
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் லடாக்கில் சீன ஊடுருவல் குறித்து முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனேவின் ‘நினைவுக் குறிப்பு’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட முயன்றார். அதற்கு ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘வணக்கம் நண்பர்களே… எனது புத்தகம் இப்போது கிடைக்கிறது. இந்த இணைப்பைப் பின்தொடரவும். மகிழ்ச்சியான வாசிப்பு. ஜெய் ஹிந்த்’ என்று தெரிவித்த நரவனேவின் சமூகவலைதள எக்ஸ் பதிவை படித்துக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “இதுதான் நரவனே சொன்ன ட்வீட்… நான் சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்ல மாட்டார் என்று நான் நினைக்கிறேன், அல்லது பெங்குயின் பொய் சொல்கிறது.
பெங்குயின் புத்தகம் வெளியிடப்படவில்லை என்று கூறுகிறது. தயவுசெய்து என் புத்தகத்தை வாங்குங்கள் என்று ஜெனரல் நரவனே ட்வீட் செய்துள்ளார். அவர் இதை 2023-இல் ட்வீட் செய்தார். நரவனேவை விட பெங்குயினை நீங்கள் நம்புகிறீர்களா? நரவனேவை நான் நம்புகிறேன்.
வெளிப்படையாக, பெங்குயின் உண்மையைச் சொல்கிறதா அல்லது முன்னாள் ராணுவத் தளபதி உண்மையைச் சொல்கிறாரா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதுதான் பிரச்சினை. அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் “சவுகரியமற்ற” சில தகவல்களை நரவனே புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்” என்று அவர் மேலும் கூறினார்.
குற்றச் சதி பிரிவின் கீழ் FIR பதிவு செய்த டெல்லி காவல்துறை:
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி என்ற நினைவுக் குறிப்பின் பிரத்யேக வெளியீட்டு உரிமையை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (PRHI) கொண்டுள்ளது.
இந்தப் பதிப்பகம், ‘ நரவனேவின் புத்தகத்தின் எந்தப் பிரதிகளும் அச்சு அல்லது டிஜிட்டல் வடிவத்தில் வெளியிடப்படவில்லை. தற்போது புழக்கத்தில் உள்ள இப்புத்தகத்தின் பிடிஎப் அல்லது ஆன்லைன் பிரதிகள் உட்பட எந்த வடிவமும், பதிப்புரிமை மீறலுக்குச் சமமாகும்” என்று பதிப்பகம் கூறியுள்ளது.
படிக்க:
♦ அக்னிபாத் யாரின் நலனுக்கானது? “அக்னிவீரர்”களுக்கு வேலை தர கார்ப்பரேட்டுகள் ஏன் முண்டியடிக்கிறார்கள்?
♦ நூலுக்குத் தடை: கழுத்தை நெரிக்கும் காவிகளும் நீதிமன்றமும்!
இப்படி இருக்கும் சூழலில், நரவனே புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை டிஜிட்டல் மற்றும் பிற வடிவங்களில் சட்டவிரோதமாகப் பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி காவல் துறை சமீபத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னர் இந்த விளக்கம் வந்தது கவனிக்கத்தக்கது.
மோடியின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்கும் ராணுவ தளபதி:
உண்மையான சர்ச்சை இந்த புத்தகம் வெளியிடப்பட்டதா அல்லது இல்லையா என்பதில் இல்லை, மாறாக அது இராணுவத்துடனான அவரது கையாளுதல்களில் நரேந்திர மோடியின் தலைமையைப் பற்றி வெளிப்படுத்துகிறது. சீனாவுடனான மோதலின் உச்சத்தில் அரசியல் தலைமை செயலிழந்ததை நினைவுக் குறிப்பின் சில பகுதிகள் சுட்டிக்காட்டுகின்றன. முக்கியமான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் “நீங்கள் பொருத்தமானதாகக் கருதுவதைச் செய்யுங்கள்” என்ற தெளிவற்ற அறிவுறுத்தல்களுடன் நிறைவேற்றப்பட்ட ஒரு நிகழ்வை ஜெனரல் நரவனே விவரிக்கிறார். இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்; பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரையும் நரவனே கேள்விக்குள்ளாக்குகிறார்.
மேலும், அக்னிபத் திட்டம் தொடர்பாக இராணுவத்திற்கும் அரசியல் தலைமைக்கும் இடையே உள்ள அடிப்படை தொடர்பை விவரிக்கிறார். கடுமையான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பிரதமர் அலுவலகம் (PMO) அக்னிபத் மீதான இராணுவக் கொள்கையை எவ்வாறு இராணுவத் தலைவர்களின் ஒருமித்த கருத்து இல்லாமல், அவர்களின் தொண்டைக்குள் முடிவை திணித்து கட்டாயப்படுத்தியது என்பதை நரவனேவின் கணக்கு விவரிக்கிறது.
மோடி அரசின் தலைமையில் உள்ளவர்களின் தூக்கத்தைக் கெடுத்த புத்தகம்:
இராணுவத் தலைவர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் உலகம் முழுவதும் ஆர்வத்துடன் படிக்கப்படுகின்றன. அவர்கள், தங்கள் போர்க்களத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் புத்தகங்களாக எழுதுகின்றனர். அவை ஒன்றிய அரசாங்க அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது. ஒரு நூல் அச்சிடப்பட்டு புத்தகமாக வருவதற்கு முன்பு, அச்சுப்பிரதியாகவோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. அந்த வகையில், ஜெனரல் நாரவனேவின் புத்தகமான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி ஒரு விதிவிலக்கான புத்தகமாகும். 2020 மற்றும் 2024க்கு இடையில் பாதுகாப்பு அமைச்சகம் 35 புத்தகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது, அதில் ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி என்ற ஒரே கையெழுத்துப் பிரதி இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்தப் புத்தகம் ஒரு அலமாரியில் இருந்தாலும் சரி, PDF-ல் இருந்தாலும் சரி, இந்திய அரசியல் தலைமையின் நடத்தை மற்றும் இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பான உள் முரண்பாடுகள் குறித்து அதில் உள்ள உண்மைத் தன்மை வெளிப்படையாகவே உள்ளது. போலீஸ் வழக்குகள் மற்றும் பதிப்புரிமை சர்ச்சைகளின் கீழ் அதைப் புதைக்க முயற்சிப்பது, மோடி தலைமையிலான அரசாங்கம் தனது உண்மை முகம் அம்பலமாகின்ற சொந்த பிரதிபலிப்புக்கு எவ்வளவு அஞ்சுகிறது என்பதையே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
- பரூக்






