ந்தியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் பாஜக பயங்கரவாத கும்பலின் மாணவர் அமைப்பான ஏபிவிபி (ABVP) உள்ளே புகுந்து மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவற்ற மூடத்தனங்களையும், சாதி, மதவெறியையும் பரப்புவது தற்போது புதுவையில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் வரை நீண்டுள்ளது.

இந்தியாவின் தலைநகராக உள்ள டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் தற்போது இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றுள்ள சூழலில், இந்தியா முழுவதும் உள்ள மத்திய மற்றும் உயர் பல்கலைக்கழகங்களில் இத்தகைய வெற்றிகளை பரவலாக்க வேண்டும் என்பதை தான் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் புஷ்பராஜ் மீது நடத்தப்பட்டுள்ள சாதி வெறி தாக்குதல் நிரூபித்துள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது நாடகத் துறையின் எச்ஓடியாக (HOD) செயல்பட்டு வந்தவரும், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கலை இலக்கியங்களை நாடகங்களாகவும், பாடல்களாகவும் வெளிப்படுத்திய தோழர் கே.ஏ. குணசேகரன் பற்றிய நினைவுகள் தான்.

இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் தரவரிசைப்படி முன்னேறி வருகிறது. உலகப் பல்கலைக் கழகங்களின் தரவரிசைப்படி 820 ஆவது இடத்திலும், இந்திய அளவில் 29 இடத்திலும் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் பயில்கின்ற ஒரு அரசுத்துறைப் பல்கலைக்கழகமாகும்.

இப்பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் பயின்று வரும் மாணவரான புஷ்பராஜ் கடந்த மாதத்தில் சோமாயணம் என்ற நாடகத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த நாடகமானது ராமனை இழிவு படுத்துவதாகவும், ராமாயணத்தை கொச்சைப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு இந்த பல்கலைக்கழகத்தில் பயில்கின்ற ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த குண்டர் படையினர் மாணவர் புஷ்பராஜ் மீது பல்வேறு விதமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த நாடகம் இந்த சங்கி கும்பல் எதிர்ப்பால் அதை நிகழ்த்திய மாணவர் புஷ்பராஜ் மீதான தாக்குதலாக மாறியுள்ளது. இதனால் அவர் கடந்த நான்கு மாதமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வட இந்தியாவில் ராமாயணத்தை பற்றிய மூடநம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் நிரம்பி வழிகின்ற சூழலில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே ராமாயணத்தை பற்றிய எதிர் விமர்சனங்கள் சகஜமாக நிலவி வருகிறது.

இராமாயணம் என்றால் ஒரே ஒரு இராமாயணம் தான் உள்ளது என்று சங்பரிவார கும்பலும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் மூடர் கூட்டமும் புரிந்து வைத்துள்ளது. ஆனால் இராமாயணம் என்பதில் ஜைன இராமாயணம், சீன இராமாயணம், பெளத்த இராமாயணம் போன்ற பல்வேறு வகையான இராமாயணங்கள் நிலவுகிறது என்பதை இதர இராமாயணங்கள் என்ற புத்தகத்தை 1928 வாக்கிலேயே எழுதிய சீனிவாச ஐயங்கார் என்ற பிறப்பால் பார்ப்பனரே அம்பலப்படுத்தி உள்ளார்.

தந்தை பெரியார் காலத்தில் இராமாயணத்திற்கு எதிராக பிரச்சாரங்களும், கீமாயணம் போன்ற நாடகங்களும் நடத்தப்பட்டன. கலை இலக்கிய வடிவில் நடிகர்வேள் எம்.ஆர்.ராதா போன்றவர்கள் ராமாயணத்தை அம்பலப்படுத்தி பல்வேறு மேடைகளில் கீமாயணம் நாடகங்களை நடத்தியுள்ளனர்.

நாடகத் துறையில் பிரபலமாக ந்டித்து வந்த ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை நடத்தியதும், அதையே திரைப்படமாக பின்பு கொண்டு வந்ததும் தமிழகம் அறிந்த வரலாறு தான்.

இராமாயணம், மகாபாரதம் ஆகியவை இரண்டும் கற்பனையான புராணக் கதைகள் தானே ஒழிய உண்மையில் நடந்த சம்பவங்களோ அல்லது அதற்கு ஆதாரங்களோ கிடையாது என்பது தான் ஆர்எஸ்எஸ் பாஜக இந்திய ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பு இந்தியாவில் நிலவி வந்த நிலைமையாகும்.

2014ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசாங்கத்தை கைப்பற்றிய பிறகு இராமாயணம் உண்மை கதை என்பதைப் போலவும், இராமர் இந்தியாவில் வாழ்ந்ததைப் போலவும் கட்டுக்கதைகளை பரப்பி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் துணையுடன் அதனை நிலை நிறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் இராமாயணத்தை விமர்சித்து சோமயணம் என்ற நாடகத்தை எழுதுவது சங் பரிவார கும்பலுக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்கும் ஆத்திரத்தைமூட்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதனால்தான் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே மாணவர் புஷ்பராஜ் மீது தாக்குதல்கள் நடப்பதும் பல்வேறு ஒடுக்கு முறைகள் நடப்பதும், மாணவர்கள் மீதான விசாரணைக் கமிட்டி என்பதில் புகுந்து கொண்டுள்ள பாஜக குண்டர் படைகளில் ஒருவரான விஜயன் என்பவர் மூலம் அவர் மீது பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதும் தொடர்கிறது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வட இந்திய பேராசிரியரான திருவாளர் சூரஜ் குமார் சின்ஹா என்பவர் மாணவர் புஷ்பராஜிடம், ”உனக்கு ஹிந்தி தெரியாதா? அப்படி என்றால் நீ இந்தியனே கிடையாது” என்று மிரட்டும் வகையில் கொக்கரித்துள்ளார்.

மற்றொரு பேராசிரியரும், ”நீ எல்லாம் எதற்கு படிக்க வருகிறாய்” என்று மாணவர் புஷ்பராஜின் சாதியப் பின்னணியை அதாவது அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்துள்ளார் என்பதை இழிவு படுத்துகின்ற வகையில் பேசியுள்ளார்.

மாணவர் புஷ்பராஜ் பிற மாணவர்களைப் போல ’கேரியரிசம்’ பேசாமல் சமூக அநீதிகளுக்கு எதிராக நடுவிரல் மிஸ்டர் சங்கி என்ற சமூக வலைதள பக்கம் மூலமாக பகுத்தறிவுப் பிரச்சாரங்களையும், நையாண்டி பாணியில் இந்து மதவெறி, சினிமா கழிசடைகள் மீதான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் அவர் மீது சங் பரிவாரக் கும்பல் ஆத்திரமடைந்துள்ளனர்.

படிக்க:

 புதுச்சேரிக்கு ஏன் தேவைப்படுகிறது மாநில அந்தஸ்து?

 டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி!

இதனை எதிர்த்து புதுச்சேரியில் செயல்படும் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தலைமையில் தொடர்ச்சியான போராட்டங்கள், கவர்னர் மாளிகை முற்றுகை என்று நடந்து வருகிறது. இந்தப் போராட்டங்களின் விளைவாக ஓரளவு பணிந்துள்ள நிர்வாகம் தற்போது மாணவர் புஷ்பராஜை அழைத்து பேசியுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

என்றாலும் உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் சங்பரிவார கும்பல், மாணவர் அமைப்புகள், பேராசிரியர்களின் அமைப்புகள் ஆகியவை ஒன்றிணைந்த முறையில் ஆர்எஸ்எஸ் முன்வைக்கின்ற சனாதன தர்மத்தையும், மோடி அரசாங்கம் முன் வைக்கின்ற புதிய கல்விக் கொள்கையையும் மாணவர்கள் மீது திணிக்கின்ற முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இதனை எதிர்த்து முறியடிப்பதற்கு மாணவர்கள் மத்தியில் பெரியார், அம்பேத்கர் கருத்துகள், பகுத்தறிவு, நாத்திகம், சாதி மறுப்பு மற்றும் கம்யூனிசக் கருத்துகளை பரப்புவது மிகவும் அவசியமாகியுள்ளது.

மாணவர்களாக இருக்கும்போதே சமூகத்தைப் பற்றி அக்கறையுடன் சிந்திக்கின்ற, சமூகப் பொருளாதார அரசியலை கற்றுக் கொடுப்பதும், இந்தியாவில் மிக நீண்ட காலமாக நிலவி வரும் சாதி தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து முறியடிப்பதற்கு மதச்சார்பற்ற புரட்சிகர சக்திகள் வளர வேண்டும். அத்தகைய சக்திகளுக்கு துணை புரிவதும், இணைந்து செயல்படுவதும் வேண்டும் என்பதை கொண்டு செல்வது ஆகிய கடமைகளை நமக்கு உணர்த்துகிறது.

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் உள்ளிட்ட பல முற்போக்கு சக்திகள் பணிபுரிந்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தலை விரித்தாடும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் அராஜகத்தையும், பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடிப்பது புதுச்சேரி மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களின் கடமையாக மாறியுள்ளது.

கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here