‘சத்தியமேவ ஜயதே!’
கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளி
இந்திய ‘ஜனநாயகத்தின்’ கீழ் கவுன்சிலர்!

ந்தியாவில் ஆர்எஸ்எஸ் பாஜக ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் பார்ப்பன (இந்து) மதவெறிக்கு எதிராக எழுதுகின்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது சட்டவிரோதமான முறையில் மிரட்டப்படுகிறார்கள்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை என்பதெல்லாம் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டு பார்ப்பன பாசிசம் என்ற உள்ளடக்கத்தை கொண்ட காவி பயங்கரவாதமானது நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

காவி பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து நாடு தழுவிய அளவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்ற போதிலும், ஏற்கனவே ஒரு நூற்றாண்டு காலம் படிப்படியாக பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வந்த பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக சட்டபூர்வமான வழிமுறைகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்திக் கொண்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது. தற்போது முழு பரிமாணத்தில் தனது பாசிச நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரு நகரில் படுகொலை செய்யப்பட்ட பெண் ஊடகவியலாளரும், சமூக செயல்பாட்டாளருமான தோழர் கௌரி லங்கேஷ் படுகொலையின் போது ஒட்டுமொத்த கர்நாடக மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பாசிச எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த நிகழ்வில் எமது அமைப்பின் தோழர்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.

“தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்ட அதே விதத்திலேயே கௌரி லங்கேஷும் கொல்லப்பட்டிருக்கிறார். தனது வாழ்நாளை இந்து மதவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு அர்ப்பணித்த கௌரி லங்கேஷுக்கு இந்துமதவெறியர்களிடம் இருந்து தொடர்ச்சியாக பலமுறை மிரட்டல்கள் வந்திருந்ததாக கௌரி லங்கேஷின் சகோதரியும் அவரது தாயாரும் தெரிவித்திருக்கின்றனர். கடந்த ஆண்டு இந்துமத வெறியர்கள் தொடுத்த வழக்கு ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் இறந்த பின்னர் பல இந்துமதவெறியர்கள் அவரது மரணத்தை   சமூக வலைத்தளங்களிலும், பகிரங்கமாகவும் கொண்டாடியிருக்கின்றனர். இந்தப் படுகொலையை இந்துமதவெறியர்கள் தான் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு சாட்சிகள் எதுவும் தேவையில்லை.

இந்து மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, கௌரி லங்கேஷின் இறுதி அஞ்சலியில் ஆயிரக்கணக்கான  பெண்கள்  கலந்து கொண்டனர். தங்களது குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிப்பதைப் போல தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கர்நாடக கலை துறையினரும் திரளானோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் மெழுகுவர்த்தியுடனும் பூங்கொத்துகளுடனும் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், முற்போக்காளர்கள் கலந்து கொண்டது அனைவரையும் பிரமிக்க  வைத்தது.

ஒரு பத்திரிகையாளர், பெண், சமூகத்தின் அநீதிக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை உறுதியுடன் போராடிய போராளி என்ற வகையில் அவரது முழு ஆளுமையையும் மக்களிடம் அவர் பெற்றிருந்த மரியாதையையும் மதிப்பையும் மக்கள் அவர் மீது காட்டிய அன்பும் நம்மைக் கண்கலங்கச் செய்துவிட்டது.” என்று எமது இணையத்தில் எழுதியிருந்தோம்.

இந்த கொடூரமான படுகொலையைச் செய்தவர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் பங்கர்கர் 2024 ஆம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட போது அதனை வன்மையாக கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்தன. பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இன்னமும் சிறையில் விசாரணை கைதிகளாக வாடிக்கொண்டிருக்கின்ற உமர் காலித் போன்றவர்கள் நிலையை ஒப்பிட்டு பாருங்கள். நாட்டில் நடப்பது கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்காக நடக்கின்ற காவி பயங்கரவாத ஆட்சி என்பது தெளிவாக புரியவரும்.

இந்த பயங்கரவாதிகளின் ஆட்சியின் கீழ் நீதிக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் இனப்படுகொலை செய்த குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் முதல் ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு எதிராக களமாடுகின்ற சக்திகளை படுகொலை செய்கின்ற கிரிமினல் கொலைகார குற்றவாளிகள் வரை எந்தவிதமான தண்டனையும் இன்றி அல்லது குறைந்தபட்ச காலம் சிறை தண்டனையில் சொகுசாக அனுபவித்து விட்டு வெளியில் வந்து சட்டபூர்வமான வழியில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கௌரி லங்கேஷ் கொலைகாரர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி), இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் கர்நாடகா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகிய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் பாசிச பாஜகவின் தயவினால் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் 16 பேர் ஜாமீன் பெற்று சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இந்த ஜாமீன் கிடைக்க முக்கியக் காரணம், விசாரணை தாமதமானது தான் என்று விமர்சிக்கின்றனர் முத்த வழக்கறிஞர்கள். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 527 சாட்சிகளில் இதுவரை சுமார் 140 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். எனவே விசாரணைகள் விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்பதுதான் வழக்கின் நிலையாகும்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சம்பாஞ்சே என்கிற மோகன் நாயக்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது, ஆனால் அரசுத் தரப்பு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்குப் பிறகு, கே.டி. நவீன் குமார், அமித் திக்வேகர் மற்றும் சுரேஷ் எச்.எல் ஆகியோரும் ஜூலை 2024-இல் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். அதன் பிறகு, பாரத் குமார், ஸ்ரீகாந்த் பங்கர்கர், சுஜித் குமார் மற்றும் சுதனா கோந்த்கர் ஆகியோர் செப்டம்பர் 2024-இல் ஜாமீன் பெற்றனர்.

படிக்க:

♦ கௌரி லங்கேஷ் கொலையாளிகள் விடுதலையும், பார்ப்பன பாசிஸ்டுகளின் வரவேற்பும்!

♦ டிசம்பர் 9 கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட தினம்!

வாக்மோர், யாத்வே உள்ளிட்ட 8 பேருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. ஆக மொத்தம் 16 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவர் இன்னும் நீதிமன்றத்தை நாடவில்லை. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ‘தாதா’ என்று அழைக்கப்படும் விகாஸ் படேல் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

இந்த கொலைகார கும்பலில் ஒருவரான ஸ்ரீகாந்த் பங்கர்கர் 2001 முதல் 2006 வரை சிவசேனாவில் கவுன்சிலராக இருந்தவர். பின்னர் சீட் மறுக்கப்பட்டதால் இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற அமைப்பில் இணைந்தார். 2017-ம் ஆண்டு பெங்களூருவில் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2018-ல் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது வெடிபொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் வேறு சிலருடன் இணைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பங்கர்கருக்கு எதிராக ஷிண்டே தலைமையிலான சிவசேனா எந்த வேட்பாளரையும் நிறுத்தாமல் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கியதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இத்தகைய கிரிமினல்களை நேரடியாக அங்கீகரிப்பது சில சிக்கல்களை உருவாக்கும் என்பது ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச குண்டர்களுக்கு தெரியும் என்பதால் கொல்லைப்புற வழியில் சுயேச்சையாக நிற்க வைத்து அவருக்கு எதிராக போட்டியிட யாரையும் அனுமதிக்காமல் அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர். வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பேசிய பங்கர்கர், தன் மீதான வழக்குகளுக்கும் தனது பொதுவாழ்வுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை தண்டனை கிடைக்கப் பெற்றாலும் தனது முன்னோடிகளான பிரக்யாசிங் தாக்கூர் போன்றவர்களின் அனுபவம் கை கொடுக்கும் என நம்பக்கூடும்.

நாட்டில் இன்னமும் அரசியலமைப்புச் சட்டம் உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர்கள் இதுபோன்ற கொலை குற்றவாளிகள் தேர்தலில் வெற்றி பெறுவதை கண்ட பிறகும் இது ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கின்ற நிகழ்வு என்பதைப் போல மௌனமாக கடந்து செல்கிறார்கள்.

குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை இனப்படுகொலைக்கு காரணமான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கின்ற நிலையில்; சோராபுதீன் வழக்கில் வழக்கு நடத்திய நீதிபதி லோயா கொலைக்கு பின்னணியில் இருந்த அமித்ஷா நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கின்ற நிலையில்; ஸ்ரீகாந்த் பங்கர்கர் கவுன்சிலராக உருவெடுப்பது தவிர்க்க முடியாதது. அதனால் தான் சங்கிகள் இதனை கொண்டாடி வருகின்றன்ர். இதனை விமர்சிப்பவர்கள் மீது பாய்கின்றனர்.

ஆனால் நாடு முழுவதும் உள்ள முற்போக்கு மற்றும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இத்தகைய தேர்தல் வெற்றிகளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி காவி பயங்கரவாதத்தின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

காவி பயங்கரவாதிகளை தேர்தல் அரசியலில் வீழ்த்த முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்களை வீழ்த்துவதற்கு நாடு தழுவிய அளவில் ஒரே குடையின் கீழ் புரட்சிகர ஜனநாயக சக்திகள் மற்றும் பாசிச எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேருக்கு நேர் வீழ்த்துவது தான் ஒரே வழி.

தமிழ்ச்செல்வன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here