இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வணிக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிப்ரவரி 02ஆம் தேதி அன்று தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனிமேல் 18% வரி விதிக்கப் போவதாகவும் அதே சமயம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவடிவில் மட்டும் இன்றி வேறு எந்த வடிவிலும் எந்தத் தடையும் இருக்காது என்றும் கூறியிருந்தார். இந்த ‘ஒப்பந்தத்திற்குப்’ பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் “விவசாயிகள் கவலைப்பட ஏதுமில்லை” என்று தெரிவித்துள்ளார். அவர் சொல்வது ஜமாக்காளத்தில் வடிகட்டியப் பொய். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய விவசாயிகள் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட போகின்றனர் என்பதே எதார்த்தம்.
இனிமேல் அமெரிக்காவிலிருந்து ஆற்றல், தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி மற்றும் இன்னும் பல பொருட்களை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் வரிஎதுவும் செலுத்தாமலேயே இந்தியாவிற்குள் கொண்டு வந்து கொட்ட முடியும். அமெரிக்கப் பொருட்களை இந்தியாவில் விற்று அமெரிக்கர்கள் கொள்ளை லாபம் அடிக்க முடியும் என்ற நிலை இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக இந்திய நாட்டின் விவசாயம் மிகப் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது. அமெரிக்காவிலிருந்து சோயா, கோதுமை, மக்காச்சோளம், மாட்டு தீவனம், பழங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், பால் பொருட்கள் போன்றவை பெரும் அளவு இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
அமெரிக்காவில் சிறிய அளவிலான விவசாயம் என்பது குறைந்தபட்சம் 400 ஏக்கர் என்ற அளவிற்கு முழுக்க முழுக்க இயந்திரங்களை வைத்து பரந்த அளவில் செய்யப்படுகிறது. அங்கு விவசாய வேலைகளுக்கு மனிதர்களை பயன்படுத்துவது மிக மிகக் குறைவு. எனவே அங்கு வேளாண் பொருட்கள் மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி விவசாயத்திற்கு என்று அமெரிக்க அரசு மிகப் பெரும் அளவிற்கு மானியம் கொடுக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களின் உற்பத்திச் செலவு (அடக்க விலை) மிகவும் குறைவு. எனவே அமெரிக்கர்களால் கோதுமை, சோயா, மக்காச்சோளம், மாட்டு தீவனம், ஆப்பிள் போன்ற பொருட்களை கப்பலில் எடுத்து வந்து இந்தியாவிற்குள் மிகக் குறைந்த விலையில் விற்க முடியும்.
இந்தியாவில் அரை ஏக்கர், ஒரு ஏக்கர், ஐந்து ஏக்கர், 10 ஏக்கர் என்ற அளவில் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். இந்திய விவசாயத்தில் டிராக்டர் வைத்து ஏர் உழுவது போன்ற ஒரு சில வேலைகளைத் தவிர பிற வேலைகள் அனைத்தும் மனித உழைப்பால் செய்யப்படுகின்றன. எனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களின் விலை அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை விட மிகவும் அதிகமானதாக இருக்கும்.
இந்த நிலையில், ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அமெரிக்க உற்பத்தி பொருட்களை வாங்கி இந்தியாவிற்குள் விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பார்கள்.
இந்திய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் திணறுவது, போண்டியாவது, பிறகு விவசாயத்தையே கைவிடுவது என்ற நிலை ஏற்பட்டு விடும்.
இந்த ஒப்பந்தம் காரணமாக விவசாயத்தைப் போலவே பால் உற்பத்தி துறையும் மிகப்பெரும் அளவிற்கு பாதிக்கப்பட உள்ளது.
கிராமப்புறங்களில் சாதாரண ஏழை மக்கள் ஏராளமானோர் இரண்டு மாடுகள், நான்கு மாடுகள் என வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் குடும்பங்கள் பால் உற்பத்தியில் வரும் வருவாயை நம்பித்தான் உள்ளன.
இனி வரும் காலங்களில் அமெரிக்காவிலிருந்து பால் பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. அமெரிக்காவில் உள்ள பசுக்கள் இந்தியாவில் உள்ள பசுக்களை விட பல மடங்கு அதிகமாக பால் தருபவை. அது மட்டுமல்ல அமெரிக்காவில் 300 பசுக்களை கொண்ட பண்ணைகள் முதல் ஐந்தாயிரம் பசுக்களை கொண்ட பண்ணைகள் வரை உள்ளன. அங்கு பசுக்களைப் பராமரிப்பதற்கும் பால் கறப்பதற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
படிக்க:
♦ அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் பார்ப்பன பனியா கும்பல்!
♦ டேரிஃப் டிரம்ப்பின் அநியாய வரி விதிப்பும், மோடியின் சுதேசி நாடகமும்!
எனவே இந்தியாவில் உற்பத்தியாகும் பாலை விட அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்து விற்கப்படும் பாலின் அதாவது பால் பொருட்களின் விலை மிகமிகக் குறைவாக இருக்கும் என்பதால் இந்தியாவில் உற்பத்தியாகும் பாலை – பால் பொருட்களை விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்படும். இதன் காரணமாக பால்மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் அந்தத் தொழிலை விட்டே வெளியேற நேரிடும்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள பொருட்களுக்கு இனி 25 சதவீத வரிக்கு பதிலாக 18 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிய வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் (கச்சா எண்ணெய் போன்றவை) இறக்குமதி செய்து வருவதன் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட உள்ளது.
இந்த வரிக்குறைப்பைக் காரணம் காட்டி மோடி ஏதோ பெரும் சாதனை நிகழ்த்திவிட்டது போல சங்கிகள் ஒரு பொய்யை பரப்பி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு – இந்திய மக்களுக்கு நன்மையை விட மிகப்பெரும் இழப்பு ஏற்பட உள்ளது என்பதுதான் உண்மை.
அமெரிக்காவின் வேளாண்துறை செயலாளராக இருப்பவர் ப்புரூக் ரோலின்ஸ்.(இந்திய வாசகர்களுக்கு புரியும்படி கூற வேண்டுமானால் இவரை அமெரிக்க வேளாண்மை துறை அமைச்சர் என்று சொல்லலாம்). இப்படிப்பட்ட பதவியில் இருக்கும் ப்புரூக் ரோலின்ஸ் அவர்கள் ‘அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக அமெரிக்க விவசாய பொருட்கள் பரந்து விரிந்த இந்தியச் சந்தையில் கொட்டப்பட உள்ளன; அமெரிக்க விளை பொருட்களின் விலைகள் உயரும்; அமெரிக்க கிராமப்புறங்களில் பணம் வந்து குவியயும்’ என்று குதூகலமாக தனது “எக்ஸ்” (“X”) தளத்தில் அறிவித்திருக்கிறார்.
இந்த அம்மையாரின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவிலிருந்து பெரும் அளவிலான பணம் கொள்ளை அடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படும் என்பதுதான் உண்மை.
எனவேதான், “இந்த ஒப்பந்தத்தில் என்ன சரத்துகள் இருக்கின்றன என்று பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் பலமுறை கூறியும் பாசிச மோடி அரசு இதுகுறித்து வாய் திறக்க மறுத்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தை பற்றி சுருக்கமாக கூற வேண்டும் என்றால் இதை ஒரு அடிமைத்தனமான ஒப்பந்தம் என்றே கூறலாம். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை எதிர்த்துப் போராடி ஒப்பந்தத்தையே இல்லாமல் ஒழிப்பதன் மூலமாகத் தான் இந்திய விவசாயிகளின் – பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கை நலன்களை பாதுகாக்க முடியும். இதை சாதிக்க வேண்டும் எனில் ஒன்றியத்திலும் பல மாநிலங்களிலும் அரசு அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு சதிராட்டம் போட்டுக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை முறியடித்தே ஆக வேண்டும்.
– குமரன்







இந்திய விவசாயிகளை ஒழிக்க வரும் !இந்திய அமெரிக்க வணிக ஒப்பந்தம்!
இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு
18 %சதவீத வரி அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்கா இறக்குமதி பொருளுக்கு இந்தியாவில் 0 % சதவீத வரி!
உலக ரவுடி டொனால்ட் டிரம்ப் மோடியை தனது அடியாளாக அடிமையாக பயன்படுத்தி நம் நாட்டு வேளாண்துறை நாசமாக்கும் சதி திட்டம் !
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
ஜனநாயக கூட்ட அரசை நிறுவுவோம் !
கட்டுரை ஆசிரியர்:
தோழர் குமரன் நன்றி.