இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரமலான் மாத நோன்பின் முடிவைக் குறிக்கும் ஈத் திருநாளில் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் (Burhanpur) மாநகரின் மலிவாடா பகுதியில் கலவரத்தைத் தூண்ட பாரதீய ஜனதா கட்சியினர் செய்த முயற்சியை அந்த நகரின் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு முறியடித்துள்ளனர்.
உள்ளூர் பாஜக தலைவர் பிரஹலாத் சவுகானின் மருமகனான சதீஷ் சௌஹான் என்ற சங்கி கடந்த மே 2ஆம் தேதியன்று மாலை 6 லிருந்து 8 மணியளவில் மலிவாடாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்த ஹனுமான் சிலையையும் ராமர் சிலையையும் சேதப்படுத்தியுள்ளான்.
சிலைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்ட பொதுமக்கள் இரவு 8 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததுடன் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். விரைந்து வந்த காவல்துறை அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை ஆராயத் தொடங்கியதுடன் நான்கு குழுக்களை அமைத்து விசாரணை நடத்தியது.
இந்த சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வதந்திகள் தீயாய் பரவ தொடங்கியுள்ள நிலையில், அங்கு விரைந்த வந்த உள்ளூர் பாஜக தலைவரான அமித் வருடே நாச வேலைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று பேசத் தொடங்கியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என்று ஒரு மூத்த போலீஸ்காரர் அவரிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் போட்ட காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த நாச வேலையில் ஈடுபட்டதுஉள்ளூர் பாஜக தலைவர் பிரஹலாத் சவுகானின் மருமகனான சதீஷ் சௌஹான் என்ற சங்கிதான் என்பதை கண்டுபிடித்து அதிகாலை ஒரு மணிக்கு அவரை கைது செய்து விட்டனர்.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே நாச வேலையில் ஈடுபட்டவரை கைது செய்ததுடன் ஈத் தினத்தில் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் சிலைகளை சேதப்படுத்திய நபரை கைது செய்துள்ளது குறித்து புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் காவல்துறை செய்தியும் வெளியிட்டதால் ஒரு பெரும் கலவரம் மூழ்வது தடுக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டில்” பாலாஜி மேளா”வில் அனுமனின் தேரோட்டத்தின் போது நடந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்; 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் 60க்கும் மேற்பட்ட கடைகள் தீவைக்கப்பட்டன. இந்த ரத்தக்களறியை மறக்காத அந்தப் பகுதியின் பொதுமக்கள், மீண்டும் இம்மாதிரியான கலவரம் நடந்து விடக்கூடாது, அதைத் தடுத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் விரைந்து செயல்பட்டு உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
மக்களின் முன் முயற்சி காரணமாக கலவரம் நடக்கவிடாமல் தடுக்க உள்ளூர் போலீஸும் நிர்பந்தத்திற்கு உள்ளாகியது. இதனால் சதிச் செயலில் ஈடுபட்ட பாஜகவினரை உடனடியாக கைது செய்தது. மக்கள் விழிப்புடன் இருந்தால் பாரதிய ஜனதா கட்சியின் நாசகார செயல்களை தடுக்க முடியும் என்பதுடன் போலீசை நிர்பந்தம் செய்து சங்கிகளின் கலவரம் செய்யும் முயற்சியை தடுத்துவிட முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி துலக்கமாக நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
இம்மாதிரியான விழிப்புணர்வு, இந்தியா முழுமைக்கும் பற்றிப் படர வேண்டும். சங்கிகளின் ரத்த வெறியாட்ட முன்னெடுப்பு முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
பாலன்
செய்தி ஆதாரம்:The wire