பத்திரிகைச் செய்தி.
நாள் ;14.02.2026.
பாசிச பாஜக – வின் மக்கள் விரோத சட்டங்களை நிராகரித்து
சட்ட மன்றத்தில் தீர்மானம் போடு!
ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் பாஜக – வின் மோடி, அமித்ஷா கும்பல் மனு சட்ட நான்கு வருண ஆதிக்கசாதி ஆர்.எஸ்.எஸ் சனாதன சித்தாந்தத்தின் ஆதிக்கத்தை நிறுவும் நோக்கத்தில் இந்தியாவை ” பார்ப்பன – பனியா இந்து இந்தியா-” நாடு என மாற்றுவதின் மூலம் தங்கள் ஆதிக்கத்தியையும் தங்களுக்கான தாய் நாடு கனவையும் நனவாக்கத் துடிக்கிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி (இந்தி), ஒரே மதம்(இந்து) என கூப்பாடு போட்டுக் கொண்டு உழைக்கும் மக்கள் வாழ்நிலைகளை வரலாற்றின் பின் நோக்கி இழுக்கப் பார்க்கிறார்கள் அதன் பொருட்டு இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் அங்கீகாரத்தில் உள்ள சட்டங்களை எல்லாம் தங்கள் நோக்கத்திற்கேற்ப மாற்றி வடிவமைக்கிறார்கள். இந்திய பொருளாதாரங்கள் அனைத்தையும் பார்ப்பன பனியா பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தில் தேசங்கடந்த கார்ப்பரேட் கம்பெனிகளோடு சேர்ந்து கொண்டு உழைக்கும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிக்க “வளர்ச்சி, முன்னேற்றம்” என்ற வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏய்க்கிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக விவசாயத்தை ஒழிக்கும் கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளையும், விவசாயத்தையும் வேட்டையாட வெறித்தனத்துடன் அலைகிறது ஒன்றிய அதிகாரத்தில் உள்ள காவி பாசிச பாஜக அரசு.
வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக வாக்குறுதியளித்தாலும், அதன் சாரத்தை வெவ்வேறு வடிவங்களில் அமல்படுத்திட எத்தணித்து தாக்குதலை தொடர்கிறது. விவசாயிகளின் மீதான தாக்குதலின் தொடர்ச்சியாக விதைச் சட்ட மசோதா – 2025 ஐ ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. விதைச்சட்டமானது, பல தலைமுறைகளாக விவசாயிகள் சேகரித்து வைத்த, சமூகச் சொத்தாக இருக்கின்ற விதைகளை விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது. விதைத் துறையை வாழ்வாதாரத்தின் மையத்தில் இருந்து சந்தையின் மையத்திற்கு உந்தித் தள்ளி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை விதைகளின் மீது சட்டபூர்வமாக நிலைநாட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசு மட்டுமின்றி, தமிழக திமுக அரசுகூட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 – ஐ கொண்டு வந்துள்ளது. இந்த சட்டமானது 100 ஹெக்டர் பரப்பளவில் ஒருவர் புதிய தொழில் தொடங்க மாநில அரசை அனுகினால் அவர் கேட்கின்ற இடத்தில் உள்ள அரசு நிலம், தனியாருக்கு சொந்தமான நிலம், விளைநிலங்கள் மற்றும் குளம், குட்டை, வாய்க்கால், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை சேர்த்து சம்பந்தப்பட்ட திட்டங்களுக்காக வழங்குவதற்கு வழி செய்கிறது. இவற்றை ஒருங்கிணைத்து தருவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு செயல்படும். விவசாயிகளுக்கு ஆட்சேபனை இருந்தால் மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு மட்டுமே செய்யலாம். வழக்கமாக நடைபெறும் கருத்து கேட்பு கூட இருக்காது என வரையறுத்து கார்ப்பரேட் விசுவாசத்தில் பாஜகவினை விஞ்சி நிற்கிறது திமுக.
எனவே விதை மசோதாவினை அமல்படுத்த மாட்டோம் எனவும், நில ஒருங்கிணைப்பு மசோதாவினை திரும்ப பெறுவதாகவும் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என கோருகிறோம்
தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற சட்டப்பூர்வ உரிமைகளை ஒழித்து, நவம்பர் 21 – 2025 முதல் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப் போவதாக பாசிச பாஜகவின் மோடி – அமித்ஷா கும்பல் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ் நாடு அரசும் இதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க குழு அமைத்துள்ளது. சட்டத் தொகுப்பின் மூலம், பணி நிரந்தரம், ESI, PF, போனசு, கிராஜுவிட்டி, விபத்துக்கான இழப்பீடுகள் போன்ற சமூகப் பாதுகாப்புகளை சட்டப் பூர்வமாகவே ஒழித்து அமைப்பாக்கப்பட்ட ஆலைத் தொழிலாளர்களை அமைப்பற்ற கூலி அடிமைகளாக மாற்றி தொழிலாளர் வர்க்கத்திற்கு துரோகம் இழைக்கிறது.
புதியதாக வேலைக்குப் போகும் இளைஞர்களை நீம் (NEEM), நாப்ஸ் (NAPS), FTE, TOT போன்ற புதிய வழிகளில் பயிற்சியாளர்களாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வெளியேற்றிவிடுவார்கள். புதிய சட்டத் தொகுப்பில் ஒரு வருடத்திலேயே தொழிலாளர்களுக்கு (பணிக்கொடை) கிராஜுவிட்டி வழங்கவும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவும் வழி செய்துள்ளதாக கூறி ஏய்க்கின்றனர். உண்மையில் நிரந்தரப்பணியாளர் முறையை ஒழித்துக் கட்டப்படுவதால் அனைவரும் பயிற்சியாளர் நிலைக்கு தாழ்த்தப்படுவார்கள். அனைவருமே பயிற்சியாளர் என்ற நிலையில் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தின் கீழ் சமவேலைக்கு சம ஊதியம் வழங்குவதைதான் கார்ப்பரேட்டுகள் நடைமுறைப் படுத்துவார்கள். அப்பாவி தொழிலாளர்களோ தம்மை நிரந்தரப்பணியாளர் தகுதிக்கு உயர்த்தி அதற்கேற்ப ஊதியம் வழங்க இருப்பதாக கனவு காணமுடியாது.
தொழிலாளர்கள் ஓராண்டில் ஈட்டிய இலாபத்தைக் கொண்டு போனசுத் தரப்பட வேண்டும் என போனசு சட்டம் 1965 கூறுகிறது. ஆனால் புதிய சட்டத்தொகுப்பு தொழிற்சங்கம் இலாப விவரங்களை கோரும்போது, முதலாளிகள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என மாற்றியுள்ளார்கள்.
பணி நிரந்தரம் ஒழிக்கப்பட்டதால் குறைக்கப்படும் ஊதியம் மட்டுமின்றி, எந்த சமூக பாதுகாப்பும் அற்றவர்களாக தொழிலாளி வர்க்கத்தை மாற்றுகிறார்கள், அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்ற சங்கங்களையும் ஒழித்திட புதிய சட்டத்தொகுப்பு வழி செய்துள்ளது. இனி சங்கம் சேரமுடியாது.
அந்தவகையில் தொழிலாளர்களுக்கு எந்தப்பயனும் தராத சட்டத்தொகுப்பு இனி தேவையில்லை என கேரளாவின் இடது சாரி அரசு அறிவித்தது போன்று தமிழ்நாடு அரசு, சட்டசபையில் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம்.
மாணவர்களின் கல்வி உரிமையை மறுத்து, இந்தித் திணிப்பை உறுதி செய்கின்ற புதிய கல்வி கொள்கை ஒருபுறம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இந்தியாவின் மத்திய பல்லைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) அவசியம், கியூட் தேர்வை நிறைவு செய்ய வேண்டும் என்கிறது பாசிச பாஜக. கியூட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு பிளஸ் 2 மதிப்பெண்ணை தகுதியாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினர் உள்பட அனைத்து மாணவர்களும் பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே சேர்க்கப்பட வேண்டும். இதற்கான கேள்விகள் N.C.E.R.T பாடப்புத்தகங்களின் அடிப்படையில் இருக்கும். இதனால் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை என ஒன்றிய பாஜக அரசு கூறினாலும், மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு என பல்வேறு வகைகளில் சிக்கல் ஏற்படும். இந்தத் தேர்வின் மூலம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்காது என்பதால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கியூட் நுழைவுத் தேர்வினை எதிர்த்து மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
தற்போது இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை (MCI) கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அமைக்க ஒன்றிய அரசு முடிவெடுத்து, இதற்கென உருவாக்கப்பட்ட மசோதாவில், எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் ‘நெக்ஸ்ட்’ (National Exit Test) தேர்வை எழுத வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள்தான் இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய முடியும். ‘நெக்ஸ்ட்’ தேர்வு மதிப்பெண் மட்டுமே மருத்துவ முதுநிலைப் படிப்பில் அனுமதிப்பதற்கு தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 460 மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் போதாமை, புதிய தொழில் நுட்பங்கொண்ட மருத்துவ ஆய்வுக் கூடங்கள், போதிய உபகரணங்கள் இல்லாததை மேம்படுத்தாமல் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு என்ற பாசிச பாஜக அரசின் புளுகினை ஏற்காத, இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ‘நெக்ஸ்ட்’ தேர்வை கடுமையாக எதிர்த்துப் போராடி வருவதால் பாசிச பாஜக அரசு தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது. இதனையும் எதிர்த்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோருகிறோம்.
ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கு சான்றாக கீழடி நாகரிகம் கண்டறியப்பட்டது. கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றதில், கண்ணாடி பாசி மணிகள், மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், சிறிய செங்கல் கட்டுமானம், உலோகப் பொருள்கள், யானை தந்தத்தால் ஆன பகடைக்காய்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்த பிறகும், கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் தொடங்குகிறது என்பது நிரூபணமான நிலையில் உலகின் மூத்த நாகரிகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் கீழடியின் தொன்மையை அங்கீகரித்த பின்னரும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது. கீழடி முடிவுகள் வெளியிடாமல் நீடிப்பது ஆபத்தானது. பாசிச பாஜக – விற்கு தேவைப்படும் சரஸ்வதி நாகரிகம் என திரித்து வெளியிடுவதற்கு முன் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டும் என, தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இந்த கோரிக்கைகளின் நியாயத்தை, அவசியத்தை உணர்த்துகின்ற வகையில் மக்களையும், போராடும் இயக்கங்களையும், அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி மக்கள் எழுச்சியை உருவாக்கவும். அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோருவதுடன், தேர்தல் கால வாக்குறுதியாக ஓட்டுக் கட்சிகள் பேசும் பொருளாக மாற்றுகின்ற வகையிலான தொடர் போராட்டங்களை கட்டியமைக்கவும். அதற்கு முன்னோட்டமாக சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக செல்லுகிறோம்!
ஒன்றிய அரசே,
கார்ப்பரேட் கொள்ளைக்கான விதைச் சட்டத்தை கைவிடு!
கார்ப்பரேட் நலனுக்கான நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பினை திரும்ப பெறு!
மாணவர்களுக்கான நீட், க்யூட், நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வுகளை திரும்ப பெறு!
கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிடு! இந்திய வரலாற்றை கீழடியிலிருந்து தொடங்கிடு!
மாநில அரசே,
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கைவிடு!
கல்லூரி – பல்கலைக் கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்த சட்டம் இயற்று!
விதைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனவும், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பினை அமல்படுத்த மாட்டோம் எனவும், மாணவர்களின் உயர்கல்வி உரிமையை மறுக்கும் நெக்ஸ்ட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!
என்கிற கோரிக்கைகளை 17.02.2026 – ல் நடக்க இருக்கும் சட்ட மன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி 16.02.2026 திங்கட்கிழமை அன்று காலை 10..00 மணிக்கு சட்டமன்றம் நோக்கிய கோரிக்கை முழக்க பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு ( Chief Minister’s Cell ) – ல் கோரிக்கை மனுவினை வழங்க இருக்கின்றோம்.
இந்தப் பேரணியில் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், தோழமை அமைப்புக்களான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் பங்கு கொள்கிறார்கள்.
மேற்கண்ட மக்கள் நலன் சார்ந்த எமது அமைப்புகளின் கோரிக்கைக்கு வலுசேர்க்க இந்த செய்தியினை வெளியிட்டு உதவ அனைத்து செய்தி ஊடகவியலாளர்களையும் அன்புடன் கோருகிறோம்.
நன்றி.
இவண்,
1.) தோழர் இல. பழனி,
மாநிலத் தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ் நாடு – புதுச்சேரி.
2.) தோழர் கோவன்,
மாநில பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தமிழ்நாடு – புதுச்சேரி.
3.) தோழர் ஆர்.அம்பேத்கர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
விவசாயிகள் விடுதலை முன்னணி.
தமிழ் நாடு – புதுச்சேரி.
4.) தோழர். ம. மணியரசன்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தமிழ் நாடு – புதுச்சேரி.







