோனியம் பீகாரில் நடந்த கொடூரம் !

    அந்த காலத்தில் குழந்தைகள் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தால் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக குழந்தைகள் வளரும் என்று முன்னோர்கள் கூறி வந்தார்கள் ஆனால் இன்றோ பீகாரில் தாய்ப்பால் குடித்து குழந்தை இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது இதற்கு காரணம் என்ன?
    பசுமைப் புரட்சி என்கின்ற ஒரு நாசாக்கார திட்டத்தை விவசாயத்தில் கொண்டு வந்ததின் விளைவாக விவசாயத்தில் விளையும் அரிசி பருப்பு, கோதுமை போன்ற தானியங்களில் பூச்சிக்கொல்லி நச்சு கலைந்த மருந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இதை சாப்பிடும் தற்போதைய தலைமுறை குழந்தைகள் ஆரோக்கியமாக இல்லாமல் சில குழந்தைகள் பருமையாகவும் சில குழந்தைகள் உடல் மெலிதாகவும் காணப்படும் நிலைமை உருவாகி உள்ளது .
    தற்போதைய உணவு முறையின் விளைவாக பல நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி (லோ பி பி) (ஐ பி பி )போன்ற நோய்களும் குழந்தைகளை தாக்குகிறது இந்த வேதனையான செய்திகள் படிக்க முடிகிறது.
    இதோடு மட்டுமல்லாமல் பூமியிலிருந்து எடுக்கப்படும் கனிம வளத்தால் அதில் இருக்கக்கூடிய நச்சு வேதிப்பொருட்களால் பூமி படலத்தில் படர்ந்து நாம் குடிக்கக்கூடிய குடி தண்ணீரில் மாசு ஏற்படுத்துகிறது.

    தனியார்மயம் தாராளமையும் உலகமயம் கொள்கையின் விளைவாக மனிதர்களின் உணவே உயிரை கொள்ளும் அளவிற்கு முதலாளித்துவ லாபவெரி இதற்கு காரணமாக இருக்கிறது.

    விவசாயத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஒரு மாற்று திட்டம் தேவை அந்த திட்டம் சமூக மாற்றத்தின் மூலமாக தான் நிறைவேற்ற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here