மகாராஷ்டிராவில் வெடித்த விவசாயிகள் போராட்டம் !
“விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூர் நகருக்கு வெளியே நாக்பூர் – வார்தா NH 44 தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள் தங்களின் டிராக்டர்கள், மாட்டு வண்டிகளை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28, 2025) அன்று துவங்கிய போராட்டம் மகாராஷ்டிரா அரசையும் பாஜகவையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் காரணமாக அந்த நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தேங்கி நிற்கின்றன.
தேங்கி நிற்கும் வாகனங்களை வேறு சாலைகள் வழியாக செல்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்த பொழுது விவசாயிகள் அந்த சாலைகளையும் மறித்து போக்குவரத்தை தடை செய்துவிட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மும்பைக்கு வருமாறு விவசாயப் பிரதி நிதிகளை மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ் அழைத்தார்.
ஆனால், இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் பிரஹார் ஜன்சக்தி பார்ட்டி (PJP) கட்சியின் தலைவரான பச்சுசுகாடு ‘நாங்கள் அங்கு வர விரும்பவில்லை. முதலமைச்சர் நாங்கள் போராடும் இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்’ என்று கூறிவிட்டார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் போராட்டம் தொடருமானால் அடுத்த கட்டமாக ரயில் பாதைகளையும் மறித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த விபரங்களை அறிந்த மகாராஷ்டிரா உயர் நீதிமனறம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்தது. நாக்பூரில் உள்ள விமான நிலையத்திற்கும் புற்றுநோய் மருத்துவமனைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளதால் மக்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இந்த சாலை மறியல் உள்ளது என்று கூறியதுடன் சாலை மறியல் செய்யும் விவசாயிகளை அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்துமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவிலேயே மிகவும் அதிகமான விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நிலைமை மிகவும் படுமோசமாக உள்ளதை கண்டு சிறிதும் கவலைப்படாத உயர் நீதிமன்றம், நாக்பூர் விமான நிலையத்திற்கு செல்வதில் மேட்டுகுடிகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் விவசாயிகளின் இந்த சாலை மறியலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று துடிக்கிறது. இதுதான் வர்க்கப் பாசம் என்பது.
ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. மாறாக, எங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று கூறிவிட்டனர். அப்படி சிறையில் அடைத்து வைப்பதற்கான ஏற்பாடுகள் உங்களிடம் உள்ளதா என்று அரசை பார்த்து கேள்வி கேட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை கைது செய்து அடைப்பதற்கான சிறை எங்கே இருக்கிறது? அப்படி அடைத்து வைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்னும் நிலையில் அப்படி அடைப்பதனால் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மக்களிடம் ஏற்படப் போகும் மனக் கொதிப்பை நினைத்தும் மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசு கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.
படிக்க:
♦ காஷ்மீர் விவசாயத்தை நாசமாக்கிய இயற்கை பேரழிவு! கண்டுகொள்ளாத பாஜக அரசு!
♦ பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தலேவால் உயிரைப் பறிக்கத் துடிக்கும் பாசிச மோடி அரசு!
இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ‘விவசாயிகள் கலந்து கொண்டனர்’, ‘50,000 விவசாயிகள் கலந்து கொண்டனர்’, ‘ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்’ … என்று பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் அத்தனை செய்திகளிலும் தேசிய நெடுஞ்சாலை முற்றுமுழுதாக விவசாயிகளால் முடக்கப்பட்டுள்ளது என்றும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய போராட்டம் இரண்டு நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து ஆங்கில இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய செய்தித்தாள்களில் செய்திகள் வெளி வந்ததாக தெரியவில்லை. அதேபோன்று சன் டிவி, புதிய தலைமுறை போன்ற தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளிலும், என்டிடிவி, இந்தியா டுடே உள்ளிட்ட இந்தி, ஆங்கில ஊடகங்களும் இந்த போராட்ட செய்திகளுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை.
இந்திய நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன் சுமைக்கும், தற்கொலைக்கும், கொடிய வறுமைக்கும் காரணமான பாஜகவிற்கும் விவசாயத்தில் கால் பதித்து கொள்ளை லாபம் அடிக்க துடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் விசுவாசமாக இந்தியாவின் முக்கிய செய்தி ஊடகங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.
இந்த நிலையில் இந்த விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தைப் பற்றிய செய்தியை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்து குரல் கொடுப்பதும் இந்திய மக்கள் அனைவரின் கடமை என்பதையும் உணர வேண்டும்.
– குமரன்
 
                 
        
மகாராஷ்டிராவில் வெடித்த விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும் !
கடந்த இரண்டு நாட்களாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் திரண்டு தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மாட்டுவண்டி நிறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது அதேபோல் குறுக்கு வழியையும் மகாராஷ்டிரா காவல்துறை ஏற்படுத்தியது அதையும் விவசாயிகள் தடுத்துள்ளார்கள் குறிப்பாக விவசாயிகளுடைய கோரிக்கை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டு வருகிறார்கள் இந்த போராட்டத்தை அஞ்சி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மகாராஷ்டிரா முதல்வர் கூறுகிறார் ஆனால் விவசாயிகள் நாங்கள் போராட்டம் இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் இல்லையென்றால் ரயில் மறியல் செய்வோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள் போர்குணத்தோடு போராடி வருகிறார்கள் விவசாயிகள் போராட்டத்தை கண்டு அஞ்சிய மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் புற்றுநோய் மருத்துவமனைக்கு செல்லும் வழி என்பதால் விவசாயிகளை கைது செய்ய வேண்டுமென உத்தரவு இட்டது இந்த உத்தரவுக்கு விவசாயிகள் அஞ்சவில்லை லட்சக்கணக்கான விவசாயிகளை அடைப்பதற்கு உங்களிடம் சிறை உள்ளதா ?என்று கேள்வி எழுப்பு உள்ளனர்கள் இந்த செய்தி எந்த பத்திரிகை ஊடகங்களிலும் பெருசாக பேசப்படவில்லை போராட்டத்தை பீகார் சன் சக்தி என்ற அமைப்பு வழி நடத்துகிறது விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும் வாழ்த்துக்கள்