பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார் 
ஓங்கில்கூட்டம்  புதியநூல்


ளரிளம் பருவத்துக் குழந்தைகள் இந்த உலகத்தை விரிவாகப் பார்க்க முயற்சி செய்வார்கள். தன்னுடைய அப்பா, அம்மா, ஆசிரியர், வகுப்பு நண்பர்களைத் தாண்டிய வரலாறும் உலகமும் இருப்பதை அவர்கள் உணர்வார்கள். வளரும் சூழல், குடும்பப் பின்னணி இதையெல்லாம் பொறுத்து ஒருசில குழந்தைகள் 12 வயதுக்கு முன்னரே கூட அதனை உணரவும் வாய்ப்பு இருக்கிறது. எப்படியாகினும் அப்படியொரு நிலைக்கு அவர்கள் வந்துசேர்கையில், தனக்கான நாயகர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அவர்கள் தேர்ந்தெடுக்கும் நாயகர்கள் எந்தத் துறையை வேண்டுமானாலும் சார்ந்தவர்களாக இருக்கக்கூடும். சிலருக்கு சினிமா கதாநாயகர்களே நாயகர்களாகவும், சிலருக்கு கிரிக்கெட் வீரர்கள் நாயகர்களாகவும், சிலருக்கு வரலாற்றுப் பிரபலங்கள் நாயகர்களாகவும், இன்னும் சிலருக்கு பாடகர்களோ, அல்லது இணையப் பிரபலங்கள் கூட நாயகர்களாக இருக்கலாம்.

யாரை நாயகர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைவிடவும் எதற்காக நாயகர்களாக்குகிறார்கள் என்பது மிகவும் அவசியம். பெரும்பாலான நேரங்களில், காரணமே இல்லாமல் சிலரை நாயகர்களாக்கிக்கொள்வது தான் பேராபத்தில் முடிந்துவிடுகிறது.

“என் பையன் இருக்கானே. ஒரு நடிகரைப் போய் ரோல் மாடல்னு சொல்லிட்டு சுத்திட்டு இருக்கான்” என்று சொல்லும் பெற்றோரை நிறைய பார்க்கமுடியும். அது குழந்தைகளின் தவறு என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடமுடியாது. எந்தவொரு நபரையும் நாயகராக மனதில் இருத்திக்கொள்வதற்கு முன்னர் அந்த நபரைக் குறித்து ஆழமாகப் படிக்க வேண்டும் என்று பெரியவர்கள் தான் குழந்தைகளை சரியாக வழிகாட்ட வேண்டும்.

இன்றைக்கு பகத்சிங்கும் சேகுவேராவும் இளைஞர்களின் ஆடையிலும் அன்றாட வாழ்க்கையிலும் நுழைந்து ஒரு அடையாளமாக ஆக்கிரமித்திருக்கின்றனர் என்றாலும் கூட, அவர்களைப் பற்றிய எந்தப் புரிதலும் அவர்கள் மனதில் உருவாகாமல் வெறுமனே ஒரு குறியீடாக மட்டும் தான் இருக்கின்றனர். அதனையும் தாண்டி, அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள், எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள், அவர்கள் என்னென்ன எழுதிவைத்திருக்கிறார்கள் என்று வளரிளம் பருவத்தினருக்கு அறிமுகம் செய்துவைப்பதன் மூலம் தான் சரியான நாயகர்களைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு நம்மால் உதவமுடியும்.

பகத்சிங்கும் இந்தியாவின் விடுதலைக்காக சிறைக்குச் சென்றார், சாவர்க்கரும் ஆங்கிலேயர்களால் சிறைவைக்கப்பட்டார். ஆனால் இருவரில் யார் நாயகராக வளரிளம் பருவத்தினருக்கு மாறுவது சரியாக இருக்குமென்று நமக்கே தெரியும். ஆனால் இருவரின் வரலாற்றையும் விரிவாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், இருவருமே விடுதலைப் போராட்ட வீரர்கள் தானே என்று இளம்தலைமுறையினர் புரிந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது.

எந்தவொரு ஆளுமையை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் எழுதிய நூல்களை வாசித்துவிட்டாலே அவர்களை நாயகர்களாக ஏற்றுக்கொள்ளலாமா அல்லது தவிர்த்துவிடலாமா என்பதைத் தீர்மானிக்கும் திறன் உண்டாகிவிடும். அப்படியாக பகத்சிங்கைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்கிற நூல் மிகமிக முக்கியமானதொரு நூல். இந்தியாவின் விடுதலைக்காக பகத்சிங் போராடினார் என்பதைத் தாண்டி அவரது ஆழ்மனதையும், என்ன மாதிரியான கொள்கையுடன் அவர் போராடினார் என்பதையும், தன்னுடைய இறுதிக்காலத்திலும் அவர் எப்படியான மனிதராக இருந்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ள உதவும் சிறந்த நூல் அது.

ஆனால், சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு நூல் இன்றைய வளரிளம் பருவத்துக் குழந்தைகளால் எளிதாக வாசித்துவிடமுடியுமா என்று கேட்டால், கொஞ்சம் கடினம் தான் என்று திறந்தமனதுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். “நாங்கல்லாம் அந்த காலத்துல படிக்கலயா. முயற்சி செஞ்சி இவங்களும் படிச்சாத்தான் என்ன?” என்று கட்டாயப்படுத்தியெல்லாம் இன்றைய வளரிளம் குழந்தைகளை வாசிக்க வைத்துவிட முடியாது. அதனால், காலத்திற்கு ஏற்றாற்போல் அந்த நூலை வேறொரு வடிவத்தில் எளிமையாக சொல்லியாக வேண்டும். அப்படியொரு பணியினை செய்யும் முயற்சி தான் “பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?” என்கிற இப்புதிய நூல். அதனை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார் சிவா.

பகத் சிங்கின் நினைவு நாளான இன்றைய தினத்தில் அந்நூலின் அட்டைப்படத்தை ஓங்கில் கூட்டம் வெளியிட்டிருக்கிறது. இந்நூல் விரைவில் வெளியாகப் போகிறது. வாசிக்கத் தயாராக இருங்கள்

நன்றி:
Chinthan Ep
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here