டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவைப் பயிர் அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இந்த வருடம் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளார்கள்.

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழை வெள்ளம் சூழ்ந்து வயலில் படுத்து விட்டதால், அறுவடை இயந்திரம் மூலம் நடக்கும் அறுவடையில் 20 மூட்டை காணும் இடத்தில் 10 மூட்டைகளே கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் காரணமாக நெல் ஈரப்பதம் காரணமாக சரியாக விலை போவதும் இல்லை.

தேர்தல் காலம் நெருங்கி வருவதால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புமே தேர்தல் களத்தில் மும்மரமாக செயல்பட தொடங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக தான் எடப்பாடி பழனிச்சாமி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் சேதமடைந்துள்ளதாகவும், பராமரிப்பில்லாததால் சாக்கிலேயே முளைக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் களத்தை சூடாக்கினார். இதற்கு எதிர்வினையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆய்வு செய்துவிட்டு அப்படியான பிரச்சனை இல்லை எடப்பாடி பழனிச்சாமி பொய் பேசுகிறார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெல் மூட்டைகள்! கண்டுகொள்ளாத திமுக அரசு!
நெல்கொள்முதல் நிலையம்

திமுகவோ அதிமுகவோ விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு இந்த பிரச்சனையை கையாளவில்லை. மாறாக அரசியலே இதில் பிரதான பங்கு வகிக்கிறது. இதே அரசியலை திமுக எதிர்கட்சியாக இருந்தபோது செய்தது.

உண்மை நிலை என்னவென்றால் அறுவடை செய்யப்பட்டதில் மூட்டைகள் நிரப்பப்பட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் டோக்கன் போடப்பட்டு தன் முறைக்காக காத்திருக்கிறது. இப்படி வைக்கப்படும் நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்போடு மழையில் நனையாதவாறு வைக்கப்படுவதில்லை. மாறாத திறந்தவெளிகளில் தான் வைக்கப்படுகிறது. இதன் காரணமாக மழையில் நனைந்து நெல் மூட்டைபிலேயே முளைக்க ஆரம்பிக்கிறது. விற்பனையாகாமல் இருக்கும் நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளை பொறுப்பு என்பதால் நட்டத்தையும் அவர்களே எதிர்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நடப்பு பருவத்தில் மொத்தம் 1853 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைப்பதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. ஆகையினால் தான் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குகிறீர்களே, கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த துப்பில்லையா எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆறு மாத உழைப்பை செலுத்தி நெல்லை உற்பத்தி செய்த விவசாயிகள், மழையால் நெற்பயிர் வயலிலும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் முளைப்பதை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். ‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் கூட மிஞ்சாது’ என்பார்கள். 6 மாதத்தில் விதை நெல், உரம், வரப்பு வெட்டக் கூலி, களையெடுக்கக் கூலி,  அறுவடை இயந்திரக் கூலி என கஷ்டப்பட்டு நெல்லை விலைய வைப்பவர்கள் அவர்களின் உழைப்புக்கு கணக்கை பார்ப்பதில்லை. அதையெல்லாம் கணக்கு பார்த்தால் சிறு விவசாயிகளை பொருத்தமட்டில் அவர்களுக்கு நஷ்டம் தான் மிஞ்சும். அதனால்தான் அவர்களால் முன்னேறவே முடியவில்லை.

மறுபுறம் தனியார் கொள்முதல் நிலையங்கள் அரச நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவான விலையில் நெல்லை கொள்முதல் செய்து அரசிடம் விற்பனை செய்வதன் மூலம் லாபம் பார்க்கிறார்கள். நெல் கொள்முதல் நிலையங்களிலும் தனியாருக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள்.

குறுவை பருவ சாகுபடி காலத்தில் மழை அதிகமாக இருப்பதால் நெல்லின் ஈரப்பத அளவு கூடுகிறது. இதனால் நன்றாக காய வைக்கப்பட்ட நெல்லை, நெல் கொள்முதல் நிலையங்கள் எடுத்துக் கொள்கின்றன. அனுமதிக்கப்பட்ட நெல்லின் ஈரப்பதளவு 17%லிருந்து 22%  ஆக உயர்த்துவது பற்றி தமிழக அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஆராய்வதற்கு ஒன்றிய அரசு மூன்று குழுக்களை அமைத்துள்ளது. ஆனால் அவர்கள் ஆய்வு செய்ததற்கு தாமதம் காட்டுவதால் விவசாயிகள் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

படிக்க:

 டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் இல்லாமல் அழிகிறது! திமுக அரசே முதன்மை குற்றவாளி?

 செப்டம்பர் 30: தோழர் சீனிவாச ராவ் நினைவு தினத்தை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!

தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக அரசோ அல்லது இதற்கு முன் ஆண்ட அதிமுக அரசோ விவசாயிகள் நலனில் பெரிதாக அக்கறை செலுத்தியதே கிடையாது. வேட்டி கட்டிக் கொண்டு பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு வயல்வெளிகளில் நடப்பதனாலேயே அவர்களை விவசாயிகளின் நண்பன் என்று கருதிவிட முடியாது. இது தேர்தல் ஸ்டெண்டுக்காக நடக்கும் லோ பட்ஜெட் சூட்டிங். இருவருமே டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வரவேற்றவர்கள் தான். மக்களின் கடுமையான போராட்டத்தின் காரணமாகவே பின்வாங்கினார்கள்.

டெல்டா மாவட்டங்கள் முப்போகம் விளையும் விலை மாறி இரண்டு போகமாக குறைந்ததற்கு இவர்களும் ஒரு காரணம். விளை நிலங்களை – விலை நிலங்களாக்க  அனுமதித்தது, வாய்க்கால், ஆறு போன்றவற்றை தூர்வாராமல்  மராமத்து பணிகளை சரியாக கையாளாதது,  மணல் கொள்ளை நடத்தியது இடுபொருட்களை தனியாரிடம் தாரை வார்த்தது என விவசாயிகளின் துன்ப துயரங்களுக்கு ஒன்றிய அரசும், மாநில ஆட்சியாளர்களுமே முதன்மை காரணம்.

அதனால்தான் மாறி மாறி குற்றம் சொல்லிக் கொள்கிறார்களே ஒழிய நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தவும், நெல் மூட்டைகளை மழையில் நனைய விடாமல் பாதுகாப்பதற்கும் நிரந்தர தீர்வுகளை நோக்கி நகராமல் விவசாயிகளை பலியிடுகிறார்கள்.

விவசாய பெருமக்களே அரசிடம் நாம் கோரிக்கைகளை கெஞ்சி பெற முடியாது என்பதே நமது கடந்த கால அனுபவம். பண்ணையடிமைக்கு எதிரான தீரமிக்க போராட்டம் நடத்தியதே நமது பாரம்பரியம். விவசாயிகள், விவசாயக் கூலிகளை இணைத்து நாம் நடத்தும்  போராட்டங்களில் மூலமே பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். நமக்கு  டெல்லி விவசாயிகளின் போராட்டம் முன்னுதாரணமாய் உள்ளது‌.

  • நந்தன்

1 COMMENT

  1. விவசாயிகளின் வலியையும் வேதனையும் வெளிப்படுத்துகிறது இந்த கட்டுரை…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here