மிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியில் அமரும் திமுக – அண்ணா திமுக நிர்வாகத்தில் கனிம வளக் கொள்ளைகள் என்பது மிக நீண்ட காலமாக தங்கு தடையின்றி நடந்தேறி வருகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த கொள்ளையில் சர்வ கட்சிகளும் தகுதிக்கு ஏற்றபடி கொள்ளையர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர்.
அதனால்தான் எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் கூட அவர்கள் வாயடைத்துக் கொள்கிறார்கள்.

அது தாதுமணல் திருடன் வைகுண்டராஜனாக இருந்தாலும் சரி; கிரானைட் கொள்ளையன் PRP எனும் PR பழனிச்சாமயானாலும் சரி; இன்னும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் கல் குவாரிகள், மணல் குவாரிகள் அனைத்து இயற்கை வளங்களையும், மக்களின் நலன்களில் இருந்து பிரித்து தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகின்றன. ஆற்று மணல் அள்ளுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆழத்தைக் கடந்து பல மடங்கு தோண்டப்படுவதால் ஆற்றோர மக்களின் குடிதண்ணீர் ஆதாரம், பாசன ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.

கல்குவாரிகளை அதே போன்ற தன்மையில் தோண்டுவதால் மலைகள் இருந்த இடங்கள் காணாமல் போகின்றன; மிக ஆழத்திற்கு தோண்டுவதால் இயற்கை வளம் அழிகின்றன; பல நேரங்களில் மக்கள் உயிரிழக்க நேரிடுகின்றன.

இப்படிப்பட்ட கொள்ளைக்கு வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறைகளில் பணி புரியும் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை தகுதிக்கேற்ப லஞ்சமாக கொள்ளைப் பணத்தை வாரிக் குவிக்கின்றனர்.

அதனால் தான் கனிம வளம் தொடர்பான பணி இடங்களில் அமர்வதற்கு, அதற்கான அதிகாரிகள், ஊழியர்கள், திரளான நிதியை லஞ்சமாகக் கொடுத்து அப்பணியிடத்தைப் பெற்றுச் செல்கிறார்கள்.

அதே போல அரசியல் துறையில் கட்சி வேறுபாடுகளின்றி வட்டம், மாவட்டம், துறை சார்ந்த ‘மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்’ அனைவரும் தகுதிக்கேற்ற வகையில் குவாரி பெரும் முதலாளிகளிடமிருந்து கொள்ளையோ கொள்ளை என்று கொள்ளை அடிக்கின்றனர்.

அதனால் தான் முந்தைய கனிமவளத்துறை அமைச்சர் – திமுக பொதுச்செயலாளர் -யிடமிருந்த கனிமவளத் துறையை ‘பாதுகாப்பு கருதி’ அமைச்சர் ரகுபதியிடம் மாற்றி ஒப்படைத்து விட்டார்கள்.

தாதுமணல் திருடன் வைகுண்டராஜனுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகளும் தூத்துக்குடியில் களம் இறங்கி போராடினர். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சி நடத்தினர். ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். காவல்துறை பேரணிக்கு தடை போட்டு விட்டது. ஆனாலும் பொதுக்கூட்டமும் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளும் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தன. ‌

இயக்கத் தோழர்களுக்கு எதிராக பொதுக்கூட்ட மேடையிலேயே தாக்குதல் தொடுக்க முனைந்து நின்ற நூற்றுக்கணக்கான வைகுண்ட ராஜனின் கூலிப்படையை எதிர்த்து முறியடிக்க அமைப்பு தோழர்கள் மிகத் தயாராக நின்றபொழுது, காவல்துறையே அந்த வெறி நாய்களை விரட்டி அடித்த வரலாறும் உண்டு.

மதுரையில் PR பழனிச்சாமி பல்வேறு வானுயர்ந்த மலைகளையே காணாமல் செய்து விட்டான். கடைசியில் புகழ்பெற்ற மதுரை ஒத்தக்கடை ஆனைமலையையும் குறி வைத்த பொழுது, அப்பகுதி மக்களும் முற்போக்கு இயக்கங்களும் ஒருங்கிணைந்து பி ஆர் பி முகத்தில் கரி பூசின. அதனால் தான் அந்த ஆனைமலை ‘பிழைத்தது’.

அதன் பிறகு அனில் அகர்வால் வேதாந்தாவின் டங்ஸ்டன் தொழிற்சாலை துவங்க ஒன்றிய பாஜக அரசு வழிவகுத்துக் கொடுத்து பணியைத் துவங்க முற்பட்ட பொழுது, அப்பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்திய பின் ஒன்றிய அரசு பின் வாங்கியது. ‘ஸ்டெர்லைட் புகழ்’ வேதாந்தாவிற்கு தக்கப் பாடம் புகட்டப்பட்டது.

நெல்லை கல் குவாரி கொள்ளை! 

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கல் குவாரி – தாது மணல் குவாரி – மணல் குவாரி கொள்ளைகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்பது ஒரு புறம்.

அண்மை ஆண்டுகளில் 10-09-2022 தேதியில் கல் குவாரி உரிமையாளர்களால் பரமத்தி அருகே காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை செய்யப்பட்டார். கடந்த 25-04- 2023 அன்று மணல் கொள்ளையை தடுத்தார் என்ற காரணத்திற்காக கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்திலேயே வைத்து கல்குவாரி உரிமையாளர்களால் கொலை செய்யப்பட்டார்.

கனிம வளங்கள்: கொள்ளையோ கொள்ளை!

திருமயம் அருகே சட்டவிரோத கல் குவாரியை எதிர்த்து போராடிய அதிமுகவைச் சேர்ந்தவரும் சமூக செயற்பாட்டாளருமான ஜெகபர் அலி கடந்த 17-01-2025 அன்று குவாரி உரிமையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்களும் கடந்த ஆண்டுகளில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கள்ளத்தனமாக சாராயம் விற்றதை தட்டிக் கேட்ட ஹரிஷ் மற்றும் ஹரி சக்தி என்று இளைஞர்களை கள்ளச்சாராய வியாபாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதேபோன்று கடந்த 15-08-2024 அன்று சட்ட விரோத மது விற்பனை குறித்து காவல்துறைக்கு புகார் அளித்துவிட்டு தன் பண்ணைக்குத் திரும்பும் வழியில் சமூக ஆர்வலர் முனிராஜ்(68) என்பவர், இரண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளது என்று புகார் அளித்த பழனிச்சாமி, கடந்த செப்டம்பர் மாதம் சகனாபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் திமுக பொறுப்பாளர் விநாயகம் பழனிச்சாமியால் வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில்தான் “அறப்போர் இயக்கம்” திருநெல்வேலியில் நடத்திய மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு சுரேஷ் மீது குவாரி உரிமையாளர்களால் நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் தமிழ்நாட்டில் எளிய மக்கள் துவங்கி வழக்கறிஞர்கள் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலியில் கல் குவாரிகளால் மக்கள் எந்த விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் அறப்போர் இயக்க மக்கள் கருத்து கேட்பு நிகழ்வு கடந்த 02-11-2025 அன்று திருநெல்வேலி ரோஸ் மஹாலில் நடந்துள்ளது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வி.சுரேஷ் தலைமையிலான குழு, மக்களது கருத்துக்களைக் கேட்டு அறிந்து கொண்டிருந்தனர். இந்தக் குழுவில் டாக்டர் சுரேஷ் தவிர, தன்னாட்சி அமைப்பு கிராம சபை வல்லுநர் திரு நந்தகுமார், நீர் மேலாண்மை நிபுணர் திரு உதயகுமார், சுற்றுச்சூழல் நிபுணர் திரு தணிகைவேல், விவசாய மேலாண்மை நிபுணர் திருமதி நந்தினி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஏற்கனவே திருநெல்வேலியில் கல்குவாரி முறைகேடுகளால் எப்படி ஒரு கோடிக்கும் அதிகமான மெட்ரிக் டன் கனிம வளக் கொள்ளை சட்டவிரோதமாக நடந்தேறியதை ஆவண ரீதியாக அறப்போர் இயக்கம், கடந்த 22/02/2024 அன்று புகார் அளித்தது குறித்தான விவரங்களை அதன் ஒருங்கிணைப்பாளர் ‌ஜெயராம் வெங்கடேசன் பேசியுள்ளார்.

அதிகமான கல் குவாரிகள் இருக்கக்கூடிய ராதாபுரம் பகுதியில் இருந்து பெரும்பான்மையான மக்கள் வந்திருந்து தாங்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து தெரிவித்து வந்தனர். 2020 -ல் 53 சட்டவிரோத குவாரிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இரண்டு மடங்காக (120 குவாரிகள்) அதிகரித்துள்ளன. முக்கியமாக அதிகப்படியான வெடி வெடிப்பதால் வீடுகள் அதிர்வது, நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவது, குவாரி வேலைகளால் ராதாபுரம் வாய்க்காலில் தண்ணீர் வராதது, மற்றும் விவசாய பாதிப்பு குறித்து மக்கள் பேசி வந்தனர்.

மேலும் ஆலங்குளம், பொன்னாக்குடி, கயத்தாறு, தாதநூத்து, அடைமிதிப்பான்குளம், ரெட்டியார்பட்டி, தாழையூத்து, தச்சநல்லூர், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திசையன்விலை, அம்பாசமுத்திரம் போன்ற பல இடங்களில் இருந்தும் குவாரிகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்கள் தெரிவித்தனர்.

இத்தருணத்தில் சுமார் 28-க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் கலவரம் செய்ய முயற்சித்தனர். அவர்கள் குவாரிகளுக்கு ஆதரவான வக்கீல்கள் என்று கூறி, கருத்து கேட்பு நிகழ்ச்சியை நடத்த விடாமல் கலாட்டா செய்ய தொடங்கினர். நாற்காலிகளை தூக்கி எறிந்து குழு தலைவர் டாக்டர் சுரேஷ் மற்றும் சிலர் மீது தாக்குதலும் நடத்தினர்.

திட்டமிட்டுக் குறிவைத்து தாக்கிய இந்த தாக்குதலால் டாக்டர் சுரேஷ் தலையில் காயம் ஏற்பட்டது. கல்குவாரியால் தங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனை பற்றி பேச வந்திருந்த ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தினர். மேலும் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் காவல்துறைக்கு அளித்துள்ளது. காவல்துறை இந்த அப்பட்டமான வன்முறை தாக்குதல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்? ஆனால், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்பதே சரியானது.

கருத்துக் கேட்பு நிபுணர் குழுவோ, மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை ஆவணப்படுத்தி அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பிக்கும் வேலையை அறப்போர் இயக்கம் மேற்கொள்ளும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரியில் மட்டும் 700 கோடி ஊழல் 

2022 மே மாதத்தில் திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் என்னும் இடத்தில் சங்கரநாராயணன் என்பவரின் குவாரியில் சட்ட விரோதமாக விதிகளை மீறி மிகப்பெரிய அளவில் கல் குவாரி வெட்டி எடுக்கப்பட்டதால் அவை எந்த பாதுகாப்புமின்றி சரிந்து விழுந்து நால்வர் இறந்தனர்.

இதன்பிறகு அப்போதைய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக இருந்த திரு நிர்மல்ராஜ் ஐஏஎஸ் உடனடியாக பல மாவட்ட அதிகாரிகளை கொண்டு ஒரு ஆய்வுக் குழு அமைத்து அனைத்து குவாரிகளையும் விதிமுறைகளின்படி செயல்படுகின்றனவா என்பது குறித்தான ஆய்வு செய்ய உத்திரவிட்டார். ஆய்வுக் குழு 54 கல்குவாரிகளை ஆய்வு செய்து 53 கல் குவாரிகளில் விதி மீறல்கள் நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கைகள் மீது சேரன்மாதேவி துணை ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி கோட்டாட்சியர் இருவரும், அவரவர்கள் பகுதியில் உள்ள குவாரிகளுக்கு, ஆய்வுக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள சட்ட நியதிகளை மீறிய குவாரி உரிமையாளர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப அபராதம் விதித்தனர்.

இந்நிலையில் அறப்போர் இயக்கம் விதிமீறல்கள் நடந்த 53 குவாரிகளில் துணை ஆட்சியர் ஆணையிட்ட 24 குவாரிகளின் ஆணைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றது.

ஒவ்வொரு குவாரியும் எத்தனை கன மீட்டர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சாதாரண கற்களும், கிராவலும் வெட்டி எடுத்தார்கள் என்பதையும் அதன் மீது துணை ஆட்சியர் போட்ட அபராதங்களையும் கீழே காணலாம்.

மிக முக்கியமாக 24 குவாரிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கு மேலான சாதாரண கற்கள் மற்றும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் கனிமம் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

சோதனை செய்த ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்த உடன், உடனடியாக ஜூன் 2022-ல் கனிம வள இயக்குனர் நிர்மல்ராஜ் IAS மாறுதல் செய்யப்பட்டு ஜெயகாந்தன் IAS கனிமவள இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

மற்றொருபுறம் 54 குவாரிகளில் 53 குவாரிகளில் சட்டவிரோத கனிமவள கொள்ளை நடைபெற்றுள்ளதால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் அனைத்து குவாரிகளையும் தற்காலிகமாக மூடுகிறார்.

ஜூலை 2022-ல் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அப்பாவு(சபாநாயகர்) மற்றும் திருநெல்வேலி எம்பி ஞான திரவியம் நேரடியாக கலெக்டர் விஷ்ணுவிற்கு ஒரு பத்திரிக்கை சந்திப்பில் அழுத்தம் கொடுத்ததை பல்வேறு ஊடகங்கள் மூலமாக அறிந்தோம்.

விதி மீறல்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்! 

சட்ட விரோத கல்குவாரி அபராதங்களில் மிக முக்கியத் தொகையானது ஒவ்வொரு குவாரி உரிமையாளரும் எந்த அளவிற்கு சட்டத்தை மீறி சாதாரண கற்களையும், கிராவலையும் அள்ளுகிறார்களோ அதற்கான ராயல்டி மற்றும் அபராதம் மட்டுமின்றி முழு விலையை அவர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்பது சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957ல் உள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே பலமுறை உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயங்கள் தன்னுடைய தீர்ப்புகளில் குறிப்பான அம்சங்களை தெரிவித்துள்ளன. இதன்படி தான் மாவட்டத் துணை ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர்கள் தங்களுடைய ஆணைகளில் ராயல்டி தவிர சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிம வளத்திற்கு அதற்கான விலையை சேர்த்து அபராதம் போட்டது. அதன்படி 24 குவாரிகளில் உள்ள சட்டவிரோத கனிமவள கொள்ளைக்கு சேரன்மாதேவி துணை ஆட்சியர், 2022 அக்டோபர் & நவம்பர் மாதங்களில் நிர்ணயித்து அறிவித்த மொத்த அபராதத் தொகை ரூ.262 கோடி ஆகும்.

இந்த ஆணையின்மீது கல் குவாரி உரிமையாளர்களுக்கு பிரச்சனை – பாதிப்பு இருந்தால் அவர்கள் சட்ட விதியின் படி மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும். மேல்முறையீடு செய்ய வேண்டும்.

ஆனால் அதற்கு பதிலாக நேரடியாக சட்டவிரோதமாக அனைத்து குவாரி உரிமையாளர்களும் 2022 நவம்பர் டிசம்பரில் நேரடியாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையாளரான திரு ஜெயகாந்தன் ஐஏஎஸ் இடம் மேல்முறையீடு செய்கின்றனர்.

அவர் முதல் நிலை மேல்முறையீட்டு விசாரணை அலுவலர் இல்லை என்பது தெரிந்திருந்தும் கூட சட்ட விரோதமாக மேல் முறையீட்டு விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகை ரூ.262 கோடித் தொகையை தன்னிச்சையாக வெறும் 13.8 கோடியாக குறைத்து ‘மிகப்பெரும் சாதனை’ படைத்தார். அரசுக்கு சுமார் ரூ.250 கோடி இழப்பீடு ஏற்பட வழிவகை செய்தார்.

இதன்மூலம் ஊழல்வாதிகளையும் ஊழல்களையும் காப்பாற்றி திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சூழலுக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் அதிகார வர்க்கமும் ஊழல் அரசியல் கூட்டமுமாகச் சேர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

முறைகேட்டில் ஈடுபட்ட கல்குவாரி நிறுவனங்களுக்கு ஆதரவாக குறைக்கப்பட்ட அபராதம்! 

உதாரணத்திற்கு 3,82,782 கன மீட்டர் அளவில் சட்ட விரோதமாக சாதாரண கற்களும், 68,472 கன மீட்டர் அளவில் சட்ட விரோதமாக கிராவல் கனிமமும் அள்ளிய ராஜேந்திரன் என்பவரின் குவாரியில் சேரன்மாதேவி துணை ஆட்சியர் 20 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கிறார்.

ஆனால் ஜெயகாந்தன் ஐஏஎஸ் அதிகாரியோ சட்டவிரோதமாக மேல் முறையீட்டு விசாரணையை மேற்கொண்டது மட்டுமின்றி அந்த 20 கோடி அபராதத்தை வெறும் 73 லட்சமாகக் குறைத்து ஆணையிடுகிறார்‌. அந்த அற்ப தொகையையும் முதலில் 20 லட்சம் கட்டினால் போதும் என்றும், எஞ்சிய தொகையை மாதம் ரூ.5 லட்சம் வீதம் தவணை முறையில் செலுத்தலாம் என்றும் ‘மிகத் தாராள மனப்பான்மை
யுடன்’ கொள்ளையர்களுக்கு அனுசரணை
யாக உத்தரவு பிறப்பித்தார்.

குவாரி உரிமையாளர்கள் ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகளாக பல இடங்களில் இருப்பதால் ஜெயகாந்தன் ஐஏஎஸ் மற்றும் இந்த குவாரி உரிமையாளர்கள் பலர் கூட்டுச் சதி செய்து அபராதங்களை மிகப்பெரிய அளவில் குறைத்து சட்ட விரோதக் குவாரிகளை மீண்டும் திறக்க வைத்துள்ளனர். கொள்ளையை மிக விரிவாக விரிவுபடுத்தி உள்ளனர்.

படிக்க:

 “என் உயிருக்கு பாதுகாப்பில்லை”, முன்னாள் ஐஏஎஸ் சகாயம் உயர்நீதிமன்றத்தில் கதறல்!

 விருதுநகர் – கல்குவாரி வெடி விபத்தல்ல ! முதலாளிகளின் லாபவெறிக்காக நிகழ்ந்த பச்சைப் படுகொலை!

உதாரணத்திற்கு SAV குழு மற்றும் அதனை சார்ந்தவர்கள் நடத்தும் நான்கு குவாரிகளின் விவரங்களை புகாராக கொடுக்கப்பட்டதில் துணை ஆட்சியர் இந்த குவாரிகளின் சட்ட விரோத கனிமவள கொள்ளைக்கு விதித்த அபராத தொகை ரூ‌.60 கோடியாகும். ஆனால் இதனை ஜெயகாந்தன் ஐஏஎஸ் வெறும் 3.7 கோடி ரூபாயாக குறைத்து அரசுக்கு பெரும் இழப்பீட்டினைச் செய்துள்ளார். SAV குழுவின் பிரதான பொறுப்பாளர்களில் ஒருவரான கிரகாம்பெல் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அரசியல் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வருகிறார்.

மற்றொரு முக்கிய நபரான பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மற்றும் அவர் மகன் தினகரன் ராதாபுரம் பகுதியில் குவாரி மற்றும் அன்னை ப்ளூ மெட்டல் கிரஷர் நடத்தி வருகின்றனர். 2022-ல் குவாரிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் தினகரனின் டாரஸ் வண்டி சட்ட விரோதமாக கிராவல் கடத்திச் சென்றதாக அவர் மீது FIR பதியப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் இசக்கியப்பன் என்னும் பெயரிலே குவாரி நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இசக்கியப்பன் ஞான திரவியம் மகன் தினகரனுடன் சேர்ந்து 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்துடன் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகித்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டு FIR பதிவு செய்யப்பட்டது. மேலும் இசக்கியப்பன் அன்னை ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் வேலை செய்யக் கூடிய ஒரு நபர் என்றும் அந்தப் பகுதியில் அறியப்படுகிறார்.

2021 இல் அன்றைய துணை ஆட்சியர் சிவகார்த்திகேயன் ராதாபுரத்தில் உள்ள இசக்கியப்பன் குவாரியை சோதனை செய்தபோது கிட்டத்தட்ட 4 லட்சம் கன மீட்டர் சாதாரண கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டு அவருக்கு 20 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அந்த துணை ஆட்சியர் சிவகார்த்திகேயன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் முதலானோர் உடனடியாக அப் பதவிகளிலிருந்து மாறுதல் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.

சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் எப்படி ஞான திரவியம் மற்றும் ஆளும் திமுக அரசால் பழிவாங்கப் படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இது மட்டுமின்றி ஜெயகாந்தன் ஐஏஎஸ் என்பவர் அதிக விதிமீறல்கள் செய்து மூட ஆணையிடப்பட்ட குவாரிகளையும் சொற்ப அவராதத்துடன் திறந்து விடுகிறார்.

அதிக விதிமீறல்கள் செய்த கே.கே. எம். ப்ளூ மெட்டல்ஸ், ராஜேந்திரன் சுகு என்பவர் பெயரில் நடத்தும் கஸ்தூரி ரங்கபுரம் கிராம குவாரியில் 11 லட்சம் கன மீட்டர் சாதாரண கற்கள் சட்டவிரோதமாக அள்ளப்பட்டிருந்த போதிலும் ஆட்சியர் விஷ்ணு இதன் குவாரி அனுமதியை ரத்து செய்து இருந்த போதிலும் ரூபாய் 60 கோடிக்கு மேல் அபராதம் விதிக்க வேண்டிய இந்த குவாரிக்கு வெறும் 8 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதை மீண்டும் திறந்து விடுகிறார் ஜெயகாந்தன் ஐஏஎஸ்.

அதுமட்டுமன்றி பல குவாரிகள் பக்கத்தில் உள்ள அரசாங்க நிலங்களிலும் சட்ட விரோதமாக கற்கள் மற்றும் கிராவல் வெட்டி எடுத்துக் கொள்ளையடித்துள்ளனர். பெருங்குடி கிராமம் ஸ்டாலிராஜா தனது பக்கத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான சர்வே எண் 1397 மலையை முற்றிலுமாக காலி செய்து வருவது தெரிய வந்தது. அதேபோல் ராஜ்குமார் மற்றும் இஸ்ரவேல் போன்றோர் அரசு வாங்க விற்க தடை செய்துள்ள PACL நிலங்களில் குவாரிகள் அமைத்து சட்ட விரோதமாக நடத்தி வருகின்ற கொடுமை அறப்போர் இயக்க ஆய்வில் அம்பலமாகியிருக்கிறது.

இடைக்கால் என்னும் கிராமத்தில் OSR -க்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களில் ப்ளூ மெட்டல்ஸ் ஜெகன் என்பவர் குவாரி நடத்தி வருவதும் அம்பலமாகி உள்ளது.

திருநெல்வேலி மட்டுமின்றி திருப்பூரிலும் கோடங்கிப் பாளையம் என்னும் கிராமத்தில் சட்ட விரோதமாக நடந்து வரும் கல்குவாரி குறித்த ஆதாரங்களை
யும் அறப்போர் இயக்கம் புகார் செய்துள்ளது. இதிலும் ஜெயகாந்தன் ஐஏஎஸ் ரூபாய் 103 கோடி அளவில் போட வேண்டிய அபராதத்தை வெறும் 10 கோடி அளவில் மட்டும் போட்டுவிட்டு ரூபாய் 93 கோடி அளவில் அரசுக்கு இழப்பினை ஏற்படுத்தி இருக்கிறார் ஜேயகாந்தன் ஐஏஎஸ்.

இதைப் போல சிவகங்கை மாவட்டம் எஸ் எஸ் கோட்டை மற்றும் கீழவளவுக்கு இடைப்பட்ட இடத்தில் அமைந்திருந்த பெரும் மலைக் குன்றையே, அன்றைய காலத்தில் திருப்பத்தூர் திமுக எம்எல்ஏவாக இருந்த மறைந்த சிவராமன், மு க அழகிரியுடன் இணைந்து தரைமட்டமாக்கி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை பெயர்த்து எடுத்து விட்டார்கள்.

இப்படியாக தமிழ்நாடெங்கும் கடந்த சுமார் 58 ஆண்டு காலங்களில் திமுக மற்றும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளடங்கிய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தமது ஊழல் மயமான சுயநல காரியவாதங்களுக்கு, அதற்கேற்ற அதிகார வர்க்கத்தையும் நியமித்துக் கொண்டு கொள்ளையோ கொள்ளை என்று தமிழ்நாட்டையே சூறையாடுகிறார்கள்.

அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள்.
இதனால் உழைக்கும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியவையாவை?

திருநெல்வேலியில் 02/11/ 2025 அன்று அறப்போர் இயக்கம் மேற்கொண்ட கருத்து கேட்பு கூட்டத்தை ஒட்டி நிகழ்ந்த இழிவான சம்பவங்களுக்காக தமிழ்நாடு அரசும் காவல்துறையும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை – கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு – உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

  • 2022-ல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையராக இருந்த ஜெயகாந்தன் IAS மீது தக்க நடவடிக்கை எடுக்க படம்வேண்டும்.
  • 53 குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் பிரதிநிதிகளாகவும், கட்சியில் பொறுப்பும் வகித்துக் கொண்டிருக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • SAV குழு உரிமையாளர் மற்றும் திமுக பிரமுகர் மீதும் மற்றும் குற்றவாளிகள் பலர் மீதும் ஊழல் வழக்கில் FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பல்வேறு விதமான தரவுகளின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டம் 53 குவாரிகளில் ஏற்பட்ட இழப்பும், திருப்பூரில் ஒரு குவாரியில் ஏற்பட்ட இழப்பும் சேர்த்து மொத்தமாக சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கல் குவாரி உரிமையாளர்கள், ஜெயகாந்தன் ஐஏஎஸ் இவர்களின் கூட்டு சதியோடு ரூ. 700 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமான தன்மையில் அரசுக்கு 700 கோடி ரூபாய்க்கு மேலான இழப்பினை ஏற்படுத்தி உள்ளதால் அனைத்திற்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • ராதாபுரம் எம்எல்ஏவாக உள்ள அப்பாவு அவர்களும் இந்த சட்ட விரோத குவாரிகளை மூடுவதற்கு பதிலாக எப்பொழுது திறக்கப்படும் என்று அப்போது ஆட்சியர் விஷ்ணுவிற்கு அழுத்தம் கொடுத்தது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அப்போதைய கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
  • உடனடியாக ஜெயகாந்தன் ஐஏஎஸ், குவாரி உரிமையாளர்கள், ஞான திரவியம், SAV குழுமம் மற்றும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி தண்டிக்கப்படல் வேண்டும்.
  • திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி முறைகேடுகளில் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இவற்றில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் முதலானோர் முக்கிய பங்காற்றியுள்ளதால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கல் குவாரி கொள்ளை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடுதல் வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அறப்போர் இயக்கம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு உடனடியாக குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.
  • கல்குவாரியில் நடைபெற்ற ஊழலை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கையின் படி குற்றவாளிகள் எவரையும் விடுபடாத படி தண்டிக்கப்படல் வேண்டும்.

அப்பொழுது மட்டுமே, குறைந்தபட்சம் சமூக நீதி – திராவிட மாடல் – பெரியார் மண்…
என பெருமைப்படுவதற்கு தார்மீக உரிமையைப் பெற்றவர்களாக இன்றைய தமிழ்நாடு அரசாங்கம் விளங்க முடியும்.

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here