ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்! தூபம் போடும் அமெரிக்கா!
அமெரிக்காவும் இஸ்ரேலும் ISIS போன்ற தீவிரவாத அமைப்பினருக்கு ஆயுதங்களைக் கொடுத்து ஈரானிற்குள் அனுப்பி தாக்குதல் நடத்தி மக்களைக் கொன்று குவித்து வருவதாக ஈரானிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான ஈரான் இப்பொழுது மக்களின் போராட்டங்கள் காரணமாக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டை அடக்கி ஒடுக்கி அந்த நாட்டின் வளங்களைச் சுரண்ட வேண்டும் என்று பன்னெடுங்காலமாக  நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் அமெரிக்கா இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தப் பார்க்கிறது.

“ஈரான் நாட்டின் தேசப்பற்றாளர்களே தொடர்ந்து போராடுங்கள்! உங்களுக்குத் தேவையான உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன!” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக செய்தி ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டார். உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது ஏற்புடையதல்ல, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அருகில் உள்ள நாடுகளில் அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் தாக்கப்படும் என ஈரான் அரசு பதிலடி கொடுத்தது.

என்ன நடந்து கொண்டிருக்கிறது ஈரானில்? 

ஈரான் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசிற்கு எதிராகவும் அந்த அரசையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்லாமிய மதத்தலைவரான அயதுல்லா அலி கோமானிக்கு எதிராகவும் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி முதல் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் பணவீக்கம் – விலையேற்றம் காரணமாக மக்களால் பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை, ஈரான் நாணயத்தின் உறுதியற்ற தன்மை போன்ற காரணங்களால்தான் இந்த போராட்டம் தொடங்கியது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சந்தையில் வியாபாரிகள் மத்தியில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பற்றிப் பரவியுள்ளது. பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி அரசியல் ஒடுக்குமுறை காரணமாக ஈரான் நாட்டு ஆட்சி அமைப்பிற்கு எதிராக பல்லாண்டுகளாக நடந்து வரும் போராட்டமும் இதனோடு சேர்ந்து கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மஹ்சா அமினி என்ற இளம் குர்திஷ் பெண், ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மத அடிப்படைவாத அரசின் கலாச்சார போலீஸாரால் கைது செய்யப்பட்டு கொல்லப்படதால் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சிக்குப் பிறகு, மக்கள் போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கின. அப்போது நடந்த போராட்டத்தின் போது 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, பன்னிரண்டு தெற்கு பார்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் போராட்டங்கள் நடந்தன, அங்கு புஷெர் எரிவாயு சுத்திகரிப்பு தொழிலாளர் சங்கத்தில் 5,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் டிசம்பர் 9 அன்று அசலுயேயில் தங்கள் குடும்பங்களுடன் அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளைக் கோரி பேரணி நடத்தினர். தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தெஹ்ரானில் உள்ள தேசிய நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர், அங்கு ஒப்பந்த வேலை முறையை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தனர். இப்படியான போராட்டங்களும் சமீப காலத்தில் ஈரானில் அதிகரித்து வருகின்றன.

ஈரானின் முக்கிய பொருளாதாரமே எண்ணெய் உற்பத்தி தான். அதில் முதலீடு செய்துள்ள நிறுவன முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டினாலும் அந்நாட்டு மக்களுக்கு எந்தபலனும் இல்லை. எண்ணெய் நிறுவன முதலாளிகளும், அரசின் அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களுமே பலனை அனுபவிக்கிறார்கள். அதனால் ஒரு சிலரிடமே செல்வம் அதீதமாக குவிந்து வருவது மக்களுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது.

இதனால் ஈரான் நாட்டின் ஆட்சி அமைப்பிற்கு எதிரான முழக்கங்களும் ஈரானின் ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக தனது கையில் வைத்துள்ள இஸ்லாமிய மதத்தலைவர் அயதுல்லா அலி கோமானிக்கு எதிரான முழக்கங்களும் போராட்டக்காரர்களால் போடப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, ஈரானின் கடைசி மன்னராக இருந்த ஷாவின் மகனான ரசாபகலவி, ஈரான் அரசால் நாடு கடத்தப்பட்டு இப்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த ரசா பகலவிக்கு ஆதரவான முழக்கங்களும் அவரது கைக்கூலிகள் சிலரால் போடப்படுகின்றன.

ஈரான் இன்டர்நேஷனல் என்ற செய்தி ஊடகம் 12,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதை அரசு தரப்பு மறைத்து வருவதாகவும் கூறியுள்ளது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மட்டுமின்றி போலீசாரும் கூட பலியாகி உள்ளனர். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளால் ஆயுதம் கொடுத்து ஏவி விடப்பட்ட சிலர் போலீசார் மீதும் பொதுமக்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேலின் தலையீடு

இந்த நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ISIS போன்ற தீவிரவாத அமைப்பினருக்கு ஆயுதங்களைக் கொடுத்து ஈரானிற்குள் அனுப்பி தாக்குதல் நடத்தி மக்களைக் கொன்று குவித்து வருவதாக ஈரானிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களின் மீதும் ராணுவ தளங்களின் மீதும் அருகில் இருந்த குடியிருப்புகளின் மீதும் குண்டுகளை வீசித் தாக்கியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் போர் விமானங்கள் நூற்றுக்கணக்கான  ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்களின் மீது ஏவி தாகுதல் தொடுத்து இஸ்ரேலை கதிகலங்க வைத்தது.

படிக்க:

 ஈரான் மீது குண்டு வீச்சு : உலகைப் போர் பதற்றத்தில் தள்ளி உள்ள அமெரிக்கா!

 கம்யூனிஸ்டுகளையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளையும் நசுக்கும் உளவுப்படை!

தனது நாட்டின் மீது எந்த ஒரு ஏவுகணையும் வந்து தாக்குதல் தொடுத்து விட முடியாத அளவிற்கு நவீன இரும்புக்கூரை அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக மார்தட்டிக் கொண்டிருந்த இஸ்ரேலின் கர்வத்தை அழித்து ஒழித்தது ஈரான்.

இதையடுத்து அமெரிக்கா தனது ராணுவ விமானங்களை அனுப்பி ஈரான் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீதும் பதுங்கு குழிகள் மீதும் தாக்குதல் நடத்தியது.

கடந்த ஆண்டு நடந்த இந்த போரின் போது அமெரிக்க இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டு ஈரான் அஞ்சி நடுங்காதது மட்டுமின்றி இந்நாடுகள் அதிர்ச்சி அடையும் வகையில் எதிர்த்தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்தியது. இது இந்த இரு நாடுகளின் திமிருக்கு விழுந்த அடியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் இப்பொழுது அமெரிக்கா மீண்டும் இந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. ஈரான் மக்கள் வாழ்வில் அமெரிக்கா தலையீடானது ஏறத்தாழ 75 ஆண்டுகளாக உள்ளது. 1950களில் மன்னராட்சியைக் கொண்டு வந்ததாக இருக்கட்டும், 1970 களின் இறுதியில் ஈரான் மக்களால் மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு, ஈரான் மீது போர்த் தொடுக்க ஈராக்கைத் தூண்டியது, பத்தாண்டு காலம் போரை நடத்த உதவியது, ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது என ஈரானில் அமெரிக்க தலையீட்டின் வரலாறு நீண்டது.

மேலாதிக்கத்தைத் தக்க வைக்க பிடியை இறுக்கும் அமெரிக்கா!

அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்கு எதிராக வேறு எந்த முனையிலும் ஒரு வலுவான எதிர் கூட்டினைவு தோன்றி விடக்கூடாது என்று வெறியுடன் அமெரிக்கா வேலை செய்து கொண்டிருக்கிறது. தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் தகர்ந்து வருவதால், அதை தக்க வைத்துக் கொள்வதற்கு துடியாக துடிக்கும் அமெரிக்க அரசு ஈரான், வெனிசுலா போன்ற தனது கட்டுப்பாட்டுக்குள் வராத நாடுகள் மீதான தாக்குதலை அதிகரித்து வருகிறது.

அந்த நோக்கத்தில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனைத் தூண்டிவிட்டுப் போரில் ஈடுபட வைப்பது, ரஷ்யாவில் எண்ணெய் வாங்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் பொழுது 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பது போன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

வெனிசுலா நாடு அமெரிக்காவிற்குள் போதை பொருட்களைக் கடத்துவதாக கூறி அந்த நாட்டிற்குள் நுழைந்து அந்நாட்டு அதிபரையும் அவரது மனைவியையும் கைது செய்து அமெரிக்காவில் சிறை வைத்திருப்பதுடன் நிற்காமல் “வெனிசுலா நாட்டை அமெரிக்க அரசு கட்டுப்படுத்தும்’’ என்று டிரம்ப் அறிவித்தார்.

ரஷ்யாவும் வெனிசுலாவும் தங்களிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் பணத்திலேயே வர்த்தகம் செய்து வருவது என்பது வரும் காலத்தில் உலக வர்த்தகத்தில் டாலர் பொது கரன்சியாக பயன்படுத்தப்படுவது என்ற நிலையை தகர்த்து விடும். இந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரஷ்யா, வெனிசுலா நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, கனிம வளம் கொட்டி கிடைக்கும் அண்டை நாடான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார் .

இப்படி உலகப் பேட்டை ரவுடியான அமெரிக்காவின் அடாவடி செயல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஈரானும் தனது எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்க டாலரை தவிர்த்து விட்டு அந்தந்த நாடுகளின் கரன்சியிலேயே வியாபாரம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவது அமெரிக்காவிற்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் தற்போதைய வெளிப்பாடாக ஈரானுடன் வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு நாட்டிலும் உள்ள மக்கள் தங்கள் அரசுகளுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலக நாடுகளின் மீதான தனது பிடி நழுவுவதைக் கண்டு பதபதைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்காக உலக நாடுகளையும் உலக மக்களையும் போரிலும் கலவரத்திலும் தள்ளுவதை சர்வதேச பாட்டாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது; மாறாக அமெரிக்காவின் இந்த மேலாதிக்கத்திற்கு எதிராக ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here