மீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு சிறுவன் அழுது கொண்டே தன் தாயிடம் பேசும் வீடியோவை காண முடிந்தது. அந்த காணொளியில் சிறுவன் “அம்மா ஒழுங்கா பேசுமா, நீ பேசுறது புரியவே இல்ல” எனவும் தமிழில் பேசும்போது “இப்படியே பேசுமா” என்றும் சொல்கிறான். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த காணொளியில் வருவது போன்ற குழந்தைகளை நாமும் நேரிலும் பார்த்துதான் வருகிறோம். பல குழந்தைகள் உளவியல் ரீதியாக பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இதனை பல பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை என்பதே உண்மை. ஆங்கிலம் பேசினால் தான் அறிவு என்று ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து விடுகிறார்கள்.

தன் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வியில் பயில்வதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. தாய்மொழியில் பயில்வதை தாழ்வாக பார்க்கும் பண்பும் சமூகத்தில் மேலோங்கி உள்ளது. இதனை உருவாக்கியது தனியார் கல்வி நிறுவனங்கள் தான். பள்ளிக்கு உள்ளே சென்றால் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என கட்டளை பிறப்பிப்பது, மீறினால் அபராதம் விதிப்பது, அப்படி மீறும் குழந்தைகளை Parents மீட்டிங் போது அனைவரும் முன்னிலையிலும் சுட்டிக்காட்டுவதால்  வீட்டிற்கு வந்த பின்பு தண்டிப்பது அல்லது வீட்டிலும் வீடியோவில் பார்ப்பது போல் அதே டார்ச்சர் செய்வது என குழந்தைகளை உளவியல் ரீதியாக காயப்படுத்துகிறார்கள்.

இந்த வீடியோவில் பேசும் குழந்தை போன்றுள்ள ஒன்றாம் வகுப்பு கூட தாண்டாத குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும் என நினைப்பது எவ்வாறு சரியாக இருக்க முடியும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுக்கின்றன.

இரண்டு தலைமுறைகளாக பட்டதாரிகளை கொண்ட குடும்பத்தில் ஆங்கிலத்தில் உரையாடும் பழக்கம் இயல்பானதாகவே இருக்கும். ஆகையால் அவர்கள் குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் பேச பழகி விடுகிறார்கள். கல்லூரி படிப்பை தொடாத பெற்றோர் குடும்பத்தில் இருந்து செல்லும் குழந்தைகள் அதேபோல பேச வேண்டும் என நினைப்பது எவ்வளவு அபத்தம்.

படிக்க: திருவள்ளுவர் தொடர்ந்து அவமதிப்பு: தமிழ் மண்ணில் இருந்து R.N. ரவி விரட்டியடிக்கப்படல் வேண்டும்!

ஆங்கிலம் பேசுவதை ‘அறிவு’ என்று சொல்லக் கூடாது. எந்த மொழியையும் தேவையை ஒட்டி தெரிந்து கொள்வதும் பேசுவதும் இயல்பானதே. தனியார் கல்விக் கொள்ளை நிறுவனங்கள் இந்தியாவில் தோன்றாத காலத்தில் படித்தவர்கள் பலரும் ஆங்கிலம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். வெளிநாடுகளிலும் சென்று வேலை செய்கிறார்கள். சுப்பிரமணி என்ற எக்ஸ்(டிவிட்டர்) பதிவர்  “ஏம்மா பாடம் நடத்துவது தமிழ்ல சொல்லிக் கொடும்மா. நான் எல்லாம் பத்தாவது வரைக்கும் தமிழ் மீடியம் தான். ‘வாட் இஸ் யுவர் நேம்’ இதற்கு அடுத்த இங்கிலீஷ் வார்த்தை தெரியாது. இன்னைக்கு கவர்மெண்ட்ல கெசட் ரேங்க்ல ரிட்டையர்டு ஆகி இருக்கேன். கலெக்டருக்கு, கவர்மெண்டுக்கு எல்லா ப்ரோபோசல் இங்கிலீஷ்ல போட்டு இருக்கேன்‌. தேவை வரும்போது தானா இங்கிலீஷ் வருமா” என அந்த சிறுவனின்  வீடியோவுக்கு கீழே பதிவிட்டுள்ளார் இதுதான் எதார்த்தம்.

தேவை ஏற்படும்போது எந்த மொழியையும் தெரிந்து கொள்ள முடியும். பல்வேறு சுற்றுலாத்தலங்களில் கைடாக வேலை பார்ப்பவர்கள் நான்கு, ஐந்து மொழியை சரளமாக பேசுவார்கள். சிலர் ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன் மொழியை கூட பேசுவார்கள். அவர்களில் பலர் பள்ளி படிப்பையே முழுமையாக முடிக்காதவர்கள். அவர்கள் எந்த பள்ளி, கல்லூரிக்கும் சென்று மொழியை கற்றுக் கொள்ளவில்லை நடைமுறையும் தேவையும் தான் கற்றுக் கொள்ள செய்தது. ஆகையால் எந்த மொழியாக இருந்தாலும் தேவைகள் ஏற்படும் போது தானாக தெரிந்து கொள்வார்கள்.

“ப்ளீஸ் தமிழ்ல பேசுமா” குழந்தையின் அழுகை ரசிப்பதற்கு அல்ல!
தாய்மொழியில் உரையாடுவதும் சிந்திப்பதும் குழந்தையின் மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.
  • மொழியை குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது குழந்தைகள் சமூகத்தில் உளவியல் ரீதியான துன்பங்களை எதிர்கொள்கிறார்கள்..
  • தாய் மொழியில் பேசவிடாமல் செய்வதன் மூலம் தன் மொழி ‘தாழ்ந்தது’ என்ற எண்ணத்தை தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இது குழந்தையிடம் தாய் மொழி மீதான அவநம்பிக்கையை உருவாக்கும். தாய்மொழியில் கல்வி கற்காததால் அவர்களின் திறமையும் பாதிக்கப்படும்.
  • தாய்மொழியல்லாத மொழியில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது வகுப்பறை சூழலில் பயம், பதட்டம் அதிகரிக்கும். தவறாக பேசி விடுவோமோ என்ற உளவியல் துன்பத்தை எதிர்கொள்வார்கள்.
  • சில குழந்தைகள் பெற்றோருடன் வீட்டில் கூட ஆங்கிலத்தில் பேச முயல்வதால், குடும்ப உறவு இயல்பு உரையாடல் பாதிக்கப்படுகிறது. பெற்றோரையே தாழ்வாக பார்க்கும் நிலைமையும் உண்டாகிறது.
  • முக்கியமாக அறிவியல் கோட்பாடுகளை புரிந்து கொள்ளுதல், படைப்பாற்றல், கற்றல் திறமை குறைவாகும் அபாயம் உண்டு. குழந்தை சிந்திக்கவும் கற்கவும் அதிகம் வசதியாக இருப்பது தன் தாய்மொழியில் தான். அதனை ஒதுக்கி வேறு ஒரு மொழி திணிக்கப்படும்போது கற்றல் திறன் குறையும்.

பெற்றோர்கள் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளிடம் மொழி திணிப்பை கட்டாயப்படுத்தினால் தங்களது குழந்தைகளை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் வேலையை செய்கிறார்கள். உளவியல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இதைத்தான் அரசும் அதிகார வர்க்கமும் எதிர்பார்க்கிறது அதற்கு நாம் பலியாகி விடக்கூடாத சிறுவனின் அந்த வீடியோ நாம் கண்டு ரசிப்பதற்கு அல்ல. பாடம் கற்றுக் கொள்வதற்கு.

  • சுவாதி

1 COMMENT

  1. மிகவும் சிறப்பான இந்த கட்டுரை ஒரு சிறுவன் தமிழ் பேசுமா என்று அழுவது வியப்பாக உள்ளது அந்த காட்சி படம் ஒன்றை நிமிடம் ஓடினாலும் தன் அம்மா ஆங்கிலத்தில் பேசுவதை எரிச்சலடைந்த சிறுவன் அவன் மனநிலை என்பது கோபத்தின் உச்சம் அடைந்து தலையில் அடித்துக் கொள்வது ஒரு இயல்பான தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது மிகவும் அற்புதமான ஒரு கட்டுரை சிறுவன் வீடியோவும் சிறப்பாக உள்ளது இந்தக் கட்டுரை படிக்கும் பெற்றோர்கள் ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே உணர்த்துகிறது

    கட்டுரை ஆசிரியர் தோழர் சுவாதி அவர்களுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here