உனக்காக நான் – திரை விமர்சனம்
மும்பை மட்டுமல்லாது தமிழகத்திலும் அதே நிலை இருந்த போதிலும், தமிழ் சினிமாவில் காதல், நட்பு, உறவுகள் என செண்டிமெண்ட் கோலோச்சியிருந்த காலம் என்பதால் இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் நட்பு, தியாகம், கருணை என கொஞ்சம் திசை திருப்பி விடப்பட்டுள்ளது.

பராசக்தி, ஜனநாயகன் என தமிழக சினிமா செய்திகள் ஊடகங்களை நிறைத்திருக்க, 1960 களில் வெளிவந்து, சமீபத்தில் சன் லைஃப் சேனலில் பார்க்க நேர்ந்த, ”உனக்காக நான்” என்ற இந்தி படத்தின் ரீமேக் குறித்து இப்படி ஒரு விமர்சனம் எழுதுவேன் என நினைக்கவில்லை. தொழிற்சங்கம், தொழிலாளர் பிரச்சனைகள் குறித்த கதைக்களம் கொண்ட இப்படத்தில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தொழிற்சங்க தலைவர்கள், தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய, தொழிலாளி வர்க்க பிரச்சனையை கதைக் களமாக கொண்ட திரைப்படம்.

அமிதாபச்சன், ராஜேஷ்கண்ணா நடித்த ’நமக் ஹராம்’ என்கிற இந்தி படத்தை ரீமேக் செய்து இந்த படத்தை எடுத்துள்ளார்கள். 1970 காலகட்டங்களில் இந்தியாவின் டெக்ஸ்டைல் தலைநகரமாக இருந்த மும்பை (அப்போது பாம்பே) சந்தித்த தொழிலாளர் பிரச்சனைகள், அதன் விளைவாக உருவான தொழிற்சங்கங்கள், கூர்மையடைந்திருந்த டெக்ஸ்டைல் ஆலை முதலாளிகள் – தொழிலாளிகள் போராட்டம் என கொதி நிலையில் இருந்த மும்பையின் சினிமா முகமாக நமக் ஹராம் திரைப்படம் உருவாகி இருந்தது.

நமக் ஹராம் படம் வெளிவந்த அடுத்த பத்தாண்டுகளில் நிலைமை வெகு தீவிரமடைந்து இந்தியாவின் நீண்ட வேலை நிறுத்த போராட்டம் என சொல்லுமளவுக்கு 2,00,000 மில் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் 18.01.1982 துவங்கியது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக போராடிய தொழிலாளர்களை ஒடுக்கினர் மில் முதலாளிகளும், இந்திராகாந்தி தலைமையிலான அரசும்.

இப்படம் மட்டுமல்லாது Bombay our city என்கிற ஆவணப்படம், City of gold, Mill workers என்கிற மராத்தி படங்கள் இந்த வரலாற்று பின்புலத்தில் எடுக்கப்பட்டவை. வேலை நிறுத்த போராட்டத்துக்கு பின்னர் முழுவதுமாக மில்களை மூடி, டெக்ஸ்டைல் துறை உற்பத்தியை முடக்கி ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மூலதனத்தை மாற்றி, தொழிலாளர்களை ஒடுக்கினர், முதலாளிகள். மில் தொழிலாளர் போராட்டங்களுக்கு நேரடியாக தொடர்பில்லாத போதும், வேலையிழந்து, உதிரிகளாக துரத்தியடிக்கப்பட்ட மில் தொழிலாளர்கள், அவர்களின் வாழிடங்களை சூறையாடும் முதலாளிகள் என்ற கதைக்களத்தில் உருவானது தான் ரஜினி நடித்த காலா திரைப்படம்.

மும்பை மட்டுமல்லாது தமிழகத்திலும் அதே நிலை இருந்த போதிலும், தமிழ் சினிமாவில் காதல், நட்பு, உறவுகள் என செண்டிமெண்ட் கோலோச்சியிருந்த காலம் என்பதால் இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் நட்பு, தியாகம், கருணை என கொஞ்சம் திசை திருப்பி விடப்பட்டுள்ளது. இருந்தபோதும் தொழிலாளர்கள் குடியிருப்புகள், அவர்கள் வாழ்நிலைமைகள், நாகேஷின் கதாப்பாத்திரம் மூலம் சொல்லியிருக்கும் கருத்துக்கள், ”வறுமைக்கு நெருங்கிய நண்பன் வியாதி”, ”ஓயாத துன்பங்கள், உயராத குடிசைகள் உள்ளவரை சாராயம் தான் சாந்தி தரும் மருந்து” போன்ற வசனங்கள், சுரண்டலால் வறுமையில் உழன்ற அன்றைய தொழிலாளர் வர்க்கத்தின் நிலையை கண்முன் காட்டுகிறது.

”காடு கண்டா விறகு வெட்டுறது, அதை கட்டு கட்டா விலைக்கு விக்கிறது” என்ற நாடக வடிவலான முதலாளித்துவ எதிர்ப்பு பிரச்சார பாடல்” மற்றும் இறைவன் உலகத்தை படைத்தானா? ஏழ்மையை அவன்தான் படைத்தானா? ஏழையை படைத்தவன் அவன் என்றால், இறைவன் என்பவன் எதற்காக?” ஆகிய கவிஞர் கண்ணாதாசன் எழுதிய இரு பாடல்கள் கருத்தாழம் மிக்கதாக அமைந்துள்ளது. விபச்சாரம், சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஏழைத் தொழிலாளர்கள் ஈடுபடுவது அவர்களின் வாழ்நிலை காரணமாக மட்டுந்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளனர்.

படிக்க:

 சினிமா: பாசிசத்தின் கீழ் கலைஞன் சோதிக்கப்படுகிறான் !
 கார்ப்பரேட்டுகளின் பிடியில் சினிமா! ரசிகனின் தலையை தடவும் நடிகர்கள்!

சிவாஜியும் ஜெமினி கணேசனும் நண்பர்கள். சிவாஜி முதலாளி, ஜெமினி கணேசன் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். தனது நண்பனின் ஆலையில் தொழிற்சங்க தலைவராக நடிக்க தொழிலாளியாக ஆலைக்கு செல்லும் ஜெமினி, தொழிலாளர்களோடு பழகி, அவர்களின் வாழ்நிலைமையை பார்த்து தானும் ஒரு தொழிலாளியாகவே மாறி விடுவது தான் கதையின் கரு.

பரிதாப உணர்ச்சிக்காக சில சலுகைகள் கொடுக்கலாம், ஆனால் தொழிலாளர்கள் நமக்கு உழைத்துக் கொடுக்க கடமைப்பட்டவர்கள் என்ற  கண்ணோட்டம் தான் செல்வ செழிப்பான வாழ்நிலையில் இருக்கும் முதலாளி சிவாஜியின் சிந்தனையாக இருக்கிறது. தொழிலாளர்கள் தான் உலகின் இயக்கம் என்பதை அவர்களோடு பழகி, அவர்களின் வாழ்வியல் ஊடாக புரிந்து கொண்டு அவர்களுக்காகவே வாழ்ந்து சாவது ஜெமினியின் சிந்தனை.

வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்ற மார்க்சியக் கோட்பாடு மிகச்சரியாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படம் யூடியுப் இல் இலவசமாக கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பார்க்கவும்.

அரை நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய தொழிலாளர்  இயக்கம் சந்தித்த அந்த அடக்குமுறை, சுரண்டல் வடிவம் மாறினாலும், அதன் உள்ளடக்கம் இப்போது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல பிரிவுகளாக நம்மை பிரித்துச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவத்தை ஒழிக்க நமக்காக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இளமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here