ந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை பாசிச மோடி கும்பல் கைப்பற்றியது முதல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, அதாவது இந்தியாவின் வளங்களை சூறையாடி வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது.

2014 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த பில்லியனர்கள் எண்ணிக்கை 70 மட்டுமே. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்து 2025 ஆம் ஆண்டு கணக்கின் படி 358 பில்லியனர்களாக உயர்ந்துள்ளனர் என்ற விவரமானது பாசிச மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் – சங்பரிவார கும்பலின் ஆட்சி யாருடைய நலனுக்கான ஆட்சி என்பதை தெளிவுபடுத்துகிறது.

“பாசிஸ்டுகளின் இலக்கணப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதாவது அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு அவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், எத்தகைய வார்த்தை ஜாலங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்கள் எப்போதும் கார்ப்பரேட் நிதி மூலதனக் கும்பல்களின் நலங்களுக்காகவே செயல்படுகின்றனர்” என்கிறார் பிரபாத் பட்நாயக். இந்தியப் பாசிசக் கும்பலும் காங்கிரசு ஆட்சிக் காலத்தில் அதன் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதாகவும், சுதேசிப் பொருளாதாரம் தான் தீர்வு எனவும் வார்த்தை ஜாலமிட்டனர். ஆனால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு தீவிரமாக மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தி வருகின்றனர். கார்ப்பரேட் நிதி மூலதனக் கொள்ளையை விரிவு படுத்துகின்றனர். அதற்கேற்பச் சட்டங்களை திருத்துகின்றனர்.

பிரிட்டன் காலனியாதிக்க கட்டத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற, ஏறக்குறைய 150 ஆண்டுகளில் பெற்ற தொழிற்சங்க உரிமைகள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதுவரை நிலவி வந்த 44 தொழிற்சங்கச் சட்டங்களை மாற்றி கீழ்க்கண்ட சட்ட தொகுப்புகளாக 1.ஊதியத்தொகுப்பு (2019) 2.தொழில் உறவு சட்டத்தொகுப்பு (2020) 3.சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (2020) 4. சமூக பாதுகாப்பு (2020) என நான்கு சட்ட தொகுப்புகளாக அமல்படுத்திட வேண்டும் என இந்திய ஒன்றிய அரசான பாசிச பாஜக அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி செல்வத்தைக் குவிக்கின்ற முதலாளிகள் ’தர்மகர்த்தா பாணியில்’ பிச்சையாக போடுகின்ற பணத்தை வாங்கிக் கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமே ஒழிய, தொழிற்சங்கம் என்ற பெயரில் அவர்களை நிர்பந்திக்க கூடாது; தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குகின்ற முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்பதையெல்லாம் சட்டப்பூர்வமான வழிமுறையில் அமல்படுத்துகின்ற பாசிச பயங்கரவாத நடவடிக்கை தான் இந்த 44 சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றுகின்ற முயற்சி.

இந்தியாவில் பாசிசம் எங்கே இருக்கிறது? பாசிசம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டதா? பாசிசம் இன்னும் வரவில்லை! வருவதற்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் ஆய்வு செய்துக் கொண்டிருப்பவர்கள் கார்ப்பரேட் பாசிசத்தை நான்கு சட்ட தொகுப்புகள் என்ற பெயரில் கட்டாயமாக அமல்படுத்துவதை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இது ஏதோ வழக்கமாக தொழிலாளர்கள் மீது நடக்கின்ற அடக்குமுறை போலத்தான் என்று புரிந்து கொள்கிறார்கள்.

ஒன்றரை நூற்றாண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை 4 சட்டத் தொகுப்பு என்ற ஒரு கையெழுத்தின் மூலமாக மாற்றுகின்ற நடவடிக்கை தான் கார்ப்பரேட் பாசிசத்தின் துலக்கமான எடுத்துக்காட்டாகும்.

படிக்க:

 தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை அமலாக்க விடாதே! திரும்பப் பெற வீதியில் இறங்கி போராடுவோம்!

 ஜூலை 9 பொது வேலை நிறுத்த போராட்டம், தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி முன்னேறட்டும்!

நாட்டின் இயற்கை வளங்களையும், செல்வங்களையும், கனிம வளங்களையும், காட்டு வளங்களையும், கடல் வளத்தையும் கொள்ளையடித்துச் செல்கின்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த விதமான தடையுமின்றி வழியை திறந்து விட்டுள்ளது கார்ப்பரேட் கொள்ளைக்கான பாசிச மோடி அரசு. கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதை அரசியல் ரீதியாக எதிர்த்து போராடுபவர்களை, ’தேசவிரோதிகள்’, ’பிரிவினைவாதிகள்’, ’பயங்கரவாதிகள்’, ’நகர்புற நக்சல்கள்’, ’மாவோயிஸ்டுகள்’ என்று பல்வேறு முத்திரை குத்தி அடக்கி ஒடுக்குவதை போலவே தொழிலாளி வர்க்கத்தின் மீது சட்ட ரீதியான ஒடுக்குமுறை செலுத்துகின்ற நடவடிக்கை தான் இந்த நான்கு சட்டத் தொகுப்பு.

ஏற்கனவே இந்த நாட்டில் தொழிலாளர்களாக பணி புரிகின்ற நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில் ஏறக்குறைய 93 சதவீத தொழிலாளர்கள் வேலை உத்திரவாதமின்றி நாடோடிகளாகவும், தினக்கூலித் தொழிலாளிகளாகவும், ஒப்பந்த தொழிலாளிகளாகவும் தனது வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.

இந்த நாட்டின் பெரும்பான்மை தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் உயருகின்ற வேலையை இந்த சட்டத் தொகுப்பு செய்யும். இதனால் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து காண்ட்ராக்ட், தினக்கூலி, FTE, NAPS போன்ற அத்துக்கூலிகள் முறையிலான வேலைகளாக மாற்றப்பட்டு சட்டப் பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் இல்லாத நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள்.

இவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பை ஒட்ட உறிஞ்சிக் குடிப்பதற்கு தயாராக உள்ள கார்ப்பரேட் முதலாளிகள் தாங்கள் நடத்துகின்ற தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூழியுழைப்பை கொள்ளையடிப்பதற்கும்; சுரங்கங்களை அகழ்ந்து எடுப்பது; கடல் வளத்தையும், காட்டுவளத்தையும் சூறையாடுவது என்பதற்கு பொருத்தமாக, கூலி உழைப்பு குறைத்துக் கொண்டு வருகின்றனர். குறைந்த கூலியைப் பெற்றுக் கொண்டு உழைக்கின்ற தொழிலாளர்களை நாடு முழுவதும் நாடோடி தொழிலாளர்களாக, புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக உருவாக்குவது என தொழிலாளி வர்க்கத்தின் தலைவிதியை மாற்றுகின்றனர்.

இந்த புலம்பெயர் தொழிலாளிகள் பற்றிய ஆய்வறிக்கையானது, ”சுமார் 24 கோடி பேர் நாட்டில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயர்ந்து சென்று தனது வாழ்க்கையை கழித்துக் கொண்டுள்ளனர் என்று அறிவிக்கின்றது. அதிலும் 19 கோடி பேர் குடும்பத்துடன் இடத்தை விட்டு புலம்பெயர்ந்துள்ளனர் என்பதும், 5 கோடி பேர் மட்டுமே தனி நபர்களாக உள்ளனர், அவர்களும் குடும்பத்தை மாற்றும் வாய்ப்பு வசதிகளை தேடிக்கொண்டுள்ளனர்” என்று ஒப்பந்தத் தொழிலாளர்களின் அவலத்தை எடுத்துக் காட்டுகிறது.

“இந்த நிலைமையில் ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தான் கடை தேறுவதற்கு மேலும் மேலும் அதிகமாக பாசிசத்தின் மூலம் ஆக பிற்போக்கான, ஆக இனவெறி மிக்க நிதி மூலதனத்தில் படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கர சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலம் முயற்சிக்க பார்க்கிறது. இதன் மூலம் அதன் குறிக்கோள் உழைப்பாளர்களை முழுமையாக கொள்ளையடிப்பதற்கான அசாதாரணமான நடவடிக்கைகளை அமலுக்கு கொண்டு வருவதும், ஒரு படுகொலை மிக்க ஏகாதிபத்திய யுத்தத்தை தயார் செய்வதும், ஐக்கிய சோவியத் சோசலிச குடியரசுகளை தாக்குவதும், சீனாவை பிளவுபடுத்தி அடிமைப்படுத்துவதுமாகும். இதற்கெல்லாம் அடிப்படை புரட்சியை தடுக்கும் நோக்கமாகும்.

முதலாளித்துவத்திற்கு எதிராக குட்டி முதலாளித்துவ மக்களுக்கு ஆத்திரம் கோபம் பொங்கி இருக்கிறது. நிதி மூலதனம் இந்த கோபத்தை தடுக்கப் பார்க்கிறது. அதற்கு பாசிஸ்ட் ஏஜென்ட்களை சாதனமாக பயன்படுத்துகிறது. அந்த பாசிஸ்டு ஏஜெண்டுகள் வாய்ச்சவடால் மூலம் அந்த பகுதி மக்களின் உணர்வு நிலைக்குத் தக்கபடி அவர்களுடைய கோஷங்களை வகுத்து ஏமாற்றுகிறது. இவ்வாறாக பாசிசம் தனக்கு ஒரு அடிப்படையை அமைத்துக் கொள்கிறது.

படிக்க:

 குறைந்து வரும் தொழிலாளர்களின் கூலியும் வளர்ந்து வரும் கார்ப்பரேட்டுகளின் லாபமும்!

 இந்திய தொழிலாளர்கள் விற்பனைக்கு!

இவ்வாறாக இந்தப் பகுதிகளை திசை திருப்பி அதன் மூலம் எல்லா உழைப்பாளி மக்களும் இன்னும் அதிகமான அளவில் நிதி மூலதனத்தின் அடிமைகளாக ஆக்கப்படுவதை நோக்கி இட்டுச் செல்கிறது” என்று 1935 வாக்கிலேயே சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை எச்சரித்தார் மாபெரும் பாசிச எதிர்ப்புப் போராளியான தோழர் டிமிட்ரோவ். தற்போதையப் சூழலில் இது நமது நாட்டிற்கும் பொருந்துகிறது.

ஏற்கனவே இந்த நாட்டின் செல்வ வளங்களை உருவாக்கி உழைத்து உழைத்து இரத்த வியர்வையை சிந்தி ஓடாக தேய்ந்து போயுள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது மிகப் கொடூரமான தாக்குதலை பாசிச பயங்கரவாத வழிமுறையில் அமல்படுத்துவதை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் பிற வர்க்கங்களுடன் இணைந்து அதாவது விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அறிவுத்துறையினர் ஆகியோருடன் இணைந்து மிகப்பெரும் கலகத்தில் இறங்க வேண்டும்.

சம்பிரதாயமான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது; தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது; அடையாள வேலை நிறுத்தங்கள் போன்றவற்றை நடத்துவதன் மூலமாக எதிர்ப்பை காட்டுவது என்ற வரம்புகளைத் தாண்டி நாடு முழுவதும் செயல்படுகின்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தடுக்கின்ற வகையிலான வேலை நிறுத்தங்கள், அரசியல் வேலை நிறுத்தங்களாக பரிணமிக்க வேண்டும்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுகின்ற வரையில் இத்தகைய அரசியல் வேலை நிறுத்தங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். அதன் மூலமாக கீழிருந்து மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.

இத்தகைய எழுச்சி ஒன்று உருவாகி விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் பிரித்து வருகின்ற சாதி, மத, இனவெறி அமைப்புகள் மட்டுமின்றி சினிமா கழிசடைகளையும் துரத்தியடிக்க வேண்டும். அவர்களுக்கு பொருத்தமான வகையில் பதிலடி கொடுப்பதன் மூலமே கீழிருந்து மக்களை வர்க்க ரீதியாக ஒன்று திரட்ட முடியும் அதன் மூலமாக எழுச்சியை நோக்கி நகர்த்த முடியும்.

இத்தகைய கண்ணோட்டத்திலிருந்து 44 சட்டங்கள், 4 சட்ட தொகுப்புகளாக மாறியுள்ளதன் அபாயத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும். அதற்கு அனைத்து வகையான போராட்ட வழிமுறைகளையும் கையாண்டு நாட்டையும், மக்களையும் கார்ப்பரேட் பாசிச பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன்.

புதிய ஜனநாயகம் தினசரி

2 COMMENTS

  1. மோடி அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை நாலு தொகுப்புகளாக மாற்றும் முயற்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதே தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றுவதே இதன் குறிக்கோள் தொழிலாளி வர்க்கம் பாசிச அடக்கு முறையில் விளைவாகத்தான் இந்த சட்டத்தொகுப்பு மார்க்கமாக நிறுத்தப்படுகிறது இதற்கு எதிராக லிமிட்ரோ கூறியது போல் வட்டாரில் வரும் விவசாயிகள் மாணவர்கள் அறிவுரை நிறைத்துக் கொண்டு தீவிரமான போராட்டத்தை நடத்த வேண்டும் மோடி அரசை பணிய வைக்க வேண்டும் என்ற கட்டுரை சிறப்பாக உள்ளது

  2. மோடி அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை நாலு தொகுப்புகளாக மாற்றும் முயற்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதே தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றுவதே இதன் குறிக்கோள் தொழிலாளி வர்க்கம் பாசிச அடக்கு முறையில் விளைவாகத்தான் இந்த சட்டத்தொகுப்பு மார்க்கமாக நிறுத்தப்படுகிறது இதற்கு எதிராக டிமிட்ரோ கூறியது போல் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் அறிவுதுரையினர் இணைத்து கொண்டு தீவிரமான போராட்டத்தை நடத்த வேண்டும் மோடி அரசை பணிய வைக்க வேண்டும் என்ற கட்டுரை சிறப்பாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here