ட்ரம்ப்பின் குறி க்யூபா! வெனிசுலா அதற்கான பகடைக்காய்!
கியூபாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வெனிசுலாவின் எண்ணெய் கச்சா எண்ணெய் இன்றியமையாதது.
வெனிசுலாவில் அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து செய்திகளை வெளியிடும் சர்வதேசப் பத்திரிகைகள் பெரும்பாலும் ஒரு விஷயத்தை புறக்கணிக்கின்றன. அமெரிக்காவின் நடவடிக்கைகள் வெனிசுலாவின் பிரம்மாண்டமான எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதை முதன்மையாகக் கொண்டவை அல்ல (வெனிசுலா கச்சா எண்ணெயின் கடினத்தன்மை, சிதைந்த உள்கட்டமைப்பு மற்றும் பெரும் பாதுகாப்புப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டால், தற்போதைய எண்ணெய் விலையில் அவை பொருளாதார ரீதியாக லாபகரமானவை அல்ல). மேலும், வெனிசுலா ஏற்கனவே ஒரு சிறிய எண்ணெய் உற்பத்தியாளர்; அது லத்தீன் அமெரிக்காவில் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; மேலும் வெனிசுலாவில் நடப்பது பிராந்தியத்தின் மற்ற பகுதிகளுக்குப் ‘பரவும்’ என்ற ஆபத்தும் இல்லை. வெனிசுலாவில் இருந்த ஆட்சி ஏற்கனவே சிதைந்து கொண்டிருந்தது. மதுரோவின் கூட்டாளிகளான ரஷ்யாவும் சீனாவும் கூட, அவரது நாட்டில் நடப்பது குறித்து அமெரிக்காவுடன் ஒரு மோதலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டன. மேலும், வெனிசுலாவின் மற்றொரு கூட்டாளியான ஈரானுக்கே அதன் சொந்த நாட்டில் கவலைப்படப் போதுமான பிரச்சனைகள் உள்ளன.
நிச்சயமாக, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவின் பரந்த எண்ணெய் வளங்களை (அதன் பிரச்சனைகள் இருந்தபோதிலும்) தங்கள் வசப்படுத்திக்கொள்ள விரும்புவார்கள், மேலும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான ஆவணமற்ற வெனிசுலா குடியேறிகளை நாடு கடத்தவும் கூடும். இருப்பினும், இவை மட்டுமே வெனிசுலாவின் மிதான தாக்குதலுக்கு காரணமாக சுருக்கிவிட முடியாது . மேலும், டிரம்ப் மற்றும் அவரது ““MAGA” (Make America Great Again) (அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்) நிகழ்ச்சி நிரலுக்கு, அவரது பிரம்மாண்டமான அமெரிக்க புவிசார் அரசியல் திட்டங்களுக்கு தொடர்பில்லாத வெளிநாட்டுப் பிரச்சினைகளில் தலையிடாமல், உள்நாட்டுப் பிரச்சினைகளையே முதலில் கவனிக்க வேண்டும்.
உண்மையில், வெனிசுலா மக்களின் நலனைக் கருதி அந்நாட்டில் ஜனநாயகத்தை நிறுவும் பொருட்டு ட்ரம்ப் இத்தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பில்லை. உலகின் மற்ற பகுதிகளில் உள்ள சர்வாதிகாரங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் அவருக்கு ஒருபோதும் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. குறிப்பாக ஜனநாயகம்” என்பது அவருக்கு ஒருபோதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததில்லை. என்பதை உள்நாட்டில் அவரது சொந்த நடவடிக்கைகளை கவனித்தால் புரிந்து கொள்ளலாம்,
“வெனிசுலா பற்றி அவர் இதுவரை வலியுறுத்தியதெல்லாம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் “போதைப்பொருள் பயங்கரவாதம்” பற்றி மட்டும்தான்; ஆனால் அதே நேரத்தில், 400 டன்களுக்கும் அதிகமான கோகோயினை அமெரிக்காவிற்கு அனுப்பியதற்கு நேரடியாகப் பொறுப்பானவர் என்று தண்டிக்கப்பட்ட ஹோண்டுரஸின் முன்னாள் அதிபர் ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டஸை மன்னித்து விடுகிறார். மதுரொவிற்கோ ஒசாமா பின்லேடனின் தலையை விட மதுரோவின் தலைக்கு அவர் அதிக விலை நிர்ணயித்திருந்தார்…
படிக்க:
♦ வெனிசுலா விவகாரம் புஜதொமு கண்டன அறிக்கை!
♦ வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தல்! | புதிய ஜனநாயகம்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வெனிசுலா “திருடிய” எண்ணெய் வளங்களையும் சொத்துக்களையும் திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்துவது ஆகியவற்றுடன், ஆவணமற்ற குடியேறிகளைத் திருப்பி அனுப்புவதில் மதுரோ அரசாங்கம் ஏற்படுத்திய சிரமங்களையும் டிரம்ப் பேசியுள்ளார். மேலும், வெனிசுலா தனது குற்றவாளிகளை அமெரிக்காவிற்கு குடியேறிகளாக அனுப்பி வைத்து அவர்களை அகற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் இன்னும் வெகு தொலைவில் உள்ளன (அவை இந்த ஆண்டு நவம்பரில் தான் நடைபெறுகின்றன), மேலும் டிரம்ப் பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்ற ஆபத்து இருக்கிறது, ஒருவேளை இத்தாக்குதல் அந்த ஆபத்தை தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்குமா என்ற கோணத்தில் பார்த்தாலும் , ஆண்டின் தொடக்கத்திலேயே இதைச் செய்வது பெரிய அளவில் அர்த்தமுள்ளதாக இருக்காது.
வெனிசுலா என்பது சதுரங்க ஆட்டத்தில் உள்ள ஒரு நகர்வைப் போன்றது, அதன் நோக்கம் கியூபாவை முற்றுகையிட்டு வீழ்த்துவதே ஆகும்; கியூபா உயிர்வாழ்வதற்கு மலிவான வெனிசுலா எண்ணெய் அத்தியாவசியம் ஆகும். அதனை தடுப்பதன்மூலம் ஏற்கெனவே பலவீனமான கியூப பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சீர்குலைக்க முடியும். இதுவே அமெரிக்காவின் குறிக்கோள் ஆகும். வெனிசுலா கியூபாவிற்கு மிகக் குறைந்த விலையில் எண்ணெய் விற்பது மட்டுமல்லாமல், சாவேஸின் காலத்திலிருந்து, மருத்துவர்கள் மற்றும் இராணுவ உதவியைப் பெறுவதற்காக அதிக அளவிலான எண்ணெயை இலவசமாகவும் அனுப்பி வருகிறது.
கியூபாவை விடுவிப்பதே தனது வாழ்நாள் அரசியல் இலக்கு என்று அறிவித்த கியூப-அமெரிக்கரான மார்கோ ரூபியோவை வெளியுறவுச் செயலாளராக ட்ரம்ப் நியமித்ததுதான் இவயனைத்திற்கும் முதற்படி. வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் என்பது ட்ரம்பிற்கு ஒரு சிறிய மற்றும் தற்காலிக வெற்றியாக இருந்தாலும், மற்ற நாடுகளில் அமெரிக்க இராணுவத் தலையீடுகள் குறித்த அவரது அனைத்து விமர்சனங்களுக்கும் முரணாக இருந்தாலும், கியூபாவில் ஆட்சி மாற்றம் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒன்று; அது உடனடி அரசியல் ஆதாயங்களையும் கடந்தது. ட்ரம்ப் இறுதியாக ஒப்புக்கொண்டது போல, “…நாம் இறுதியில் கியூபாவைப்பற்றித்தான் பேசப் போகிறோம்.”
மேலும், கியூபாவில் ஒரு ஆட்சி மாற்றம், டிரம்ப்பிற்கு இடைக்காலத் தேர்தல்களில் உதவுவது மட்டுமல்லாமல், வரவிருக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வுகளில் ரூபியோவுக்கு ஒரு வலுவான நிலையை உறுதி செய்யும். அந்தத் தேர்வுகளில் இதுவரை ஜே.டி. வான்ஸ் முன்னணியில் இருந்து வருகிறார்.
அனைவருக்கும் தெரிந்தபடி, கியூபாவின் பொருளாதார நிலைமை மிகவும் அபாயகரமானதாகவும், சீராக மோசமடைந்து வருவதாகவும் உள்ளது. மக்கள் தொகையில் அறுபது சதவீதம் பேர் ஏற்கனவே மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர், இது அதன் முக்கிய அந்நியச் செலாவணி ஆதாரமான சுற்றுலாவைப் பாதிக்கிறது. வழக்கத்தை விட குறைந்த அளவில் வந்துகொண்டிருந்த மலிவான வெனிசுலா எண்ணெய் இல்லாமல், மற்றும் சுற்றுலாவில் இருந்து வரும் வருமானம் குறைந்ததால், கியூபாவின் பொருளாதார நிலைமை தாங்க முடியாததாகிவிடும்.
65 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சிக்குப் பிறகு முதல் முறையாக, கியூபா இப்போது உலகில் தனித்து விடப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் இப்போது வெனிசுலா ஆகிய நாடுகள் அதன் உதவிக்கு வர இயலாத அல்லது விரும்பாத நிலையில், அதற்கு ஒரு சக்திவாய்ந்த கூட்டாளி கூட இல்லை. தெளிவான ‘செல்வாக்கு மண்டலங்களைக்’ கொண்ட இந்த புதிய உலக ‘ஒழுங்கில்’, ட்ரம்ப் மற்றும் ரூபியோ ஆகியோர் தங்கள் ‘மன்ரோ கோட்பாட்டை’ — ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ (இதில் முதலாவது ஒரு கண்டத்தையும், இரண்டாவது ஒரு நாட்டையும் குறிக்கிறது) — செயல்படுத்துவதை அவர்கள் மகிழ்ச்சியுடன் அனுமதிக்கின்றனர். ஏனெனில், அதன் மூலம் அவர்களும் தங்களின் சொந்த ‘செல்வாக்கு மண்டலங்களில்’ எந்தத் தடையுமின்றி செயல்பட முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்பனை செய்ய முடியாத ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைகிறோம். சாராம்சத்தில், இது அறிவொளிக் காலத்தின் மாபெரும் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அறியாமையைப் போக்கி, முன்னேற்றம், தனிநபர் சுதந்திரம் மற்றும் சமூகத்தின் நவீனமயமாக்கலை மேம்படுத்துவதற்காக பகுத்தறிவு, அறிவியல் மற்றும் விமர்சன சிந்தனைக்கு முக்கியத்துவம் அளித்த ஒரு சகாப்தம் அது. இந்தச் சிந்தனை தத்துவம், அரசியல், அறிவியல் மற்றும் கலை ஆகியவற்றை பாதித்தது; சுதந்திரம், பிரதிநிதித்துவ அரசாங்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை ஆதரித்து, பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் புரட்சிகள் போன்றவற்றுக்கு அடித்தளமிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு புதிய இருண்ட காலம், ஒரு புதிய ‘அறியாமைக்காலம்’ தலைதூக்குகிறது.
ஜோஸ் கேப்ரியல் பால்மா, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தகைசால் மூத்த விரிவுரையாளராகவும், சிலியில் உள்ள சாண்டியாகோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராகவும் உள்ளார்.
இந்தக் கட்டுரை முதலில் ஸ்பானிய மொழியில் ஜனவரி 3, 2026 அன்று வெளியிடப்பட்டது. இது ஜனவரி 7, 2026 அன்று ‘தி வயர்‘ இணையதளத்தில் வெளியிடப்பட்டதுடன், ஜனவரி 9, 2026 அன்று புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது.
தமிழாக்கம்: தாமோதரன்







