
‘நான் பல்வேறு நாடுகளுக்கிடையிலான 10 போர்களை எனது தனிப்பட்ட திறமையினால் தடுத்து நிறுத்தி விட்டேன்; இன்னும் பல்வேறு நாடுகளின் உள் விவகாரங்களில் அமைதிச் சூழ்நிலையை உருவாக்கி இருக்கி றேன்; எனவே, எனக்கு நோபல் பரிசு குழுவினர் ‘அமைதிப் பரிசு’ – க்கான நபராக அறிவிப்பு செய்ய வேண்டும்; நோபல் பரிசு எனக்கே வழங்க வேண்டும்..’
– என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடம்பிடித்து கேவலங்கெட்ட தனமாக அடிக்கடி சமீப காலத்தில் அறிவித்து வந்ததை – ஓலமிட்டு வந்ததை அனைவருமே அறிவோம்.
ஆனால் அப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைப்பதற்கு எள்ளின் முனை அளவாவது ட்ரம்புக்கு அருகதை இருக்கிறதா? என்றால் நூற்றுக்கு 200 சதவீதம் அருகதை இல்லை என்பதே உலகம் முழுமையும் உள்ள ஜனநாயக சக்திகளின் – மக்களின் கருத்தாக இருக்க முடியும்.
ஏனெனில் அனைத்து நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு வரம்பு மீறி மூக்கை நுழைப்பது; வேற்று நாடுகளின் நலனுக்கு என பாவனை செய்து கொண்டு அந்த நாட்டு செல்வாதாரங்களை அபகரிப்பது; தனக்கு இணங்கி வராத நாட்டை பகைமை நாடாக்கிக் கொண்டு தனக்கு இணங்கிய நாட்டினரை போர்த் தொடுக்கச் செய்து போர் தொடுக்கும் நாட்டுக்கு பின்புலமாக நின்று ராணுவ உதவி உட்பட அனைத்து விதமான பொருளாதார உதவிகளையும், ஏன், தன் படைவீரர்களையும் அனுப்பி, பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நாட்டினை சின்னா பின்னப் படுத்தி சீரழிப்பது; சிதைப்பது; ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்றொழிப்பது…
அதன் மூலமாக இரண்டு நாட்டின் செல்வாதாரங்களைச் சூறையாடுவது; (அண்மை உதாரணம்: இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்) உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தானே ‘தலைமை சக்தி’ என பெயர் சூட்டிக்கொண்டு அனைத்து நாடுகளுக்கும் ‘சட்டாம் பிள்ளையாக’ – ‘போலீஸ் ரவுடி’யாக வலம் வருவது…
இப்படிப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்தான் ஏகாதிபத்திய அமெரிக்க ஜனாதிபதி பாசிச ட்ரம்ப்.
மிக அண்மையில் வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளங்களை அபகரிப்பதற்காகவே, போதைப் பொருள் கடத்தலில் (Narcoterrorism) கொலம்பியா கிளர்சிக்காரர்களுடன் இணைந்து அமெரிக்காவிற்கு ‘கோகோயின்’கடத்தியதாக – சர்வதேச குற்றவாளி என போலியாகக் குற்றம் சுமத்தி வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அமெரிக்க கூலிப்படையால் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு நியூயார்க் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு உலகெங்கனும் கடும் கண்டனங்கள் வலுத்த வண்ணம் உள்ளன.
தற்போது ஈரானைக் குறிவைத்து அமெரிக்க தூண்டுதலில் உள்நாட்டுப் போராட்டஙள் கலவரங்களாக மூட்டி விடப்பட்டுள்ளன. இந்தக் கொடுமைகள் ஒருபுறம் இவ்வாறு நீண்டு கொண்டிருக்க…
வெனிசுலா நாட்டின் வலதுசாரி பெற்ற நோபல் பரிசை தட்டி பறித்த ட்ரம்ப்!
மேலே விவரித்துக் கூறியபடி உலகெங்கிலும் தன்னிச்சையான போக்கில் சமூகப் பொருளாதார நெருக்கடிகள் ஒருபுறம் ஆளும் வர்க்க ஓட்டாண்டித்தனங்களால் வளர்ந்து கொண்டிருந்தாலும், அமெரிக்காவின் இழிவான நடவடிக்கைகளால்- தலையீட்டால் ஒவ்வொரு நாடும் சின்னா பின்னமாக்கப்பட்டு வருகின்றன என்பதே எதார்த்த நிலை.
அவ்வாறு இருக்கின்ற பொழுது, வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் எடுபிடியும், தீவிர வலதுசாரி ஆதரவாளரும், மதுரோவின் அரசியல் எதிரியுமான மரியா மச்சாடோ தனக்கு 2026 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசினை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சமர்ப்பிப்பதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தனக்கு அந்த விருது வழங்கவில்லை என்று டிரம்ப் தொடர்ச்சியாக தமது ஆதங்கத்தை கொட்டி வந்ததை உலகம் அறியும்.
நோபல் பரிசை ஒருவருக்கு வழங்கினால் அதை மாற்ற முடியாது என நோபல் குழு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘ஒரு நோபல் பரிசை ரத்து செய்யவோ, பகிரவோ, அல்லது மற்றவர்களுக்குத் தரவோ முடியாது. ஒருமுறை அறிவிக்கப்பட்டால் அதுவே நிரந்தரமானது’ எனத் திட்ட வட்டமாக நோபல் பரிசு குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவிற்கு அண்மையில் சென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார். அத்தருணத்தில் தமக்கு வழங்கபபட்ட நோபல் பரிசை ட்ரம்பிடம் அவர் வழங்கினார். ட்ரம்பும் துளி அளவும் வெட்கம் இன்றி அதனைப் பெற்றுக் கொண்டு உள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், “வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு ஒரு பெரிய கவுரவம். அவர் பல துன்பங்களைச் சந்தித்த அற்புதமான பெண். நான் செய்த பணிகளுக்காக மரியா தனது நோபல் அமைதிப்பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா” என்று ஒரு நாட்டின் அதிபர் என்று கூட உணராமல் வெட்கங்கெட்ட தனமாக மானங்கெட்டத் தனமாக பதிவு செய்துள்ளார் ட்ரம்ப். நோபல் பரிசையும் வெட்கமின்றி பெற்றுக் கொண்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அந்தப் பரிசு பெறுவதற்கு எத்தனையோ முறை இந்த ட்ரம்ப் ஊளையிட்டுப் பார்த்தும், கண்டுகொள்ளாத நோபல் பரிசு குழு, இவரது ஊளையிடுதலை புறம் தள்ளியது ஏன்?
ஒருவேளை நோபல் பரிசுக் குழுவிற்கே ட்ரம்ப் குறித்து, உலகின் ஜனநாயக இயக்கங்கள் & மக்கள் கொண்டிருக்கும் அபிப்ராயங்களை பெற்றிருந்ததோ எண்ணவோ? அதனால் கூட ட்ரம்பை ஓரங்கட்டி இருக்கலாம். அதுதான் உண்மையும் கூட.
அப்படி இருக்கின்ற பொழுது வெனிசுலா அதிபர் மதுரோவிற்கு நேர் எதிரான எதிர்க்கட்சித் தலைவர் மச்சா மரியாடோவிற்கு அளிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சரியான தேர்வு தானா என்று கூட யூகிக்க வேண்டி உள்ளது.
எனவே தகுதியற்ற இரு நபர்கள் இப்படி நோபல் பரிசை பண்டமாற்றம் போல மாற்றிக் கொள்வது அந்த விருதின் குழுவுக்கு மட்டுமல்ல, அந்த விருதினை மதிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்.
படிக்க:
♦ ட்ரம்ப்பின் குறி க்யூபா! வெனிசுலா அதற்கான பகடைக்காய்!
♦ ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.
இதில் மரியாடோவும், ட்ரம்ப்பும் குற்றவாளிகளே! கூடுதலாக உலகப் போலீஸ் ரவுடி இப்படி குறுக்கு வழியில் நோபல் பரிசை தட்டிச் செல்வது அவமானம்! வெட்கக்கேடு! சூடு, சுரணை, வெட்கம், மானம், ரோசம்…அனைத்தையும் இழந்தவர் ட்ரம்ப் என்பதனை வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டார்.
நோபல் குழுவின் சட்டதிட்டங் களுக்கு மாறாக, வெனிசுலாவின் மரியாவிற்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசினை, மரியா ட்ரம்ப்-பிற்கு வழங்கியதால் அந்த நோபல் பரிசையே ரத்து செய்து உத்தரவு வழங்க நோபல் பரிசு குழு அறிவிப்பு உடன் வெளியிட வேண்டும்.
அதுவே நியாயமானது; சரியானது!
எனவே, அடுத்தவருக்கு அளிக்கப்பட்ட பரிசை அபகரித்துக் கொண்டதன் மூலமாக, அவர் இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பேசாமல் ‘மண் திருவோடு’ ஏந்தி ஒவ்வொரு நாடாகச் சென்று பிச்சை எடுத்திருக்கலாம்.
- எழில்மாறன்






