மிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டிப் புதிய சினிமாக்கள் வெளிவந்துள்ளன. விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி, வா வாத்தியார், திரௌபதி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

இந்த பட்டியலில் உள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தணிக்கை செய்யப்படாமல் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவுக்கும் விஜய்க்கும் உள்ள அரசியல் டீலிங் பிரச்சினை என்று கூறப்படுகிறது. மற்றபடி பாஜகவையோ அல்லது அவர்களது சித்தாந்தத்தையோ தாக்கி பேசும்  வசனங்கள் காரணமாக நிறுத்தப்படவில்லை. இதுவரை தணிக்கைச் சான்று வழங்காததால் ஒன்றிய அரசால் திட்டமிட்டு படம் வெளியாகாமல் தடை செய்யப்பட்டுள்ளது.

பராசக்தி படத்திற்கு 9.1.2026 அன்று யு/ஏ சான்று தரப்பட்டு இன்று படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படம் குறித்த விமர்சனத்தை நமது தளத்திலும் பதிவிட்டுள்ளோம்.

பொதுவாக திரைப்பட தணிக்கையில் மோசமான ஆபாச வன்முறை காட்சிகளை நீக்குவது இயல்பானது. ஆனால், இப்போது அதற்கு எந்த தடையும் இல்லை. ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், ஆபாச வக்கிர காட்சிகளும் எந்தவித கட் செய்யப்படாமலும் A சான்றிதழுடன் திரையிடப்படுகிறது.

தணிக்கை வாரியம் வேறு என்ன வேலை செய்கிறது என கேட்டால், ஒரே வார்த்தையில் பாஜகவிற்கு வேலை செய்கிறது என சொல்லிவிடலாம். அதிலிருந்தும் சில படங்கள் தப்புவதுண்டு. ஆனால், பெரும்பாலான படங்கள்  சென்சார் போர்டில் சிக்கி முக்கியமான காட்சிகளும், வசனங்களும் நீக்கப்பட்டு வேறு வழியில்லாமல் வெளியிடப்படுகின்றன.

தற்போது வெளியாகி இருக்கும் பராசக்தி படத்தின் நிலையும் அதுதான். பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாக 52 காட்சிகளை மாற்ற வேண்டும் என்று ஒன்றிய திரைப்படச் சான்றிதழ் வாரியம் பரிந்துரை செய்தது.

படம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை பலமாக பேசுவதால் அதன் மீதுதான் கை வைத்துள்ளார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான காட்சிகள் மற்றும் வசனங்கள் சிலவற்றை நீக்குமாறு, மாற்றியமைக்குமாறு தணிக்கை வாரியம் பரிந்துரைத்துள்ளது.

குறிப்பாக ‘தீ பரவட்டும்’ என்ற அண்ணாவின் முழக்கம் மாற்றி ‘நீதி பரவட்டும்’ என்பதாகவும் ‘இந்தி என் கனவை அழித்தது’ என்பதை மாற்றி ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ எனவும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ‘ஹிந்தி கத்துக்கிட்டு’ என்ற வாசகத்தை நீக்க செய்ய வேண்டும் எனவும் ‘ஹிந்தி அரக்கி’ என்ற வாசகம் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் ‘அரக்கி’ என்பதை வேறு விதமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றைச் சொன்னால் கட்… திரித்துச் சொன்னால் நோ கட்… ‘பாஜகவின் தணிக்கை வாரியம்’!

முக்கியமாக அண்ணாவின் வசனம் எனக் கூறப்படும் “எங்களை நீக்கிவிட்டு…” எனத் தொடங்கி “…இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என முடியும் ஒரு வசனத்தையும் தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் நீக்கியுள்ளது. இதே போல் படத்தில் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதியது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான். திமுக கட்சி இன்று ஆட்சிப் பொறுப்பில் இருப்பதற்கு அந்தப் போராட்டம் தான் விதை என சொல்லலாம். அந்த அளவுக்கு மாணவர் இளைஞர்களின் எழுச்சிமிக்க போராட்டம் பல்வேறு மாணவர்களை அரசியல் தளத்திற்கு இழுத்தது.

அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. அதே நேரத்தில் போராட்டத்தின் வீரியத்தால் காங்கிரஸ் பின்வாங்கியது. தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியை இழந்த காங்கிரஸ் இப்போது வரை எழ முடியவில்லை.

அப்படியான ஒரு போராட்டத்தை தழுவிய படத்தில் 52 இடங்களில் கட் என்றால் படத்தின் முழுமையை காண முடியாத அவலம். அதனை திட்டமிட்டே செய்துள்ளது பாஜகவின் தணிக்கை வாரியம்.

பராசக்தி படத்திற்கு மட்டுமல்ல அவர்களுடைய சித்தாந்தத்தின் மீது கேள்வி எழுப்பும் படங்களுக்கு இது தான் நிலமை. முற்போக்கு பேசும் படங்களையும், தலித்துகள் மீதான ஒடுக்குமுறையை பேசும் படங்கள், இந்து – முஸ்லிம் ஒற்றுமையை பேசும் படங்கள், பார்ப்பனியத்தின் அடக்குமுறை; சாதிய அடக்குமுறை; அரசு அடக்குமுறை என அவர்களது சித்தாந்தமான பார்ப்பனிய வர்ணாசிரமத்தையும் சனாதனத்தையும் கேள்வி எழுப்பும்  படங்களின் காட்சிகளுக்கு கட்… கட்… கட்… தான்.

தமிழ் சினிமாவில் விடுதலை, ஜிப்ஸி, தண்டகாரண்யம், மனுஷி உட்பட இடதுசாரி அரசியலை பேசிய பல திரைப்படங்களின் காட்சிகள் வெட்டப்பட்டுச் சுருக்கப்பட்டன.

படிக்க: பெங்காலி ஃபைல்ஸ்: தொடர்ந்து மத மோதலைத் தூண்டி கல்லா கட்டும் காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர்!

இந்திய அளவில் பார்த்தோமானால் 2025 ஆம் ஆண்டு மட்டும் பல திரைப்படங்கள் இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) யால் முடக்கப்பட்டுள்ளது.  சஹானா கோஸ்வாமி நடித்த சந்தோஷ் என்ற படம் திரையரங்கில் வெளியாகாமல் தடை செய்யப்பட்டது. காவல்துறையின் மிருகத்தனம், சாதி பாகுபாடு மற்றும் பெண் மீதான அடக்குமுறை பற்றி பேசிய படம். ஹோம் பவுண்ட் (Home Bound) படத்திற்கு பல இடங்களில் கட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பஞ்சாப் 95 படத்தில் 127 வெட்டுகளை கூறியதால் படம் இதுவரை வெளியாகவில்லை. சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் புலேயின் படத்திற்கு பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் CBFC மாற்றங்களையும் சில காட்சிகளை வெட்டவும் கூறியதால் படம் இதுவரை வெளியாகவில்லை. இந்தப் பட்டியலில் இன்னும் நிறைய படங்கள் உள்ளன.

அதே நேரத்தில் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் இருந்த பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் விதமாக எடுக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ், சாவா, கேரளா ஸ்டோரி போன்ற படங்கள் தணிக்கை துறையின் சில மாற்றங்களோடு வெளியிடப்பட்டது. அதேபோல் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்திலும் மதவெறியையும், தேசிய வெறியையும் உருவாக்கும் படங்கள் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு அரசின் மானியங்களோடு வெளியிடப்படுகின்றன.

ஒன்றிய அரசின் அதிகார மட்டங்களை கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் – பாஜக தற்போது சென்சார் போர்டையும் (CBFC) கைப்பற்றி அவர்களது சித்தாந்தத்திற்கு எதிராக பேசும் படங்களை முடக்குவதன் மூலம் கருத்துரிமையையும் முடக்குகிறார்கள். இந்த ஆபத்தான போக்கிற்கு எதிராக கலைத்துறையினர் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here