தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் ஒன்றிணைந்து மே தினத்தை ஐந்து மையங்களில் ஏற்பாடு செய்து நடத்தியது.
இதற்கு முன்னதாக 2026 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில், “பாசிச பாஜக அடிமை, அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்! மாற்றை வைத்து திமுக கூட்டணியை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்! பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த ஜனநாயக கூட்டரசு அமைக்கப் போராடுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆலை வாயிற் கூட்டங்கள், பேருந்துப் பிரச்சாரம், வீடு வீடாக பிரச்சாரம் என்று பல்வேறு வகைகளில் புரட்சிகர அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது.
தேர்தல் புறக்கணிப்பு மற்றும் பங்கேற்பு ஆகியவை இரண்டையும் நிரந்தரமாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதையும், தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்த வேண்டும் என்பதையும், குறிப்பிட்ட தருணத்தில் புறநிலையில் நிலவுகின்ற புரட்சிகர எழுச்சி வெள்ளம் வீசுவது அல்லது வடிவது ஆகியவற்றின் தன்மையைக் கொண்டும் இந்தப் போராட்ட வடிவத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாமேதை லெனின் முன்வைத்த வழிமுறையை புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இந்த தேர்தலில் பயன்படுத்தியது.
கடந்த கால அனுபவங்களில் இருந்த தவறுகளை சுயபரிசீலனையாக கற்றுக்கொண்டு, தேர்தல் காலங்களில் புரட்சிகர இயக்கங்களின் அரசியலை அதாவது கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு ஜனநாயக கூட்டரசு ஒன்றே தீர்வு என்ற மாற்று அரசியலையும், குறைந்தபட்ச செயல்திட்டத்தையும், கீழிருந்து எழுச்சியை உருவாக்குகின்ற புரட்சிகர சக்திகளான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவர்கள், பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டுச் சென்றது.

பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற காலகட்டத்தில் கூட தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று, ‘ புரட்சிகர அரசியலை’ மந்திர உச்சாடனங்கள் போல திரும்பத் திரும்பச் சொல்வது; குறுங்குழுவாத மனநிலையுடன் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்ற வரட்டுவாத தவறுகளை விமர்சனமாக முன்வைத்த போதிலும் சொற்பமான சிலர் தனக்கு பிடித்த வகையில் அதையே செய்து கொண்டிருந்தனர் என்பது தனிக் கதை.
இவ்வாறு ஏப்ரல் 23 தேர்தல் முடிந்து குறுகிய காலத்திற்குள் அதாவது ஒரு வார காலத்திற்குள்ளேயே “அதிகரித்து வரும் அடக்குமுறைகள்!, தீவிரமாகி வரும் உரிமைப் பறிப்புகள்!, மக்களை வதைக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!, ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, திருச்சி, கோவை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் அரங்கின் சார்பாகவும், மதுரை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி தேனி மாவட்டத்தில் விவசாயிகள் அரங்கின் சார்பாகவும் மே தினத்தை நடத்துவதற்கு திட்டமிட்டது.
குறுகிய காலத்திற்குள்ளேயே ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் இந்த ஐந்து மையங்களிலும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்கள் மத்தியில் மே தினத்தின் அவசியத்தைப் பற்றியும், மே தினத்தை வெறும் சடங்குத்தனமாக கொண்டாடாமல் அரசியல் போராட்ட அறைகூவலாக முன்வைத்து நடத்தியது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் ஒன்று திரட்டிய மே தினப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள், குடும்பத்தினர் ஆகியோர் பங்கெடுக்க எழுச்சிகரமான முறையில் நடந்தேறியது.
கோவையில் நூற்பாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் முதல் சிறு குறு தொழில்களில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து கோவை திருவள்ளுவர் பேருந்து நிலைய பகுதியில் பேரணி ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது வம்புக்கு வந்த ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்களின் முகத்திரையை கிழித்தெறிகின்ற வகையில் செஞ்சட்டை அணிந்த தோழர்கள் வீதிகளில் விண்ணதிர முழக்கமிட்டு மே தினத்தின் அவசியத்தையும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுவதையும் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதைப்போலவே திருச்சியில் அமைப்புத் தோழர்கள் மட்டுமின்றி ஆட்டோ தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள், சுமைப்பணி தொழிலாளர்கள், பெல் மருத்துவத் தொழிலாளர்கள், எர்த் மூவர்ஸ் அசோசியேஷன் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் ஒன்று திரண்டு மரக்கடை பகுதியில் பேரணியாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக பொதுக்கூட்டத்தை அனுமதி பெற்று எழுச்சிகரமான பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்தனர்.

தமிழகத்தை ஒட்டிய மாநிலமான புதுச்சேரியில் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்த தொழிலாளர்கள், உள்நாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் ஆகியவற்றைச் சார்ந்த நிரந்தர தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பிரிவினரை உள்ளடக்கிய எழுச்சிகரமான பேரணியும் இறுதியில் சாரம் பகுதியில் அமைந்துள்ள ஔவை திடலில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. புதுவையின் தொழிலாளர்கள் எழுச்சியின் பாரம்பரியத்தை புதுச்சேரியின் வீதிகளில் போர்க் குணத்துடன் முழங்கிச் சென்றது பாட்டாளி வர்க்கத்தின் படையணி.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் விவசாயிகளை ஒன்று திரட்டி வீச்சாக ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த போதிலும் தொடர்ச்சியாக பெய்த கன மழை காரணமாக மே தினத்தை சிறப்பாக நடத்த முடியவில்லை என்ற போதும் கூலி ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மத்தியில் நமது பிரசுரங்களைக் கொண்டு சென்று மே தினத்தை போராட்ட தினமாக அறைகூவல் விடுத்து பிரச்சாரம் செய்தனர். மழை சற்று ஓய்ந்தவுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
இத்தகைய போராட்டங்கள் அனைத்திலும் சுமார் 200 முதல் 400 வரை தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் அனைத்து பிரிவு உழைக்கும் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் என்பது மட்டுமின்றி புதுச்சேரி பகுதியில் நடந்த பேரணியில் மாணவர்கள் – இளைஞர்கள் பாரம்பரிய வீர விளையாட்டு மற்றும் நடனங்களுடன் பொதுமக்கள் மத்தியில் புரட்சிகர அரசியலைக் கொண்டு சென்றனர்.

மே தினத்தை சடங்குத்தனமாகவும் அடையாளத்திற்காகவும் நடத்துவது என்று சிவப்புக் கொடியை கையில் மார்க்சிய பிழைப்புவாதத்தில் ஈடுபட்டுள்ள சிறுகும்பலைத் தவிர நேர்மையாக செங்கொடியை கையில் ஏந்தி சிறு சிறு குழுக்களாக பிரிந்துள்ள பல்வேறு அமைப்புகள் பாசிச காலகட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் ஒன்றிணைந்து பாசிசத்தை வீழ்த்துவதற்கு போராட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் ஜனநாயக கூட்டரசின் செயல் திட்டம் என்ன என்பது பற்றிய வெளியீடு பரவலாக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
புரட்சிகர இயக்கங்களை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக சக்திகள், தொழிற்சங்க அரங்கில் பணியாற்றுகின்ற முன்னணியாளர்கள், விவசாய அரங்கில் செயல்படுகின்ற விவசாய சங்க தலைவர்கள், வர்த்தகர்கள், வர்த்தகர் சங்க தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரின் மத்தியிலும் இந்த வெளியீட்டின் மூலம் மாற்றுத் திட்டத்தை தேர்தல் காலகட்டங்களில் இருந்து மே தினம் வரை தொடர்ச்சியாக கொண்டு சென்றது புரட்சிகர இயக்கங்கள்.

புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதற்கு முன்னதாகவே நாட்டின் மிகப்பெரும் அபாயமாக தோன்றியுள்ள கார்ப்பரேட் காவி பாசிச அபாயத்தை முறியடித்து போலி ஜனநாயக அரசு கட்டமைப்பிற்கு மாற்றாக உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டுகின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதும், அதனை அடித்தளமாக கொண்டு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறிச் செல்வதும் தான் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் முன்வைக்கின்ற புரட்சிகர அரசியலாகும்.
முதலாளித்துவக் கட்சிகள், அரசியல் சார்பற்ற கட்சிகள், அரசியல் புரிந்து கொள்ள முடியாத தற்குறிகள் பேசுவதைப் போலவே, ‘ புரட்சிகர அரசியல்’ என்று பேசிக்கொண்டே இத்தகைய செயல்தந்திர அரசியல் வழியை புரிந்து கொள்ள முடியாத வினவு தரப்பைச் சார்ந்த லும்பன் கும்பல் வழக்கம் போல கிறுக்குத்தனமான முழக்கங்களை முன்வைத்து மக்களை குழப்பிக் கொண்டிருந்தனர்.
இடது போர்வையில் வலம் வந்து கொண்டிருக்கும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத கும்பலான தர்மபுரி செங்கனல் கும்பலோ நான்கு, ஐந்து பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தனது கடமை முடிந்ததாக கணக்கு காட்டிவிட்டனர்.
புரட்சிகர அரசியலை முன்னெடுத்து செல்லும்போது இத்தகைய சந்தர்ப்பவாத போக்குகள்; நீண்ட காலமாக நிலவி வருகின்ற நாடாளுமன்ற சரணடைவு அரசியலை பேசுகின்ற நாடாளுமன்ற இடதுசாரிகளின் தகிடுதத்தங்கள் ஆகியவை அனைத்தையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி புரட்சிகர அரசியலின் கீழ் மக்களை ஒன்று படுத்துவதும், பாசிச அபாயத்திற்கு எதிராக பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஓர் அணியின் கீழ் திரட்டுவதும் மே தினத்தின் மகத்தான முழக்கமாகவும் லட்சியமாகவும் முன்னேறிக் கொண்டுள்ளது.
◾பார்த்தசாரதி
புதிய ஜனநாயகம் தினசரி






