
டெல்லி கலவர சதி வழக்கில் உமர் காலீத், ஷர்ஜீல் இமாம் ஆகிய இருவருக்கும் பிணை வழங்க மறுத்துள்ளதோடு, மேலும் ஒரு ஆண்டுக்கு அவர்கள் பிணை மனு தாக்கல் செய்ய உரிமையில்லை என்று மாபெரும் அநீதியை இழைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
2020 ஆம் ஆண்டு ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டம் கலவரமாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டு பலரும் சிறையில் இருந்தனர்.
இதில் சிலருக்கு கடந்த சில ஆண்டுகளில் பிணை வழங்கப்பட்டது. கடந்தாண்டு உமர் காலித், ஷார்ஜீல் இமாம் உட்பட ஏழு பேருக்கு பிணை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் குமார், NV அஞ்சாரியா ஆகியோரது அமர்வில் பிணை மனு விசாரிக்கப்பட்டு வந்தது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் தவிர்த்து மற்றவர்களுக்குப் பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்.
ஒரு பக்கம், மற்றவர்களுக்குப் பிணை கிடைத்தது மகிழ்வைக் கொடுத்தாலும், உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி இந்திய நீதித்துறையின் மீது எஞ்சியிருந்த நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் டெல்லியில் வன்முறையைத் தூண்டினர் என்றும், மதரீதியான மோதலை ஏற்படுத்தும் நோக்கிலும், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கிலும் பேசினர் என்றும் ஒன்றிய மோடி அரசு வாதிட்டது. அதனை மறுத்து உமர் காலித் சர்ஜில் இமாம் ஆகியரோது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலையில் உமர் காலித்துக்கும் ஷர்ஜில் இமாமுக்கும் பிற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்குப் பிணை கொடுக்கப்பட்ட அதே அளவுகோலை பின்பற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது மேலும் ஒரு வழக்கில் ஒருவரை மிக நீண்ட காலமாக விசாரணை கைதியாக வைத்திருந்தால் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ன்படி சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையில் பிணை வழங்கலாம். ஆனால் உமர் காலித்தும் ஷர்ஜில் இமாமும் அதற்கு போதுமான காலம் சிறையில் இருந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது. அவர்கள் மேலும் ஓராண்டு சிறையில் இருந்த பிறகு அல்லது விசாரணை தொடங்கிய பின்னரே பிணை கோரலாம் என்று ஒரு பாசிச சுருக்கு கயிறைப் போட்டுள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதெனில் உமர் காலித்தும் ஷர்ஜில் இமாமும் ஐந்து ஆண்டுகள் விசாரணை கைதியாக சிறையில் இருந்தது அவர்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் உரிமையைப் பெறுவதற்கு போதுமானது இல்லை என்று கூறியுள்ளது உச்சநீதிமன்றம். பொதுவாக நீதித்துறையில் இரண்டு சட்டங்கள் ஒரே வழக்கில் முரண்பட்ட நிலையை கொடுக்குமாயின் எந்த சட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அப்படி பார்க்கையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட UAPA எனும் கருப்பு சட்டமே உயர்வானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.
உமர் காலித்தும் ஷர்ஜில் இமாமும் இன்ன பிறரும் செய்த குற்றம் மோடி அரசு கொண்டுவந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியது ஒன்றே.
அந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நகரங்களில் ஷாகின்பாஹ் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட்டது.
டெல்லியில் நடந்த போராட்டத்திற்கு எதிராக சங்கிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களும் கல்வீச்சுகளுமே கலவரத்தைத் தூண்டியது என்பது அனைவரும் அறிந்ததே. அந்தக் கலவரத்தில் தான் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
படிக்க:
♦ சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் – அநீதி இழைக்கும் நீதிமன்றங்கள்!
ஆனால் ஒன்றிய மோடி அரசோ டெல்லி போலீஸ் மூலமாக குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்த அதில் முக்கிய பங்காற்றிய மேலும் அதில் பங்கேற்ற மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து வழக்கு பதிவு செய்து கைது செய்தது.
இந்த நாட்டில் நாடாளுமன்றமோ சட்டமன்றமோ கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. அதனை ஒடுக்க நினைக்கும் பாசிச மோடி அரசுக்குத் துணை போகிறது உச்சநீதிமன்றம்.
ஏற்கனவே பீமாகோரேகான் வழக்கில், பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களும் அறிவு ஜீவிகளும் பல ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் ஒவ்வொருவராக பிணை கொடுக்கப்பட்டு வருகிறது. 80 வயது மூப்பான ஸ்டான்ஸ் சுவாமி பாதிரியார் சிறையிலேயே மாண்டார்.
இவை அனைத்திலும் பாசிச பாஜக அரசுக்கு எந்த அளவு பங்குள்ளதோ அதே அளவு பங்கு உச்ச நீதிமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் உள்ளது.
மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நீதிமன்றங்களையே ஒரே வழியாக காணும் பல்வேறு ஜனநாயக சக்திகள் இனியேனும் விழிப்படைய வேண்டும்.
பாசிசத்துக்கு எதிரான, ஜனநாயகத்திற்கான போராட்டங்களை மக்கள் மத்தியில் இருந்து கட்டியமைக்க ஓரணியில் திரள வேண்டும்.
- திருமுருகன்






