தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) தயாரித்து வழங்கிய எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்த “நீதித்துறையில் ஊழல்” என்றப் பகுதி சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்ததை அடுத்து, இதைத் தாமாக முன்வந்து வழக்காக ஏற்ற நீதிமன்றம் இந்தப் புத்தகத்தை தடை செய்யும் உத்தரவை பிறப்பித்தது.
இது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் “சர்ச்சைக்குரிய பாடப் புத்தகத்திற்கு தடை- உச்ச நீதிமன்றம் அதிரடி” என்று தலைப்பிட்டு, உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்கி இருப்பது போல செய்தி வெளியிட்டனர். மற்ற எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதைப் போலவே நீதித்துறையிலும் ஊழல் மிகுந்து காணப்படுவது உண்மைதானே!
அவ்வப்போது கையும் களவுமாக சிக்கிய நீதிபதிகளையும், முறைகேடான நீதிமன்றங்களின் செயல்பாடுகளையும் நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனது வீட்டில் பண மூட்டைகளை பதுக்கி வைத்திருந்து, தீ விபத்து ஏற்பட்டதில் அதில் எரிந்து போன பணக்கட்டுகளையும் பார்த்தோம்.
இதற்கு முன்பும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் என் சுக்லா மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி வி ராமசாமி போன்றவர்கள் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்தான். இவை தவிர மாவட்ட நீதிமன்றங்களில் பல நீதிபதிகள் மீது இப்படியான புகார்கள் எழுந்துள்ளன. ஆக இப்படி சமூகத்தில் நடக்கும் ஒன்றைக் குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற செய்வது எப்படிக் குற்றமாகும்?
ஆனாலும் நமக்கே ஒரு புறம் ஆச்சரியமாகத்தான் உள்ளது. பாசிச பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாடப் புத்தகங்களில் வரலாற்றைத் திரித்து எழுதுவதும், புராண, இதிகாசக் குப்பைகளை புகுத்துவதும் ஒரு நிகழ்ச்சி போக்காக இருந்து வரும் நிலையில், எப்படி இது போன்ற பாடம் புத்தகத்தில் வந்தது என்பது அதிசயம் தான். அந்த நேர்மையான மனிதர்களும் இப்போது நிச்சயமாக தண்டிக்கப்பட்டு இருப்பார்கள்.
மன்னிப்பு கோரிய பிறகும் கோபம் தணியாத ‘கோமகன்’!
உச்சநீதிமன்றம் தடை செய்த அந்த எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், “நமது சமூகத்தில் நீதித்துறையில் பங்கு” என்ற பாடத்தில் நீதிமன்றங்களின் நடைமுறை விசயங்களைத் தாண்டி, நீதித்துறையில் நடக்கும் ஊழல் குறித்தும், லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளது குறித்தும் எழுதப்பட்டிருந்தது. மேலும் “நீதித்துறையில் நடைபெறும் ஊழல் சம்பவங்கள் பொதுமக்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி ஆர் கவாய் கடந்த ஆண்டு ஜூலையில் தெரிவித்திருந்த கருத்தும் அதில் இடம்பெற்றிருந்தது.
இது குறித்த வழக்கு பிப்ரவரி 26 அன்று விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விசயத்தில் அரசு தீவிரமாக செயல்பட்டு உள்ளதாகவும், அந்தப் பாடம் இடம்பெற காரணமான இரண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இந்த விசயத்தில் நீதிமன்றத்தில் மன்னிப்பும் கோரினார்.
NCERT தரப்பில், “அச்சடிக்கப்பட்ட 2.25 லட்சம் பிரதிகளை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். இது தற்செயலாக நிகழ்ந்த தவறு. அதற்காக மன்னிப்பு கோருகிறோம். அந்தப் பாடப்பகுதி திருத்தி எழுதப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. இப்படி மன்னிப்பு கோரிய பிறகும், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகும், தலைமை நீதிபதி சூரியகாந்தின் கோபம் தணியவில்லை. “இதற்குக் காரணமானவர்களின் தலைகள் உருள வேண்டும். அதுவரை இந்த வழக்கை நான் முடிக்க மாட்டேன்” என சூளுரைத்துள்ளார்.
மேலும் நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ அல்லது குறை மதிப்புக்கு உட்படுத்தவோ உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார். “இது போன்ற கருத்துக்களால் நீதித்துறை ரத்தம் சிந்துகிறது” என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். நீதித்துறை குறித்து, அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பொதுவெளியில், அதிலும் முக்கியமாக நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் 4 முக்கிய நீதிபதிகள் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றம் சாட்டினர். உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக முறைப்படி எதுவும் நடக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினர். இந்த நிகழ்வு நீதித்துறையின் மீதான நேர்மையை அவதூறு செய்கிறதா? அல்லது குறைமதிப்புக்கு உட்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்தீர்களா கனம் நீதிபதி அவர்களே?
நீதிமன்றம் ஒரு புத்தகத்தை தடை செய்ய முடியுமா?
“NCERT வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் அரசு உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதே போன்ற ஒரு வழக்கு தமிழ்நாட்டிலும் நடந்தது. மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விசயத்தை அரசியலாக்க இந்துத்துவா அமைப்பினர் திட்டம் போட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக கச்சம் வரிந்து கட்டிக்கொண்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆடுகிற ஆட்டத்தை பார்த்துக் கொண்டுள்ளோம். அவரது இந்துத்துவ ஆதரவு மனநிலையை, குறிப்பாக அது அவரது தீர்ப்புகளில் வெளிப்படுவதை அம்பலப் படுத்தும் விதமாக கீழைக்காற்று பதிப்பகம் புத்தகம் ஒன்றை வெளியிட இருந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா அமர்வு, இந்தப் புத்தகத்தை விற்பதற்கு தடை விதித்தும், பிரதிகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.
படிக்க: நூலுக்குத் தடை: கழுத்தை நெரிக்கும் காவிகளும் நீதிமன்றமும்!
புத்தகத்தை பார்க்கவும் இல்லை, படிக்கவும் இல்லை, வெறும் அட்டைப்பட விளம்பரத்தை பார்த்தே அலறியது சங்கி கும்பல். இப்படி தடை செய்யும் அதிகாரம் அரசியலமைப்பில் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் யாருமே நீதிமன்றத்தில் இந்தக் கோணத்தில் கேள்வியே எழுப்பவில்லை. மாறாக நீதிமன்றத்தின் கருத்துடன் அனைவருமே உடன்பட்டு இருந்தனர்.
சமீப காலங்களில் இது போன்ற பிரச்சனைகளில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு உள்ளதா, இல்லையா என்ற கேள்வியை நீதிபதிகள் பரிசீலனை செய்வதாகவே தெரியவில்லை. இருப்பினும் இரண்டு காரணங்களுக்காக இந்த கேள்வி முக்கியமானதாகிறது. ஒன்று மற்ற அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களைப் போலவே நீதித்துறைக்கும் வரம்பற்ற அதிகாரம் என்பது இல்லை. அரசியலமைப்பு நீதித்துறை அதிகாரத்தின் மீது எத்தகைய கட்டுப்பாடுகளை வைத்துள்ளது என்பதைத் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
படிக்க: நீதி வழங்குவதில் 86 ஆம் இடத்தில் உள்ள இந்திய நீதித்துறை! கோர்ட்டுகளில் நீதி கிடைக்குமா?
இரண்டாவது ஒரு புத்தகத்தைத் தடை செய்வது குறித்து தீர்மானிப்பது உண்மையில் இந்த வழக்கின் தன்மையாக இருக்கவில்லை. ஒரு ஜனநாயக சமூகத்தில் இது போன்ற தணிக்கை அதிகாரம் என்பது பரந்த அளவிலானது. அதை எப்போது, எந்த சூழலில், யாரால் பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்வது முக்கியமானதாகும்.
2016 ஆம் ஆண்டு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது இருந்தே இதுபோன்ற கருத்து மற்றும் பேச்சு போன்ற சுதந்திரங்களில் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிடவோ, கட்டுப்படுத்தவோ அல்லது தணிக்கை செய்யவோ முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கான பதில் இல்லை என்பதே ஆகும்.
அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன?
அரசியலமைப்பின் பிரிவு 19 (2) “அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் மூலம் மட்டுமே பேச்சு மற்றும் கருத்து மீதான கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியும். நீதித்துறை முடிவுகள் மூலம் சட்டத்தை இயற்ற முடியாது. அரசின் உரிமைகள் குறித்து நீதித்துறை முடிவு செய்ய இயலாது” என்று கூறுகிறது. இதன் காரணமாக ஒரு கருத்தை நேரடியாக கட்டுப்படுத்துவதோ, புத்தகங்களைத் தடை செய்வதோ, திரைப்படங்களை தணிக்கை செய்வதோ நீடித்துறையின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதே அரசியலமைப்பில் உள்ள வரையறையாகும்.
அரசியலமைப்பின் பிரிவு 19 (2) “அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் மூலம் மட்டுமே பேச்சு மற்றும் கருத்து மீதான கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியும். நீதித்துறை முடிவுகள் மூலம் சட்டத்தை இயற்ற முடியாது. அரசின் உரிமைகள் குறித்து நீதித்துறை முடிவு செய்ய இயலாது” என்று கூறுகிறது.
கரக்சிங் எதிர் உ.பி அரசு வழக்கில், “அரசு ஒரு சட்டம் இயற்றினால் அது அரசியலமைப்பின் பிரிவு 19 (2) இன் அர்த்தத்திற்கு நியாயமாக உட்பட்டு, அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இப்படி அரசு ஒரு சட்டத்தை இயற்றிய பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட குடிமக்கள், அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கருதினால் நீதிமன்றத்தை அணுகலாம்.
அப்படி இல்லாமல் நேரடி தணிக்கையில் ஈடுபடுவதன் மூலம் நீதிமன்றம் இந்த இரண்டு படிகளையும் மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தை முழுவதுமாக புறக்கணிக்கிறது. இதன் மூலம் தமது அதிகார எல்லைகளை நீதிமன்றம் மீறுகிறது. நீதிபதி ஜி.ஆர் சாமிநாதனின் செயல்பாடுகளிலும் இது அப்பட்டமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே புத்தகங்களை தடைசெய்யும் நீதித்துறையின் உத்தரவுகள் அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டவை அல்ல. சட்டப்படியே அவை தவறானதாகும். ‘வானளாவிய’ அதிகாரம் பொருந்திய நீதிமன்ற நடைமுறையை விமர்சிப்பதற்கும், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் போது அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கும் இதுவே காரணமாகும்.
மாநில அரசுகளோ, ஒன்றிய அரசோ ஏதாவது காரணம் கூறி ஒரு புத்தகத்தை தடை செய்தாலும், கருத்துரிமை எனும் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் அந்தத் தடையை நீக்க உத்தரவு போட்ட நீதிமன்றங்கள், இப்போது தாமே புத்தகங்களுக்கு தடை போடும் நடைமுறைக்கு வந்துள்ளன. பாசிச பாஜக அரசை வீழ்த்தி ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதே இத்தகையப் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்க முடியும்.
- குரு
மூலம்: https://indconlawphil.wordpress.com/2026/02/26/can-the-supreme-court-ban-a-book/






