‘இது நாடல்ல; சுடுகாடு தான்’… என உணரும் வகையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் ஒரு நிகழ்வு நடந்தேறியுள்ளது. இவ்வளவிற்கும் ஒடிசாவில் நடப்பதோ பாஜக பீற்றிக் கொள்ளும் ‘டபிள் எஞ்சின் ஆட்சி, மோகன் சரண் மாஜி-யை முதல்வராகக் கொண்ட பாஜக அரசாங்கம்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம் மாநில முதலமைச்சரின் மாவட்டமும் கூட. இம்மாவட்டத்தில் ‘ஒடிசா கிராம வங்கி’யின் ‘மலிபோசி கிளை’யில் ஏப்ரல் 27 அன்று நெஞ்சை உளுக்கும் ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது.
அவ்வங்கியில் கல்ரா முண்டா (56) என்ற பெண்மணி தமது கால்நடைகளை அவ்வப்போது சிறுகச் சிறுக விற்று ரூ.20000/- வரை சேமித்துள்ளார். தமக்கு ‘நாமினி’-யாக தமது மூத்த சகோதரர் ராய்பு முண்டா-வின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கல்ரா முண்டா கடந்த ஜனவரி 26 ஆம் நாள் உடல் நலக் குறைவு காரணமாக இறந்து போனார். மேலும் ‘நாமினி’யாகப் பெயர் பதிவு பெற்றுள்ள ராய்பு முண்டாவும் முன்கூட்டியே இறந்து விடுகிறார்.
பின்பு அக்குடும்பத்தின் ஒரே வாரிசான – உரிமையாளரான மற்றொரு சகோதரர் – படிப்பறிவில்லாத பாமர ஏழையான- ஜீத்து முண்டா தனது மூத்த சகோதரி சேமித்து வைத்த ரூ.20000/- பணத்தை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில்
கோரிக்கை விடுக்கிறார். ஏழைகளின் பால் எப்பொழுதுமே இரக்கம் காட்டத் தெரியாத – பழக்கப்படுத்தப்படாத வங்கி நிர்வாகம் அவரை தொடர்ச்சியாக இழுத்தடித்தது. சகோதரி இறந்ததற்கான ஆவணங்களைக் கொண்டு வருமாறு இந்தப் படிப்பறிவில்லாத ஜீத்து முண்டாவை வலியுறுத்திக் கொடுமைக்குள்ளாக்கியது.
தொடர்ச்சியாக அலைந்து திரிந்து நொந்து போன ஜீத்து முண்டா வேறு வழி தெரியாமல் கடந்த ஏப்ரல் 27 அன்று சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த தமது சகோதரியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து தமது தோளில் போட்டுக் கொண்டு வங்கியில் சாட்சியை அடையாளமாகக் காண்பிப்பதற்காகக் கொண்டுவந்து விட்டார்.
அரண்டு போனது வங்கி நிர்வாகம். வங்கியில் குழுமியிருந்த மக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
காவல்துறைக்கு தகவல் தெரிவித்து போலீசாரும் வந்து சேர்ந்துள்ளனர். போலீசார் சம்பந்தப்பட்ட ஜீத்து முண்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி எலும்புக்கூட்டைப் பெற்றுச்சென்று மீண்டும் முறைப்படி சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் பணத்தை விரைவில் தருவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
மெக்காலே கல்வி முறையும் – டாடன் ஹாம் நிர்வாக நடைமுறையும் கற்றுத் தந்தது தான் என்ன?
இன்று இந்தியாவில் 1835 பிப்ரவரி 2 முதல் நடைமுறையில் இருப்பது மெக்காலே கல்வி முறை தான். அதாவது தாமஸ் பாபிங்டன் மெக்காலே (Thomas Bobington Macaulay) என்ற வெள்ளைக்கார அதிகாரி உருவாக்கியதுதான் இந்தக் கல்வி முறை. இந்தக் கல்வி முறையில் தன்னகங்கார சிந்தனைப் போக்கும், உயர்குடி மனப்போக்குமே இன்று வரை நீடித்து நிலைத்து நிற்கிறது. அப்படிப்பட்டக் கல்வியைக் கற்று சீர்கெட்ட சிந்தனைப் போக்கை வளர்த்துக் கொண்டோரிடம் – அதிகாரப் பதவிகளில் இருப்போரிடம் சாதாரண ஏழை எளிய பாமர மக்களின் நலன் சார்ந்து சிந்திக்கவே தெரியாது. அந்த வடிவில் தான் கல்வி முறையையும் புகுத்தினான் கொள்ளைக்காரச் சுரண்டல் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான மெக்காலே.
அதேபோல சிவில் சர்வீஸ் மற்றும் நிர்வாக நடைமுறையை ட்ரெவெல்யன் (Trevelyan)
(டாடன் ஹாம் – என்றழைக்கப் படுவதும் உண்டு) வெள்ளைக்கார அதிகாரி 1830 ஏப்ரல் மாதம் தற்போதைய நிர்வாக நடைமுறையை அனைத்து துறைகளிலும் புகுத்தினான். இவன் 1859-ல் சென்னை மாகாண கவர்னராகவும் பணி புரிந்திருக்கிறான்.
இந்த நிர்வாக நடைமுறை என்பது இன்றளவும் நாம் கண்டு அனுபவித்துக் கொண்டிருப்பது என்னவென்றால் சாதாரண ஏழை – எளிய மக்கள், தத்தம் கோரிக்கைகளை, இந்த அதிகார வர்க்கத்திடம், இன்னபிற அலுவலர்களிடம் நிறைவேற்றிக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் இந்த அதிகார வர்க்க கூட்டம் ஆளும் கட்சிகளைப் போலவே பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் – வசதி படைத்தவர்களுக்கு மட்டும் விழுந்து விழுந்து காரியமாற்றும்!
ஒடிசா ஜீத்து முண்டா பிரச்சினை தொடர்பாக அம்மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பூஜாரி, ‘வங்கியில் இறப்புச் சான்றிதழ் போதாது என்று கூறி அலைக்கழித்துள்ளனர்; மனிதாபிமான அணுகுமுறை மறைந்து விட்டது; இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…’ என்று வேறு வழியின்றி நடந்து முடிந்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
‘ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்’ என்ற பழமொழிக்கேற்ப ‘டபுள் இஞ்சின் சர்க்கார்’ நடத்தும் பாஜக ஆளும் ஒரிசாவில் இதுதான் லட்சணம். அந்த ஏழை ஜீத்து முண்டா நிலையிலிருந்து ஒவ்வொரு குடிமகனும் நாட்டு நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாட்டை வளர்ச்சியின் பாதையில் ராக்கெட் வேகத்தில் கொண்டு செல்வதாகப் பீற்றிக் கொள்ளும் பாசிச பாஜக ஆர் எஸ் எஸ் கும்பல் இவற்றிற்கெல்லாம் விடை கூறாது. இந்தக் கார்ப்பரேட் காவிப் பாசிசக் கும்பலை இந்திய நாடு முழுமைக்கும் மக்களின் வீதிப் போராட்டங்கள் மூலமாக துடைத்தெறியப்படாவிட்டால், எண்ணற்ற ஜீத்து முண்டாக்கள் அற்பக் கோரிக்கைகளுக்காகக் கூட வீதிகளில் அலைந்து திரிந்து சாவதைத் தவிர வேறு வழி இல்லை..!
எழில்மாறன்








ஒடிசா அவலம் இது நாடல்ல சுடுகாடு !
கட்டுரையில் அதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்தி அருமையாக எழுதப்பட்டுள்ளது மெக்களோ கல்வி முறை என்பது மேட்டுக்குடிகளுக்கும் ஆளும் வர்க்கத்திற்கு ஆனது சாதாரண ஏழை எளிய மக்களுக்கு எட்டாத ஒரு கல்வியாக தான் மெக்களோ கல்வி உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது அதிகார வர்க்கம் யாருக்காக விழுந்து விழுந்து வேலை செய்கிறது சாதாரண மக்களுக்கு ஏன் இப்படிப்பட்ட அவல நிலை ஏற்படுத்துகிறது என்று இந்த கட்டுரையில் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் கடைசியில் சிந்து முண்டா போல பல முண்டாக்கள் அற்ப கோரிக்கைக்காக போராட வேண்டி உள்ளது என சிறுமைப்படுத்துவது போல் உள்ளது கட்டுரை ஆசிரியருக்கு நன்றி
இந்தப் பாசிச பயங்கரவாதிகள் ஆட்சி புரியும் லட்சனம் எண்ணற்ற ஜீத்து முண்டாக்களை உருவாக்குகிறது; எனவே, நிலவும் சமூக கட்டுமானத்திற்கு தற்போது மூல காரணமாக விளங்கும் (அதிகாரத்துவம் உட்பட) பாசிசக் காவிக் கும்பலை மக்கள் ஓரணியாய் திரண்டு வீழ்த்த முன் வராவிட்டால் சாதாரண கோரிக்கைகளுக்குக் கூட ஜீத்து முண்டாவை போல் வீதிகளில் அலைந்து சாக வேண்டி வரும் என்றே விழிப்புணர்வு வேண்டி எச்சரிக்கப்பட்டுள்ளது தோழரே;