பெங்காலி ஃபைல்ஸ்: தொடர்ந்து மத மோதலைத் தூண்டி கல்லா கட்டும் காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர்!

பெங்காலி ஃபைல்ஸ்: தொடர்ந்து மத மோதலைத் தூண்டி கல்லா கட்டும் காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர்!
இவரின் சிந்தனை வறட்சி பேட்டி முழுவதும் வெளிப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு அரசியல்வாதிகள் அனைவரும் வாயை மூடிக் கொள்ள வேண்டுமாம்.

காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரியின் இயக்கத்தில் அடுத்த படம் ‘பெங்காலி ஃபைல்ஸ்’ நாளை ரிலீஸ் ஆகிறது. இன்று அவரது பேட்டி ஒன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்திருக்கிறது

மத மோதல்களைத் தடுப்பது என்னுடைய வேலை அல்ல என்று பேட்டியின் ஆரம்பத்திலேயே அறிவித்து விடுகிறார் டைரக்டர். இந்தியாவில் 1200 ஆண்டுகளாக சிறுபான்மை ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களை கொடுமைப்படுத்தியதாக கூறுகிறார் விவேக் அக்னி. பிரிவினையின் போது வன்முறைக்குட்பட்ட வங்காளி இந்துக்களுக்கு ஆறுதல் கூறும் படமாக பெங்காலி பைல்ஸ் இருக்குமாம்.

படிக்க: காஷ்மீர் ஃபைல்ஸ்: முஸ்லிம்கள்தான் பண்டிட்டுகளைப் பாதுகாத்தார்கள்- உளவுத்துறை முன்னாள் தலைவர்.

இவரின் சிந்தனை வறட்சி பேட்டி முழுவதும் வெளிப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு அரசியல்வாதிகள் அனைவரும் வாயை மூடிக் கொள்ள வேண்டுமாம். தலித் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரையும் வாயை மூடிக் கொள்ள வேண்டியவர்கள் பட்டியலில் சேர்த்து விடுகிறார். இவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க ஊழல் ஒழிப்பில் கவனம் செலுத்த வேண்டுமாம். ஊழல் ஒழிக்கப்பட்டால் இந்தியாவின் 90% பிரச்சனைகள் தானாக தீர்ந்து விடுமாம்.

என்பது கோடி மக்கள் மாதந்தோறும் அரசு வழங்கும் ஐந்து கிலோ இலவச அரிசியை நம்பி இருப்பது ஒரு சமூகக் கொடுமையாக இவருக்குத் தெரியவில்லை. ஐந்தாயிரம் பியூன் காலியிடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பதும் அதில் ஆயிரக்கணக்கானோர் எம் பில், பிஹெச்டி பட்டதாரிகள் என்பதும் இவருக்கு ஒரு பிரச்சினையே இல்லை.50 ஆயிரம் ரூபாய் கடனுக்காக பெற்ற பிள்ளையை விற்பதும் கிட்னியை விற்பதும் இவர் காதை எட்டவில்லை

சரி, இவர் எதை ஊழல் என்கிறார்? அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழலுக்காக அதானியின் மீது வழக்கு பதியப்பட்டிருப்பது, சமீபத்தில் பல வங்கிகள் அனில் அம்பானியை பிராடு என முத்திரை குத்தியிருப்பது பற்றி எல்லாம் இவர் எங்காவது வாய் திறந்திருக்கிறாரா? இல்லை

ஹெல்மெட் போடாதவரிடம் ஏட்டையா நூறு ரூபாய் பெறுவதும் கிராம நிர்வாக அதிகாரி 500 ரூபாய் பெறுவதும் தான் இவர்கள் பார்வையில் நாட்டின் மிகப்பெரிய ஊழல்! இதை ஒழித்து விட்டால் நாடு சுபிட்சம். அபாரமான மூளை!

கம்யூனிசம் வெளிநாட்டு தத்துவம்; இந்தியாவுக்குப் பொருந்தாது போன்ற அரிய கருத்துக்களும் பேட்டியில் உண்டு.

பேட்டியின் இறுதியில் உமர் கலித்துக்காக நீங்கள் குரல் கொடுப்பீர்களா எனக் கேட்கிறார் பேட்டி எடுத்தவர். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, நான் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார் விவேக் அக்னிஹோத்ரி

மக்கள் தலைவர்கள் அனைவரும் வாயை மூடிக் கொள்ள வேண்டும், உங்கள் படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும். இந்தியா வல்லரசு ஆகிவிடும், அப்படித்தானே விவேக்?

இன்றைய சூழலில் மத மோதல்களைத் தூண்டுவதற்காக படம் எடுத்து கல்லா கட்டுவதை விட பெரிய ஊழல் ஏதும் உண்டா?

நன்றி: ஆறுகுட்டி பெரியசாமி
முகநூல் பதிவு

1 COMMENT

  1. அருமையான விமர்சனம் மகா மோதல்களை உருவாக்கி திரைப்படத்தின் மூலம் பல்லாக்கட்டும் ஊழல் தான் பெரிய ஊழல் என்பதை தெளிவாக போட்டு உடைத்துள்ளது இந்த கட்டுரை இனிதாவது படத்தை இயக்கிய விவேக் வாய் திறப்பாரா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here