தென் அமெரிக்கா கண்டத்து நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் ஏற்கனவே ஆட்சி புரிந்து வந்த ஹியூகோ சாவேஸ் அரசியலில் இருந்த காலத்திலிருந்து தற்போது வரை அங்கு நிலவிவரும், ‘சொல்லிக் கொள்ளப்படும் சோசலிச’ அரசுக்கு எதிராக ஆட்சிக் கவிப்பு திட்டத்துடன் செயல்பட்டு வரும் மரியா கொரீனாவுக்கு இந்த ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் முழுவதும் சோசலிச சமூக அமைப்பின் தாக்கம் உருவான காலகட்டத்தில் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கம்யூனிசம் பரவாமல் இருப்பதற்கு அமெரிக்க மேல்நிலை வல்லரசும், ஏகாதிபத்திய முதலாளித்தவ நாடுகளும் பல்வேறு சதி திட்டங்களை மேற்கொண்டன.
வட அமெரிக்க கண்டத்தின் முன்னாள் சோசலிச நாடான கியூபாவை ஒடுக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது அமெரிக்க மேல்நிலை வல்லரசு. குறிப்பாக அதன் ஆட்சியை நடத்தி வந்த அதிபர் பிடல் காஸ்ட்ரோவை படுகொலை செய்வதற்கு அமெரிக்காவின் உளவுப் படையான சிஐஏ 638 முறைக்கும் மேல் முயற்சி மேற்கொண்டது என்பது தான் வரலாறு. இது பிரபலமான ஹாலிவுட் திரைப்படமாகவே வெளிவந்தது.
பொலிவியாவின் புரட்சியாளரான சேகுவாரா அமெரிக்க சிஐஏ வேட்டை நாய்களால் வேட்டையாடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பதும் சிலியின் அலெண்டெ ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்கு எதிராக, தனது நாட்டின் கனிம சுரங்கங்களை அரசுடமையாக்கினார் என்பதால் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் சமகாலத்திய வரலாறு.
இவ்வாறு சொல்லிக் கொள்ளப்படும் சோசலிச, இடதுசாரி அரசுகளை கூட ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் அனுமதிப்பதில்லை. அமெரிக்க மேல்நிலை வல்லரசு இத்தகைய நாடுகளின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தனது உளவுப் படையான சிஐஏ மூலமும், தனது ராணுவ மையமான பென்டகன் மூலமாகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அந்த தாக்குதல்களில் ஒன்றுதான் வெனிசுலாவின் அதிபரை ஆட்சிக் கவிழ்ப்பு செய்து பிற்போக்கு வலதுசாரி என்று சொல்லக்கூடிய பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவதற்கு துடித்துக் கொண்டுள்ள மரியா கொரீனாவின் ஆட்சியைப் பிடிப்பதற்கான கனவு.
உலகம் முழுவதும் பாலஸ்தீனத்தில் குறிப்பாக காசாவில் நடக்கின்ற படுகொலைகளை கண்டித்து வீதிகளில் திரண்டு லட்சக்கணக்கான மக்கள் போராடுகிறார்கள். பாலஸ்தீன கொடியை வைத்துக் கொண்டும், செங்கொடியை உயர்த்திக் கொண்டும் ஜனநாயக உணர்வுடனும், புரட்சிகர போராட்ட உணர்வுடனும், ‘சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரி!’ என்று போராடுகிறார்கள்.
காசாவின் மீது போர் தொடங்கி இதுவரை கொல்லப்பட்டுள்ள சுமார் 70 ஆயிரம் மக்களுக்காக தனது கண்ணீர் அஞ்சலி முதல் இதய சுத்தியுடன் தன்னால் இயன்ற அனைத்து வகையான உதவிகளையும் செய்வதற்கு முன் வந்து சொந்த நாட்டு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து போராடுகிறார்கள்.
ஆனால் காசாவில் தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்த யூத ஜியோனிச குற்றவாளியான நெதன்யாகுடன் நெருக்கமான உறவு வைத்திருந்த மற்றுமொரு பாசிச பயங்கரவாதிதான் இந்த மரியா கொரீனா.
படிக்க:
♦ நோபல் பரிசுக்கு ஏங்கும் டிரம்ப்: யோக்கியதை என்ன?
♦ துடப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம்! திவாலான எகாதிபத்திய பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு!
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக மரியா கொரீனாவும் அவரது கட்சியான “வென்ரே வெனிசுவேலா” உம் செயற்பட்டனர். நெதன்யாகுவின் “லிக்குவிட்” கட்சியோடு அவர்கள் கூட்டு ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டார்கள். “அரசியல் ரீதியிலும், கொள்கைரீதியிலும் தமது கூட்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, புவிசார் அரசியல் ரீதியிலும், பாதுகாப்பு அடிப்படையிலும் அது அமைந்துள்ளது” என்றனர் அவர்கள்! அதை அவர்கள் “கூட்டு நடவடிக்கை” என வேறு அறிவித்தனர்.
இந்தக் கூட்டு நடவடிக்கை மூலம் இஸ்ரேல் நடத்திய அனைத்து விதமான பயங்கரவாத தாக்குதல்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தவர் தான் இந்த மரியா.
உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு தனக்கே கிடைக்கும் என்று அமெரிக்க பயங்கரவாதியான டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவரது சக பாடியான மரியா கொரீனாவுக்கு. இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது. தனக்கு நோபல் பரிசு என்ற அறிவித்தவுடன் அதிர்ச்சி அடைந்த கொரீனா உடனே ட்ரம்புக்கு தகவலை தெரிவித்து, “இந்த பரிசு உண்மையிலேயே எனக்கு தகுதி இல்லாதது. உங்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டியது” என்று நகைச்சுவையாக கூறினாராம்.
தனக்கு நோபல் பரிசு வரவேண்டும் என்று பல்வேறு கோணங்களில் கெஞ்சிக் கொண்டு இருந்த ட்ரம்புக்கு பரிசு கிடைக்காதது ஒரு ஏமாற்றம்தான் என்ற போதிலும் நோபல் பரிசு பட்டியலில் அவர் இன்னமும் இருக்கிறார் என்று நாம் கூறலாம்.
ஏனென்றால் உலக சமாதானம் என்ற பெயரில் கம்யூனிசத்திற்கு எதிராகவும், ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராகவும், கார்பரேட்டுகள் மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதை பாதுகாக்கின்ற அரசு பயங்கரவாத மற்றும் பாசிச பயங்கரவாத செயல்களை செய்கின்ற தகுதி படைத்த அனைவரும் நோபல் பரிசு பெற உரிமை உள்ளவர்கள் தான்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து கம்யூனிசத்திற்கு எதிராக களமாடுகின்ற கடைந்தெடுத்த கம்யூனிச விரோதிகள் முதல் மனித குலத்தின் எதிரிகள், பாசிச படுகொலை பல புரிந்த சர்வாதிகாரிகள் ஆகியவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து அதன் யோக்கியதையே நாம் புரிந்து கொள்ள முடியும்.
கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் சதி செயல்களில் ஈடுபட்ட பலருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள பட்டியலை தீக்கதிர் வெளியிட்டுள்ளது.
“அவற்றில் சில:
- போலந்தில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பை முன்னெடுத்த லே வலேசா.- 1983.
- சீன எதிர்ப்பாளர் தலாய் லாமா- 1989.
- சோவியத் யூனியனிலும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் சிதைவதற்கு முக்கியக் காரணமாக இருந்த கோர்பச்சேவ்- 1990.
- லியூ சியோபோ எனும் சீன சோசலிசத்தின் எதிர்ப்பாளர்- 2010
- வியட்நாம் போர் மற்றும் சோவியத் யூனியனுக்கு எதிராக பனிப்போரை வடிவமைத்த ஹென்றி கிஸிங்கர்- 1973.
- சோவியத் சமூகத்தில் குழப்பம் விளை விக்க முயன்ற ஆந்த்ரே சக்க ரோவ்-1975
- நவம்பர் புரட்சியை எதிர்த்த போரிஸ் பாஸ்டர்நாக்- 1958. இப்படி இந்த பட்டியல் நீளமானது.”
என்கிறார் தீக்கதிரில் எழுதியுள்ள தோழர் அன்வர் உசேன்.
ஏகாதிபத்திய முதலாளித்துவமும், அமெரிக்க மேல்நிலை வல்லரசும் அதற்கு போட்டியாக கிளம்பியுள்ள சீன பல் துருவ வல்லரசு போன்ற ஆதிக்க சக்திகள் உலகில் மக்களுக்கு எதிராகவும், உழைப்பு சக்தியை கொடூரமாக சுரண்டுகின்ற காலத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டு வரும் வரை இத்தகைய போலிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதை தவிர்க்கவே முடியாது.
ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை சமாதானம் ஒருபோதும் பூவுலகில் நிகழாது. மாறாக போர்களும், அரசு பயங்கரவாத மற்றும் பாசிச பயங்கரவாத ஒடுக்குமுறைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
◾கணேசன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி