
அயோத்தி ராமர் கோவில் மெகா ஊழல் குறித்து கடந்த ஜூன் 18 அன்று முழுமையாக அம்பலப்படுத்தி தோழர் குமரன் எழுதிய கட்டுரை ஒன்று இதே “மக்கள் அதிகாரம்” வலைத்தளத்தில் வெளியாகி இருந்ததை அனைவரும் படித்திருப்பீர்கள். எனவே அதனுள் சென்று கூடுதலாக நாம் தற்போது விளக்கப் போவதில்லை.
‘தமிழ்நாட்டில் இந்துக் கோவில்கள் அனைத்தையும் இந்து சமய அறநிலையத் துறையினரிடமிருந்து மீட்டு இந்துக்களிடம் ஒப்படை’ – என்ற முழக்கத்தை தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – இந்துத்துவ சங்கிகள் கும்பல் நீண்ட காலமாக ஊளையிட்டு வருகின்றன. அதற்கு ஒன்றிய அளவில் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் நேசக்கரம் நீட்டுகின்றன. ஆனால் சாதியப் படிநிலை களைக் கொடூரமாகக் கொண்டுள்ள இந்து மதத்தில், ‘எந்த இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்?’ – என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் அவர்கள் கோருவது பார்ப்பன இந்துக்களிடமும் மற்றும் அவர்களுக்கு இசைந்து போகின்ற ராமர் கோவில் மெகா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள ‘யோக்கிய சிகாமணிகள் – அறக்கட்டளையினர்’ போன்றோரிடம் பொறுக்கித் தின்ன – ஊழல் புரிய ஏதுவான நபர்களிடம் ஒப்படை என்பதே இவர்களின் கோரிக்கையின் சாரப் பொருளாகும்.
காலம் தாழ்த்தி விசாரித்தால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது…!’ உநீம அடாவடி…!
கடந்த ஜூன் 18 தோழர் குமரன் கட்டுரையில் கூட ரூ.200 கோடி அளவில் தான் அயோத்தி ராமர் கோவில் வழக்கு குறித்து குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் அதன்பின் வந்துள்ள செய்திகள் ‘பக்தகோடிகளை’ மட்டுமின்றி அனைவரையும் மயக்கமடையச் செய்கின்றன. ஆம்! உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ராமர் பக்தர்கள் மூலமாக பணம், தங்கம், வெள்ளி, இன்னும் மிக மிக விலை உயர்ந்த பொருட்கள் என்ற வகையில் காணிக்கைகளாகவும், நன்கொடைகளாகவும் வரப்பெற்றவற்றில் ரூ.1500 கோடி வரை அயோத்தி ராமர் கோவிலில் மெகா ஊழல் நடைபெற்றுள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் நிர்வாகத்தை ”ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை” நிர்வகித்து வருகிறது. அறக்கட்டளையின் பொதுச் செயலாளராக சம்பத் ராய் என்பவரும், அறங்காவலராக அனில் மிஸ்ரா என்பவரும் பொறுப்பு வகித்து வந்துள்ளனர். ஊழல் குறித்து ‘சிறப்பு புலனாய்வுக்குழு’ (SIT) ஒன்று அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றதாம்!
இதுவரை 1) அவினாஷ் சுக்லா, 2) அனுக்கல்ப் மிஸ்ரா, 3) லவ்குஷ் மிஸ்ரா, 4) மனீஷ் குமார் யாதவ், 5) கணேஷ் பாண்டே, 6) சுபாஷ் சந்திர ஸ்ரீவஸ்தா, 7) ராமசங்கர் யாதவ் @ டின்னு யாதவ்(இவர் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராயின் ஓட்டுனராகப் பணியாற்றியவர்) மற்றும் ஒருவர் மொத்தம் 8 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனராம்.
நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ‘தார்மீகப் பொறுப்பேற்று’ ராஜினாமா செய்து கொண்டனராம். ஊழலில் இவர்களது பங்கு உறுதியாக, மிகுதியாக இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. ஆனால் அரசாங்கமோ உளவுத்துறையோ இந்த முக்கிய குற்றவாளிகளை கைது செய்வது குறித்து சிந்தித்தே பார்க்கவில்லை என்பதுதான் விந்தையிலும் விந்தை.
இந்நிலையில் தான் ‘மாநில அரசின் வழக்கு விசாரணை மெத்தனமாக ஊர்ந்து செல்கிறது; பெருமளவு ஊழல் முறைகேடுகள் தொடர்பான தற்போதைய விசாரணையில் கடுகளவும் திருப்தி இல்லை; நம்பிக்கையும் இல்லை; ஆதாரங்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை; மோசடி முறைகேடுகள் சொல்லி மாளாத அளவிற்குப் பெருமளவில் நடந்தேறியுள்ளன; எனவே, இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ மற்றும் பிற விசாரணை முகமைகளின் மூலம் விசாரணை நடத்த வேண்டும்..,’ என்று மனுதாரர் அஜய்குமார் ராய் மற்றும் இரு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். எம்.சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு ஜூன் 29 அன்று ‘கோடை விடுமுறை முழுமையாக முடிந்த பிறகு, நீதிமன்றம் வழக்கம் போல செயல்படத் தொடங்கும் போது இந்த வழக்கை விசாரித்தால் போதுமானது; இதில் அவசரம் காட்ட வேண்டிய அளவிற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? அதற்குள் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது’ என்று நையாண்டி கலந்த தன்மையில் – சர்வ சாதாரணமான முறையில் கருத்துக்களைப் பதிவு செய்து வழக்கினை ஒத்தி வைத்து உள்ளனர்.
இவ்வளவு பெரிய மெகா ஊழல் குறித்த – அதுவும் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றொழித்து ரத்தக்களரியாக்கி ‘மசூதி இருந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான்’ என்று கட்டுக்கதை கட்டி, ‘தேசிய நாயகன் ராமன்’ என மக்களை நம்ப வைத்து ‘ராமர் கோயில் கட்டி விட்டால் மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்’ என்ற பொய் புனைச்சுருட்டுக்களை கட்டவிழ்த்துவிட்டு பல நூறு கோடி செலவு செய்து ராமர் கோவிலை ஆர் எஸ் எஸ் பாஜக சங் பரிவார் காவிக் கும்பல் கட்டி எழுப்பியது.
படிக்க:
♦ பாஜக நியமித்த இந்துக்களின் நிர்வாகத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் ரூ.200 கோடி ஊழல்!
♦ பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?
ஒன்றுக்கும் உதவாத வழக்குகளில் எல்லாம் கூட நீதிமன்றங்கள் அவசர வழக்காக எடுத்துக் கொள்வதும், அவசர அவசரமாக ஒரே நாளில் கூட விசாரணையை முடித்து நீதிக்கு – நியாயத்திற்குப் புறம்பான தீர்ப்புக் களை வழங்குவதும் நமது நாட்டில் சாதாரண மாக அரங்கேறுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் மற்றும் பண முதலைகள் அளித்த காணிக்கைகள், நன்கொடைகள் கடவுளின் பெயரால் கொள்ளையிடப்பட்டுள்ளது; அதற்கு மாநில ஒன்றிய அரசுகள் தார்மீக பொறுப்பேற்க தவறிவிட்டன; அல்லது இந்த கொள்ளையில் அவர்களும் பங்கேற்று உள்ளனர் என்பதை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் இவ்வளவு பெரிய விடயத்தை அவசர வழக்காக எடுக்க மாட்டேன் என நீதிமன்றம் சொல்லுமே யானால் இந்த நீதிபரிபாளன முறையில் மக்கள் எவ்விதம் நம்பிக்கை கொள்ள இயலும்?
கைது செய்யப்பட்டவர்களோ சாதாரண ஊழியர்கள்! ஆனால் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் பெரும்புள்ளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
எனவே,
- சர்வ கட்சி குழு மேற்பார்வையில், நீதிமன்ற கண்காணிப்பில், மக்கள் மன்றம் அவதானிக்கும் வகையில் உரிய விசாரணை முகமையின் மூலம் மிகச் சரியான விசாரணை எவ்வித அய்யப்பாடுகளுக்கும் இடமின்றி துரிதப் படுத்தப்படல் வேண்டும்.
- உண்மை குற்றவாளிகள் எவரும் தப்பிக்க விடப்படாமல் அனைவரும் கைது செய்யப்படல் வேண்டும். உரிய கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்!
- பாபர் மசூதியை இடித்ததிலும், ராமர் கோவிலை கட்டி எழுப்புவதில் தமது கையாளாக முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டை சாதகமாக தீர்ப்பு வழங்க செய்ததிலும், ராமர் கோவிலை கட்டி எழுப்பியதிலும் பங்கு பெற்ற மோகன் பகவத், மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட சங் பரிவார் கும்பலும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் புலன் விசாரணை அமைப்புகளும் நீதிபரிபாளன நீதிபதிகளும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
- ‘மக்கள் நாயகன் – சர்வ வல்லமை படைத்த ராமன்’ எனில் இவ்வளவு பெரிய மெகா கொள்ளை – சூரையாடல் நடப்பதை அவனால் (ராமனால்) ஏன் தடுத்து நிறுத்தப்பட முடியவில்லை என்பதை படித்த அறிவு ஜீவிகள் முதல் பாமர மக்கள் வரை புரிந்துகொள்ள முன்வர வேண்டும். அப்போது மட்டுமே நமது வாழ்வாதாரத்தின் இழி நிலைக்கு பரிகாரம் கோவில் படிக்கட்டுகளில் இல்லை என்பதையும், உற்பத்தி சார்ந்த வர்க்கங்களில் படிந்துள்ள அரசியலில் அடங்கியுள்ளது என்பதையும் உணர முடியும். அப்படிப்பட்ட புரட்சிகர இயக்கங்களில் நம்பிக்கை கொள்வதி லேயே – அரசியலில் ஈடுபட்டு பங்காற்று புரிவதிலேயே உழைக்கும் மக்களுக் கான நிரந்தரத் தீர்வு அடங்கியுள்ளது என்பதனையும் உணர முன்வர வேண்டும்! குறிப்பாக உழைக்கும் மக்கள் உணர்ந்திடல் வேண்டும்!
“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே…
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லும் மந்திரம் ஏதடா?…
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்…
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”…
-என்ற கி.பி.9 அல்லது 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் இலக்கிய மரபிலும், சித்த மருத்துவத்திலும் போற்றப்படும் பதினெண் சித்தர்களின் ஒருவரான “சிவவாக்கியர்”-ன் அறிவு சார்ந்த மேற்கண்ட வரிகளை மனத்தில் இருத்துவோம்!
இருக்கும் பொருளாதார நெருக்கடி நிலைகளில், மேற்கொண்டு இறை நம்பிக்கைகளின் வாயிலாக பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் அவலத்திலிருந்து விடுபடுவோம்!
மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபடுவோம்!
- எழில்மாறன்






