ஆப்கானிஸ்தானில் மண்ணில் புதைந்த பெண்கள்: மீட்க மறுக்கும் தாலிபான் அரசு!

1
ஆப்கானிஸ்தானில் மண்ணில் புதைந்த பெண்கள்: மீட்க மறுக்கும் தாலிபான் அரசு!
ஜலாலாபாத் பிரதான மருத்துவமனையில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருப்பதாக பகுதிநேர செய்தியாளர் ஒருவர் பிபிசி ஆப்கன் சேவையிடம் தெரிவித்தார்.

ப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் மண்ணில் புதைந்து உள்ளன. இடுப்பாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டெடுக்க உதவிக்கு விரைந்தவர்களில் கணிசமானோர் ஆண்களாக இருக்கின்றனர். அந்நாட்டு கலாச்சாரத்தின்படி பெண்களை ஆண்கள் தொடக்கூடாது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் ஆண்களையும் சிறுவர்களையும் மட்டுமே மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மீட்பு குழுவில், மருத்துவக் குழுவில் பெண்கள் இல்லாத நிலையில், அடிபட்டு உயிருக்கு போராடும் பெண்களும் சிறுமிகளும் ஏறக்குறைய கைவிடப்படுகின்றனர்.

ஆப்கனை புரட்டி எடுத்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. .இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

மொத்த இறப்பு எண்ணிக்கை 2,205 என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும், அங்குள்ள சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படையினர் சென்றடைய மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை, மலைக் கிராமங்களில் வசித்த மக்களின் நிலைக்குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், பலி எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தெற்கு ஆப்கானிஸ்தானில் 160 கிலோமீட்டர் ஆழத்தில் இரவு 10.26 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என ஊடகங்கள் செய்திகளை பதிவு செய்துள்ளன.

உதவிக் கரம் நீட்டும் உலக நாடுகள்!

ஆப்கானிஸ்தானுக்கு நிவாரணம் வழங்கும் உலகளாவிய முயற்சியில் இந்தியாவும் இணைந்துள்ளது.
21 டன் நிவாரணப் பொருட்கள் காபூலுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்தார்.
இந்த சரக்கில்(Goods) போர்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும்.

படிக்க: தாலிபானிடம் இருந்து ஆப்கன் மக்கள் விடுதலை அடைவது எப்போது?

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 1 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிதியுதவி ஐ.நா மக்கள் நிதியத்திற்கும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிற்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.

ஐ.நாவின் உலகளாவிய அவசரகால நிதியிலிருந்து முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தர்ஸ் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உதவிப் பொருட்கள் குவிந்தாலும் கூட கள நிலைமைகள் நமக்கு கவலையை தருவதாக உள்ளன. மீட்புப் பணியில் தடையை ஏற்படுத்துகிறது இஸ்லாமிய பிற்போக்கு கலாச்சாரம்.

பெண்களின் உரிமைகளை நசுக்கும் தாலிபான் அரசு!

ஆணும் பெண்ணும் சமம் என்பதையோ, அவர்களும் கல்வி பயின்று அனைத்து துறைகளிலும் அனைத்து வகையான வேலை வாய்ப்புகளிலும் சம உரிமை பெற்று முன்னேறலாம் என்பதையோ இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுவாத தாலிபான் அரசு அரசு அனுமதிப்பதில்லை. பெண் பிள்ளைகள் 6ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பதற்கு உரிமை இல்லை. பெண்கள் ஆண்களின் துணை இல்லாமல் நீண்ட தொலைவு பயணங்கள் மேற்கொள்ளவும் அனுமதி இல்லை. இப்படித்தான் ஒரு காட்டுமிராண்டித்தனமான நிலையில் பெண்களை அடக்குகிறது தாலிபான் அரசு. இது பேரிடரிலும் கொடூரமான புறக்கணிப்பாக வெளிப்படுகிறது.

இத்தகைய பிற்போக்கு ஆட்சியாளர்களின் பிடியில் உள்ள பெண்கள் தற்போதைய நிலநடுக்கத்தால் மேலும் அதிகமான துன்பங்களுக்கு உள்ளாகின்றனர்.

மீட்புக் குழுவினர் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தாலும் தன்னை தொட்டு தூக்க வேண்டும் என்று அவர்கள் கூற முடியாது. அவர்கள் கூறினாலும் கூட மீட்பு பணியாளர்கள் பெண்களை தொடக்கூடாது. மீறி தொட்டால் தாலிபான் அரசு தலையை வெட்டி வீசும் அபாயம் உள்ளது.

மருத்துவமனைக்கு உடலில் காயங்களுடன் வந்து சேர்ந்தாலும் கூட பெண்கள் தமக்கான சிகிச்சையை எடுக்க முன் வருவதில்லை. காரணம் அங்கு பெண் மருத்துவர்களோ, பெண் மருத்துவ உதவியாளர்களோ இல்லாமல் இருப்பது தான்.

இந்நிலமையை களத்தில் நேரில் சென்று பார்த்த ஊடகங்கள் மிகவும் மென்மையாக கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளன.

“குனார் மாகாணத்தில் பெண்கள் கலாச்சார காரணங்களுக்கான தங்களின் சிகிச்சையை தள்ளி வைக்கக்கூடும் என பிபிசி ஆப்கன் சேவை ஆசிரியர் ஷோயப் ஷரிஃபி தெரிவிக்கிறார்.

ஜலாலாபாத் பிரதான மருத்துவமனையில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருப்பதாக பகுதிநேர செய்தியாளர் ஒருவர் பிபிசி ஆப்கன் சேவையிடம் தெரிவித்தார்.

“எப்போதும் போலவே பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் இந்த நெருக்கடியின் வலியை தாங்குகின்றனர்” என கேர் என்கிற மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த தீப்மாலா மஹ்லா பிபிசியிடம் தெரிவித்தார்” என்கிறது பிபிசியில் வந்த செய்தி.

பெண்களை நசுக்கும் மத அதிகார பீடங்கள்!

இந்தியாவில் பார்ப்பன இந்து மதம் எப்படி பெண்களை கடவுளாக, தாயாக போற்றுவதாக கூறிக்கொண்டு, நதிகளுக்கு எல்லாம் பெண்களின் பெயரை வைத்துக் கொண்டு, நடைமுறையில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக அடக்கி ஒடுக்கி வருகிறதோ அதே வேலையைத்தான் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய கடுங்கோட்பாட்டு வாதிகளும் அமல்படுத்துகின்றனர். அதாவது மதவெறியில் பார்ப்பன இந்து மத வெறியர்களும், தாலிபான் இஸ்லாமிய மதவெறியர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களாக இல்லை. பெண்களுக்கு எதிராக அநீதிகளை இழைப்பதில் இரண்டும் சமமாகவே போட்டி போட்டு நிற்கின்றன.

இத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக பெண்ணினம் வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களை கட்டி எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. பொதுவில் அனைத்து மதவாதிகளும் பெண்களை அடக்கி ஒடுக்கி வருவதால், ஜனநாயகத்தை, சமத்துவத்தை நேசிக்கும் அனைவருமே ஒடுக்கப்படும் பெண்களின் பின்னால் அணி திரள வேண்டியதும் அவசியமாகிறது. நாம் ஆப்கான் பெண்களை மீட்டெடுக்கவும் உரிய சிகிச்சை கொடுத்து குணப்படுத்தவும் இஸ்லாமிய கடுங்கோட்பாட்டு வாத தாலிபன் அரசை கண்டித்து குரல் கொடுப்போம்.

  • இளமாறன்

1 COMMENT

  1. மத அடிப்படைவாதம் என்பது மிகவும் மோசமாக உள்ளது.
    பெரும் பேரிடரிலும் பெண்களுக்கு இந்த நிலை என்பது நெஞ்சு பதைபதைக்கிறது,மதவாதிகளுக்கு எதிராக ஆத்திரமூட்டுகிறது.
    மதவாதிகளிடம் இருந்து பெண் விடுதலையை மீட்டெடுக்க குரல் கொடுப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here