
இந்தியாவில் மக்களைத் திரட்டி தீண்டாமைக்கு எதிராக நடந்த போராட்டம் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (கேரளா) உள்ள வைக்கத்தில் வெடித்தது. அந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றவர் தந்தை பெரியார். இதனை நினைவு கூர்கின்ற வகையில் 1994ஆம் ஆண்டில் அங்கே நினைவகம் உருவானது.
திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்ற திமுக ஆட்சி அந்த நினைவகத்தை ரூ.8 கோடி செலவில் புதுப்பித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய போராட்ட நூற்றாண்டு விழா நிறைவு தினத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நினைவு மண்டபங்கள் இன்று திறக்கப்பட்டன.
அதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு முதல்வரும், கேரள முதல்வரும் பங்கெடுத்துக் கொண்டனர்.. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்திருக்கின்றார்.
“வைக்கம் போராட்டம் பிற்கால கோவில் நுழைவுப் போராட்டங்களில் பெரும் தாக்கம் செலுத்தியது. “தமிழ்நாட்டில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்த கோவில் நுழைவு, தெரு நுழைவு போராட்டங்களில் வைக்கம் மிகப் பெரிய பங்களிப்பை, உத்வேகத்தை அளித்தது. அம்பேத்கர் 1936வாக்கில் ஒரு போராட்டத்தைத் துவங்கியபோது, வைக்கம் போராட்டம்தான் தனக்கு ஒரு உணர்ச்சியைக் கொடுத்தாக குறிப்பிடுகிறார். கேரளாவிலும் 1936ல் கோவில் நுழைவு பிரகடனம் செய்யப்பட்டபோது, வைக்கம்தான் அதற்கு முக்கியக் காரணம் என எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார் தனது வைக்கம் போராட்டம் என்ற நூலில் பழ.அதியமான்.
இந்தியாவை ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வருவதற்கு வெறிகொண்டு அலைகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பன எதிர்ப்பு மரபு ஒன்றுதிரள வேண்டிய அவசியத்தை இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா நமக்கு மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் உருவாக்க நினைக்கின்ற அகண்ட பாரதம் என்ற இந்துராஷ்டிரம் அப்பட்டமான பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நிறுத்துகின்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யம் ஆகும் என்பதை தந்தை பெரியாரின் மரபுகளில் இருந்து மார்க்சிய லெனினிய இயக்கங்கள் கற்றுக் கொண்டது.
இந்திய பொருள் முதல் வாதத்தின் வரிசையில் சித்தர்கள் துவங்கி தந்தை பெரியார் காலகட்டம் வரையில் மிகப்பெரிய பார்ப்பன எதிர்ப்பு மரபுக்கு தமிழகம் சொந்தமானது என்ற காரணத்திலேயே ஆரிய பார்ப்பன கும்பல் எந்த வகையில் முயற்சி செய்தாலும் தமிழகத்தில் அவர்களால் மிகப்பெரிய வெற்றியை சாதிக்க முடியவில்லை.
படிக்க: அற்பப் புழுக்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பெரியார் வைக்கம் வீரர் தான்!
இதற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகின்ற திராவிட இயக்கங்கள் ஆரிய பார்ப்பன கும்பலின் சித்தாந்தத்திற்கு எதிராக முழுமையாக வீச்சாக போராடவில்லை என்ற போதிலும் அவர்கள் உருவாக்கிய அடித்தளத்தின் மீது நடந்துதான் காவி என்று அழைக்கப்படுகின்ற பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பது தான் உண்மையாகும்.
கேரளத்தின் நாராயண குரு தமிழகத்தின் அய்யா வைகுண்டர் அதன் பிறகு வள்ளலார் போன்ற பார்ப்பன இந்து மதத்திலேயே அதற்கு எதிராக கலகம் செய்த மதச் சீர்திருத்தவாதிகள் மட்டுமின்றி பார்ப்பன இந்து மதத்தை அதன் ஈரக்குலையில் தாக்கி அம்பலப்படுத்திய தந்தை பெரியாரின் சீர்திருத்த கருத்துகளை எடுத்துக்கொண்டு ஆரிய பார்ப்பன கும்பலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறுவோம்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு இத்தகைய மரபுகளை உயர்த்தி பிடிப்பது மட்டுமின்றி அதனை கடைபிடிக்கின்ற மக்கள் அனைவரையும் ஒரு அணியின் கீழ் கொண்டு வருவோம்.
‘சதுர் வர்ணம் மாயா சிருஷ்டம்’ என்று முன்வைக்கின்ற பகவத் கீதை சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களின் வேத புத்தகம் அல்ல என்பதையும், பார்ப்பனக் கும்பலை கடவுளாக, பூதேவர்களாக ஏற்றுக் கொள்வதை மறுக்கின்ற பார்ப்பன எதிர்ப்பு மரபு கொண்ட அனைத்து விதமான தத்துவங்களையும், வழிபாட்டு முறைகளையும் நாடு முழுவதும் தேடி ஒன்றிணைப்போம்.
கம்யூனிஸ்டுகள் முன்னின்று செய்ய வேண்டிய பணிகளை திராவிட இயக்கங்கள் செய்யும்போது அதனை பாராட்டுவதும் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்ற பணியை மேற்கொள்வது தான் இன்றைய காலகட்டத்தின் அவசியம் என்பதை எடுத்துச் செல்வோம்.
- தமிழ்ச்செல்வன்.







தந்தை பெரியார் அவர்களின் மகத்தான வைக்கம் போராட்டம் குறித்து கட்டுரை ஒன்றினை விரிவாக எழுத எண்ணியிருந்தேன். ஆனால் வாட்ஸ் அப் குழுவில் மட்டும் சிறிய அளவில் பதிவிட்டு முடித்துக் கொண்டேன். நான் நிறைவேற்ற இயலாததை தோழர் தமிழ்ச்செல்வன் சிறப்பாகவே தனது கட்டுரையில் பல்வேறு அம்சங்களை தொட்டு விளக்கி இருக்கிறார்.
தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
கட்டுரையை படிக்கும் போது பெரியாரின் வரலாற்றை தெரிந்துகொள்ள முடிந்தது. சிறப்பு.