SIR phase – I பீகாரில் நடந்து முடிந்து முதலில் 65 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு பின்பு எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்ற பிறகு, தர மறுத்த நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரைகுறையாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்து, மக்கள் முண்டியடித்து பெயர் சேர்த்தல் பணியில் ஈடுபட்டு, உயிரோடு இருப்பவர்களை இறந்தோர் பட்டியலில் சேர்த்து நீக்கம் செய்ததை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியதின் அடிப்படையில் வெகுவான மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதியாக சுமார் 43 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்து நவம்பர் 6, 11 தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பீகார் SIR தொடர்பான வழக்கின் மறு விசாரணை நவம்பர் 4-ல் தான் நடைபெற உள்ளது. ஆக, தறிகெட்ட தனமாக தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசுக்கு அடிபணிந்து மக்களின் வாக்குரிமையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது என்பதனை பீகார் SIR – Phase – I நிரூபித்து உள்ளது.

இந்தியா கூட்டணியோ இந்த SIR மோசடி பற்றி குறைந்தபட்ச போராட்ட எதிர்ப்பையும், நீதிமன்ற நாடலையும் முடித்துக் கொண்டு, கருத்துக் கணிப்பு, மக்கள் மனநிலை இவற்றைக் கொண்டு பீகாரில் எளிதாக பாஜக நிதிஷ்குமார் கூட்டணியை வென்றிடலாம் என மனப்பால் குடிக்கின்றனர். அவ்வாறு வென்றால் மகிழ்ச்சியே.

ஆனால் கடந்த கால பாசிச பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கூட்டமும், அவற்றுடன் கைகோர்த்து நிற்கும் ECI, Judiciary, ED, IT, CBI அனைத்தும் காவிமயமாகி இனி நிரந்தரமாக அனைத்து மாநிலங்களிலும், ஒன்றியத்திலும் பாஜகவை தவிர எவரும் ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற முனைப்பில் அனைத்து சட்ட முறைகளையும் ரோமத்திற்குச் சமமாகக் கருதி தூக்கி எறிந்து விட்டு, களம் இறங்கி வேலை செய்கின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்கின்ற பொழுது பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாசிஸ்டுகள் அவ்வளவு எளிதில் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கான அத்தனை வித குறுக்குப் புத்தி நடவடிக்கைகளை கடந்த அரியானா, மகாராஷ்டிரா, ம.பி., உ.பி. சட்டமன்ற தேர்தல்களிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். யாரும் எதுவும் தன்னை மீறி செயல்படக்கூடாது என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

இவற்றை எதிர்க்கட்சிகள் உணர்ந்திருந்தும் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விடயமாக உள்ளது.

இவ்வித பாசிச தன்மையுடைய SIR அரங்கேற்றம், EVM, VVPAT, Form- 20 தில்லு முல்லு மோசடிகள், பகிரங்க தேர்தல் திருட்டு போன்ற அனைத்தையும் பற்றி இதே மக்கள் அதிகாரம் இணையத்தில் இதற்கு முன்பு எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் பாசிச SIR அரங்கேற்றம்!

பீகார் SIR Phase-I ன் அனுபவம், உச்சநீதிமன்ற விவாதப் பிரதிவாதங்கள் அடிப்படையில் வழக்கு நிலுவையில் இருப்பது; SIR-க்கு எதிராக இந்திய அளவில் எண்ணற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தல்… இவையாவும் ஒரு புறத்தில் இருந்திட்டாலும் இவை எதைப் பற்றியும் கணக்கிற்கொள்ளாமல், ஞானேஷ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் அனைத்தினது எழுத்து பூர்வமான மற்றும் வாய் மூலமான குறைந்தபட்ச நியாயமான எதிர்ப்புக்களையும் மீறி, 2025 நவம்பர் 4 முதல் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் தயாரிப்பிற்கான (SIR – Bhase-II) படிவங்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் பணிகளை தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட (51 கோடி வாக்காளர்கள் உள்ளடக்கிய)12 மாநிலங்களில் அராஜகமாகத் துவங்கிவிட்டது.

SIR தொடர்பாக நாம் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதி அம்பலப்படுத்தி இருந்தாலும் குறிப்பிட்ட சில அம்சங்களை மீண்டும் அசை போடுவது அவசியமாக உள்ளது.

நவம்பர் 2-ல் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் அனைத்து கட்சி கூட்டத்தில் சிறிய பெரிய என 49 கட்சிகள் பங்கேற்றுள்ளன. அனைவருக்கும் விவாதித்தில் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கானப் போதுமான கால அவகாசம் கொடுத்து விவாதிக்கப்பட்டுள்ளது. முடிவில் உச்சநீதிமன்றத்தில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே SIR-ன் அபாயங்களை சுட்டிக் காண்பித்து SIR – Phase-II-க்குத் தடை கோரி வழக்குத் தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (எதிர்பார்த்தது போல் பாஜகவும் அதன் தொங்கு தசைகளான அதிமுக, பாமக, நாதக, தவெக, பாமக… உள்ளிட்ட சிறு சிறு கட்சிகள், அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளன)

எனினும் நடந்து முடிந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தீர்மானம், நிறைவேற்றுவதற்குக் காரணமாக சொல்லப்படுவது யாதெனில் அனைத்து கட்சிகளின் உணர்வுமட்ட கருத்துக்களின் மீது மட்டுமே ஒருமனதான தன்மையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிப்பட்ட தீர்மான முன்வடிவை மேற்கொள்ள வேண்டியதாயிற்று எனக் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த கால அனுபவங்கள் போதிப்பது என்ன? தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் எந்த ஒரு உத்தரவிற்கும் கீழ்ப்படியும் நிலையில் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு தவறுகளை சுட்டிக் காண்பித்து உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் உச்சநீதிமன்றமும் செயலாற்ற முன்வரவில்லை. மாறாக தேர்தல் ஆணையம் (ECI) என்பது சுயேச்சையான, தன்னிகரற்ற, தனித்துவமான, எந்த சட்ட நியதிகளுக்கும் உட்படத் தேவையில்லாத, வேறு எவரும் தன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத அளவிற்கான மாபெரும் நிறுவனம் என்பதாக காட்டிக் கொள்கிறது; அறிவித்தும் கொள்கிறது.

படிக்க:

 பீகார் சிறப்பு தீவிர திருத்தமும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலும்!

 பீகார் இறுதி வாக்காளர் பட்டியலிலும் தொடரும் முறைகேடுகள்!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 169 இன் படி ஒன்றிய அரசின் அரசிதழில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமே வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் SIR பணியை மேற்கொள்ள வேண்டும். அந்த முறையைப் பின்பற்றாமல், தேர்தல் ஆணையமே அறிவிப்பை தன்னிச்சையாக – எதேச்சதிகாரமாக வெளியிடுவது அரசியல் சட்டத்திற்கும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் எதிரானது. இப்போது செய்யப்பட்டுள்ள எஸ்ஐஆர் அறிவிப்பே சட்டவிரோதம் ஆகும்.

காரணம் தேர்தல் ஆணையமும் பாஜகவும் வெவ்வேறானது அல்ல என்பதையும், தேர்தல் ஆணையம் முற்றும் முழுதாக பாஜகவின் கைத்தடி அமைப்பாக மாறிவிட்டது என்பதனையும் பல்வேறு அனுபவங்கள் மூலமாக நாம் உணர்ந்திருக்கிறோம். தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் குறுக்குப் புத்தியில் எப்பொழுது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமன கமிட்டியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு பாஜக அமைச்சரை நியமித்தார்களோ ஆணையாளர்களை நியமிப்பதற்கான கமிட்டியில் பாஜக பெரும்பான்மையை நிலை நிறுத்திக் கொண்டதோ அன்றே குறைந்தபட்ச பாராளுமன்ற ஜனநாயகத்தை நிர்வாணப்படுத்திக் காண்பித்து விட்டார்கள் பாசிச சங்பரிவாரக் கூட்டம்.

அவ்வாறு இருக்கையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவின்படி உச்சநீதி மன்றத்தின் மூலமாக வெற்றியினை ஈட்டி விடலாம் என்பது பகற் கனவு. கூடுதலாக நீதித்துறையும் காவிமயமாகிவிட்டது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த ஐந்து நீதிபதிகள் (முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்-ராமபிரானை வழிபட்டு தீர்ப்பு எழுதியவர்- உட்பட) அமர்வில் இடம்பெற்ற அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். அவர்கள் அனைவருக்கும் பாசிச பாஜக அரசு தகுந்த சன்மானமாக பல்வேறு விதமான உயர் பதவிகளில் (மாநிலங்களவை உறுப்பினர் முதல் ஆளுநர் பதவி வரை) அமர வைத்து அழகு பார்க்கிறது. இதுதான் நீதித்துறை.

பற்றாக்குறைக்கு தமிழ்நாட்டின் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘பாஜக வழக்கறிஞர்கள் அதிவேகத்தில் நீதிபதிகளாக நியமனம் பெற வேண்டும்; அதற்கு சகல வழிகளிலும் நான் முன் முயற்சி எடுப்பேன்’ – எனத் தெனாவட்டாக அறிக்கை வாயிலாகவும் கூட்டத்தில் உரையாற்றுவதன் வாயிலாகவும் வெளிப்படையாகவே நீதித்துறையையும் பாசிசமயமாக்குவது குறித்து கருத்து தெரிவிக்கிறார். இதுதான் அகில இந்திய அளவிலான காவி கூட்டத்தின் உணர்வு மட்டமாகும். இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி சார்பாக நிறைவேற்றப்பட்ட ஒற்றை தீர்மானமே போதுமானது எனக் கருதும் (விதிவிலக்கான சில கட்சிகள் தவிர) அனைவரும், பாசிச பாஜகவின் சைகையை மீறி நீதிபதிகள் செயல்பட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முன் வர வேண்டும்.

காவி மயமாகிவிட்ட நீதித்துறையின் யோக்கியதாம்சத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

SIR-Phase – II பணியின் ஆபத்துக்கள் எவை? எவை?

அக்டோபர் 27 இந்திய தேர்தல் அறிவிக்கையின்படி, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் எஸ் ஐ ஆர் பணியை துவங்கிட ஆணையிட்டு விட்டார்கள். கீழே தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ள படிவத்தை கண்ணுறுங்கள். அதாவது கடந்த காலங்களில் எப்படி பழைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலிருந்து சேர்த்தல், நீக்கல் என்பது கிடையாது. நவம்பர் 3 நள்ளிரவோடு அனைத்து மக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை அல்லது தமிழ்நாட்டின் சுமார் ஆறரை கோடி மக்களும் வாக்குரிமையை இழந்து விட்டார்கள். அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் போல, வாக்குரிமை மதிப்பிழப்பு நவம்பர் 3 நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

படிக்க:

 தேர்தல் ஆணையத்தின் மற்றும் ஓர் தேர்தல் மோசடி அறிவிப்பு!

 ஓட்டுத் திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!

‌ இனிமேல் மக்கள் தங்களை புதிதாக வாக்காளர்களாகப் பதிவு செய்ய முன்வர வேண்டும். வாக்குரிமை மதிப்பினை பெற வேண்டும். அப்படியெனில் நவம்பர் 4 முதல் தேர்தல் ஆணையத்தால் மக்களுக்கு வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தை (Enumeration form) மிகச் சரியாக பூர்த்தி செய்வதோடு, அவர்கள் கோருகிற உரிய ஆவணங்களையும் டிசம்பர் 4-க்குள் ஒப்படைக்க வேண்டும். டிசம்பர் 5 முதல் 8 முடிய நான்கே நாட்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பணி மேற்கொள்ளப்படுமாம். அடுத்த நாளே அதாவது டிசம்பர் 9-ம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுமாம். அதன் பிறகு டிசம்பர் 9 முதல் ஜனவரி 1 வரைவு வாக்காளர் பட்டியலின்மீது மக்கள் தத்தம் ஏற்புரைகள் அல்லது மறுப்புரைகளை தெரிவிக்க வேண்டுமாம்.

ஜனவரி 9 முதல் ஜனவரி 31 வரை ஏற்பு மறுப்பு முறையீடு பற்றி வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) பரிசீலனை மேற்கொள்வாராம். பிப்ரவரி 3-ஆம் தேதி இறுதி வாக்காளர் சரிபார்ப்பு பணியினை முடித்து ஆணையத்தின் உத்தரவிற்காகக் காத்திருப்பாராம். பிப்ரவரி 7-ல் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விடுவாராம்.

இதில் வேடிக்கை என்ன வெனில் அந்த வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு சேர்த்தல், நீக்கல், பிழைகள் தொடர்பாக முறையீடு செய்தபின் முழு அதிகாரமும் வாக்காளர் பதிவு அலுவலருக்கே சென்று விடுகிறது. அதன் பிறகு இடைக்கால வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது. அப்படியானால் மக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியாது.

நேரடியாக பிப்ரவரி 7-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். தமது கோரிக்கைகள் நிறைவேறியதா இல்லையா என்பதனை மக்கள் தெரிந்து கொள்ள முடியாது. பிப்ரவரி 7 வெளியிடப்படும் ‌ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் அதற்கு மேல் மக்களால் ஒன்றுமே செய்ய இயலாது. வாக்காளர் பட்டியல் நீக்கம் செய்யப்பட்டிருந்தால் பெயர் இல்லாமல் போயிருந்தால் போனது போனதுதான்.

இதன் பிறகு மக்கள் எந்த ஒரு கோரிக்கையையும் BLO, ERO முதலானோரிடம் முன்வைக்க முடியாது. பிப்ரவரி 7 இறுதிப்பட்டியலை ஏற்றுக் கொண்டு போவதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை.

சட்ட நியதிகளின் படி ஓராண்டுக்குள் தேர்தல் வருகின்ற பொழுது அந்த மாநிலத்தில் SIR எனும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி  மேற்கொள்ளபடக் கூடாது. அதை மீறுகிறது தேர்தல் ஆணையம்.

குறிப்பாக தமிழ்நாட்டில் 2026 ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டிலும் நவம்பர், டிசம்பர் வடகிழக்குப் பருவ மழை புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் பெருவெள்ளம் இவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழலை எதிர்கொண்டு மக்கள் காத்திருப்பர். அறுதிப் பெரும்பான்மையான விவசாய மக்கள் வேளாண் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் காலமும் இந்த மாதங்களில் தான். டிசம்பர், ஜனவரி மாதங்களில் கிறிஸ்மஸ் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை போன்றவற்றிலும் மக்கள் மும்மரமாக ஈடுபட்டிருப்பர்.

இக்காலச் சூழலில் 2002, 2005 வாக்காளர் பட்டியலை சரி பார்த்து, – கோரியுள்ள பல கேள்விகளுக்கு பதிலே கூறமுடியாத அளவிற்கான சூழலில் – புதிதாக கொடுக்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து முடித்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைப்பது என்பது குதிரைக்கொம்ப்பே.

(தொடரும்…)

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here