
பாசிச ஆர்எஸ்எஸ் குண்டர் படையின் ஒரு உட்பிரிவான சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் நேற்று கீழ்க்கண்டவாறு மிரட்டியுள்ளார். “மாற்று மதத்தினர் மற்றும் சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படமெடுக்கும் மும்பை தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கே சென்று கர்ணி சேனா தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
விரைவில் வெளியாக இருக்கும் “யாதவ் ஜி கி லவ் ஸ்டோரி” மற்றும் “கூஸ்கோர் பண்டட்” ஆகிய திரைப்படங்கள் மாற்று சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் உள்ளது. சத்ரிய, பிராமண சமூகங்களைக் குறிவைத்த தயாரிப்பாளர்கள் இப்போது யாதவ சமூகத்தை இழிவுபடுத்துகின்றனர்.
சனாதனத்தை குறிவைத்து நமது தெய்வங்களை கேலி செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது. கர்ணி சேனா தொண்டர்களை அதற்கு தயாராக இருக்குமாறு நான் உத்தரவிடுகிறேன்”. இவ்வாறு ஷெகாவத் கூறினார்.
சனாதன தர்மம் என்றும் சொல்லக்கூடிய பார்ப்பன மேலாதிக்கத்தை அங்கீகரித்து அடிமையாக வாழ்கின்ற சமூக கட்டமைப்பை உருவாக்க துடிக்கின்றது ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக, பஜ்ரங் தள் மற்றும் பல்வேறு பெயர்களில் செயல்படக்கூடிய பாசிச குண்டர் படை.
சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள் என்று முன்வைக்கின்றனர் பார்ப்பன சனாதனிகள். நிலையானது எனும் போது எந்த மாற்றத்தையும் அது ஏற்காது; அங்கீகரிக்காது என்று நாம் எடுத்துக் கொள்வோம்.
பார்ப்பனர்கள் மனுதர்மத்தின்படி கடல் கடந்து செல்லக்கூடாது; சொத்து சேர்த்துக் கொள்ளக் கூடாது; அடுத்த வேலை உணவை சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது; ‘பஹதி பிச்சாந்த் தேஹி’ என்று வீடு வீடாக பிச்சை எடுத்து தான் உணவு உண்ண வேண்டும் என்று முன்வைக்கின்ற சனாதன கருத்துக்களை பார்ப்பனக் கும்பல் அங்கீகரிக்கிறதா?
அமெரிக்காவில் செட்டிலான பார்ப்பனர்கள் அங்கேயே வீடுகளை வாங்கிக்கொண்டு குடியுரிமை பெற்றுக்கொண்டு, அமெரிக்க அம்பிகளாக குடித்தனம் நடத்துவது இந்து தர்மத்திற்கு எதிரானது இல்லையா? நாடு விட்டு நாடு சென்று மிலேச்சர்களின் தேசத்தில் அவர்களின் கீழ் வேலை பார்த்துக் கொண்டு குடியிருப்பது சனாதன இந்து தர்மத்திற்கு அவமானம் இல்லையா
“சனாதன தர்மத்தைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் படைக்கக்கூடிய ஒரு தலைவன், அவனைப் படைப்பில் அண்டங்களாகவும் பேரண்டங்களாகவும் உயிர்களாகவும் மரங்களாகவும் பூச்சிகளாகவும் வியாபித்திருக்கிறான். அந்தந்த உயிர்களுக்குள்ளாகவும் அவன் தொழிற்படுகிறான் என்பதுதான் சனாதன தர்மம்”. என்கிறார் தமிழகத்தின் கவர்னராக மக்கள் வரிப் பணத்தில் செயல்படுகின்ற ஆர்என் ரவி.
படிக்க:
♦ தீட்சிதர்கள் பின்னால் ஆளுநர்? POCSO போடுங்க ஸ்டாலின்! Adv Raju
♦ காஞ்சி சங்கர மடத்துக்கு புதிய சங்கராச்சாரி தேர்வு! பார்ப்பனர்கள் மட்டுமே சங்கராச்சாரியாவது ஏன்?
“சனாதன தர்மம் என்றால் என்ன? நமது ரிஷிகளும் ஞானிகளும் உலகின் துவக்கமென்ன, படைப்பின் மூலமென்ன என்பதை நாம் எளிய முறையில் புரிந்துகொள்வதற்காக நமது உபதேசங்களின் மூலமாகவும் தத்துவங்களின் மூலமாகவும் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.” என்று சனாதனத்தை பற்றி உபதேசம் செய்கின்றார்.
இதனை இப்படி சொல்கிறார்கள், “பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம். அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு காஞ்சி மஹா பெரியவர் தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம்…
ஒரு தடவை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள், கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள். அவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்.
சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்… [அவருக்கு இந்த ஆச்சாரம், அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]
சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..! [இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து “தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]
காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும்…கடல் கடந்து போய்விட்டு வந்த பிராமணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..! ஆனால்…. இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?
மஹா பெரியவர், சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..? இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி இங்கிதமாக சமாளிப்பது? இதோ… சதாசிவம் பெரியவர் முன், குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் …
நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க… மஹா பெரியவர், மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு, சற்றே திரும்பி அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் : “இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” ஆஹா… அசந்து விட்டாராம் ரா.கணபதி…! என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு….நாகரிக நாசூக்கு.! இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்…! பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி .. திருப்தியோடு சொன்னாராம்: “பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா… ”
ரா.கணபதி, மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க… அதில் மந்தஹாசப் புன்னகை…! பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை. மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை. இதற்குப் பெயர்தான் “நாசூக்கு” என்று சனாதனத்தை மீறிய பார்ப்பனருக்கு கொடுத்த லோகக் குரு கொடுத்த ‘சனாதன அல்வாவை’ வியந்துப் பாராட்டுகின்றனர்.
இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்ல வருகின்ற கருத்து என்ன பழமையானது, பாரம்பரியமானது என்பதால் அது நிலையானதாக இருக்க வேண்டும். அதுவே புனித தன்மை கொண்டது என்று கூறுகிறார்கள். இந்த சனாதன தர்ம நெறிப்படிதான் பார்ப்பனக் கும்பல் வாழ்கிறதா என்ற கேள்விக்கு மட்டும் இவர்கள் ஒருபோதும் பதில் சொல்வதில்லை.
“சனாதன தர்மம் உங்களுக்கோ எனக்கோ சொந்தமில்லை – அது படைப்பு வகுத்தது. அதனுடன் ஒத்திசைவில் இருப்பதுதான் உங்களுக்கும், எனக்கும் உரியது. இங்கே இந்தியாவில், நாம் அதைப் புரிந்துகொண்டு, சட்டங்களாக்கி, ஒரு குறிப்பிட்ட விதமாகத் தொகுத்தோம். உலகின் மற்ற பகுதிகளில், இதைப் பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லை என்று இதற்கு அர்த்தமல்ல. பல தனிப்பட்ட மக்கள் இது பற்றி அறிந்திருந்தனர். அவர்கள் அதை ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி என்று தொகுத்து எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மனிதர்கள் அதனுடன் ஒத்திசைவில் இருந்துள்ளனர், ஏனென்றால் எல்லா இடங்களிலும், மனிதர்கள் மலர்ந்து சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.
எனவே சனாதன தர்மம் இன்று நீர்த்துப் போய்விட்டதா? என்றால், அதை நீர்த்துப்போகச் செய்வது கூட நம் கைகளில் இல்லை. தனிப்பட்ட புரிதல் நீர்த்துப் போயிருக்கலாம். நபருக்கு நபர், புரிதலின் பரிமாணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சனாதன தர்மத்தை நீர்த்துப்போகச் செய்ய முடியாது, ஏனென்றால் அது உயிரின் அடித்தளமாக இருக்கிறது. நீங்கள் அதை நீர்த்துப்போகச் செய்ய முடியாது, ஏனென்றால் அதனை நீங்கள் உருவாக்கவில்லை.” என்று உருட்டுகிறார் ஜக்கி வாசுதேவ்.
ஜக்கியின் வாதப்படி அதனை நாம் உருவாக்கவில்லை எனும்போது அதனை எப்படி பாதுகாக்க முடியும். நீர்த்துப்போக செய்யவும் முடியாது எனும் போது அக்ரஹாரத்து பார்ப்பனன் முதல் அமெரிக்கப் பார்ப்பனன் வரை சனாதனத்தை பாதுகாப்பதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்வது எதற்காக?
பகுத்தறிவு, நாத்திகம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட பொருள் முதல்வாத மரபு தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவிக் கொண்டுள்ளது என்பதால் பார்ப்பனக் கும்பல் மற்றும் அவர்களை குண்டர் படையான சத்திரிய, வைசிய சாதிகளில் உள்ள கொலைகார அமைப்புகள் கேள்வி எழுப்பும் போது நம்மால் மிகவும் எளிதாக கேள்வி கேட்டு எதிர்க்க முடிகிறது. ஆனால் வட மாநிலங்களில் இவ்வாறு கேள்வி கேட்பது, எதிர்த்து பேசுவது, எழுதுவது, திரைப்படம் எடுப்பது உள்ளிட்ட அனைத்து வகையான எதிர்ப்புகளும் கொடூரமான ‘ஃபத்வா’ மூலம் அடக்கி ஒடுக்கப்படுகிறது.
‘சரணடைந்து விடு அல்லது செத்துமடி’ என்பதுதான் சனாதனத்தின் இன்றைய அறைகூவலாக உள்ளது. இதில் இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதா அல்லது இரண்டுக்கும் வெளியில் ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்குவதற்கு போராட முன்னணியில் நிற்பதா என்பது தான் நம் முன்னே உள்ள கேள்வி?
◾ பார்த்தசாரதி
புதிய ஜனநாயகம் தினசரி






