
கர்நாடகாவின் பெங்களூருவிலும், மத்திய பிரதேசத்தின் போபாலிலும் செயல்படும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சமீபத்தில் இந்தியா முழுவதிலும் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பணி புரியும் நிலை (State of working India – 2026) என்ற அந்த ஆய்வறிக்கை, கல்வி கற்பதற்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியை சுட்டிக் காட்டுகிறது.
இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோர்களின் எண்ணிக்கை சுமார் 36 கோடியாக உள்ளது. இது ஒட்டுமொத்தமாக உழைக்கும் (வேலையில் ஈடுபடும்) மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இப்போதுள்ள சூழல் கல்வி கற்ற பிறகு வேலை வாய்ப்பைப் பெறுவது என்பதில் கடுமையான சவாலை சந்தித்து வருவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும் “இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 30, 40 ஆண்டுகளில் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்த போதிலும், 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டோரின் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 40% என்ற அளவிலும், 25 முதல் 29 வயது வரையானவர்களில் 20 % என்ற அளவிலும் உள்ளது” என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 6.3 கோடி பட்டதாரிகளில் 1.1 கோடி பேர் வேலையின்றி இருந்ததாக அறிக்கை கூறுகிறது. வேலை வாய்ப்பைப் பெறும் பட்டதாரிகளில் வெறும் 7% பேர் மட்டுமே நிரந்தரமான சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறுகின்றனர். எனவே 93 % பேர் தற்காலிகமான, உத்தரவாதமற்ற வேலையில்தான் உள்ளனர் என்ற இன்னொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. 1983 ஆம் ஆண்டிலிருந்து வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 35 – 40% என்ற அளவில் இன்று வரை பெரும்பாலும் மாற்றமின்றியே உள்ளது.
கல்வி பயில்வோரின் எண்ணிக்கை உயர்கிறது- ஆனால் வேலைவாய்ப்பு?
இந்தியாவில் கல்வி சேர்க்கை விகிதம் பெண்களிடையே 1983-ல் 38 % இருந்து 2023-ல் 68 % ஆக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஆண்களின் சேர்க்கை விகிதம் 49 சதவீதத்திலிருந்து 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2011 முதல் 2023 வரையான காலகட்டத்தில் பட்டியல் சாதி (SC) மாணவர் சேர்க்கை 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாகவும், பட்டியல் பழங்குடி மாணவர் சேர்க்கை 8 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த விகிதம் தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளது.
இப்படி வளர்ந்து வந்த மாணவர் சேர்க்கை சமீபத்தில் பின்னடைவுக்கு உள்ளானதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கல்வியில் உள்ள இளைஞர்களின் பங்கு 2017 – ல் 38 % லிருந்து 2024 ஆம் ஆண்டு 34 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த இளைஞர்களில் 72% தங்கள் குடும்ப வருமானத்திற்காக கல்வியில் இருந்து விலகியதாக இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
1990-களில் துவங்கிய தாராளமயமாக்களுக்குப் பிறகு தனியார் கல்வி நிறுவனங்களின் அதிகரிப்பால் கல்வி கற்போரின் எண்ணிக்கையும் உயர்ந்தது. உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 1644 – ல் இருந்து 69,534 ஆக அதிகரித்துள்ளது. 2010-ல் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 29 கல்லூரிகள் என்ற நிலையிலிருந்து 2021 – ல் 45 ஆக மேம்பட்டு உள்ளது.
இருப்பினும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின்(AICTE) விதிமுறையான ஒரு ஆசிரியருக்கு 15 முதல் 20 மாணவர்கள் என்பதற்கு மாறாக, தனியார் கல்லூரிகளில் சராசரியாக 28 மாணவர்களும், அரசுக் கல்லூரிகளில் 47 மாணவர்களும் உள்ளனர்.
தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI) 2005-ல் 3,674 லிருந்து 2025-ல் 14,582 ஆக அதிகரித்துள்ளது. இதில் 80% தனியார் நிறுவனங்களாகும். இப்படிக் கல்வி நிறுவனங்கள் அதிகரித்த போதிலும் கல்வியின் தரம் அதிகரிக்கவில்லை என்றும், இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில் பலவீனமாக செயல்படுவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
பட்டதாரிகளின் நிலை எவ்வாறு உள்ளது?
பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் பட்டதாரிகள் அல்லாதவர்களை விட ஏறக்குறைய இரு மடங்கு சம்பளம் பெறுகின்றனர். இருப்பினும் இளம் ஆண் பட்டதாரிகளின் சம்பளம் 2011 முதல் தேக்கமடைந்துள்ளது. அதேசமயம் இவர்களது வருமானத்தில் பாலின ஊதிய இடைவெளி குறைந்துள்ளது. தற்போது இளம் பெண் பட்டதாரிகள் ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கின்றனர்.
படிக்க:
♦ மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
♦ கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டலே நான்கு தொகுப்புச் சட்டங்களின் அடிப்படை
இளம் பெண்களைப் பொறுத்தவரை தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, ஜவுளி மற்றும் சேவைத் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இளம் ஆண்களைப் பொறுத்தவரை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் கட்டுமானம் ஆகியவை முக்கிய தொடக்க நிலை வேலைகளாக உள்ளன. சாதி மற்றும் பாலின அடிப்படையிலான தொழிற் பிரிவினை குறைந்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக 1983-ல் தோல் மற்றும் காலணித் தொழிலில் பணி புரிந்த 40% பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின இளைஞர்களின் எண்ணிக்கை 2023-ல் 24% பேர் எனக் குறைந்துள்ளது. இந்த சமூகத்தினர் காகிதம், வாகனங்கள் மற்றும் தொலை தொடர்பு உபகரணங்கள் உற்பத்தியில் பெருமளவில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
மாற்றத்தை ஏற்படுத்துவது எப்படி?
“வேலை வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும், வேலை வாய்ப்பை மேம்படுத்தவும் பள்ளிகளையும், தொழிற்கல்வி பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். தொழிலாளர் சந்தையை சுமுகமாக்க தேசிய தொழில் சேவைகளை (National Career Service) வலுப்படுத்த வேண்டும். முறைசாரா துறையில் ஈடுபடும் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்” ஆகிய பரிந்துரைகளை இந்த அறிக்கை வழங்குகிறது.
“முன்னெப்போதையும் விட இன்று அதிகமான இளைஞர்கள் கல்வி கற்றவர்களாகவும், தகவல் அறிந்தவர்களாகவும், லட்சியம் கொண்டவர்களாகவும் உள்ளனர். இவை நாம் பெருமைப்பட வேண்டிய உண்மையான சாதனைகள்” என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத் தலைவர் இந்து பிரசாத் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையை தயாரித்த முதன்மை ஆசிரியரும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியருமான ரோசா ஆபிரகாம், இளைஞர்களின் கல்வி தொடங்கி, வேலை தேடுதல் மற்றும் வேலை வாய்ப்பு வரையிலான மாற்றத்தை கண்டறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக கூறுகிறார்.
மேலும் “இந்த மாற்றத்தில் உள்ள சவால்களைப் பற்றிய புரிதலுக்குத் தேவையான சில அடிப்படை விஷயங்களை இந்த அறிக்கை முன்வைக்கிறது. இது ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கத்தை ஏற்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் தெரிவித்தார்.
நமது நாட்டில் கல்வி தனியார்மயத்தால் கட்டணக் கொள்ளை ஒருபுறம் இருப்பினும், கல்வியில் பின்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காணப்படுகிறது. அதே வேளையில் வேலை வாய்ப்பு என்பது பலருக்கு எட்டாக் கனியாக உள்ளது. இங்கு உற்பத்தித் திறன் மிக்க, நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாகிறார்கள். இவர்களில் 28 லட்சம் பேருக்கு மட்டுமே ஏதாவது ஒரு வேலை கிடைக்கிறது.
மக்கள் தொகை அதிகரிப்பு என்பது மனித வளம் அதிகரிப்பதையும் குறிக்கிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். இப்போதுள்ள மக்கள் விரோத, கார்ப்பரேட் நல அரசால் இதை நிறைவேற்ற இயலாது. புதிதாக உருவாக்கப்படும் ஒரு ஜனநாயக கூட்டரசால் மட்டுமே இதை சாதிக்க முடியும்.
- குரு






