சென்ற நூற்றாண்டின் ஒப்பற்ற பதிவுகளின் இசைத்தொகுப்பை தனது ஒட்டு மொத்த வாழ்வியலாகவே பெற்றிருக்கும் இசை படைப்பாளர்

எலெனி கரைன்ட்ரௌ

ஒரு பெண்ணைத் தன் அறிவு. திறன், தொழில்நுட்பம் சார்ந்த தன்மையில் அல்லாது அவளது கட்டமைக்கப்பட்ட குணாதிசயங்களோடு காட்சிப்படுத்தப்படும் மனக்குறைகள் களைந்த மேற்கத்திய சமூகத்தில், தான் வாழ்ந்த பாரம்பரியத்தையும் தனக்கே உரித்தான வாழ்வியலைத் தன் தொழிற்களத்தில் புகுத்தி வாழ்நாள் முழுதும் அவ்வெளிய வெளியை விரிவாக்கியிருக்கிறார் எலெனி கரைன்ட்ரௌ.

காற்று வேயும் இசை, கற்கூரை மழையொலி, நீரோடைச் சலசலப்பு, புள்ளினக் கூவல், பனி படர்த்திய நிசப்தம், கிராம சதுக்கத்தில் திருவிழாக்களில் இசைக்கப்படும் குழல்கருவிகளின் ஒலி மலைமுகடுகளில் எதிரொலிக்கும் நினைவுகளைச் சுமந்த மத்திய கிரீசின் தனித்தமைந்த டெய்கியோ மலைக்கிராமத்தில் எலெனி கரைண்ட்ரௌ (நவம்பர் 25, 1941ல்) பிறந்தார்.

கல்வி கற்பிக்கும் தொழிலை அவர் தந்தை மேற்கொண்டதால் அக்குடும்பம் ஏதென்சுக்கு இடம்பெயர்ந்தது. விதியின் தற்செயலாக, அவரது புதிய இல்லம் திறந்த வெளி திரைப்பட அரங்கிற்கு பக்கத்திலேயே அமைந்திருந்தது, அது, அவர் தனது படுக்கையறை சன்னல் வழியாகவே அவ்வரங்க நிகழ்வுகளைக் கவனிக்கும்படி ஏதுவானதாக இருந்தது. திரை வானிற்கும் பியானோவிற்கும் இடையிலான தன் வாழ்வின் மைய வேட்கையை அவர் தனது எட்டாவது வயதில் கண்டுகொண்டார்.

1967ல் இராணுவ ஆட்சிக்குழு (1967-1974) அவரை கிரீசிலிருந்து வெளியேற்றியது, அவர் தன் இளைய மகனை எடுத்துக்கொண்டு பாரிசுக்கு இடம் பெயர்ந்தார். ஃபிரெஞ்சு அரசின் உதவித்தொகையைக் கரைண்ட்ரௌ பெற்றார். இன இசையியல் பயின்றார். பல்கலைக்கழக வகுப்புகளில் பங்கேற்று சரித்திரம் மற்றும் தொல்லியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்த காலகட்டங்களில் அவர் ஒரு சுயகற்பித இசையமைப்பாளராக தன்னை வளர்த்துக் கொண்டார். அதன்பிறகு அவர் பிரபலமான பாடல்களை இசையமைக்கத் துவங்கினார்.

உச்ச சுருதியில் பாடப்பட்ட பல்குரல் பாடல்கள், இரவு முழுதும் சோளம் கழற்றும், கதிரடித்தலின் பின்னால் கிடந்த மழலையர், நட்சத்திரம் எண்ணும், தேவாலயத்திலிருந்து கேட்கும் மெல்லிசைகள், தொடர் குரல்களாக உடனிசைக்கும் மக்களின் துதிகள் போன்ற அவரின் பிறந்த நிலத்து வரலாற்றுச் சாரங்களையும் பாதிப்புகளையும் உள்ளடக்கிய ஒலிப்பிரபஞ்ச இசையதிர்வுகள் அவரது திரைப்படம், தொலைக்காட்சி, மற்றும் நாடகங்களுக்கான எலெனியின் இசையமைப்பை கடந்த நான்கு தசாப்தங்களாக
ஆக்கிரமித்தன. ஏதென்சுக்கு திரும்பியவுடன் பாரம்பரிய இசைக்கருவிகளுக்கான ஆய்வகத்தை நிறுவி இன இசையியல் துறையின் மூன்றாம் வானொலி நிகழ்ச்சிகளில் பகிர்ந்தார்.

1976ல் அவர் சமகால இசைப் பதிப்பு (ECM) ஐக் கண்டடைந்தார். அவர் தனது உலகைக் கண்டுணர்ந்தார். மொழியியல் மற்றும் பாணியின் பாரபட்சமின்றி அவரது உணர்வை நம்பி இசைக்குறிப்பு இயற்றினார். திரைப்படங்களுக்காகவும் நாடகங்களுக்காகவும் நிறைவாக இசையமைக்கத் துவங்கிய காலமாக அது இருந்தது, 1979ல் வெளிவந்த வான்டரிங் திரைப்படத்திற்கான அவரது இசை. திரைத்துறையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அவரது தனிப்பட்ட அணுகுமுறை ஒரு புதிய துவக்கத்தைத் திறந்ததை அவர் கண்டுகொண்டார்.

1982 ல் தெஸ்ஸலொனிகி சர்வதேச திரைப்பட விழாவில் Rosa திரைப்படத்திற்கான தனது அழகியல் மிகுந்த இசைக்காக விருது பெற்றார். அவ்விருதுக்கான நடுவர் மன்றத்திற்கு தலைமை வகித்திருந்த புகழ்பெற்ற இயக்குனரான ஏஞ்கெலொபெளலொஸ் உடனடியாக கரைண்ட்ரௌவை தன்னுடன் பணிபுரியும்படி கேட்டுக்கொண்டார். அந்த கணத்திலிருந்து ஏஞ்கெலொபௌலொஸின் திரைப்படங்களான Voyage to Cythera (1984), The Beekeeper (1986), Landscape in the Mist (1988), Suspended Step of the Stork (1991), Ulysses’ Gaze (1995), Eternity And A Day (1998), The Weaping Meadow (2004) அனைத்திலும் கரைண்ட்ரௌ பணிபுரிந்தார்.

ஏஞ்கெலொபௌலொஸ், “Eternity And A Day (1998) திரைப்படத்திற்கு எலெனி முதலில் ஒரு சோக இசைக்குறிப்பையே அமைத்திருந்தார். ஏனெனில், அவரது தந்தை சிறிது காலத்திற்கு முன் மரணித்திருந்தார். அவர் வாசிக்கத் துவங்கினார். உடனடியாக நான். இதுவே தான்’ என்றேன். அதுவே அப்படத்தின் மொத்த இசைக்கும் முக்கிய இசைக்குறிப்பாக அமைந்தது”. இத்திரையிசை, கரைண்ட்ரௌவின் இசைத்தொகுப்பில் தனித்த அடையாளமிக்க இசைக்குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் அதற்குப்பின் தங்கியிருந்தது,

2001 ம் ஆண்டு ஆகஸ்டு 31 மற்றும் செப்டெம்பர் 1ல் “Trojan Women” நாடகம் பண்டைய கிரேக்க அரங்கில் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டு பதினைந்தாயிரம் மக்களின் ஆரவாரத்துடன் பதினைந்து முறை நிகழ்த்தப்பட்டு பின்னர் சைப்ரசில் முடிவுற்றது. அந்நிகழ்விற்கு பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் நேர்மறையாக வினையாற்றி உள்ளனர். மிகவும் ECM முக்கான அவரது பதினொன்றாம் இசைத்தொகுப் பான Tous Des Oiseaux (2019) ல் எலெனி கரைண்ட்ரௌ, அவருடைய மிகவும் உறைக்கக்கூடிய இசையைப் பரிசளித்திருக்கிறார். எங்கெலொபௌலசின் இறப்புக்குப் பிறகு அவர் தந்த கசப்பான இனிப்பு இது. ஏஞ்கெலோபௌலொசின் தொடர் காட்சிகளின் உள்ளியக்கங்களால் ஈர்க்கப்பட்ட அவர், “புகைப்படக் கருவியின் இயக்கத்துடனான எனது உறவே திரைக்கதையுடன் எனது உறவைக்காட்டிலும் மிக முக்கியமானது” என்கிறார்.

பாரம்பரிய இசையின் மீது அவரின் ஆர்வமும் இசையமைப்பாளராக அவரது பணியும் இரு வேறு பிரவாகங்கள். பதினெட்டு திரைப்படங்கள், 13 நாடகங்கள், 10 தொலைக்காட்சி தொடர்கள் என எலெனியின் இசையாக்கம் ஒலிப்பதிவு மரபுகளைக் கடந்து சென்றது. 1975 லிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட நாடக படைப்புகளுக்கும் தொலைக்காட்சிப் படங்களுக்கும் தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். “எனது மிகப் பெரிய விருப்பம் நாடகக் களமாகவே இருந்து வந்துள்ளது. பின்டெர், கோல்டொனி, செகாவ் மற்றும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு இசைக் குறிப்புகள் இயற்றியுள்ளேன்” எலெனி கரைண்ட்ரெள.

1983,1987, மற்றும் 1998 ல் முறையே The Price Of Love. The Beekeeper and Eternity And A Day திரைப்படங்களுக்கான கிரேக்க இசை விருதுகள், 1992ல் நாடக இசைக்கான Dimitris Mitropoulos Award, Europa Cinema வின் Fellini Award போன்றவை அவரது முக்கிய விருதுகளில் அடங்கும். கெண்ட் உலக ஒலிப்பதிவு விருதுகள் விழாவில் 2021ம் ஆண்டின் வாழ்நாள் சாதனையளர் விருதினை வென்றார்.

வயது முதிர்ந்த தாயான கரைண்ட்ரௌ, வெளி நாட்டில் பணிபுரியும் எண்ணற்ற வாய்ப்புகளையும் மறுத்து தனது குடும்ப நெருக்கடிகளுடன் பயணிக்கும், தேவைக்கேற்ற செலவுகளை செய்யும் வாழ்க்கை முறையையே தேர்வு செய்தார். புலம்பெயர்தலை பூர்வீக நிலத்தை, வாழ்தலைத் தொலைத்த, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, தன் இழந்த வாழ்வை மீட்டெடுக்க முயன்று இயலாமல் தோற்கும் கடந்த நாட்களை கடக்க முடியாத நிகழ்காலத்துடன் தொடர்பற்ற இருத்தலுடன், எதிர்காலம் பற்றிய எவ்வித உறுதியுமற்ற மனநிலைகளை, தனிமையின் மனமுறைந்த தருணங்களை, சென்ற நூற்றாண்டின் ஒப்பற்ற பதிவுகளின் இசைத்தொகுப்பை தனது ஒட்டு மொத்த வாழ்வியலாகவே பெற்றிருக்கிறார் இப்பெரும் இசைபடைப்பாளர்.

இத்தகைய தொல்குடி பாரம்பரியமும் தாய் நிலம் சார்ந்த உணர்வெழுச்சிகளும் தனது வாழ்நிலத்தையும் தன்னினத்தோரையும் இணைக்கும் அமைப்பு முறையைத் தன்னகத்தே கொண்டு தனது வாழ்காலத்தின் அத்தனை அறவுணர்ச்சிகளையும் போராட்ட நிலைகளையும் பண்டைய நிகழ்வுகளின் நீடித்த உணர்வுடன் வெளியெங்கும் வீசும் எலெனியின் இசை மொழி நம் மன ஆழத்தின் நுண்ணுணர்வுகளை நீரூற்றென மீட்டி உணர்வுறவைக் கடத்திப் பாய்கிறது.

கிளாரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here