
கரூரில் தற்குறியும் சினிமா கழிசடைமான விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் 42 உயிர்கள் பலியான பிறகு அதை வைத்து தனது ஊடகத்தின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக சண்டமாருதம் செய்து வருகின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்று சொல்லக்கூடிய சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் வாதப்பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டுள்ளது.
நாடு முழுவதும் பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற இந்த காலகட்டத்தில் பாசிசம் × அதற்கு எதிரான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வேறு ஏதோ ஒன்று இருப்பதைப் போல நாடகம் ஆடிக் கொண்டுள்ள ‘நடுநிலையாளர்கள்’ சிலர் அரசை குறி வைத்து தாக்குவதைப் போலவே, கம்யூனிஸ்டுகளையும் குறி வைத்து தாக்கி கொண்டுள்ளனர்.
இவர்களது தாக்குதலுக்கு அஞ்சி அறம் ஊடகத்தின் சாவித்திரி கண்ணன் புதிய தலைமுறையின் சமஸ் போன்றவர்கள் நடுநிலையாளர்கள் என்று காட்டிக் கொள்ள படாத பாடுபட்டார்கள்; படுகிறார்கள்.
எதையும் வர்க்கப் பார்வையில் பரிசீலிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் முன் வைத்தால் எதற்கெடுத்தாலும் இப்படி பேசிக் கொண்டிருக்காதீர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு வெளியில் ‘புரட்சிகர’ கருத்துகளை முன்வைக்கின்ற சமஸ் மற்றும் சாவித்திரி கண்ணன் போன்றவர்களின் எழுத்துக்களையும் படியுங்கள். அப்போதுதான் ஒரு பிரச்சனையைப் பற்றி சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதிடுகிறார்கள் குட்டி முதலாளித்துவ அறிஞர்கள்.
குறிப்பிட்ட தருணங்களில் சமஸ் போன்ற இத்தகைய அறிஞர்களின் நடுநிலை மற்றும் ஆய்வு திறன் அவர்களை அறியாமலேயே அவர்களது வர்க்க வாழ்க்கையை காட்டிக் கொடுத்து விடுகிறது.
“எழுத்தாளனை பார்க்காதீர்கள். அவனது வாழ்க்கையைப் பற்றி பரிசீலிக்காதீர்கள், அவன் எழுதிய எழுத்துகளை மட்டும் படியுங்கள்” என்று முன்வைக்கப்படுகின்ற பல்வேறு அபத்தங்களுக்கு முடிவு கட்டி விடுகிறது.
“வாழ்வில் சில சந்திப்புகள் மறக்க முடியாத மாற்றங்களை உண்டாக்க வல்லவை. ‘புதிய தலைமுறை’ நிறுவனர் திரு.சத்தியநாராயாணாவுடனான சந்திப்பு அப்படித்தான் அமைந்தது. நல்ல இதழியல் மீதான தீராத தேட்டம் மிக்கவர் அவர். தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிக கண்ணியமான ஓர் இதழியல் சூழலைத் தன்னுடைய நிறுவனத்தில் உருவாக்கியவர். இருவரும் இணைந்து பயணிக்கும் முடிவுக்கு முதல் சந்திப்பிலேயே வந்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். 1. நல்ல இதழியல் மீதான தேட்டம்; 2. பணிகள் சார்ந்து இருவரும் பரஸ்பரம் மற்றொருவர் மீது கொண்டிருந்த மரியாதை; 3. அபாரமான நன்னம்பிக்கை” அருஞ்சொல் என்ற ஊடக பத்திரிகையை இழுத்து மூடி விட்டு புதிய தலைமுறையில் இணைவதற்கான காரணத்தை திருவாளர் சமஸ் முன்வைத்த காரணங்கள் இவைதான்.
கவனியுங்கள்! திருவாரூரில் மன்னார்குடியில் சந்திரசேகர் மலர்க்கொடி இணையரின் மகனாக பிறந்த ஸ்டாலின், தனது பெயரை சமஸ் என்று வைத்துக் கொண்டது தற்செயலான நிகழ்வு அல்ல. அவரது பெயர் தற்செயலானது அல்ல என்பதைப் போன்றது தான் அவர் பல்வேறு பத்திரிகைகளில் வேலை செய்ததும், ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து விலகியதும்.
பள்ளி நாட்களில் ‘இந்தியன்’, கல்லூரி நாட்களில் ‘இந்தியன் இனி’ என்று தொடங்கி பின்னர் ‘தினமலர்’, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘ புதிய தலைமுறை’ என்று பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி, தி இந்து தமிழ் நாளிதழில் சுழன்றடித்து விட்டு இனி இதழியல் துறையில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்த சமஸ், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அருஞ்சொல் என்ற செய்தி இணையதளத்தை சொந்தமாக தொடங்கி நடத்தி வந்தார். ஒரு பொருளைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாமல் தனது அரைவேக்காட்டு ஆய்வுகளையே சிறந்த கட்டுரைகளாக வடித்து, வர்க்கப் பார்வைக்கு அப்பால் வேறு ஏதோ ஒன்று இருப்பதைப் போல அதாவது உண்மையை கண்டுபிடிப்பதற்கு வேறு சில வழிமுறைகள் இருப்பதைப் போல நம்பிக் கொண்டுள்ள லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருந்தார்.
கரூரில் விஜய் கலந்து கொண்ட கூட்ட நெரிசலில் படுகொலையான 41 உயிர்களைப் பற்றி தகவல்களை ஒளிபரப்பிய திருவாளர் சமஸ் பணியாற்றிய ஊடகமான புதிய தலைமுறை, “அரசே குற்றவாளி” என்ற கோணத்தில் திமுகவை குறி வைத்து பல்வேறு காணொளிகளை ஒளிபரப்பியது. (இங்குதான் அவர் ‘கம்யூனிஸ்ட்டாக’ உருவெடுக்கிறார்)
“தமிழக ஊடக உலகில் பல்வேறு ஊடகங்கள் உள்ளன என்ற போதிலும் என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குகிறார்கள்” என்று புலம்புகிறார். புதிய தலைமுறையில் வெளியான ஒளிபரப்புகள் மற்றும் பேட்டிகள் ஆகியவற்றுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்கப்படாத பாடுபட்டார்.
படிக்க: அரசு பள்ளி மாணவர்கள் குறித்து ஜெயமோகனின் மோசமான கருத்து!
“ஆனந்த விகடனும் ஜூனியர் விகடனும் ஒன்றல்ல; ஒரே நிறுவனம் என்றாலும், தினத்தந்தியும் தந்தி டிவியும் ஒன்றல்ல. ஒவ்வொன்றும் தனித்தனி தலைமையின் கீழ், தனித்தனி அணிகளின் கீழ், அவரவரர் ஊடக இயல்புக்கேற்ப இயங்கும். தொலைக்காட்சிக்கு எப்படி தனி அணி, தனி தலைமை உண்டோ அப்படியே புதிய தலைமுறையில் டிஜிட்டலுக்கு தனி அணி, தனி தலைமை உண்டு. எப்படி ஒரே விஷயத்தைப் பற்றி விகடன்.காம் தளத்தில் ஒருவர் கட்டுரை எழுத, விகடன் இதழில் வேறு ஒருவர் கட்டுரை எழுதுவாரோ அப்படியே புதிய தலைமுறை டிவி தனியாகவும் டிஜிட்டல் தனியாகவும் அந்தந்த மீடியா சூழலுக்கேற்ப இயங்குகின்றன. டிவியில் வெளியாகும் செய்திகளையும் யூட்யூபில் போடுவார்கள் என்றாலும், அதுபோல பல மடங்கு சொந்தமாக உருவாக்குவார்கள்; தவிர, ஒரு மணி நேர வீடியோவை 10-20 துண்டுகள் ஆக்கி, டிஜிட்டல் பாணியில் தலைப்பிட்டு பதிவிடுவார்கள். இதற்கும் டிவிக்கும் சம்பந்தம் இல்லை.” என்கிறார் சமஸ்.
ஆனால் அருஞ்சொல்லை அவர் இழுத்து மூடியதற்கான காரணத்தை முன் வைக்கும் போது கீழ்க்கண்டவாறு முன் வைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. “இப்போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி மட்டும் அல்லாது, ‘புதிய தலைமுறை’ டிஜிட்டல், ‘புதிய தலைமுறை’ இணையதளம் என்று பல தளங்களின் தலைமைப் பொறுப்பும் என்னை வந்தடைந்திருக்கும் சூழலில், என்னோடு பிரிக்க முடியாத பந்தமாக நான் உருவாக்கிய இணைய இதழ் இயங்குவது தார்மிகரீதியாக சரியல்ல என்று எண்ணுகிறேன்.” என்று அருஞ்சொல்லை இழுத்து மூடிய போது கதையளந்த திருவாளர் சமஸ் புதிய தலைமுறையில் விஜய் பிரச்சார நிகழ்ச்சிகளை இன்ச் பை இன்ச்சாக ஒளிபரப்பியதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று காந்தியின் மீது சத்தியம் செய்கிறார்.
படிக்க: “ கோடி மீடியா க்களால்” சந்தி சிரிக்கும் பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை!
தமிழ் இந்து பத்திரிக்கையில் சமஸ் பணியாற்றிய போது கம்யூனிச அமைப்புகளில் இருந்து விலகி வேலை கேட்டுச் சென்ற ஒருவரிடம் இப்படித்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி ஏமாந்து விடுகிறீர்கள். புரட்சிகர அமைப்பு என்று நம்பி வாழ்க்கையை தொலைத்து விட்டீர்கள். இனியாவது எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனத்துடன் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
காந்தியவாதம் நடுநிலைமை ஊடக அறம் என்று பல்வேறு பெயர்களில் நடத்தப்பட்ட உருட்டுகள் இனி வேறு பெயரில் வெளி வரலாம். சமஸ் புதிதாக ஒன்றுக்கு செல்லலாம் அல்லது மீண்டும் சில காலத்திற்கு இதழியல் ஊடகவியல் வெறுப்படைந்து வேறொரு புதிய கதையை முன் வைக்கலாம்.
எனினும் இப்படியான நெருக்கடியான தருணங்களில் தான் அவர் தனது காந்தியவாதத்தை உதறிவிட்டு ‘கம்யூனிச போராளியாக’ உருவெடுத்துள்ளார் என்பதுதான் இந்த கதையின் ஹைலைட்.
◾மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







நான்கு வரி எழுதத் தெரியும்; நான்கு வாக்கியங்கள் பேசத் தெரியும்; சற்று முற்போக்கு முலாமும் பூசிக்கொள்ளத் தெரியும்… என்ற வகையைச் சேர்ந்த ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகு தழுவிய அளவில் தனது இருப்பை காண்பித்துக் கொண்டே இருக்கும். அதற்கு சில அல்லக் கைகளை இக்கூட்டம் என்றும் உருவாக்கிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் சமஸ் பயணப்பட்ட ஊடகத்துறை அனைத்திலும் தனது இவ்விதமான ‘முத்திரை’யை பதித்தே வந்துள்ளார். இதில் வெட்கமில்லாமல் கம்யூனிஸ வேடம் வேறு தரித்துக் கொள்கிறார்; இப்படிப்பட்ட ‘அப்பழுக்கற்ற’ ‘சமரசவாதி’களை (சாவித்திரி கண்ணனையும் சேர்த்தே தான்) கட்டுரையாளர் நன்கு திரை கிழித்துள்ளார்.
வாழ்த்துக்கள்.
‘கம்யூனிச போராளியான’ கதை என்ற தலைப்பு பொருத்தமானது தானா என்ற ஐயப்பாடு சற்று எனக்கு இருக்கிறது. போராளியான என்பதற்கு பதிலாக ‘கம்யூனிச வேடதாரியான’ கதை என்று கூட தலைப்பிட்டு இருக்கலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். நாம் ஒற்றை மேற்கோளில் குறிப்பிட்டுள்ளதன் மூலமாக அம்பலப்படுத்தவே செய்திருக்கிறோம் என்று கருதினாலும் கூட அப்படிப்பட்ட ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள்களை சரியானவற்றுக்கும் கூட பொருத்திப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.