கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஸ்ரீமதி ஜூலை மாதம் 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த வழக்கில், அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டு கைதான 5 பேருக்கும் ஆகஸ்டு 26 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் வழங்கியதை விட கொடுமையானது, அதற்காக நீதிமன்றம் சொன்ன காரணம். அது மிகவும் அபத்தமானது, அபாயகரமானது. தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை என்று பள்ளி நிர்வாகத் தரப்பு கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டதோடு, “மாணவியைப் படி என்று சொன்னதாலேயே தற்கொலை செய்து கொண்டார் என்றும், இது பாலியல் வன்கொடுமையோ, கொலையோ கிடையாது’ என்றும் ஜாமீன் விசாரணை வரம்பை மீறி, குற்றவாளிகளை குற்றங்களிலிருந்து விடுவிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து பிணை வழங்கியுள்ளார் நீதிபதி.
அதே வழக்கில், மாணவியின் இறப்பிற்குப் பிறகு நடந்த கலவரத்தை வைத்து, அப்பாவி பொது மக்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதைப் பற்றி கவலை கொள்ளாததோடு, மாணவியின் மரணத்தில் உள்ள பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வர வீடியோக்கள், செய்திகள் மூலம் புலனாய்வு செய்திகளை வெளியிட்ட யூ டியூப் சேனல்கள், சமூக ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட ஒரு பள்ளியின் நிர்வாகிகள் மீது ஏற்படும் கரிசனம், அப்பாவி பொதுமக்கள் துன்புறுத்தப்படும் போது ஏற்படுவதில்லை. மக்கள் மீதான நீதிமன்றங்களின் பார்வையைப் புரிந்து கொள்ள இது ஒரு சமீபத்திய உதாரணம்.
இந்தியாவில் மக்கள் மீதான நீதிமன்றங்களின் வெறுப்பு வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கிறது என்றாலும், 2014-ல் மோடி பதவியேற்ற பிறகு, இந்துத்துவ அடியாட்களால் நீதித்துறை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, நீதிமன்றங்கள் இந்துத்துவ பாசிசத்தையும், கார்ப்பரேட் நலன்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் சட்டபூர்வமாக நிலைநாட்டுவதற்கான அமைப்பாக மாறி நிற்கிறது.

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவர வழக்கு, சோராபுதீன் ஷேக் வழக்கு, அயோத்தி கோயில் தீர்ப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு, சிதம்பரம் கோயில் தீர்ப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகக் கோரிய வழக்கு போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் அப்பட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பார்ப்பன பாசிசத்திற்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தது. பல வழக்குகளில் இந்துமதவெறி குற்றவாளிகளை விடுவித்தது.
2018 ஜனவரியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்த பீமாகோரோகான் கலவரத்தை ஒட்டி சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் என 16 பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் மோடியைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சுமத்தி பிணையே தரமால் மறுத்தும், உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்காமலும் சிறையிலேயே சித்திரவதை செய்து கொல்ல முயற்சித்து வருகிறது. இதில், சிறைக் கொடுமைகளைத் தாங்காமல், பழங்குடி மக்களுக்காகப் போராடிய ஸ்டேன்ஸ் சாமி சிறையிலேயே கொல்லப்பட்டார்.
அதே போல், 2002 குஜராத் கலவரத்தில், காங்கிரசு எம்.எல்.ஏ. இர்பான் ஜாஃப்ரி. இந்துமத பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு, பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்ளிட்டு குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடிவரும் மனித உரிமை வழக்கறிஞரான தீஸ்தா செதல்வாத், மேற்படி வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலங்களை வைத்தே, மோடி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து 2022 ஜூனில் கைது செய்தது. தனது பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு செப்-3 அன்று ஜாமீன் வழங்கியது.
மேலும், குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு-வை கூட்டுப் பாலியல் செய்தும் ,அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற 11 இந்துமதவறி பயங்கரவாதிகளை தண்டனை முடியும் முன்னரே விடுவித்துள்ளது. இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தால், தொடுத்தவர்களையே கைது செய்யவும், ஒரு பெண்ணை கூட்டுப்பாலியல் செய்தும், அப்பெண்ணின் குடும்பத்தினர் 7 பேரை அப்பெண்ணின் கண்ணெதிரேயே கொன்ற கொடூரர்களான மதவெறியர்களை தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுவிக்கலாம் எனவும், இந்திய வகை பாசிச நடைமுறைகளை நீதிமன்றம் தொடங்கி வைத்துள்ளது.
மக்களுக்கு எதிராக செயல்படும் இந்துத்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அவர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும், மனித உரிமைப் போராளிகளை சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது.
சத்தீஷ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் தண்டகாரண்யா காடுகளில் கார்ப்பரேட்டுக்களின் கனிம வள கொள்ளைகாக பசுமை வேட்டை என்ற பெயரில் மக்களை காடுகளிலிருந்து வெளியேற்றவும், எதிர்ப்பவர்களைக் கொல்லவும் அரசால் உருவாக்கப்பட்ட சல்வாஜூடும் என்ற பயங்கரவாத படையை எதிர்த்ததற்காக, பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள 90 சதவீதம் ஊனமுற்றவரான பேராசிரியர் சாய்பாபா, சக்கர நாற்காலியின் உதவியின்றி நகர முடியாது என்ற நிலையில் இருக்கும் போதிலும், பீமா கோரோகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும், 83 வயதான ஸ்டேன் ஸ்வாமிக்கு நிற்கவோ, உணவு உண்ணவோ, கழிவறைக்குச் செல்லவோ முடியாமல் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் அவர்களின் தாய் மற்றும் கவிஞர் சுதிர் தாவலே அவர்களின் சகோதரன் ஆகியோரின் இறப்பிற்கும் கூட செல்வதற்கும் பிணை மறுத்து சட்டபூர்வ பாசிசத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், மக்களுக்காகப் போராடும் நாடறிந்த சமூக செயற்பாட்டாளர்களின் தனிமனித சுதந்திரத்தை தனது பாசிச நடவடிக்கைகளால் மறுக்கும் உச்சநீதிமன்றம், அதே வேளையில் இந்துத்துவ அடிவருடிகளை விடுவிப்பதற்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் பாதுகாவலனாக நிற்கும் என்பதை தனது நடவடிக்கைகள் மூலம் பறைசாற்றுகிறது.
ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவப் பிரச்சாரகனான ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, அன்வாய் நாயக் என்பவரைத் தற்கொலைக்குத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் 2020 நவம்பர் 4-ல் கைது செய்யப்பட்டார். ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்னாப். விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு ஜாமீன் பெறுமாறும், 4 நாட்களுக்குள் விசாரிக்க வேண்டும் எனவும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், அர்னாப் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்தார். விசாரணை நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அதே வழக்கை உச்சநீதிமன்றம் எடுக்கக் கூடாது என்ற மரபை மீறி நவம்பர் 11 அன்றே அவசர வழக்கு போல பாவித்து இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கில் தான் மேற்படி ‘தனிமனித சுதந்திரத்தைப்’ பற்றி உச்சநீதிமன்றம் கூச்சலிட்டது. நாங்கள் இன்று இந்த வழக்கில் தலையிடாவிட்டால் அழிவுப் பாதையின் மேல் நடந்திருப்போம் என்றது உச்சநீதிமன்றம்.
ஏதோ மலத்தை மிதித்த காலை உடனடியாக அதன் மீதிருந்து எடுப்பது போல, அர்னாப் கோஸ்வாமி சிறையில் இருப்பதைப் பொறுக்க முடியாமல், அவரது ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரித்து அவரை விடுதலை செய்கிறது. ஆனால், மேற்படி பீமா கோரோகான் வழக்கில் 60 வயதாகும் சுதா பரத்வாஜ் 70 முறை ஜாமீன் கேட்டு மனு செய்தும் நிராகரிக்கப்பட்டது. இதில் 40 முறை அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தாமல், அவருக்கு வெளி உலகத்தைக் கூட காட்டக் கூடாது என திட்டமிட்டு செயல்பட்டது போலிசும் பாசிச நீதிமன்றமும்.
இதையும் படியுங்கள் : உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் உளவுபார்ப்பு: இந்திய தேர்தல் ஜனநாயகத் தூண்களின் மீதான தாக்குதல்!
கரடியே காறித் துப்பிய கதையாக, 2018 ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகமே இல்லை என்றும், வழக்குகளை ஒதுக்குவதில், நிர்வாக நடைமுறைகளிலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மரபுகளுக்கு உட்பட்டு செயல்படுவதில்லை என்றும் நீதிபதிகளே குற்றம் சுமத்தி செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இதில், சோராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா ஒவ்வொரு விசாரணையின் போதும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்தோடு, அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தையும் குறிப்பிடத் தவறவில்லை. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கொகோய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் தான் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இந்திய நீதித்துறையின் யோக்கியதையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினர்.
இப்போது “தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், தனது வழக்கறிஞர் தொழிலை இந்துத்துவ மத வெறி பாசிஸ்டுகளை காப்பற்றுவதற்காகவே நடத்தி வந்தவர்.நாடறிந்த பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளின் சார்பாக ஆஜராகி உள்ளார். குறிப்பாக, 1994 பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அப்போதைய பாஜக தலைவரான கல்யாண் சிங்கிற்காக ஆஜராகியுள்ளார். 2008-ல் நடிகர் சல்மான்கான் மான் வேட்டையாடிய வழக்கில் அவருக்காகவும், சோராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவிற்காகவும், 2004-ல் 2ஜி அலைக்கற்றை வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராகவும் ஆஜராகி உள்ளார்.
இதற்குப் பரிசாகத் தான், உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிசு உயர்வு – இல்லை பதவி உயர்வு கிடைத்துள்ளது” என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இப்போதும் கூட, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட பிறகு, குஜராத் கலவர வழக்குகளில் நிலுவையிலுள்ள 11 மனுக்களை பயனற்றதாகி விட்டதால் அகற்றப்படுகிறது என்று சொல்லி, யு.யு.லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்ததன் மூலம் நீதிமன்றம் பார்ப்பன பாசிச மன்றம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
இந்த யு.யு,லலித் தான், 2021 ஜனவரியில் பெண்களை ஆடைக்கு மேல் தொட்டாலோ, தடவினாலோ பாலியல் குற்றமாகாது என நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் இழிபுகழ் பெற்ற தீர்ப்பை சரி என்று சொல்லி 2021 நவம்பரில், உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்கிய ‘கண்ணியவான’.
இப்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முதல், உள்ளூர் நீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரும் அப்பட்டமாக சாதாரண மக்களுக்கு எதிராக நிற்கின்றனர். ஒரு தொழிலாளி, தன் மீதான நிறுவனத்தின் பொய் வழக்கை, ஆண்டுக்கணக்கில் நடத்தி, தனது வாழ்வாதாரங்களை இழந்து போராடி வெற்றி பெற்றால் அந்த நீதிமன்றத் தீர்ப்பை முதலாளிகள் மயிருக்கும் மதிப்பதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தாத நிறுவனத்திற்கு எதிராகப் போராடினால், உடனே போலிசு வந்து பாதிக்கப்பட்ட தொழிலாளியையே குற்றவாளியாக்கி கைது செய்கிறது.ஆனால், இன்னமும் சாதாரண இந்திய குடிமகனின் கடைசி புகலிடம் நீதிமன்றங்கள் தான் என மக்களை நம்பச் சொல்கிறது.
ஸ்டெர்லைட் போராட்டம் ஜல்லிக்கட்டு, நீட் எதிர்ப்பு, சேலம் எட்டு வழிச்சாலை, மீத்தேன் எதிர்ப்பு, தொழிலாளர் சட்டத் திருத்தம், ஸ்ரீமதி மரணம் வரை தனது ஒவ்வொரு அசைவிலும் சாதாரண மக்கள் மீது பாசிசத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன அரசும், போலிசும். அதற்கு ஒத்துழைப்பாக அதற்கு கொஞ்சமும் குறைவின்றி தன் பங்கிற்கு அந்த பாசிசத்தையே நீதியாக்குகின்றன நீதிமன்றங்கள்.
“ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தங்களது நோக்கங்களுக்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்த நினைக்கின்றனர். நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டுள்ளன.” என்று அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா பேசியுள்ளார்.
நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கூட விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் அரசியலமைப்புச் சட்டம் தான் உயர்ந்தது,இது அனைவரும் சமமான உரிமை வழங்குகிறது,ஜனநாயகத்தை பாதுகாக்கிறது என்ற மாயை உருவாக்க முயற்சிக்கின்றனர். உண்மையில், இந்தியாவில் நிலவும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை தாங்கி பிடிக்கும் வேலையைத்தான் அரசியலமைப்பு சட்டம் செய்து வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்புக்களையோ, நீதிபதிகளின் நடத்தைகளையோ கேள்வி கேட்க முடியாதபடி அவற்றுக்கு ஒரு புனிதம் கற்பிக்கப்படுகிறது. அத்துடன் அந்தப் புனிதமும் தீர்ப்புக்கள் மூலம் இன்று மெல்ல மெல்ல சட்டமாகிறது. நீதிமன்ற அவமதிப்புக்கள் என்ற வாய்ப்பூட்டைத் தாண்டி அவை சர்வாதிகாரமாகவும், பாசிசமாகவும் மக்கள் மீது பலவந்தமாக இறக்கப்படுகிறது.
உதாரணமாக, ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டம், இந்திய மக்களின் வாழ்வுரிமைகளை மறுப்பதோடு, சிறுபான்மை மக்களின் குடியுரிமையையே மறுத்து அவர்களை அகதிகளாக்குகிறது. இந்நாட்டின் வரலாற்றில், வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த, இந்த நாட்டை தனது சொந்த நாடாக எண்ணி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றுவதை தங்களது பாசிசமயமான தீர்ப்புக்களின் மூலம், நீதிமன்றங்களும் அங்கீகரிக்கிறது.
இதையும் படியுங்கள் : பில்கிஸ் பானு வழக்கு: பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி – அப்பட்டமாக அரங்கேறும் மனுநீதி!
இந்து–இந்தி–இந்தியா என்ற ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கிய நடவடிக்கை நம் நாட்டை பின்னோக்கிய பயணத்தில் கொண்டு செல்கிறது.
பார்ப்பன சனாதனப் பேரரசை அமைப்பதற்கான 750 பக்கங்களைக் கொண்ட இந்துராஷ்ட்ர சட்டம் பார்ப்பன சாமியார்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை வருகின்ற 2023 காசியில் நடக்கவிருக்கும் மகாமேளாவில் வெளியிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இசுலாமிய கிறித்தவர்கள் வாக்குரிமையற்ற, குடியுரிமையற்ற இரண்டாம் தரக் குடிமக்களாக அறிவித்துள்ள இத்தொகுப்பு ஆர்.எஸ்.எஸ்.-ன் சட்டமாகும்.முழு சங்கியான யு.யு.லலித்-தின் தலைமை நீதிபதி பதவியின் 64 நாட்களுக்கான பணிக்காலத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கு, முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு போன்ற அடிப்படையான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை எடுப்பதாக அறிவித்துள்ளார்.
பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரியாக மக்களுக்கும் மேலாக தன்னை கடவுளின் அவதாரமாகக் கருதிக் கொண்டு தான் சொல்வதற்கு கேள்விக்கிடமற்ற வகையில் மக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்ற பாசிசத் தன்மையில், நீதிமன்றம் இருக்கும் போது, இந்து ராஷ்ட்ர சட்டம், யு.யு.லலித் போன்ற நீதிபதிகளால் எப்போது வேண்டுமானாலும் திணிக்கப்படலாம். நீதித்துறையை கார்ப்பரேட் காவி பாசிசம் முழுமையாக விழுங்கி விட்டது.
நாம் இருண்ட காலத்திற்கான பாதையின் துவக்க விளிம்பில் நிற்கிறோம். இந்தப் பாதையை அடைத்து விட்டு வெளிச்சத்திற்கு வர வேண்டும். எனில் கார்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டும். மக்களுக்கான நல அரசு அமைத்து, மக்கள் நலன் கொண்ட அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட மக்கள் நீதிமன்றங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.
தென் அமெரிக்க நாடான சிலியில், அடிப்படைவாதம், சர்வாதிகார அடக்குமுறையின் 50 ஆண்டு கால ஆட்சியிலிருந்து விடுதலை அடைவதற்காக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான தேர்தல் கடந்த நவம்பரில் நடத்தியுள்ளது. நம் இந்தியாவிலும் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தலை நடத்துவோம்! கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! மக்கள் நீதிமன்றங்களை கட்டியமைப்போம்!
இந்தப் பக்கம் காட்டுமிராண்டிகளின் இராம ராஜ்ஜியம்; அந்தப்பக்கம் உண்மையான ஜனநாயக கூட்டரசு. இவை இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும்படி ‘நீதி’பதிகள் மக்களை நிர்பந்திக்கிறார்கள். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும்.
- இரணியன்
புதிய ஜனநாயகம்
செப்டம்பர் மாத இதழ்
படியுங்கள்
பரப்புங்கள்








