டந்து முடிந்த பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி, நிதிஷ்குமாரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கு விசுவாசமாக பாஜகவின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளார் முதல்வர் நிதீஷ் குமார். அதன் ஒரு பகுதியாக சனாதன தர்மத்தை ஊக்குவிக்க பீகார் அரசு கவுன்சில் 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க உள்ளது.

பதிவு செய்யப்பட்ட கோயில்கள் மற்றும் மடங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்புள்ள பீகார் அரசு கவுன்சில், மாநிலம் முழுவதும் சனாதன தர்மத்தை மேம்படுத்துவதற்காக அதற்கு பணியாற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பீகார் மாநில மத அறக்கட்டளை BSRTC கவுன்சிலால் 38 ஒருங்கிணைப்பாளர்கள் (அதிகபட்சம் சங்பரிவார் கும்பலை தான் நியமிப்பார்கள்) நியமிக்கப்படுவார்கள். அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட கோவில்கள் மற்றும் மடங்களின் தலைமை பார்ப்பனர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்கள்.

BSRTC-யில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 2499 கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி பேசிய BSRTC யின் தலைவர் ரன்பீர் நந்தன் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை “பூசாரிகள் பார்ப்பனர்கள் மத்தியிலே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

பார்ப்பனர்கள் சனாதனத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதற்கு 2000 ஆண்டுகால வரலாற்று அனுபவம் நம்மிடம் உள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பது, சாதிவெறியை நியாப்படுத்துவது, இருபிரிவு மக்களிடையே மோதலை உருவாக்குவது என அனைத்து குற்ற செயல்களையும் ஊக்குவிப்பார்கள். ஏற்கனவே தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடும் பீகார் போன்ற மாநிலங்களில் அவை நிறுவனமயமாக்கப்படும். சனாதனமும் இதைத்தான் சொல்கிறது. இதனை கடைப்பிடித்தாக வேண்டும் என பீகார் மக்கள் பழக்கப்படுத்தப்படுவார்கள்.

பீகார் அரசின் சட்ட துறையின் கீழ் வரும் கவுன்சில், மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கோயில்கள் மற்றும் மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் சொத்துக்களின் பதிவுகளை பராமரிக்கிறது மற்றும் அவற்றின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுகிறது. இனிமேல் இவற்றின் அதிகாரம் சட்டபூர்வமாக சனாதனத்தை வளர்க்க நியமிக்கப்படும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட கோயில்கள் மற்றும் மடங்களும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் ‘சத்யநாராயண கதை’ மற்றும் ‘பகவதி பூஜை’ ஆகியவற்றை நடத்துவதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்வார்கள். பதிவு செய்யப்பட்ட அனைத்து கோயில்கள் மற்றும் மடங்களும் இந்த இரண்டு பூஜைகளின் முக்கியத்துவம் குறித்த செய்தியை மக்களிடையே பரப்புவதை அவர்கள் உறுதி செய்வார்கள்,” என்று அவர் கூறினார்

சனாதனம் என்றால் ‘இந்து தர்மம்’ என பார்ப்பனர்களாலும் இந்து மத வெறியர்களாலும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகால பழமையான காட்டுமிராண்டித்தனமான வர்ணாசிரமக் கொள்கைகளை இந்திய மக்களிடம் தற்போது திணிக்க முற்படுகிறார்கள். கோவில்களில் மட்டுமல்லாமல் வீட்டிலும் மத நடவடிக்கைகளை செய்ய சொல்வதன் மூலம் மறைமுகமாக மதவெறியும் ஊட்டி வளர்க்கப்படும்.

மேலும் படிக்க:

 சனாதனத்தைப் பாதுகாக்கும் காலச்சுவடின் பார்ப்பனியம்!

 சனாதனத்தை அமல்படுத்தும் பார்ப்பன பயங்கரவாதமே நாட்டின் எதிரி!

நீதிபதியே ஆனாலும் பகுத்தறிவு பேசக்கூடாது, பேசினால் சனாதனத்தை இழிவு படுத்திவிட்டார் என செருப்பு வீசுவார்கள். குடியரசுத் தலைவரே ஆனாலும் தலித் என்றால் கோவிலுக்குள் நுழையக்கூடாது மீறி அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு நுழைந்தால் தீட்டுப்பட்டு விட்டது என்று கோவிலை கழுவி இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே இழிவுப்படுத்துவார்கள்.

“இன்று கூட நான் முதலமைச்சராக இருந்தாலும் சில சக்தி வாய்ந்த நபர்கள்(பார்ப்பனர்களை தான் அப்படி சொல்கிறார்) நான் தலித் என்பதால் என்னை தீண்டத்தகாதவராகவே நடத்துகிறார்கள்” என்று பீகாரின் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி ஒரு விழாவில் கூறினார். “ஒரு விழாவில் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் சடங்குகளை செய்யவும் சிலர் என்னை விசேஷமாக அழைத்தார்கள். ஆனால் நான் திரும்பி வந்த பிறகு ஒரு மூத்த தலைவர் ராம் லகன் ராம் என்னிடம் கூறினார். நான் தீண்ட தகாதவன் என்பதால் அவர்கள் கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகளையும் அவர்களின் வீட்டையும் கழுவினார்கள்” என்று வேதனையுடன் கூறியுள்ளார். இதுதான் சனாதனம். இதனைத் தான் பீகாரில் வளர்ப்பதற்கு குழு அமைக்கிறார்கள்.

பீகாரின் முதல்வராகவே இருந்தாலும் சனாதன வர்ணாசிரம தர்மத்தின் படி நீ தீண்டத்தகாதவன் தான், சூத்திரன் தான் என சொல்கிறது பார்ப்பனியம். அதே பார்ப்பனியத்திடம் அதனை வளர்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளது சாதிய தீண்டாமையை வளர்ப்பதற்கே வழிவக செய்யும்.

சனாதன தர்மம் சாதி அமைப்பை புனிதாமாக்குகிறது என்றார் அம்பேத்கர். “சாதியை அழிக்க வேண்டுமானால் அதன் தத்துவ அடிப்படையான சனாதனத்தைச் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்” எனவும் கூறினார். அமபேத்கரின் கூற்றுப்படியே சனாதனத்தை கேள்விக்குட்படுத்தும் அதே வேளையில் அதனை உயர்த்திப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவை இந்தியாவிலிருந்து ஒழித்துக் கட்டும் பணியை நாம் முதன்மையாக மேற்கொள்ள வேண்டும்.

  • நந்தன்

1 COMMENT

  1. அப்பட்டமான பிழைப்புவாதியாகி போய்விட்ட சூத்திரன் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு போன்றோர் எல்லாம் சனாதனத்தை உயர்த்தி பிடிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு மக்களைப் பற்றிய கவலை என்பது எள்ளின் முனை அளவும் இல்லை. பதவி சுகங்களை அனுபவிப்பதும் சொத்துக்களை குவிப்பது மற்றும் காப்பது மட்டுமே கொள்கைகளாக வரித்துக் கொண்டு விட்டார்கள். எனவே நிதீஷ் குமார் பதவி ஏற்ற உடனேயே பார்ப்பனீய ‘சனாதன தர்மத்தை’ உயர்த்திப்பிடித்து பார்ப்பனர்களுக்கு தொண்டூழியம் செய்ய முனைந்திருக்கும் செயற்பாடுகளில் ஆச்சரியப்படத்தக்கவை ஏதுமில்லை. சரியான அரசியலைப் புரிந்து கொண்டு மக்கள் பெரும் படையாக அணி திரள்வதில் தான் உழைக்கும் மக்களுக்கான விடியல் என்பது தென்பட வாய்ப்பு உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here