பாலஸ்தீனத்தின் மீது வெண் பாஸ்பரஸ் தாக்குதல்!

உலகையே மேலாதிக்கம் செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது, சீன ரஷ்ய நாடுகளுடனான தமது தொழில் போட்டியில் தனது பிடி தளர்வதையும், தனது செல்வாக்கு படிப்படியாக பலவீனம் அடைவதையும், பிற ஏகாதிபத்தியங்கள் போட்டியில் முந்தும் போக்குகளையும் பார்த்து பார்த்து வெறிபிடித்து நிற்கிறது.

0

டந்த சில வாரங்களாக பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் நடந்து வருவதை உலகமே பார்த்துக் கொண்டுள்ளது.

யூத இனவெறி இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தொடர் தாக்குதல்களை நீண்ட காலமாக தொடுத்து வருவதை நாம் அறிவோம்

தற்போது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து எல்லைப்புற ஊர்களில் தாக்குதல் நடத்தி, ராணுவத்தினர் உள்ளிட்ட சிலரை பணைய கைதிகளாக பிடித்துக் கொண்டு காசாவிற்குள் சென்றுள்ளனர்.

இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா!

ஹமாஸ் அமைப்பினரின் இத்தகைய தாக்குதலை கண்டிப்பதில் உலகையே மேலாதிக்கம் செய்து வரும் அமெரிக்காவும் அதன் தெற்காசிய அடியாளான இந்தியாவின் பாசிச மோடியும் முன் நின்றனர்.

இஸ்ரேலின் யூத இனவெறி பயங்கரவாதத்தையும், அடாவடியாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வரும் குற்றத்தையும், மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகள் கண்டித்து வந்துள்ளன.

இஸ்லாமியர்கள் என்ற மதக் கண்ணோட்டத்திலும் அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்கின்றன. இதில் அமெரிக்க எஜமானனுக்கு வாலாட்டும் ஒரு சில நாடுகள் விதிவிலக்காக மௌனம் காக்கவும் அல்லது பகிரங்கமாக இஸ்ரேலை ஆதரிக்கவும் கூட செய்யலாம்.

ஏகாதிபத்திய உலகின் அடியாளாக இஸ்ரேல்!

அமெரிக்காவின் தீவிர விசுவாசியாக உலகெங்கும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு தான் இஸ்ரேல். எத்தகைய கூலிப்படைக்கும் ஆயுதப் பயிற்சிகள் தந்து ஆயுதங்கள் விற்பதையும் செய்து வரும் உலகின் மிக மோசமான ஒரு போக்கிரி அரசுதான் இஸ்ரேலில் வளர்த்து வரப் பட்டுள்ளது. இவர்கள் இலங்கையின் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஒரே நேரத்தில், வெவ்வேறு இடங்களில் தங்க வைத்து பயிற்சி தந்தவர்கள்தான் . இவர்களின் எஜமானனான அமெரிக்காவோ ஒரே நேரத்தில் பாகிஸ்தானுக்கும் போர்த்தளவாடங்களை ஏற்றுமதி செய்தது; அதையே காட்டி பாகிஸ்தானை விடவும் பல மடங்காக இந்தியாவிற்கும் ஏற்றுமதி செய்தது!

இப்படிப்பட்ட உலகின் கிரிமினல் அரசாக மாற்றப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு எதிராக சவுதி அரேபியா, லெபனான், ஜோர்டான், சிரியா போன்ற அண்டை நாடுகள் தாக்குதல் கொடுக்கக்கூடிய அபாயத்தை உணர்ந்த அமெரிக்கா “உடுக்கை இழந்தவன் கை போல ” உதவிக்கு விரைந்தது. தனது போர்க்கப்பல்களை உடனடியாக மத்திய தரைக் கடல் பகுதிக்குள் அனுப்பியும் வைத்தது.

மனித குலத்தின் மிகக் கொடிய பயங்கரவாதியான அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்படி வெளிப்படையாக தனது முழு ஆதரவை இஸ்ரேலுக்கு அளித்து வரும் நிலையில், இஸ்ரேலிய ராணுவமானது மக்கள் மீது பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள பாஸ்பரஸ் ஆயுதங்களை-ஏவுகணைகளை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறது.

அன்றைய நபாம் குண்டும், இன்றைய பாஸ்பரஸ் ஏவுகணையும்!

அமெரிக்கா வியட்நாமை ஆக்கிரமிக்க நீண்ட நெடிய யுத்தத்தை வடக்கு வியட்நாமில் நடத்தியது. தன் நாட்டிற்காக போராடிய வியட்காங்குகளை முறியடிக்க முடியாத   ‘வல்லரசு’ அமெரிக்காவானது, நாட்டின் வட பகுதியில் உள்ள கிராமங்களையே மொத்தமாக அழிக்க நபாம் எனும் வெடித்துச் சிதறி நின்று எரியும்  குண்டுகளையே பயன்படுத்தியது.

Vietnam napalm attack

தற்போதுஇஸ்ரேலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் காசாவிற்குள் வந்து விழுந்து வெடித்து சிதறி வெண்புகையாக மேல் எழும்புவதை சர்வதேச ஊடகங்கள் காட்சிப்படுத்துகின்றன. இந்த வெண் புகை என்பது வெண் பாஸ்பரஸ் பயன்படுத்துவதால் அது பற்றி எரிவதால் உருவாவதாகும்.

இந்த கொடூரமான வேதிப்பொருளான வெண் பாஸ்பரஸை, காற்றிலேயே தானாக தீப்பற்றி எரியக்கூடிய இதை எந்த சூழலிலும் மக்களின் மீது ஏவக்கூடாது என்ற நிபந்தனைக்கு உலக நாடுகள் அனைத்தும் ஒப்புதல் தந்துள்ளன. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டும் இதில் கையெழுத்திட மறுத்தே வந்துள்ளன.

போர் என்று வந்தால் இருதரப்பு படைகளும் ஒன்றை ஒன்று தாக்கி அளிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் பொதுமக்களை, பொது மக்களின் அடிப்படை அத்தியாவசிய கட்டமைப்புகளை, போரின் பெயரால் முற்றிலுமாக அழிப்பதையும், ஒரு இனத்தையே மொத்தமாக துடைத்தெறிவதையும் மனிதாபிமானம் உள்ள எவரும் ஆதரிக்க முடியாது.

இதையும் படியுங்கள்:

இந்தியாவில் மனிதாபிமானமே இல்லாமல் இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, தலித்துகளை கொன்று குவிக்கும் காவி பாசிஸ்டுகள் தமது பங்காளியாக இஸ்ரேலிய அரசை பார்த்து பூரிப்படையலாம். இந்தியர்களான நாம் இங்குள்ள காவி கும்பலை எப்படி ஆதரிக்க முடியாதோ அதேபோல் தான் மத்திய கிழக்கில் உள்ள யூத இனவெறி இஸ்ரேலையும் ஆதரிக்க முடியாது.

உலகமே கைவிட்டு விட்ட பெல்லட் குண்டுகளை பயன்படுத்தும் நாடு இஸ்ரேலும் இந்தியாவும் தான். மக்களை ஆடு, மாடுகளை விட குறைத்து மதிப்பிடுவதும், ஈவிரக்கமின்றி வெள்ளை குண்டுகளால் துளைத்தெடுக்கும் இத்தகைய பாசிச கூட்டத்தை இனியும் விட்டு வைக்கலாமா?

உலகையே மேலாதிக்கம் செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது, சீன ரஷ்ய நாடுகளுடனான தமது தொழில் போட்டியில் தனது பிடி தளர்வதையும், தனது செல்வாக்கு படிப்படியாக பலவீனம் அடைவதையும், பிற ஏகாதிபத்தியங்கள் போட்டியில் முந்தும் போக்குகளையும் பார்த்து பார்த்து வெறிபிடித்து நிற்கிறது.

ஏகாதிபத்தியங்கள் தமது மேலாதிக்க நோக்கத்திற்காக பிற நாடுகளை போருக்குள் இழுத்து விட்டு பலிகடாவாக்கிவருவதையே நம் இந்தியா பாகிஸ்தான் மோதல், ஈரான் ஈராக் சண்டையிலும், வடகொரியா தென்கொரியாவுக்கு  இடையிலான மோதலிலும், ரஷ்ய உக்ரேன் மோதலிலும் பார்த்தோம். இப்பொழுது முன்னுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்.

முதல், இரண்டாம் வளைகுடா போரின்போதும் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு எதிரான போரிலும் போரிலும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது  குறைவான ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்களையும் பயன்படுத்தி உள்ளதை நாம் அறிவோம்.

அத்தகைய அமெரிக்காவின் அடியாளான இஸ்ரேல் தற்போது வெண் பாஸ்பரஸை பாலஸ்தீன நகரங்களின் மீது வீசி வருகிறது. இந்த வெண் பாஸ்பரஸ்  கண்ணில் பட்டால் பார்வை பறிபோகும். உடம்பில் பட்டிருந்தால் மிக தீவிரமான தீக்காயத்தை உருவாக்கி உயிரையும் பறித்தெடுக்கும். பெரிய அபாயம் உள்ள வெண் பாஸ்பரஸ் கொண்டு நடத்தப்படும் இஸ்ரேலிய ராணுவத்தின் காட்டுமிராண்டி தாக்குதலை உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் கண்டிப்பதே சரியானது.

உலக மேலாதிக்க வெறிபிடித்தலையும் ஏகாதிபத்தியங்கள் இருக்கும் வரை உலகில் எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியாது. தனது அண்டை நாட்டுடன் நட்புறவை பராமரிக்கவும் முடியாது.

  • இளமாறன்.

ஆதாரம்- https://www.aljazeera.com/amp/news/2023/10/13/israel-using-white-phosphorus-in-gaza-lebanon-endangering-civilians-hrw

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here