ஓட்டுத் திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!

எந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி விண்ணப்பம் வழங்கப்பட்டதோ அந்த செல்போன் எண்கள் விண்ணப்பம் கொடுத்ததாக கூறப்படும் விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்களே அல்ல. அதைவிட முக்கியம் அந்த எண்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ளவைகளே அல்ல; பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த செல்போன் எண்களை பயன்படுத்தி இந்த முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களின் வாக்குகளை திருடுவதன் மூலமாகத்தான் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்பதை ராகுல் காந்தி கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அன்று ஆதாரங்களுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி  அம்பலப்படுத்தினார்.

அதேபோல, இப்பொழுது, செப்டம்பர் 18ஆம் தேதி அன்று மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி பாஜகவினர் செய்து வரும் ஓட்டு திருட்டிற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பு கொடுத்து வருவதாக – ஓட்டுத் திருடர்களை பாதுகாத்து வருவதாக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் ஆலந்த் (Aland) சட்டமன்றத் தொகுதியில் 2023ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, டிசம்பர் 2022ல்,  6,018 வாக்குகளை நீக்குவதற்கான வேண்டுகோள் விடுத்து இணையவழியில் (online) விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் வெறும் 24 விண்ணப்பங்கள் மட்டுமே சரியானவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதி 5,994 விண்ணப்பங்கள் முறைகேடானவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் “ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற விவரம் உண்மையில் எங்களுக்கு தெரியாது. ஆனால் அப்படி நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கண்டிப்பாக 6,018 க்கும் அதிகமானதாக இருக்கும். ஆனால் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டனர். பெரும்பாலான குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகள் தற்செயலாகவே மாட்டிக் கொள்கின்றனர். அதைப்போலவே இதிலும் தற்செயலாகவே பிடிபட்டுள்ளனர்” என்று கூறுகிறார் ராகுல் காந்தி.

தனது உறவினரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை கண்ட வாக்குச்சாவடி அதிகாரி(booth level officer) இதுகுறித்து விவரங்களை திரட்டி இருக்கிறார். தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவர்தான் ஆன்லைன் மூலமாக தனது உறவினரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்திருப்பது அறிந்து அவரிடம் சென்று விசாரித்து இருக்கிறார். அந்த நபரோ தான் அப்படி ஒரு விண்ணப்பமே அனுப்பவில்லை என்று கூறி இருக்கிறார். இதிலிருந்துதான் இந்த “வாக்காளர் நீக்கம்” என்ற அயோக்கியத்தனம் காங்கிரஸ் கட்சியினருக்கும் வெளியுலகிற்கும் தெரிய வந்திருக்கிறது.

அதை தொடர்ந்து, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தனது ஆய்வை தொடங்கியது. அப்படி ஆய்வை நடத்திய பொழுது இந்தத் தொகுதியில் வாக்காளர் நீக்குவதற்கு வேண்டுகோள் விடுத்து ஆன்லைனில் கொடுக்கப்பட்ட 6,018 விண்ணப்பங்களை கொடுத்ததாக கூறப்படும் நபர்கள் தாங்கள் விண்ணப்பங்களை கொடுக்கவே இல்லை என்று மறுத்துவிட்டனர்.

எந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி விண்ணப்பம் வழங்கப்பட்டதோ அந்த செல்போன் எண்கள் விண்ணப்பம் கொடுத்ததாக கூறப்படும் விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்களே அல்ல. அதைவிட முக்கியம் அந்த எண்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ளவைகளே அல்ல; பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த செல்போன் எண்களை பயன்படுத்தி இந்த முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன.

12 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று சூரியகாந்த் என்பவரின் பெயரில் ஆன்லைனில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் 14 நிமிடத்தில் 12 விண்ணப்பங்களை அவர் பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக தேர்தல் கமிஷனின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. இவ்வளவு விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது என்பது எவராலும் சாத்தியம் இல்லாத ஒன்று. இது நன்கு வடிவமைக்கப்பட்ட மென்பொருளின் மூலமாகவே, திட்டமிட்ட கிரிமினல் தனமான நடவடிக்கையின் மூலமாகவே சாத்தியப்படும்.

விண்ணப்பம் கொடுத்ததாக கூறப்படும் இந்த சூரியகாந்த்  தான் அவ்வாறு விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று கூறிவிட்டார். இந்த சூரியகாந்தை  பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மேடை ஏற்றி அனைவருக்கும் ராகுல் காந்தி காண்பித்துள்ளார்.

அதேபோல அதிகாலை 4 மணி அளவில் நாகராஜ் என்ற வாக்காளர் 36 வினாடிகளில் இரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இரண்டு பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குமாறு கோரி ஆன்லைனில் விண்ணப்பம் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதுவும் எவ்வளவு பெரிய திறமைசாலிக்கும் சாத்தியமான ஒன்றே அல்ல.

தேர்தல் ஆணையர்- சூர்யகாந்த்-ஓட்டுநீக்கம்

இப்படி விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் அனைத்தும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் முதலாவது பெயராக (serial number 1; வரிசை எண் 1 ஆக) இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உள்ள முதலாவது வாக்காளரின் பெயரை தேர்வு செய்து அவர்களின் பெயரில்(அவர்கள் விண்ணப்பிப்பது போல) மற்ற வாக்காளர் பெயரை நீக்கக்கோரி விண்ணப்பங்கள் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட வேலையை செய்தது தனிநபர் அல்ல. வாக்குச்சாவடியில் உள்ள முதலாவது வாக்காளர்களை தேர்வு செய்து அவர்களின் பெயரில் இப்படிப்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யுமாறு மென்பொருள் நிரல்கள் (software program) எழுதப்பட்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வாக்காளர்களை  நீக்க வேண்டும் என்று குறி வைத்து இந்த செயல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆலந்த் தொகுதியில் அதிகபட்சமான வாக்காளர் நீக்கப்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் மொத்தம் எட்டு வாக்கு சாவடிகளில் காங்கிரஸ் கட்சி 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இருக்கிறது. இது தற்செயலானது அல்ல.

ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் இப்படிப்பட்ட மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது குறித்து பிப்ரவரி 2023 ல் ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து கடந்த 18 மாதங்களில் 18 கடிதங்களை கர்நாடக குற்றப் புலனாய்வுத்துறை (CID) அனுப்பியது. அந்தக் கடிதத்தில், வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட IP முகவரி, போர்ட்டுகள், மற்றும் OTP தடங்கள் போன்றவற்றை வழங்குமாறு கோரப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த விபரங்களை கொடுப்பதற்கு மறுத்துவிட்டது.

அலந்த் தொகுதி- வாக்குத் திருட்டு

குற்றவாளியின் தடத்தை பிடித்துக் கொண்டு சென்று குற்றவாளியை பிடிப்பதற்கு தேவையான விவரங்களை  கர்நாடக மாநில குற்றப்புலனாய்வுத்துறை கேட்கும் பொழுது அதை கொடுப்பதால் இந்திய அரசு நிர்வாகத்திற்கோ அல்லது இந்திய நாட்டின் நலனுக்கோ என்ன பிரச்சனை ஏற்பட்டுவிடப் போகிறது? ஒன்றும் இல்லை. மாறாக இப்படிப்பட்ட மாபெரும் குற்றம் புரிந்தவர்கள் பிடிபடுவதற்கான வழி ஏற்படும். இது நாட்டிற்கும் நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்பதற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என்பதுதான் உண்மை. பிறகு ஏன் இந்தத் தகவல்களை மாநில குற்றப்புலனாய்வுத் துறைக்கு(CID) இந்திய தேர்தல் ஆணையம் கொடுக்க மறுக்கிறது?

குற்றவாளிகள் பிடிபட்டு விடக்கூடாது. அப்படி பிடிபட்டால் பாஜகவினர் இந்தக் குற்றச் சம்பவத்தில் –

வாக்குத்திருட்டில் ஈடுபட்டதும் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். ஏற்கனவே நாறிக் கொண்டிருக்கும் மோடியின் பிம்பம் முற்றுமுழுதாக நாறிவிடும். இதனால்தான் குற்றவாளியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கர்நாடக குற்றப்புலனாய்வுத்துறை கேட்ட விபரங்களை கொடுக்க மறுக்கிறார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் கர்நாடக புலனாய்வுத்துறை கேட்ட விவரங்களை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கெடு விதித்துள்ளார்.

பெங்களூரு மகாதேவ்புரா தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடாக வாக்காளர்களை சேர்த்ததைப் போன்று ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்கியதும் பாஜகவினர் நடத்தி வரும் ஓட்டு திருட்டின் வெளிப்பாடுதான். இரண்டின் நோக்கமும் காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் என்று ராகுல் காந்தி கூறுகிறார்.

மேலும் படிக்க:

தேர்தல் திருட்டு: எஞ்சியிருந்த தேர்தல் ஆணையம் மோடி, அமித்ஷாக்களின் கோவணங்களையும் உருவி எடுத்து விட்டார் ராகுல்!

பாஜக வெற்றிக்காக உழைக்கும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம்! தடுக்காத உச்சநீதிமன்றம்!

ஏற்கனவே அக்டோபர் மாதம், தான் போட்டது அணுகுண்டு என்றும் இனிவரும் தேதிகளில் அதைவிட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை போட இருப்பதாகவும் கடந்த ஓரிரு வாரங்களாக ராகுல் காந்தி கூறி வருகிறார்.

ஏற்கனவே போட்ட குண்டிருக்கே பாஜக வினர் நிலைகுலைந்து போய் உள்ள நிலையில் மீண்டும் ஒரு குண்டு ஏற்கனவே போட்டதை விட மிகவும் சக்தி வாய்ந்த குண்டை போட்டால் என்ன ஆகுமோ என்று தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துள்ளது.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது தான் இப்பொழுது போடுவது ஹைட்ரஜன் குண்டு அல்ல; அந்த குண்டு தயாராகிக் கொண்டிருக்கிறது. இனிவரும் காலத்தில் அது போடப்படும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

கடந்த முறை ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்து போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் குற்றச்சாட்டுகளை வைப்பவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டினார்.  அதை புறந்தள்ளிய ராகுல் காந்தி தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் கிரிமினல் குற்றத்துக்கு துணை போயுள்ளது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். பலரும் ராகுல் காந்தி ஏன் தலைமை தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடுக்கக் கூடாது என்று கேட்கின்றனர். ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடுக்க முடியாதபடி 2023 ஆம்‌ ஆண்டு மோடி அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்காக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்தல் ஆணையர்களை காப்பது மோடியின் கடமை அல்லவா.

ராகுல் காந்தி போன்றோர் பாஜகவினரின் ஓட்டு திருட்டு மோசடிகளை வெளியில் கொண்டுவருவது என்பது உண்மையில் நாட்டு மக்களின் போராட்ட குணம் எனும் அணுகுண்டை பற்றவைக்கும் நெருப்பாக அமைய வேண்டும். அந்த நெருப்பு மக்கள் மனங்களில் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். மக்களின் கோபம் அணுகுண்டாக – ஹைட்ரஜன் குண்டாக வெடித்து கிளம்ப வேண்டும். அதில் கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளின் அதிகாரம் – ஆதிக்கம் தகர்க்கப்பட வேண்டும். இதற்கு பாசிசத்தை வீழ்த்த விரும்பும் அனைவரும் ஓரணியில் திரண்டு தங்களுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

குமரன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here