
இந்தியாவில் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் சூறையாடுவதற்கு வெறிகொண்டு அலைகின்ற கார்ப்பரேட்டுகள் அதற்கு எதிராக போராடுகின்ற புரட்சியாளர்களை வேட்டையாடுவதை தீவிரப் படுத்தியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலின் போது நக்சல்பாரி கிராமத்திற்கு சென்ற உள்துறை அமைச்சரான திருவாளர் அமித் ஷா “இந்தியாவில் உள்ள இடதுசாரிகளை படிப்படியாக ஒழித்து கட்டப் போவதாகவும், அவர்கள் ஆயுதமேந்தி போராடினாலும் சரி அல்லது பாராளுமன்ற பாதையில் போராடினாலும் சரி இடதுசாரி அரசியலுக்கு இந்தியாவில் இடமில்லை” என்று சூளுரைத்தார்.
இதன் முதல் படியாக 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல்பாரி அரசியலுக்கு முடிவு கட்டப் போவதாகவும், அதன் ஒரு அங்கமாக இந்தியாவில் மாவோயிஸ்டுகளை முழுமையாக துடைத்தெறியப் போவதாகவும் அறிவித்து வருகிறார். இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டிலிருந்து ஆப்ரேஷன் காகர் என்ற ராணுவ பயங்கரவாத தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல்கள் மாவோயிஸ்டுகளின் முக்கியமான தலைவர்களை குறி வைத்து நடத்தப்பட்டு வருவதால் மாவோயிஸ்ட் அமைப்பின் அகில இந்திய செயலராக செயல்பட்டு வந்த தோழர் நம்பள கேசவராவ் கடந்த செப்டம்பரில் படுகொலை செய்யப்பட்டார். அவர் உட்பட சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் சுமார் எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய சூழலில் நேற்று மாவோயிஸ்டு கட்சியின் முன்னணி செயல்வீரரும், தளபதியுமான தோழர் மத்வி ஹிட்மா கொல்லப்பட்டுள்ளார்.
காரேகுட்டா மலைப்பகுதியில் தொடர்ச்சியான தேடுதல் வேட்டை மற்றும் அழித்தொழிப்புகள் ஆகியவற்றை தொடர்ந்து பஸ்தார் பகுதிக்கு இடம்பெயர்ந்த மத்வி ஹிட்மா தலைமையிலான மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சார்ந்த படைப்பிரிவு ஒன்றின் ஆயுதமேந்திய போராளிகள் தோழர் ஹிட்மா உடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கி ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரா, தெலுங்கானா சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள எல்லை பகுதியான மாரேடுமில்லி காடுகளுக்கு கொண்டு சென்று என்கவுண்டர்களை நடத்தி வருவதாக இந்தியா ஒன்றிய மக்கள் வழக்கறிஞர் குழு செய்தியை வெளியிட்டுள்ளது.
தற்போது கொல்லப்பட்டுள்ள மத்வி ஹிட்மா பஸ்தார் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் மத்தியில் இருந்து உருவான போர்குணமிக்க தளபதியாக உருவெடுத்தார். இவர் மீது 26 வகையான தாக்குதல்கள் நடத்தியதாக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்பதும், அவரது மரணத்திற்கு பரிசாக ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முடிவுக்கு எதிராக சரணடைவு பாதையை தேர்வு செய்த பூபதி என்கின்ற வேணுகோபால் ராவ் உள்ளிட்டவர்களின் சரணடைவு பாதை மற்றும் இயக்கத்தில் இருந்து வெளியேறிய துரோகிகளின் காட்டிக் கொடுப்புகள் போன்றவை இத்தகைய தோழர்களின் உயிர் பலிக்கு பிரதான காரணமாக உள்ளன என்பதும் வரலாற்றில் குறித்துக் கொள்ளத்தக்கது.
படிக்க:
♦ மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற அறிவிப்பை எப்படி பார்ப்பது?
♦ போலி மோதல் கொலைகளில் பலியாகின்ற மாவோயிஸ்ட் அமைப்பினர்!
காடுகளையும், மலைகளையும், கனிம வளங்களையும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் சூறையாடுவதற்கு தடையாக உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தினரை கொன்றொழிப்பதற்கு தேடுதல் வேட்டை என்ற பெயரில் படுகொலைகளை நடத்துவதும், ஆயுதமேந்தி போராடுகின்றனர் என்பதை முன்வைத்து, எந்த விதமான சட்டம்- ஒழுங்கு, அவர்களே முன்வைக்கின்ற நீதிகளுக்கு இடமளிக்காத வகையில் படுகொலைகளை நிகழ்த்துவது மனிதகுலத்திற்கும், அதன் விழுமியங்களுக்கும் எதிரானது என்று சிபிஐ கட்சியின் தலைவர்களே விமர்சிக்கின்றனர்.
மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் பலரையும் கைது செய்து வைத்துக் கொண்டு படிப்படியாக அவர்களை தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டதாக பொய்யான செய்திகளை பரப்பி உண்மையில் என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தி வருகிறது இந்திய ஒன்றிய அரசு. மாவோயிஸ்டுகள் மீதான இந்த தாக்குதலை இந்தியாவில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் கண்டித்து வருகின்றனர்.
இந்தியாவில் நிலவுகின்ற இரு துருவ ஏற்றத்தாழ்வுகளும், கார்ப்பரேட் காவி பாசிசத்தின் கொடூரமான வெறியாட்டங்களும், ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் உலகை சூறையாடுகின்ற வெறித்தனமும் ஒன்றிணைந்த தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டுள்ள சூழலில் அதை எதிர்த்து போராடுகின்ற புரட்சிகர அமைப்புகள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி அழித்தொழிப்பதன் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று ஆளும் வர்க்கங்களும், இந்திய ஒன்றிய அரசாங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலும் கனவு கண்டு கொண்டிருக்கிறது.
ஏற்றத்தாழ்வுகளும், வர்க்க முரண்பாடுகளும் முற்றாக ஒழியும் வரை போராட்ட வழிமுறைகளில் சில மாற்றங்கள் இருந்தாலும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமும், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகின்ற போர்க்குணமும் ஒருபோதும் ஓயாது.
◾ஆல்பர்ட்.






